ஆரோக்கிய குழந்தை

குழந்தை வளர்ப்பு என்றால் அது பெண்கள் சமாச்சாரம், நமக்கு அது சரிப்பட்டு வராது என்று நினைக்கும் தகப்பனார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. இதற்கு வேலைப்பளு தான் காரணம் என்று பெரும்பாலும் சொல்லப் படுகிறது.
ஆனால் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தாய்க்கு எந்தளவுக்கு ஈடுபாடு காட்டுகிறாளோ அதே அளவு ஈடுபாட்டை தந்தையர்களும் காட்ட வேண்டும். குழந்தைகளை ரெகுலராக மருத்துவப் பரிசோதனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தையின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா? நோய் எதிர்ப்பு சக்தி எந்தளவுக்கு உள்ளது? உறுப்புகள் அத்தனையும் ஒழுங்காக வேலை செய்கிறதா? என்று செக்-அப் செய்து கொள்ள வேண்டும். உண்மையிலேயே குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் சூழ்நிலையில் இத்தகைய பரிசோதனைகளால் பயன் ஒன்றுமில்லைதான். ஆனால் ஏதாவது நோய்-நொடி இருக்குமானால் அவற்றை இந்தப் பரிசோதனைகள் முன்கூட்டியே காட்டிக் கொடுக்கின்றன. இதனால் நோய் வெடிப்பதற்கு முன்பே கூட அதற்கு சரியான வைத்தியம் செய்து முளையிலேயே கிள்ளி எறிந்து விட முடியும்.
குழந்தைக்கு ஏதாவது அவசர சிகிச்சை தேவைப்படுகிறது? என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வைத்தியம் பற்றியும், மருந்து-மாத்திரைகள் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புவர். அந்த விவரங்கள் கிடைக்காவிட்டால் குழந்தைக்கு வைத்தியம் அளிப்பதில் சிக்கல் உண்டாகும். குழந்தை வளர்ப்பில் அக்கறை செலுத்தும் தந்தையர்களாக இருந்தால் இந்தப் பிரச்சினை தலையெடுக்காது.
அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர். அதில் குழந்தைகள் வளர்ப்பதில் தந்தையரின் அக்கறை என்ன பங்கு வகிக்கிறது? என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தந்தையர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கப்படும் குழந்தைகள் படிப்பில் சுட்டியாக திகழ்ந்தது தெரிய வந்தது. ஆனால் பெரும்பாலான தந்தைமார்கள் வேலையை காரணம் காட்டி குழந்தைகள் பக்கம் முழு கவனம் செலுத்துவதில்லை. எல்லாம் அம்மாக்கிட்ட கேட்டுக்க.. என்று சொல்லி தப்புவதிலேயே குறியாக உள்ளனர்.
இந்தப் போக்கு குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை உண்டாக்கும். ஒரு தாய் ஈடுபாட்டுடன் இருக்கும்போது அதே ஈடுபாட்டை தந்தையும் காட்டினால் குழந்தைக்கு இருமடங்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்பது உண்மைதானே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரோக்கிய குழந்தை, குழந்தைகள், வைத்தியம், குழந்தைக்கு, இந்தப், வேண்டும், நோய், ஏதாவது, Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி