ஜெயிலில் இருந்தே ஜெயித்த பெண்மணி

உலகில் உள்ள வி.ஐ.பி. பெண்களில் இவரும் ஒருவர்.
அதை ஒரு சிறிய அரண்மனை என்று கூறலாம். அவ்வளவு பெரிய வீடு அது! தேக்குக்குப் பெயர் போன பர்மாவின் தலைநகரான ரங்கூனில் இருந்த பிரமாண்ட பங்களா அது.
பர்மா நாட்டின் தலைவர்களில் ஒருவரான ஆங் சான் வசிக்கும் வீடு. அந்த வீட்டில் அரசியல்வாதிகள் அதிகம் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் சமீப காலமாக பெண்களின் நடமாட்டமும் அங்கு அதிகரித்திருந்தது. காரணம் ஆங் சானின் இரண்டு வயது மகள் சூ கி.
ஜப்பானின் பிடியிலிருந்து அப்போதுதான் ஒரு வழியாகத் தப்பித்திருந்த பர்மா, பிரிட்டனிடம் அடிமையாகிப் போயிருந்த நேரம் அது. ஆங் சான் போன்ற உள்ளுர்த் தலைவர்களின் போராட்ட முயற்சிகளின் காரணமாக, பர்மாவுக்கும் சீக்கிரமே சுதந்திரம் கிடைத்துவிடக் கூடும் என்ற பேச்சும் பரவியிருந்தது.
நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சா உங்கப்பாதான் இந்த நாட்டின் முதல் பிரதம மந்திரி. நீதான் நாட்டின் குட்டி இளவரசி! என்று ஜோதிடம் கூறிக் கொண்டிருந்தார்கள் அங்கு வந்திருந்த சில பெண்கள். அவர்கள் விரல்கள் குழந்தையின் கன்னத்தை ஆசையாகக் கிள்ளி மகிழ்ந்து கொண்டிருந்தன.
பெண்களின் அந்தக் கூட்டத்தில் இருந்த குழந்தையின் அம்மா டா கின் கி இதைக் கேட்டுக் புன்னகைத்தாள்.
ஆனால் அந்தப் புன்னகையும் நீடிக்கவில்லை. வந்தவர்கள் சொன்ன ஜோதிடமும் பலிக்கவில்லை. ஆங் சான் பிரதமராகாதது மட்டுமல்ல. அடுத்த சில நாட்களிலேயே கொடுரமாக படுகொலையும் செய்யப்பட்டார்! அந்தப் பிஞ்சு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டாள் குட்டிப்பெண் சூ கி.
அதன்பின் அடுத்த வருடமே பர்மாவுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்றாலும், பர்மாவில் ராணுவ ஆட்சிதான் வந்தது. ஆனாலும் பர்மிய மக்களின் பெரும் மரியாதையைப் பெற்றவர் ஆங் சான் என்பதால், மக்களை திருப்திப் படுத்துவதற்காகவே அவரது மனைவி இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார்.
டெல்லிக்குத் தனது பதினைந்து வயது மகளோடு தன்னந்தனியாளாக வந்து சேர்ந்த அந்தத் தாய்க்கு இந்தியப்பிரதமர் ஜஹர்லால் நேரு குடும்பத்தின் நட்பு கிடைத்தது. உங்கள் மகள் தேவதை போல் இருக்கிறாள் என்று நேரு அடிக்கடி சூ கி-யைப் பற்றிச் சொல்லி அந்தக் குழந்தையையும் கொஞ்சுவாராம்! அந்தக் குட்டி தேவதை, நோபல் பரிசு பெறப் போகிறாள் என்ற உண்மையைக் காலம் அப்போது மூடி வைத்திருந்தது!
கணவர் படுகொலை செய்யப்பட்ட அதே பர்மாவில் தன் மகளுக்குப் போதிய பாதுகாப்பில்லை என்ற நினைப்பு சூ கி-யின் அம்மா மனசில் இருந்து கொண்டிருந்ததால் குழந்தையை அந்த வயதிலேயே தனியாக லண்டனுக்கு அனுப்பி அங்கே படிக்க வைத்திருக்கிறார். எந்தத் தாய்க்கு அத்தனை சிறுவயதில் நாடு விட்டு நாடு மகளைப் பிரிந்து இருக்க முடியும்? சூகியின் எதிர்காலத்தை மனதில் வைத்து மனதைக் கல்லாக்கிக் கொண்டார் அந்தத் தாய்.
