கல்யாண சமையலில் கலக்கல்
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம். இந்த பாட்டு வரிகள் இன்றைக்கும் கூட உண்மையானதாகத்தான் இருக்கிறது.
திருமணம் என்றாலே அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியை ஊற்றுவது விருந்து தான்! அத்தகைய விருந்தை அசத்தலாக தயார் செய்து கொடுப்பதில் இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கிறார் சென்னை பெண்மணி உமா ஜெயராமன்!
இவரது கணவர் ஜெயராமன்! இருவரும் ஒன்றாக இணைந்து ஜெய்மாஹ’ மேரேஜ் கேட்டரிங் சர்வீசஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.
சைவ உணவுகள் தயாரிப்பதில் தனி முத்திரை பதித்துள்ள ஜெய்மாஹ’ ஜெய்ராமன் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை... என்று பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து இருக்கிறார். தமிழக சமையல் கலையை உலகம் முழுக்க பரப்பி வரும் உமா ஜெயராமன் தம்பதியை மேற்கு மாம்பலம், ஏரிக்கரை தெருவில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தோம்.
சமையலில் உள்ள அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்துள்ள உமா ஜெயராமன் தம்பதிக்கு திருமண சமையலில் 15 ஆண்டு அனுபவம்!
சமையல் கலை நிபுணர் உமா ஜெயராமன் கூறும் போது:-
முன்பை விட தற்போது நாடு முழுவதும் மேரேஜ் கேட்டரிங் சர்வீசஸ் பெருகி விட்டன. சென்னையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. என்றாலும் நாங்கள் முன்னணியில் இருப்பதற்கு காரணம் மாறாத ருசியும், தரமும் தான்!
ஒரு இடத்தில் ருசி சரி இல்லை என்றால் கெட்ட பெயர் வந்துடும் அதனால் நாங்கள் திருமண சமையலின் போது ஒவ்வொரு உணவையும் டேஸ்ட் பண்ணிய பிறகே பரிமாறுவோம் என்றார் உமா ஜெயராமன்!
சமையல் கலையில் தனி முத்திரை பதித்து வரும் ஜெய்மாஹ’ ஜெய்ராமன் கூறும் போது, நான் ராணுவத்தில் 8 ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு தான் என்னோட அப்பா மேற்கொண்டு வந்த இந்த தொழிலில் நுழைந்தேன். தொடக்கத்தில் ரொம்பவே கஷ்டப் பட்ட நான் அப்பா ராமய்யர்துரை, நங்கநல்லூர், லட்சுமி நாராயணன் போன்றோரிடம் சமையல் கலை பற்றி படித்தேன். இன்று என்னால் பல வகையான ருசியான உணவுகளை தயாரிக்க முடிகிறது.
ஒரு காலத்தில் சமையலை மட்டுமே கவனித்த நாங்கள் தற்போது திருமணத்தின் அத்தனை வேலைகளையும் கன கச்சிதமாக செய்து தருகிறோம் என்கிறார் அவர்.
திருமணத்தில் ஒன்றாக இணையும் ஜோடியை வாழ்த்த வந்தவர்களின் மனது வாழ்த்தவில்லை என்றாலும் அறுஞ்சுவை உணவுகளால் வயிறு வாழ்த்திவிடும் என்பது நமது முன்னோரின் நம்பிக்கை. அதனால் தான் திருமண வீட்டார் விருந்து நன்றாக அமைய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
விருந்து சரியில்லை என்றால் கல்யாண மண்டபமே களை இழந்து விடும். வந்தவர்களின் முணு முணுப்பு அடங்க வெகு நேரம் ஆகும்.
அப்படியானால் இந்த முணுமுணுப்பு எதுவும் வராமல் பார்த்துக் கொள்வது எப்படி?
இதற்கு ஹெய்மாஹ’ ஜெய்ராமன் பதில் தருகிறார்.
திருமண வீட்டில் பெரும்பாலும் முணுமுணுப்பு அதிகமாய் வருவது காபி மற்றும் சாம்பாரில் தான்!
அதனால் பால் காய்க்கும் போது ரொம்பவும் கவனமா இருக்கணும். சிறிது கெட்டுப் போனால் கூட, இதென்ன காபி, புளிப்பா இருக்குன்னு கலாட்டா பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.
அதே மாதிரி மற்ற அயிட்டங்களை விட சாம்பார், ரசத்தில், கவனம் தேவை. ரொம்பவும் நம்பிக்கையானவர்களிடம் தான் சாம்பார், ரசம் தயாரிக்கும் பொறுப்பை விட வேண்டும்.
சில கேட்டரிங் சர்வீஸ்கள் அதிகமாய் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதாக சொல்லப்படுகிறதே?
உணவுப்பொருட்கள் என்பது நம் உயிரைக் காக்கும் அருமருந்தாகும். அப்படிப்பட்ட உணவில் யார் கலப்படம் செய்தாலும். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
எங்களது 15 ஆண்டு கால சேவையில் எங்கள் மீது இப்படி எந்தவித புகாரும் எழுந்ததில்லை. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்ற நிறுவனங்களுக்கும் கெட்ட பெயர்! தரமான சேவை தான் நிலைக்கும்! இதை அறிந்தவர்கள் நிச்சயம் தவறு செய்ய மாட்டார்கள். ஒரு மனிதனுக்கு பணக்கஷ்டம் வரலாம். ஆனால் புத்திக்கு தரித்திரம் வரவே கூடாது.
ஒரு திருமண விருந்தை சிறப்பாக தயாரிக்க உங்கள் அட்வைஸ்?
எப்படிப்பட்ட காய்கறியாக இருந்தாலும் அவற்றை அலசி தாம்பூலத்தில் வைக்க வேண்டும். கறி, கூட்டுகளுக்கு சரியான அளவில் பொருட்களை சேர்க்க வேண்டும்.
எந்த பொருளாக இருந்தாலும் நாம் ருசிபார்த்த பிறகே பரிமாற அனுப்ப வேண்டும். அது போதாது என்றால் 5 பேரிடம் டேஸ்ட் பார்க்க சொல்ல வேண்டும். அதில் 3 பேர் சரியில்லை என்று சொன்னால் வேறு உணவுதான் தயாரிக்க வேண்டும்.
தென்னிந்திய சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளரான ஜெய்மாஹ’ ஜெய்ராமன் சமையல் கலைபற்றி இளம் பெண்களுக்கு இலவச ஆலோசனை வழங்குகிறார். உமா ஜெயராமன் கூறும் போது, கேட்டரிங் சர்வீஸ் நல்ல லாபகரமான தொழில் சமையல்கலை கற்று இளம் பெண்களும் ஆண்களைப் போல் அதிகம் சம்பாதிக்க முடியும் என்கிறார் அவர்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கல்யாண சமையலில் கலக்கல், வேண்டும், ஜெயராமன், தான், சமையல், போது, திருமண, ஜெய்மாஹ’, கேட்டரிங், ஜெய்ராமன், தயாரிக்க, விருந்து, அதனால், நாங்கள், கூறும், என்றால், Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி