நல்வழி - அவ்வையார் நூல்கள்
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில் கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல் மாதர்மேல் வைப்பார் மனம். |
36 |
தாய் போட்ட குட்டி நண்டுகள் தாயைத் தின்று வளரும். கிளிஞ்சில் சிப்பிகள் உடைந்த பின்பே அவற்றின் வயிற்றிலிருந்து முத்துக்கள் பிறக்கும். மூங்கில்கள் நெல் விளைந்த பின் வெடித்துச் சிதறும் காலத்தில் அவற்றின் வேர்களில் முளைகள் தோன்றி வளரும். தாய் வாழை நாசமடையும் காலத்தில் வாழைக்கன்றுகள் முளைக்கும். அதுபோல அறிவு, செல்வம், கல்வி ஆகியவை அழிய வரும் காலத்தில் ஆண்கள் அயலார் வீட்டுப் பெண்ணின் மேல் ஆசைப்படுவர்.
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி. |
37 |
செய்த வினையின் பயனை அனுபவிக்காமல் இருப்பதற்கு ஏதாவது வழி உண்டா என்று கேட்டால், இல்லை என்பதுதான் விடை. வேதம் முதலான அனைத்து நோல்களிலும் இல்லை என்பது அறுதி இட்ட விடை. நெஞ்சே! நீ வினை வலிமையை வெல்ல நினைத்துப் பார்த்துக் கணித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். அவ்வளவுதான். நற்செயல் புரிந்து விண்ணுலகம் செல்பவர்களை அவர்களின் தலைவிதி தடுத்து நிறுத்த முடியாது.
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள். |
38 |
பற்றற்ற இல்லறத் துறவி நீத்தாரும், துறவறத் துறவியும் மனம் போன பக்கமெல்லாம் மெய்பொருளைத் தேடிக்கொள்வர். அப்படி அவர்கள் தேடிக்கொள்ளும் மெய்பொருளுக்குத் நன்று என்று ஒன்று இல்லை. தீது என்று ஒன்று இல்லை. நான் என்னும் தன்முனைப்பு ஒன்று இல்லை. “தான்” என்று தெய்வத்தைக் காணும் தனி நினைவு ஒன்று இல்லை. அது சரியில்லை என்று ஒன்று இல்லை. இது சரி என்று ஒன்று இல்லை. அவர் நிற்கும் நிலைதான் “அது” என்னும் தெய்வம் ஆம். தத்துவமும் அதுதான்.
சம்பறுத்தார் = பற்றை அறுத்தவர், அவா அறுத்தவர், நீத்தார். சம்பு = பற்றுக்கோடு, பிடிப்பு. பொருள் = மெய்ப்பொருள். போனவா = போனவாறு, போன பக்கம் எல்லாம். யாக்கை = உயிரோடு இணைந்திருக்கும் உடம்பு.
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத் தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும் கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு. |
39 |
தலைதூக்கி நின்ற காமம், வெகுளி, மயக்கம் மூன்றும் 30 ஆம் ஆண்டு அளவில் அற்றுப்போக வேண்டும். நோன்பு என்னும் ஒரு பொருளைத் தவற விடாமல் தனக்குள் இருக்கும்படி பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப் பெறாவிட்டால் தான் கற்ற கலை அளவினதாக வாழ்க்கை அமைந்துவிடும். கண்ணுக்கு இனிய பெண்களின் முலையைத் துய்க்கும் அளவுதானே ஒருவனது மூப்பு நிற்கும். (முலை-வாழ்க்கை மூப்பில் உதவுமா? கலை-வாழ்க்கை நிலை-வாழ்க்கை ஆகுமா?)
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய். (திருக்குறள் 390)
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்று உணர். |
40 |
திருவள்ளுவத் தேவர் இயற்றிய திருக்குறளும், திரு நான்மறை எனப் போற்றப்படும், ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களின் முடிபும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரத் தமிழும், மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார், திருவாசகம் ஆகியனவும், திருமூலர் வாக்காகிய திருமந்திரமும் சொல்லும் கருத்துக்கள் எல்லாமே ஒரே கருத்தைத்தான் என்று உணர்ந்துகொள்ள வேண்டும்.
நல்வழி முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நல்வழி - அவ்வையார் நூல்கள், இல்லை, ஒன்று, காலத்தில், நல்வழி, வாழ்க்கை, நூல்கள், வேண்டும், அவ்வையார், என்னும், இலக்கியங்கள், தேவர், கல்வி, மயக்கம், வெகுளி, மூவர், தமிழும், | , பாடிய, சொல்லும், திருமூலர், காமம், மூப்பு, சம்பறுத்தார், போனவா, விடை, வளரும், வேதம், பொருள், தாய், ஆகுமாம், அறுத்தவர், நிற்கும், மனம், அவற்றின்