அப்பாவின் அரசியல் அறிவு ரத்தத்தில் ஊறி இருந்ததால், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முக்கிய பாடங்களாக சூ கி எடுத்துப் படித்தது கூட தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றைதான்!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள செயிண்ட் ஹக் கல்வி மையத்தில் சூ கி படித்துக் கொண்டிருந்தபோது, அதே பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த மைக்கேல் ஆரிஸ் என்ற இளைஞனுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு இருவருக்கிடையேயும் காதலாக மலர்ந்தது. இமயமலைப்பகுதி திபெத் ஆகியவை குறித்த ஒரு ஆராய்ச்சியைச் செய்த காரணத்தால், ஆசியாவில் நிலவும் அரசியல் சூழல் பற்றிய நல்ல அறிவு இருந்தது மைக்கேலுக்கு. இதுவும் சூ கி அவர்பால் நேசம் கொள்ள ஒரு முக்கிய காரணம்.
படிப்பிலும் கெட்டி, பரம்பரையிலும் அரசியல் போன்ற காரணங்களினால் சூ கி-க்கு நியூயார்க்கிலிருக்கும் ஐ.நா.சபையின் செயலக ஆலோசனைக் குழு ஒன்றில் உதவிச் செயலாளர் பணி கிடைத்தது.
வேலை கிடைத்த பின் சூ கி. தான் காதலித்த மைக்கேல் ஆரிஸைத் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அந்தத் திருமணம் பர்மாவில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது காரணம் சூ கி திருமணம் செய்து கொண்டது ஓர் அந்நிய நாட்டவரை! அந்தக் காலத்தில் இதெல்லாம் சகஜமான ஒன்றல்ல. தவிர, தேசப்பற்றுள்ள தங்களது அபிமானத் தலைவரின் மகள் ஒரு மண்ணின் மைந்தனைத் தான் கணவனாகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று மக்களே தீர்மானித்திருந்தார்கள். மக்களிடம் சூ கிக்கு அத்தனை பெரிய எதிர்பார்ப்பும் அன்பும், மாபெரும் வரவேற்பும் இருந்தது. அந்தத் திருமணம்தான் மக்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்ன செய்வது? சூ கியின் திருமண விருப்பம் வேறு மாதிரியாக இருந்ததே!
திருமணம் நடந்தபிறகு நியூயார்க்கில் தன் வேலையை ராஜினாமா செய்த சூகி. பின்பு லண்டனில் உள்ள தென்கிழக்கு ஆசிய மையத்தில் சிட்டிங்ஸ்காலராகப் பணிபுரிந்தார். மைக்கேலுக்கும் அங்கேயே ஒரு வேலை கிடைத்தது. சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த அந்த இல்லறத்தின் பயனாக அலெக்ஸாண்டர், கிம் என்று இரண்டு மகன்களும் பிறந்தனர்.
சூ கியின் வாழ்க்கையை திசை திருப்பும் விஷயங்கள் அப்போதுதான் நடந்தன. அவரது சொந்த நாடான பர்மா சுதந்திரத்துக்கு அப்புறமும் ராணுவ ஆட்சியில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்த நாட்டு மக்கள். நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்! உன் தாய்நாட்டின் கதியை நேரில் வந்து பார் பெண்ணே! என்று தங்கள் அபிமானத் தலைவரின் மகளுக்கு மிக உரிமையோடு கடிதங்கள் மேல் கடிதங்கள் போட்டார்கள்.
இந்த நிலையில் ரங்கூனியிலிருந்த சூ கியின் அம்மாவின் உடல்நிலை வேறு மோசமடைய, உடனடியாக பூட்டானிலிருந்து பறந்து சென்றார் சூ கி.
அதற்குள், 26 ஆண்டுகள் பர்மாவை ஆண்ட நெவின் பதவியிறக்கப்பட்டார். இனி பர்மாவின் அரசியலமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அறிவித்தது அரசு. மக்கள் வேறெகை விரும்புவார்கள்... ஜனநாயகத்தைத்தானே? ஆனால் ராணுவம் இதற்கு ஒப்புகொள்ளவில்லை. தங்கள் ஆட்சியே நடக்கவேண்டும் எனத் தீர்மானித்தது. நெவின்னுக்குப் பிறகு பதவியேற்ற தளபதி ஷா நவுங் பலாத்காரத்தைப் பயன்படுத்தினார். அதனால் பர்மாவில் மாணவர்கள் போராட்டம் உச்சமடைந்திருந்தது. மக்களாட்சி வேண்டுமென்று போரிட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் ராணுவத்தால் கொடூமாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள்!
பார்த்துக் கொண்டிருந்த சூ கியால் சும்மா இருக்க முடியவில்லை. தாய் மண்ணுக்காக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று மனசு பரபரத்தது தன்னை மறந்தார்... தன் குடும்பம் மறந்தார்... சூ கி என்னதான் வெளிநாடுகளிலேயே வளர்ந்திருந்தாலும் பர்மா மக்களுக்கு அவர் பேரில் தனி மதிப்பு இருந்தது... அவரிடம் ஒருவித எதிப்பார்ப்பு வைத்திருந்தனர் மக்கள்.
சூ கி பல்வேறு ஜனநாயக ஆர்வக் குழுக்களை இணைத்தார். பதினைந்து வருடங்களுக்கு முன்பு அந்த நவம்பர் 4-ம் தேதி ஜனநாயக தேசிய அணி உருவானது. அதன் செயலாளராக எல்லோராலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சூ கி.
இதற்கிடையில் சூ கியின் தாய் இறந்து போனார். அவருடைய இறுதி ஊர்வலத்திற்குத் திரண்ட மாபெரும் ஊர்வலத்தைப் பார்த்து கொஞ்சம் மிரண்டுதான் போய்விட்டது ராணுவம்! அந்த பிரமாண்டமான ஊர்வலம் தங்களது ஆட்சிக்கு விடப்பட்ட சவால் என்று கருதியது. இத்தனை வருடங்கள் இல்லாமல் திடீரென்று வந்து குதித்த இந்தப் பெண் எங்கேயிருந்து இத்தனை கூட்டத்தைக் கூட்டினாள் என்று சூ கியின் மீது கடும் ஆத்திரப்பட்டு உடனே சூ கியை வீட்டுக் காவலில் அடைத்தது ராணுவம்! அவரது கட்சியைக் சேர்ந்தவர்களையும் கொத்துக் கொத்தாக சிறைக்குள் அடைத்தார்கள்.
வீட்டுச் சிறையிலிருந்து என்னையும் அவர்கள் இருக்கும் சிறையிலேயே அடையுங்கள்... என்றபடி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார் சூ கி.
உலகையே விலுக்கென்று திரும்பிப் பார்க்க வைத்து விட்டது அவரது போராட்டம்! ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர், மனிதாபிமான அடிப்படையில் சூ கியை அவரது குடும்பத்தோடு சேர்ந்து வாழவிட வேண்டும் என்று அறிக்கை யெல்லாம் தந்தார் பர்மா அரசோ அவரது குடும்பம் பர்மாவுக்கு வரவேகூடாது. ஆனால் சூ கி வேண்டுமானால் தன் கணவர் இருக்கும் நாட்டுக்குச் செல்லட்டும்... என்றது. அப்படிப் போனால் மீண்டும் பர்மாவின் எல்லைக்குள் நுழைய இனி தனக்கு அனுமதியே கிடைக்காது என்பது சூ கிக்குப் புரிந்தது. எனவே பர்மாவை விட்டு வெளியேறாமலேயே ராணுவ ஆட்சிக்கு எதிராக தன் போராட்டத்தை அமைதியாகவே தொடர்ந்தார் சூ கி.
அந்தப் பெண்ணின் உறுதியையும் தியாகத்தையும் பாராட்டும் வகையில் மனித உரிமைக்காக வழங்கப்படும் சகரோவ பரிசை சூ கி-க்கு வழங்கியது ஐரோப்பிய பாராளுமன்றம். இதனால் இன்னும் கொதிப்படைந்தது ராணுவ அரசு. ஐந்து வருடங்களுக்கு எந்த விசாரணையும் இல்லாமலேயே சூ கியைக் கைது செய்து காவலில் வைக்கலாம் என்று சட்டத்தையே மாற்றியது.
ஆனால்...இப்படி சட்டம் மாற்றப்பட்ட அதே ஆண்டில் சூ கிக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு கிடைத்தது. இந்த விருதின் மூலம் கிடைத்த 13 லட்சம் டாலரை சூ கி தனக்காக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தத் தொகை முழுவதையும், பர்மிய மக்களின் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காக ஒரு ட்ரஸ்டை ஏற்படுத்தி அதில் போட்டு விட்டார்.
நோபல் பரிசு பெற்ற சூ கியை சந்திக்க ஏற்கெனவே அதே நோபல் பரிசு பெற்ற ஏழு பேர் சென்றார்கள். ஆனால் அவர்களை பர்மா எல்லைக்குள் கூட விட மறுத்தது அந்த அராஜக ராணுவ அரசு. அந்த ஏழு பேரும் தாய்லாந்துக்குச் சென்று அங்கிருந்து ராணுவ அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்ப, மீண்டும் மீண்டும் உலகின் தலைப்புச் செய்திகளானார் சூ கி.
1994-ல் ஒரு அதிசயம் நடந்தது. பல நாடுகளின் கண்டனத்துக்குப் பிறகு குடும்பத்தினால்லாத ஒரு வெளி நபலை சூ கி சந்திக்க ராணுவ அரசு அனுமதித்தது. அவர் நியூயார்க் டைம்ஸ் இதழின் நிருபர். இந்தப் பேட்டியின் மூலம் சூ கியின் புகழ் இன்னும் பரவ, வேறு வழியில்லாமல் ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அடுத்த வருடம், வீட்டுக் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் சூ கி. பர்மாவில் ஜனநாயகம் மலர வேண்டும். அதேசமயம் வெளிநாடுகளிலிருந்து பலவித முதலீடுகளும் இங்கு பாய்ந்தால்தான் பொருளாதாரத்தில் எங்கள் நாடு ஓரளவாவது உயரமுடியும் என்ற அவரது அக்கறையான பேச்சு பலரது பாராட்டுகளைப் பெற்றது.
ராணுவ அரசு இப்போது இன்னொரு உத்தரவைப் போட்டது. அடுத்த தேர்தலில் சூ கி அவரது கட்சியின் பொதுச் செயலாளராகப் போட்டியிடக் கூடாது என்றது.
இதற்கு ஒரு உள்நோக்கம் உண்டு. வெளிநாட்டினர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதால் ஏற்கெனவே பர்மாவின் இரு சபைகளிலும் உறுப்பினராக முடியாத நிலை சூ கிக்கு. ஏனென்றால் அந்த நாட்டுச் சட்டம் அப்படி. இப்போது கட்சி பொதுச் செயலாளராகவும் அவர் இல்லை என்றால் எந்தவித அங்கீகாரம் உள்ள பதவியும் அவருக்கு இல்லாமல் போகுமே.
அரசின் குள்ளநரித்தனத்தை உணர்ந்து கொண்டதுமே சூ கி அதற்கு உடன்பட மறுத்தார். கட்சித் தலைமைத் தேர்தலில் நின்றார். கட்சி அவரை மீண்டும் பொதுச் செயலாளராக்கி மகிழ்ந்தது. இதைத் தொடர்ந்து ராணுவ அரசு பலவித அடாவடிச் செயல்களில் ஈடுபட்டது. புத்தாண்டு தினத்தன்று சூ கிக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்காக குழுமியிருந்த பெரும் கூட்டத்தில் பாம்புகளை வீசியெறிந்து கூட்டத்தின் ஒரு பகுதியைக் கலைத்தது.
மறுபடி இரண்டு வருடங்களிலேயே மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் சூ கி.
இதற்கு நடுவே சூ கியின் தனி வாழ்வில் மேலும் சில சோகங்கள். நான்கு வருடங்களாக அவரைச் சந்திக்காதிருந்த அவர் கணவருக்கு ப்ராஸ்டேட் புற்று நோய் வந்து சிரமப்பட்டார். சூ கி பர்மாவை விட்டு வெளியேறலாம். ஆனால் மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னது அரசு. போகாதே சூ கி... நீ போய்விட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் வரும் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லாமல் போய்விடும் என்று ஒருபக்கம் கதறினார்கள் மக்கள். கணவரை பர்மாவுக்கு அழைத்து வரலாம் என்றால் அவருக்கு விஸா வழங்க மறுத்தது அரசு. ஆக, இறுதிவரை நோய் வாய்ப்பட்ட கணவனைப் பார்க்க முடியாமலே போனது சூ கிக்கு. அடுத்த ஒரே வருடத்தில் சூ கியின் கணவர் லண்டனில் இறந்தார்.
