ஐங்குறுநூறு - 15. ஞாழற் பத்து
மணல்மேட்டு ஞாழல் மரத்தடி உறவால் விளைந்த ஏங்கலையும், இனிமையையும் தோழியும், தலைவியும், தலைவனும் எடுத்துரைக்கும் பாடல்கள் இதில் உள்ளன.
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண்துளி வீசிப் பயலை செய்தன பனிபடு துறையே. | 141 |
மணல்மேட்டில் ஞாழல் பூ செருந்திப் பூவோடு மலரும் துறைதான் அவன் வராமையால் என்னைப் பசலை நிறம் கொள்ளச் செய்திருக்கிறது.
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப் புள்இறை கூரும் துறைவனை உள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே. | 142 |
மணல்மேட்டில் இறங்கியிருக்கும் ஞாழல் கிளையில் புள்ளினம் தங்கியிருக்கும் துறைவன் அவன் (துறையில் என்னோடு விளையாடியவன்). அவனை நினைக்காதிருந்தால் என் கண் உறங்கிவிடும்.
எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை இனிய செய்த நின்றுபின் முனிவு செய்தஇவள் தடமெல் தோளே. | 143 |
மணல் மேட்டில் பறவைகள் வாழும் துறை அது. அங்குதான் அவன் எனக்கு இன்பம் தந்தான். பின்பு அவன் வராமையால் என் அகன்ற தோள் என்மீது சினம் கொண்டு இளைத்துவிட்டது.
எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த் தனிக்குரு உறங்கும் துறைவற்கு இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே. | 144 |
மணல்மேட்டில் ஞாழல் பூக்கள் கொட்டிக் கிடக்கும் மரச்சோலையில் தன்னந்தனியை குருகு உறங்கும் துறை அது. இங்கு தானும் தனிமைப்பட்டுவிட்டதால் என் மேனிநிற மாந்தளிர் அழகு பச்சை நிறம் ஆகிவிட்டது.
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை ஓதம் வாங்கும் துறைவன் மாயோள் பசலை நீக்கினன் இனியே. | 145 |
மணல்மேட்டில் சிறிய இலைகளை உடைய ஞாழல் மரத்தின் தாழ்ந்த கிளைகளை கடலலை மோதி இழுக்கும் துறை அது. அங்கு அவன் மீண்டும் வந்தான். அதனால் அவள் மேனியிலிருந்த பசலைநிறம் மாறி மாமைநிறம் மலர்ந்துவிட்டது.
எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர் நறிய கமழும் துறைவற்கு இனிய மன்றஎன் மாமைக் கவினே. | 146 |
மணல்மேட்டில் அரும்பு விரிந்து ஞாழல் பூத்து இனிய நறுமணம் கமழும் துறைவனுக்கு இன் மாமைநிற அழகு இனிக்கும்.
எக்கர் ஞாழல் மலரின் மகளிர் ஒள்தழை அயரும் துறைவன் தண்தழை விலையென நல்கினன் நாடே. | 147 |
மணல்மேட்டில் ஞாழல் பூத்தால் அதன் கொத்துகளால் மகளிர் தழையாடை செய்து அணிந்துகொள்வர். அந்தத் தழையாடையைத் தான் அவிழ்ப்பதற்கு விலையாக அதன் துறைவன் தன் நாட்டையே விலையாகத் தந்தான். (திருமணப் பரிசமாகத் தந்தான்).
எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை வீஇனிது கமழும் துறைவனை நீயினிது முயங்குதி காத லோயே. | 148 |
மணல்மேட்டு ஞாழல் மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் வெளியிடங்களுக்கெல்லாம் ஓடி எங்கும் மணக்கிறது. அந்தத் துறவனை நீ தழுவிக்கொள். – தோழி இவ்வாறு தலைவியிடம் கூறுகிறாள்.
எக்கர் ஞாழல் பூவின் அன்ன சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு அணங்குவளர்த்து அகறல் வல்லா தீமோ. | 149 |
மணல்மேட்டில் மலர்ந்திருக்கும் ஞாழல் மலர் போல இவளது இளமையான முலையில் சுணங்கு என்னும் சுருக்க அழகு இருக்கிறது. அந்த முலைக்குத் துன்பம் தந்துவிட்டு, பிரியாதிருப்பாயாக – தோழி தனைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.
எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப் புணரி திளைக்கும் துறைவன் புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே. | 150 |
மணல்மேட்டில் ஞாழல் கிளைகளை அலை வந்து மோதி மகிழும். அவன் என்னோடு உடலுறவு கொள்ளும்போது இன்பத் துன்பம் தருபவனாக இருக்கிறான். அது கிடைத்தற்கு அரிய உடலின்ப உறவு – தலைவி இப்படிச் சொல்லி மகிழ்கிறாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - எக்கர், ஞாழல், துறைவன், பெருஞ்சினை, கமழும், கவினே, துறைவற்கு, துறைவனை, இனிய, மாமைக்