காக்கா போட்டதாகக் கதை விடலாமா?

பத்து வயதுச் சிறுவன் ஒருவன், தன் அம்மாவிடம் வந்து செக்ஸ் என்றால் என்ன? என்று கேட்டானாம். முதலில் மிகவும் சங்கடப்பட்டாலும், மகனிடம் உண்மையைத்தான் கூறவேண்டும் என்று முடிவெடுத்த தாய், சற்றே சுற்றிவளைத்து செக்ஸ் குறித்த பல விவரங்களைக் கூறினாளாம். அந்தச் சிறுவனுக்கு ஆச்சர்யம். எங்க ஸ்கூல் டயரியில் பெயர், விலாசம் ஆகியவற்றுக்கு அப்புறம் செக்ஸ•ன்னு கேட்டிருக்காங்க. அதுக்கெதிரே கொஞ்சூண்டு இடம்தானே இருக்கு. நீங்க சொன்ன எல்லாத்தையும் நான் அதிலே எப்படி எழுதறது? என்றானாம் இது ஜோக்தான்.
ஆனால் நிஜவாழ்க்கையில் பல குழந்தைகள் ஏதாவது ஒரு கட்டத்தில் உண்மையாகவே செக்ஸ் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். அம்மா நான் எங்கே இருந்து வந்தேன்? என்ற கேள்வியை ஒரு தாய் எப்போதாவது எதிர்கொள்ள நேர்கிறது. இது போன்ற சூழல்களில் அம்மா என்ன செய்வது?
அதைப்பத்தி உனக்கென்ன வாயை மூடு என்று அடக்கலாம். இப்ப வேலை அதிகமா இருக்கு. அப்புறமா சொல்றேன், என்று பதிலைத் தள்ளிப்போடலாம். அல்லது உன்னை ஒரு காக்கா கொண்டுவந்து என் பக்கத்திலே போட்டது என்று புளுகலாம்.
ஆனால், இவையெல்லாம் சரியான வழிமுறைகள் அல்ல. உண்மையைச் சொல்லுவதே உத்தமம். முழு உண்மையையும் சொல்ல வேண்டும் என்பதல்ல. சொல்கிற வரை உண்மையாக இருக்கட்டும்.
நீ என் வயித்துலதான் வளர்ந்தே என்று கூறலாம். இது ஒன்றும் பெரிய அதிர்ச்சியாக இருக்காது. ஏனென்றால் இதற்குள் ஓரிரு கர்ப்பிணிகளாவது அவன் கண்ணில் பட்டிருப்பார்கள். எனவே, இந்த உண்மையைக் கொஞ்சம் புரிந்துகொண்டிருப்பான்.
ஆனால், இதோடு விஷயம் முடிந்துவிடாதே. நான் எப்படி உன் வயித்துக்குள்ளே வந்தேன், என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது? வேறு வழியில்லை உன் அப்பாவிடமிருந்து ஒரு சின்ன விதை என் வயிற்றுக்குள் வந்து சேர்ந்தது. அது வளர வளர நீயா மாறிட்டே, என்று கூறிவிடுங்கள். கருவில் குழந்தை வளரும் புகைப்படங்களைக் காட்டினால் அவனது கவனம் அதில் சென்றுவிடும். சங்கடமான கேள்விகளில் இருந்து மாறி, குழந்தையின் வளர்ச்சிக் கட்டங்கள் குறித்த கேள்விகளை அவன் கேட்கத் தொடங்குவான்.
நானும் ஹரியும் பாய்ஸ், ஆனா ஸ்வேதாவும் ஹரிணியும் மட்டும் கேர்ள்ஸ் ஏன் இப்படி? என்பது போன்ற கேள்விக்கணைகளை அம்மா எதிர்கொள்ள நேரலாம். ஆண்-பெண் வேறுபாடுகளை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வது நல்லதுதான். ஏன்னா நீங்க ரெண்டுபேரும் ட்ரவுஸர், ஷர்ட் போட்டுக்கறீங்க. அவங்க ரெண்டுபேரும் ஃப்ராக் போட்டுக்கறாங்க என்பதோடு நிறுத்திக் கொண்டால், அவர்கள் சந்தேகம் தீர்ந்துவிடாது. அப்படின்னா ஹரிணி ட்ரவுஸர்-சட்டை போட்டுக்கிட்டா அவ பாயா மாறிடுவாளா? என்று கேட்கத் தோன்றும்.
சொல்லப்போனால் ஆண்குறி மற்றும் பெண்குறி ஆகியவை குறித்த வித்தியாசங்களை சிறுவர்-சிறுமிகள் ஓரளவு புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அறியாமையுடன் அவர்கள் வளர்வதைவிட நீங்களே அவற்றைத் தெரிவித்துவிடுவது நல்லது. கூடவே இவையெல்லாம் கூச்சப்படுவதற்கான விஷயம் அல்ல. இயல்பானவை என்பதையும் தெரியவையுங்கள்.
தம்பி பாப்பாவோ, தங்கை பாப்பாவோ பிறக்கப்போகிறது என்றால், விளக்குவது வெகு சுலபம். சொல்லப்போனால் விளக்காமலேகூட அந்த அண்ணனோ, தங்கையோ பல விஷயங்களை சரியாகவே புரிந்துகொள்வார்கள்.
அதற்காக மிக நீண்ட விளக்கங்கள் டீனேஜூக்கும் முன்னாலேயே தேவைப்படாது. உதாரணமாக வயிற்றிலிருந்து குழந்தை வருகிறது என்கிற அளவில் தெரிந்து கொண்டால் போதும்.
அதே சமயம் இதுபோன்ற விஷயங்களை கேலியாகவோ, கிண்டலாகவோ, வேறுசிலருடன் சேர்ந்துகொண்டு எகத்தாளமாகவோ குழந்தையிடம் விவரிக்க வேண்டாம். அப்படிச் செய்தால் செக்ஸ் குறித்து ஒருவித வக்ரத்தனம் குழந்தையின் மனதில் பதிய வாய்ப்புண்டு. தேவைப்படுகிற அளவில் உண்மையையும் கூறவேண்டும். அதை இயல்பாகவும் வக்ரத்தன்மை இல்லாமலும் வெளிப்படுத்துங்கள்.
குழந்தைகள் கேள்வி கேட்பதனால்தான் என்றில்லை, செக்ஸ் குறித்த வேறுபல விஷயங்கள்கூட அம்மாவுக்குத் தவிப்பைத் தரலாம்.
குழந்தைகள் அவ்வப்போது தங்கள் பிறப்புறுப்பை வருடிக்கொள்ளக்கூடும். பாய்ந்து வேகமாக குழந்தையின் கையை நீக்கிவிடுவதும், பட்டென்று கைமீது ஒன்று போட்டு, இனிமே இப்படியெல்லாம் செஞ்சேன்னா பாரு என்று கத்துவதும் பல அம்மாக்களுக்கு இயல்பாகிவிட்டது.
இது எதிர்மறையான பலனைக் கொடுக்கும் இதில் என்ன தப்பு? என்று கருதும் சிறுவனோ, சிறுமியோ ரகசியமாக அதே காரியத்தைத் தொடரலாம். சுகாதாரக் கோணத்தில்கூட இது கேடாகிவிடும்.
பெரும்பாலும் குழந்தைகளின் இது போன்ற செய்கைக்குக் காரணம் நீங்கள் எதிர்பாராததாக இருக்க வாய்ப்பு உண்டு. இறுக்கமான உடை அல்லது உள்ளாடை, பிறப்புறுப்புப் பகுதியில் ஏற்படும் அரிப்பு, அங்கு ஏதேனும் பூச்சிக்கடி அல்லது தடிப்பு போன்ற ஏதாவது ஒரு காரணத்தால்கூட குழந்தை அப்படி ஒரு செயலில் ஈடுபட்டிருக்கலாம். கவனித்துவிட்டு பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள்.
அப்படியில்லை என்றாலும் இதுபோன்ற செயல்களை அலட்சியம் செய்துவிடுவதுதான் நல்லது. தானாக நின்றுவிடும்.
குழந்தை சற்றே வளர்ந்து சுமார் ஒன்பது வயதாகும்போது அதன் உடலில் சில குறிப்பிட்ட மாறுதல்கள் உண்டாகின்றன. முக்கியமாக சிறுமிகளுக்கு உடலில் எடை அதிகரிக்கிறது. மார்பகங்கள் விரிவடைகின்றன.
முன்பெல்லாம் பன்னிரண்டு வயதான பிறகுதான் பெண்கள் பூப்பெய்தினார்கள். ஆனால் இப்போதெல்லாம் சத்துணவாகச் சாப்பிடுவதனால் சீக்கிரமே வயதுக்கு வந்துவிடுகிறார்கள். எனவே உங்கள் மகளுக்கு எட்டு வயதாகும்போதே மாதவிலக்கு குறித்த அடிப்படை விவரங்களை அவளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
செக்ஸ் தொடர்பான கேள்வியைப் பறவைகள், பசு மற்றும் கன்று போன்றவற்றின் மூலம் விளக்குவது கொஞ்சம் எளிதாக இருக்கும். பிறகு இப்படித்தான் மனித இனத்துக்கும் என்றால் புரிந்து கொண்டுவிடுவார்கள்.
ஒரு முக்கியமான விஷயம்... பெண்களின் உடல் உறுப்புகள் தொடர்பான விவரங்களை சிறுவர்களுக்கும், சிறுவர்களின் இதுபோன்ற விஷயங்களை சிறுமிகளுக்கும் கூறவேண்டியது பெற்றோரின் கடமை என்றே எனக்குப் படுகிறது. அப்போதுதான் எதிர்பாலினரின் வளர்ச்சிகளைக் கண்டு மெய்மறந்து வழிதவறிப்போகமாட்டார்கள். இயற்கை என்கிற விதத்தில் விளக்கப்படும்போது, ஆவல், ரகசியம் போன்ற கோணங்கள் மறைந்துவிடுவதால் வழிமாறிப் போகும் வாய்ப்பு மிகவும் குறைந்து விடுகிறது.
எல்லாவற்றையும்விட மிகச் சிறந்தது. செக்ஸ் தொடர்பான அடிப்படை விஷயங்களை தேவைப்படும் அளவுக்குக் கூறும் புத்தகங்கள். இவற்றை வாங்கி வளரும் சிறுவர் - சிறுமியிடம் கொடுக்கலாம். நாம்தான் வாங்கிக் கொடுக்கிறோம் என்பதால், அதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டாலும் அவர்கள் அதுகுறித்து நம்மைக் கேட்கத் தயங்கமாட்டார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காக்கா போட்டதாகக் கதை விடலாமா?, செக்ஸ், குறித்த, விஷயங்களை, குழந்தை, என்ன, குழந்தையின், இதுபோன்ற, தொடர்பான, கேட்கத், அம்மா, நான், என்றால், குழந்தைகள், ஏதாவது, அல்லது, விஷயம், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி