மருத்துவக் கட்டுரைகள் - நோய் தீர்க்கும் ஒரு விசேஷ குளியல்
இந்த வெந்நீர் குளியல் மாதவிலக்கு பிசச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும் எளிமையான முறையில் தீர்க்கிறது.
டீன் ஏஜ் பெண்களாகட்டும்... நடுத்தர வயதுப் பெண்களாகட்டும்.. வயது வித்தியாசமில்லாமல் பல பெண்களையும் தொல்லைபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் மாதவிலக்கு பிரச்னை!
அதிலும் சில பெண்களுக்கு அந்த மூன்று நாட்களின் போது இடுப்பும் வயிறும் அப்படியே விட்டுப் போவது போல் வலிக்கும். பல பெண்கள் துடித்துப் போவார்கள். இதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள்.
இந்த மாத்திரைகள் வலியைக் குறைத்து வேறுபல புதிய நோய்களை நமக்குத் தந்து கொண்டிருக்கும்.
இந்த இடுப்புக் குளியல், மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளைச் சரி செய்கிறது. அது மட்டுமல்ல, பெண்கள் வயதுக்கு வரத் தாமதமாவது, வெள்ளைப்படுதல், அல்சர், மற்றும் மலச்சிக்கல், இடுப்பு எலும்புக்கட்டு வலி, ஏன்... உடலுறவு தொடர்பான சில குறைகளை நீக்குவது என்று பல பிரச்னைகளுக்கும் இக்குளியல் மிக உபயோகமாக இருக்கிறது!
இடுப்புக் குளியல் என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்துவிட வேண்டாம். நமது உடம்பில் இடுப்புப் பகுதி தண்ணீரில் அமிழ்ந்து இருக்கும்படி உட்கார்ந்து இருந்து, குறிப்பிட்ட சில பகுதிகளை அழுத்தம் கொடுத்து, நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்வதுதான் இடுப்புக் குளியல்!
இயற்கை மருத்துவம் செய்யும் பல டாக்டர்கள் இந்த முறையை சிபாரிசு செய்கிறார்கள்.
இடுப்புக் குளியலை எப்படி வீட்டிலேயே செய்வது என்று வாசகிகளுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொல்கிறார் இயற்கை மருத்துவரான டாக்டர். மங்கை.
‘‘இடுப்புக் குளியலை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். வீட்டில் பாத்டப் உள்ளவர்கள் அதை உபயோகித்து இந்த இடுப்புக் குளியலை எடுத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள், நீள அகலம் அதிகமான, பெரிய பிளாஸ்டிக் டப் ஒன்றைக் கூட இதற்குப் பயன்படுத்தலாம். ‘அதையெல்லாம் வாங்குவதற்கு முந்நூறு நானூறு ரூபாய்க்கும் மேல செலவாகுமே...’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் மேலே சொன்ன பிரச்னைகளுக்காக ஊசிகள், மருந்துகள், டெஸ்டுகள் என்று ஒவ்வொரு தரமும் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைகளில் செலவழிக்கும் போது, இந்தச் செலவு மிகச் சிறிய செலவுதான்.
தவிர, ஒருமுறை வாங்கி வைத்துவிட்டால் அதைப் பல மாதங்கள், ஏன் வருடங்கள்கூட உபயோகிக்க முடியும். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் கூட உபயோகிக்க முடியும்!
இடுப்புக் குளியலை குளிர்ந்த நீர் சாதாரணத் தண்ணீர், வெந்நீர் என்று மூன்று விதமான நீரைக் கொண்டு செய்யலாம். ஒவ்வொரு வகை நீர் உபயோகித்து குளிக்கும்போதும் ஒவ்வொரு வகை எஃபெக்ட் கிடைக்கும்.
பொதுவாகவே இதை வெறும் வயிற்றுடன், அதிகாலை மற்றும் மாலையில் செய்வதே நல்லது. முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்... இடுப்புக் குளியலில் எந்தவிதமான பின்விளைவுகளும் கிடையாது என்பதுதான்!
