நற்றிணை - 77. குறிஞ்சி
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன் பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர் அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு உய்த்தன்றுமன்னே- நெஞ்சே!- செவ் வேர்ச் சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் |
5 |
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல் ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன் வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், |
10 |
திதலை அல்குல், குறுமகள் குவளை உண்கண் மகிழ் மட நோக்கே. |
நெஞ்சே ! சிவந்த வேர்களையுடைய கிளைகடோறும் தூங்கும் பழங்கள் மிக்க பலாவின் சுளைகளையுடைய முன்றிலின்கண் மனையோளானவள்; இரவில் நெருங்கி விழுகின்ற வெளிய அருவியின் ஒலியைக் கேட்டு உறங்காநிற்கும் பேரூரல்லாத (சிலவாய) சேரிகளையுடைய சீறூரின்கண்ணே; கைவல் வினைஞன் வாளரத்தா லராவிய வளைந்த அழகிய ஒளியையுடைய வளையும் அகன்ற தொடியும் அணிந்த முன்னங்கையையும்; ஒள்ளிய நெற்றியையும் தித்தி படர்ந்த அல்குலையும் இளமையையுமுடைய நம் காதலியின் குவளைபோன்ற மையுண்ட கண்களின் மகிழ்ச்சியையுடைய இளம் பார்வையானது; மலை போன்ற யானைமீது ஏறி நடத்திச்சென்று புலையனால் முழக்கப்படும் பெரிய துடியானது ஒலிக்க வேற்றுநாட்டிற் புகுந்து அப்பகைவரது கடத்தற்கரிய அரணை அழித்து அயாவுயிர்த்தாற்போல; நம்மை இவள் பால் மிகச்செலுத்தாநின்றது; ஆதலின் இவள் உடன்பட்டுக் கூறுங்காறும் நீ முயன்று வருந்தாதே கொள் !;
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இவள், தூங்கும், நெஞ்சே