நற்றிணை - 396. குறிஞ்சி
பெய்து போகு எழிலி வைகு மலை சேர, தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப, வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள், பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ, கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை |
5 |
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்! நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் யார்க்கு நொந்து உரைக்கோ யானே- பல் நாள் காமர் நனி சொல் சொல்லி, |
10 |
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே? |
மழையைப் பெய்தொழிந்து செல்லும் மேகமெல்லாம் தாம் முன்ப தங்கியிருந்த மலையின்கண்ணே சென்று தங்காநிற்ப; தேனிறால் தூங்குகின்ற உயர்ந்த வெற்பினின்று அருவி ஆரவாரித்து வீழாநிற்ப; வேங்கைமரங்கள் மலர்ந்த அழகிய மலையில் நல்ல நாட்காலைப் பொழுதிலே பொன்போன்ற பூக்களையுடைய கிளையிலிருந்து அளாவி; நறுமணம் வீசும் மகரந்தத்தில் அளைந்த அழகு பெற்ற மயில்; பசிய கற்பாறையி னுச்சிமீது தன் கூட்டத்தோடு கூடி; ஆதித்தனது மிக்க கதிரையுடைய இளவெயிலைத் துய்க்கின்ற மலைநாடனே!; நினது மார்பினால் வருத்தப் பெற்ற இன்னாமை நீங்குதற்கரிய காமநோயை யான் யாரிடத்து நொந்து கூறாநிற்பேன்?; நீ வந்து புணரும் பல நாளும் மிக இனிய வார்த்தைகளை யான் விரும்பும்படி சொல்லி இங்ஙனம் கூறியவழி நடத்தல் இவட்குக் காப்புடைத்தாகுமென்று அருளாயாய்; நீ மயக்கமுறாநின்றனை; இதனை யான் யார்க்கு நொந்து கூறாநிற்பேன்;
தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 394 | 395 | 396 | 397 | 398 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யான், நொந்து, கூறாநிற்பேன், வரைவு, பெற்ற, சொல், நாள், யார்க்கு, அருவி, சொல்லி