அதன்பிறகு சூ கியின் வீட்டுக் காவலை அவ்வப்போது விலக்கிக் கொண்டாலும் ரங்கூனை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று நிபந்தனையிட்டது அரசு. உலகமே உங்களை கவனிக்கிறது என்று அந்த அரசை பில் கிளிண்டன் கூட எச்சரித்துப் பார்த்தார். ஆனால் உடனடிப் பலன் இல்லை. தொடர்ந்து பல நாடுகளும் ஐ.நா.வும் கண்டிக்க, கடைசியாக மூன்று வருடங்களுக்கு முன்பிருந்து தனது தாக்குதல்களை நிறுத்திக் கொண்டது ராணுவ அரசு.
அதற்காக சூ கியின் தொல்லைகள் தீர்ந்துவிட்டது என்று அர்த்தமில்லை மறைமுகமாக உறவினர்கள் மூலம் தொல்லைகளைத் தர ஆரம்பித்திருக்கிறது. சூ கியிடமிருந்து பிரிந்த ஒரு ஒன்றுவிட்ட சகோதரர் சூ கி வசிக்கும் வீடு தன்னுடையதுதான் என்று ஒரு வழக்கைத் தொடுத்தார். நல்லவேளையாக பல ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்து விட்டது. அதன்பின் இப்போது அமெரிக்காவில் வசிக்கும் சூ கியின் அண்ணன் தன் தங்கையின் வீட்டில் தனக்கும் உரிமையுண்டு என்று கூறத் தொடங்கியிருக்கிறார். இவருக்கும் அந்த வீட்டில் உரிமையுண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால் தனது பங்கை பர்மா அரசுக்கு அளித்துவிடப் போவதாக அறிவித்திருக்கிறார் அந்தச் சகோதரர். அப்படி நடந்தால் சூ கியின் வீடே அவருக்கு ஆபத்து நிறைந்ததாகிவிடும். ஒருவேளை நீதிமன்றம் உரிமை கொடுத்த பிறகும் தன் சகோதரருக்கோ அவரது வாடகைதாரருக்கோ வீட்டில் அனுமதி மறுத்தால் அவரை சிறைக்கு அனுப்ப அந்த நாட்டுச் சட்டத்தில் வழியிருக்கிறது.
போராட்டம் தான் வாழ்க்கை என்றாகி விட்டது சூ கிக்கு. ஆனால் வாழ்க்கையே போர்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் என்ற வரிகளுக்கு உதாரணமாகத் திகழும் சூ கி. இன்றளவும் பர்மாவில் ஜனநாயகம் மலர வேண்டுமென்று போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.
பர்மா இப்போது தன் பெயரை மியான்மர் என்று மாற்றிக் கொண்டுவிட்டது. அதன் தலைநகரின் பெயரும் ரங்கூன் என்பதிலிருந்து யாங்கூனாக மாறிவிட்டது. ஆனால் ஆட்சியின் தன்மை தான் மாறவில்லை. சூ கியின் வாழ்நாளுக்குள் அது மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது பலருக்கும். இதைவிட வேறென்ன சாதனை வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜெயிலில் இருந்தே ஜெயித்த பெண்மணி, கியின், அந்த, ராணுவ, அரசு, அவரது, பர்மா, கிக்கு, வேண்டும், மீண்டும், பர்மாவில், மக்கள், அந்தத், திருமணம், அடுத்த, வந்து, நோபல், தான், கிடைத்தது, பரிசு, அவர், உள்ள, சான், விட்டு, அரசியல், பர்மாவின், இப்போது, வீட்டுக், வீட்டில், விட்டது, பொதுச், அவருக்கு, அந்தக், ராணுவம், பர்மாவை, நீதிமன்றம், வருடங்களுக்கு, காவலில், மூலம், ஜனநாயகம், கியை, இல்லாமல், பிறகு, போராட்டம், இதற்கு, இருக்க, மகள், சுதந்திரம், அந்தப், இரண்டு, காரணம், வீடு, நாட்டின், வசிக்கும், பர்மாவுக்கு, தனது, கொண்டிருந்த, மாபெரும், செய்து, தாய், நாடு, நட்பு, கணவர், வேறு, Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி