நற்றிணை - 108. குறிஞ்சி
மலை அயற் கலித்த மை ஆர் ஏனல் துணையின் தீர்ந்த கடுங்கண் யானை அணையக் கண்ட அம் குடிக் குறவர், கணையர், கிணையர், கை புனை கவணர், விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! |
5 |
பழகிய பகையும் பிரிவு இன்னாதே; முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை சுடர் புரை திரு நுதல் பசப்ப, தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே! |
மலைப்பக்கத்து முளைத்துத் தழைத்த கரிய நிறமுடைய தினைப்புனத்தைத் தின்னக் கருதித் தன் பிடியை விட்டு நீங்கிய கொடிய களிற்று யானை வந்து புகுந்ததை நோக்கிய; அழகிய குடியிலுள்ள குறவர் கணையுடையவரும் கிணைப்பறையுடையவரும் கை விரலிலே கோத்த கவணுடையவரும் கூவிப் பேரிரைச்சலிடுபவருமாகிக் குடியிருப்பின் புறமெல்லாம் சென்று ஆரவாரித்துச் சூழும் மலைநாடனே! பழகிய பகையும் பிரிவு இன்னாது பழகியிருந்த பகைவராயினாரும் அருகிலிருந்து பிரிவரென்றால் அப்பிரிவுதான் முன்பு பழகினார்க்கு இன்னாமையைத் தருவதொன்றாகுமன்றோ!; அங்ஙனமாக நின்னை யின்றியமையாத முல்லை யரும்பு போன்ற இலங்கிய எயிற்றையும் இனிய நகையையுமுடைய மடந்தையினது சுடர்போன்ற ஒளியையுடைய அழகிய நெற்றியிலே பசலையூருமாறு; நீ அவளது தொடர்ச்சியை எவ்வண்ணம் கைவிட்டனை ? இதனைக் கருதியே யான் வருந்தாநின்றேன் காண்;
வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 106 | 107 | 108 | 109 | 110 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பிரிவு, அழகிய, பகையும், பழகிய, குறவர், யானை