குளிர்ந்த நீர் இடுப்புக் குளியல்
உங்களுடைய தலையும் பாதமும் மட்டும் வெளியே இருக்கும்படி, பாத்டப்பில் அல்லது பிளாஸ்டிக் டப்பில் அல்லது தொட்டியில் அமர்ந்து கொள்ளுங்கள். உயரம் அதிகமான தொட்டி அல்லது டப்களில், டப்பின் உட்புறம் ஒரு சிறு ஸ்டூல் போட்டு, அதில் உங்கள் உட்காரும் பாகத்தை (Back) வைத்துக் கொண்டால் குளிப்பதற்கு சுலபமாக இருக்கும். பாதங்களை, டப்புக்கு வெளியே மற்றொரு ஸ்டூலில் வைத்துக் கொள் ளுங்கள். முதலில் உங்களது மார்பகங்களுக்குக் கீழே இருந்து, தொடைகள் வரை வரும்படி குளிர்ந்த நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர், நீரில் அமிழ்ந்தபடி உங்கள் அடி வயிற்றுப் பகுதியை சின்னச் சின்ன வட்டங்களாக, மென்மையாக தேய்த்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் வேகத்தை சற்றே அதிகப் படுத்தித் தேயுங்கள். இதனால், அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டம் சீராகும்.
இப்படி தேய்க்கும்போது அடிவயிற்றுப் பகுதி மட்டுமல்ல... பிறப்புறுப்பின் பகுதிகளையும், தொடையின் ஆரம்பப் பகுதிகளையும் நன்றாகத் தேய்த்து விடுங்கள்.
இந்தவகை இடுப்புக் குளியல் வெள்ளைப் படுதல், அல்சர், மலச்சிக்கல், போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.
வெந்நீர் இடுப்புக் குளியல்
இந்தக் குளியலில், உடல் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரின் சூடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகைக் குளியலில் தொப்புளில் இருந்து தொடைகள்வரை நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி, அமரும் முறை, தேய்த்து விடுதல் எல்லாமே முன்னர் சொன்னது போலத்தான்.
மாதவிஇலக்கின் போது அதிகமான இரத்தப்போக்கு உள்ளவர்கள், மாதவிலக்குக் கோளாறு உள்ளவர்கள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் இந்தக் குளியலை மேற்கொள்ளலாம். பெண்கள் வயதுக்கு வருவது தாமதமாதல், மாதவிஇலக்கின்போது வலி அதிகம் இருத்தல் போன்ற பிரச்னைகளுக்கும் இந்த வகைக் குளியல் நல்ல பலனைத் தரும்.
சாதாரண நீர் இடுப்புக் குளியலுக்கும் இதே முறைதான்.
ஒரு விஷயத்தை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.. குளிர்ந்த நீர் இடுப்புக் குளியலுக்குப் பின்னர் வெந்நீரில், ஒருமுறை சாதாரணக் குளியல் குளித்து விடுங்கள். அதேபோல, வெந்நீர் அல்லது சாதாரண நீர் இடுப்புக் குளியலுக்குப் பின்னர் குளிர்ந்த நீரில், வெறுமனே சாதாரணக் குளியல் குளிக்க வேண்டும்.
இடுப்புக் குளியலுக்குப் பின், பப்பாளி, மாதுளை மற்றும் பப்பாளி விதைகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
பத்து வயது முதலே பெண்கள் இக்குளியலை மேற்கொள்ளலாம். எந்தெந்த நேரங்களில் இந்த இடுப்புக் குளியல் குளிக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மாதவிஇலக்கின் போதும், கர்ப்பக் காலத்தின் போதும் இடுப்புக் குளியலை மேற்கொள்ளக் கூடாது. அதேபோல இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களும் இடுப்புக் குளியலைத் தவிர்க்க வேண்டும்.
இக்குளியலுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்பதும், வெந்நீரின் வெப்பம் எவ்வளவு இருக்கலாம் என்பதும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் நிலமையைப் பொறுத்து மாறும். அதனால், முதல்முறை இடுப்புக் குளியல் செய்யும்போது மட்டும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று செய்யுங்கள்!’’
மு. சாமுண்டீஸ்வரி
நன்றி - குமுதம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோய் தீர்க்கும் ஒரு விசேஷ குளியல் - Medical Articles - மருத்துவக் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி - இடுப்புக், குளியல், பெண்கள், குளியலை, குளிர்ந்த, கொள்ளுங்கள், வேண்டும், அல்லது, உள்ளவர்கள், வெந்நீர், உங்கள், மாதவிலக்கு, வைத்துக், பின்னர், குளியலுக்குப், பிரச்னை, குளியலில், மற்றும், &lsquo, அதிகமான, &rsquo, எடுத்துக், ஒவ்வொரு, இருந்து