நல்வழி - அவ்வையார் நூல்கள்
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும் என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது. |
11 |
என் வயிறே! இன்று உணவு கிடைக்கவில்லை. இன்று ஒரு நாளைக்கு மட்டும் சாப்பிடாமல் இரு என்று சொன்னால் இருக்கமாட்டேன் என்கிறாய். வயிற்றுப் பசி கிள்ளுகிறது. இன்று நிறைய உணவு கிடைத்திருக்கிறது. இரண்டு நாளைக்குச் சாப்பிட்டுகொள் என்று சொன்னாலும் சாப்பிடமாட்டேன் என்கிறாய். உணவுக்காக நான் போராடும் துன்பம் உணவுக்குத் தெரியவில்லை. உடம்புத் துன்பத்தை அதிகமாக்கிக்கொண்டே இருக்கிறாய். அதனால் வயிறே! எப்படியும் உன்னோடு நிம்மதியாக வாழமுடியவில்லை.
ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம் உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர் பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. |
12 |
ஆற்றங்கரையில் ஆற்றுநீரை உண்டுகொண்டு வளமோடு இருந்த மரமும் ஒருநாள் விழுந்துவிடும். அரசனே எண்ணிப் பார்க்கும்படி பெருமிதத்தோடு வாழ்ந்த வாழ்வும் ஒருநாள் விழுந்துவிடும். பின் எதுதான் விழாது என்கிறீர்களா? உழுது, அதன் விளைச்சலை உண்டு வாழ்தலே ஏற்றம். பெருமை. இதற்கு ஒப்பான வாழ்வு வேறு எதுவும் இல்லை. வேறு எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குப் பழுது உண்டு.
ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்? மெய் அம்புவி அதன் மேல். |
13 |
நன்மை அடைபவரை யாரால் அழிக்கமுடியும்? சாவாரை யாரால் தடுக்கமுடியும்? பிச்சை எடுப்பவரை யாரால் விலக்கமுடியும்? உலகில் இவை நிகழத்தான் செய்யும். ஓவாமல் = சளைக்காமல்.
பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால் இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர் விடுகை சால உறும். |
14 |
பிச்சை எடுக்கும் வாழ்க்கை மிகமிக இழிவு. அந்த வாழ்க்கைக்கு மூத்த குடிவாழ்க்கை எது தெரியுமா? சொல்கிறேன் கேள். பலப்பல ஆசைகளைக் காட்டி கேட்போர் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இடித்து நப்பாசை கொள்ளும்படிச் செய்து அவர்கள் தரும் பொருளால் தன் வயிற்றை வளர்த்தல் ஆகும். சீச்சீ! இப்படி வாழ்வது மானக்கேடு. இந்த மானக்கேட்டோடு வாழ்வதைக் காட்டிலும் தன் உயிரை விட்டுவிடுவது மேலானது.
சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம் இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும். |
15 |
சிவாயநம என்னும் சிந்தனையில் ஆழ்ந்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை. மகிழ்வாக வாழ்வதற்கு உரிய தந்திர மந்திரம் இதுதான். இதுவே நமது அறிவு கண்ட மதியாக இருக்கவேண்டும். அல்லாத அறிவின் மதிப்பீடு எல்லாம் விதியால் நமக்குக் கிடைத்தவை.
சிவாயநம, சிவ்+ஆயம்+நம, சிவன் துணவர் நம்முடையவர், சிவன் தோழராக நாம் இருப்போம், நிகழ்வுகள் எல்லாமே சிவ் என்னும் உணர்வு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நல்வழி - அவ்வையார் நூல்கள், இல்லை, நூல்கள், உண்டு, இன்று, நல்வழி, வேறு, வயிறே, அவ்வையார், யாரே, யாரால், பிச்சை, வாழ்க்கை, இடித்து, அல்லாத, சிவ், சிவன், | , என்னும், சிவாயநம, இதுவே, ஓவாமல், எல்லாம், அபாயம், பழுது, உணவு, என்கிறாய், உன்னோடு, நாளும், இலக்கியங்கள், என்றால், மரமும், வாழ்வும், ஒருநாள், விழுந்துவிடும், வாழ்வதற்கு, உழுது, ஏற்றம், சாவாரை