ஞானக்குறள் - 1.மோட்சம் செல்லும் வழி
ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத் தோதிய நூலின் பயன். |
1 |
ஒருவனிடம் ஆதியாய் நின்று அவனை ஆட்டிப் படைப்பது அவனிடமுள்ள அறிவு. அந்த அறிவுதான் அவனுக்கு முதலெழுத்து (தலையெழுத்து). நூலைப் பயிலும்போதெல்லாம் நூலின் கருத்துக்களை அவன் அறிவு தன்பால் இழுத்துச் சென்று நூலின் பயனாக ஆக்கிக்கொள்ளும். (நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும் – திருக்குறள் 373)
பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந் தரமாறிற் றோன்றும் பிறப்பு. |
2 |
சத்தி பரமாக உள்ளது. ஐம்பெரும் பூதங்கள் இந்தச் சத்திக்குள் உள்ளன. இவை தரம் மாறுவதால் பிறப்பு தோன்றுகிறது. சத்தாக இருக்கும் சத்தியைச் சக்தி என்கிறோம். நிலம், நீர், தீ, காற்று, விண் என்பவை ஐம்பெரும் பூதங்கள். இவற்றின் இராசயணக் கலவை மாற்றத்தால் புதுப்புதுப் பிறப்புக்கள் தோன்றுகின்றன.
ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற மாசை படுத்து மளறு. |
3 |
காதில் கேட்கும் ஓசை, உடம்பைத் தொடும் பரிசம், கண்ணில் தெரியும் உருவம், வாயில் தெரியும் சுவை, மூக்கில் தெரியும் நாற்றம் ஆகியவை நமக்கு ஆசையை மூட்டுகின்றன. சேற்றில் ஆழ்த்துகின்றன.
தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு முருவத்தா லாய பயன். |
4 |
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் எண்ண உருவத்தால் தோன்றும் விளைவுகள்.
நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே யுலவை யிறண்டொன் றுவிண். |
5 |
நிலம், நீர், தீ, காற்று, விண் என்னும் ஐந்து தோற்றங்களும் நிலத்தில் உள்ளன. நீர், தீ, காற்று, விண் என்னும் நான்கு தோற்றங்களும் நீரில் உள்ளன. தீ, காற்று, விண் என்னும் மூன்று தோற்றங்களும் தீயில் உள்ளன. காற்று, விண் என்னும் இரண்டு தோற்றங்களும் காற்றில் உள்ளன. விண்ணில் ’விண்’ என்னும் உயிர்த்தோற்றம் உள்ளது.
மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து. |
6 |
மாயன், பிரமன், உருத்திரன், கேசன், சிவன் என்பன ஐந்து மூர்த்திகள்.
மாலய னங்கி யிரவிமதி யுமையோ டேலும் திகழ்சத்தி யாறு. |
7 |
மால், அயன், அங்கி, இரவி, மதி, உமை, ஏல் என்பன ஆறு சக்திகள்.
தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு சுக்கிலந் தாதுக்க ளேழு. |
8 |
தொக்கு என்னும் தோல், உதிரம் என்னும் இரத்தம், ஊன் என்னும் உடம்புக்கறி, மூளை, நிணம் என்னும் கொழுப்பு, எலும்பு, பாலுணர்வு ஊற்றாகிய சுக்கிலம் என்பன ஏழு தாதுக்கள்.
மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. |
9 |
மண் நீர் தீ மதி (குளுமை) காற்று இரவி விண் மூர்த்தி என்பன எட்டு எச்சங்கள்
இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி னவையெல்லா மானது விந்து. |
10 |
இவையெல்லாம் ஒன்றுகூடி உடம்பாக உருவாகி விந்தைக் கொண்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1.மோட்சம் செல்லும் வழி - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - நான்கு