கலித்தொகை - பாலைக் கலி - 27
'ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்த; பேதுறு மட மொழி, பிணை எழில் மான் நோக்கின்; மாதரார் முறுவல் போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப; காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல், கழல்குபு | 5 |
தாதொடும் தளிரொடும், தண் அறல் தகை பெற; பேதையோன் வினை வாங்க, பீடு இலா அரசன் நாட்டு, ஏதிலான் படை போல, இறுத்தந்தது, இளவேனில் நிலம் பூத்த மரமிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள, நலம் பூத்த நிறம் சாய, நம்மையோ மறந்தைக்க; | 10 |
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய, புலம் பூத்து, புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார்கொல்? கன்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற, தொல் நலம் நனி சாய, நம்மையோ மறந்தைக்க; ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற, | 15 |
வென் வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்? மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள, பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க; தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்;' | 20 |
என ஆங்கு, நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி! நாம் இல்லாப் புலம்பாயின், நடுக்கம் செய் பொழுதாயின், காமவேள் விழவாயின், 'கலங்குவள் பெரிது' என, ஏமுறு கடுந் திண் தேர் கடவி, | 25 |
நாம் அமர் காதலர் துணை தந்தார், விரைந்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மறந்தைக்க, போல், நம்மையோ, பூத்த, நாம், உள்ளார்கொல், எழில், நலம், மகிழ்