எந்த வயதில் எந்த உணவு?

- டாக்டர். திருமதி. தாரிணி கிருஷ்ணன்
சின்னக் குழந்தைகளுக்கு சாப்பிட எண்னென்ன கொடுக்கலாம், என்னென்ன கொடுக்கக் கூடாது என்பது பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. பாக்கெட்டுகளிலும், பாட்டில்களிலும் அடைத்து விற்கப்படுவதை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்தாலே போதும் என்று நினைக்கிறார்கள். எளிய விலையில் சத்து மிகுந்துள்ள பயறு வகைகளையும் கீரைகளையும் குழந்தைக்குக் கொடுப்பதை கௌரவக் குறைச்சல் என்று நினைக்கிறார்கள். இரண்டு முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்னென்ன சாப்பிடக் கொடுக்கலாம் என்பது பற்றி இங்கே சில...
ஒரு வயதில்:
குழந்தை பிறந்து ஒரு வயது ஆகிற வரை திடமான உணவுகள் கொடுப்பதைத் தவிர்த்துவிடலாம். திரவ உணவுகள், நன்கு கரைத்த நிலையில் உள்ள உணவுகள் தான் குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடியதாக இருக்கும்.
இரண்டு வயதில்:
இரண்டு வயது துவங்கிவிட்ட குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு அளிக்கப்படும் உணவு எல்லாமே கொடுக்கலாம். ஒரே நிபந்தனை, காரம் குறைவாக இருக்க வேண்டும். எண்ணெய் அதிகம் கலக்கப்பட்ட உணவாக இருக்கக்கூடாது... அவ்வளவுதான். இரண்டு வயதான குழந்தைகள், காலையில் ஏழு மணி முதல் எட்டு மணிக்குள் எழுந்துகொள்ளும். குழந்தை எழுந்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிக்கச் செய்யலாம். சிறிது நேரத்துக்குள் காலைக்கடன்களை முடிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் ஏற்படுத்துவது நல்லது.
ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை கொஞ்சம் கொஞ்சமாக உணவு ஊட்டலாம். குழந்தை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று ஒரு தாய் ஆசைப்படுவது இயல்பான விஷயம் தான். ஆனால், குழந்தையால் இவ்வளவுதான் சாப்பிட முடியும் என்று ஒரு அளவு இருக்கிறதல்லவா? அளவுக்கு அதிகமாக சாப்பிட வைத்து, அந்தக் குழந்தை வாந்தி எடுப்பதைவிட, கொஞ்சமாகச் சாப்பிட்டு, முழுவதுமாக ஜீரணமாவது சிறப்பான விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இதன்பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்துவிட்டு, குழந்தையை சோறு சாப்பிட வைக்கலாம். இல்லாவிட்டால் இட்லி, தோசை, சப்பாத்தி என்று டிபன் உணவு ஏதாவதொன்று தாராளமாகக் கொடுக்கலாம். பிரட் கொடுக்கலாம். எது கொடுத்தாலும் அதில் அதிகம் எண்ணெய் சேராது இருக்க வேண்டும். சிறிது நேரம் விளையாடிவிட்டு குழந்தைகள் மீண்டும் தூங்கிவிடுவார்கள். சுமார் இரண்டு மணி நேரம் தூங்கியபிறகு மீண்டும் எழுவார்கள்.
மதியம் எழுந்தவுடன் ஏதாவது ஒரு பழச்சாறு கொடுக்கலாம். பழச்சாறு என்று வரும்போது இந்தப் பழம், அந்தப் பழம் என்று எதுவும் நீக்கத் தேவையில்லை. ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், சப்போட்டா, அன்னாச்சி, மாதுளை, தர்ப்பூசணி, சீதாப்பழம் என்று எந்தப் பழத்தை வேண்டுமானாலும் தாராளமாக சாறு பிழிந்து தரலாம்.
ஜூஸ் குடித்து முடித்த பிறகு, மதியம் சாப்பாடு கொடுக்கலாம். பெரியவர்கள் என்னென்ன சாப்பிடுகிறார்களோ அவற்றையெல்லாம் குழந்தைகளும் சாப்பிடலாம். வேகவைத்த பருப்பு, காய்கறி, சாம்பார், குழம்பு, ரசம், தயிர் என்று குழந்தை எதையெல்லாம் விரும்புகிறதோ அதை உணவில் கலந்து நன்கு பிசைந்து கொடுத்தால் போதும்.
காய்கறிகள் என்று வரும்போது இந்தக் காய்கறியை குழந்தைக்கு கொடுக்கலாமா, அந்தக் காய்கறியை குழந்தைக்கு கொடுக்கலாமா என்கிற சந்தேகமே தேவையில்லை. பச்சையாக இருக்கிற எல்லா காய்கறிகளுமே குழந்தைகளுக்கு நல்லதுதான். காய்கறி சாலட், குழந்தைகளுக்கு பிடித்தமான சைட் டிஷ்ஷாக இருக்கும்.
அசைவம் சாப்பிடுகிறவர்கள், இரண்டு வயதிலேயே குழந்தைக்கு அசைவம் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
மதியத்துக்குப் பிறகும் குழந்தை மீண்டும் ஒருமுறை நன்றாகத் தூங்கி எழும். அப்போது பாலோ அல்லது ராகி கஞ்சியோ கொடுக்கலாம். இதன்பிறகு விளையாட ஆரம்பிக்கும் குழந்தை, இரவு எட்டு மணி வரை வேறு எதையும் தேடாது. இரவு எட்டு மணிக்கு மீண்டும் இட்லி, சப்பாத்தி, தோசை ஒன்று ஏதாவது ஒரு டிபன் வகை உணவுகளைச் சாப்பிடக் கொடுக்கலாம்.
இரவு உணவில் அசைவ உணவுகளைச் சேர்க்கக்கூடாது. அடிக்கடி குழந்தைக்கு முட்டை கொடுக்கலாம், ஆம்லெட் செய்து குழந்தைக்குக் கொடுப்பதைவிட ஆஃப்பாயில் செய்து கொடுப்பதுதான் நல்லது. முட்டையை நன்கு வேகவிடாமல் பாதியளவு வேகவைத்தால் போதும். பாதியளவு வெந்த முட்டையை விரைவில் ஜீரணமாகும். இட்லியை வேக வைக்கிற மாதிரி ஒரு சின்ன பாத்திரத்தில் முட்டையை ஊற்றி வேகவைத்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
மூன்று வயதில்:
மூன்று வயது முதல் குழந்தையின் உணவுப் பழக்கம் மாற ஆரம்பிக்கும். காரணம், குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும். பள்ளிக்குச் செல்லும்போது ஒரு சின்ன டிபன் பாக்ஸில் ஸ்நாக்ஸ் கொடுத்தனுப்புவது பழக்கமாகிவிட்டது. ஸ்நாக்ஸாக பிஸ்கட்டுகளைக் கொடுத்தனுப்புவதைவிட ஏதாவது ஒரு பழத்தை துண்டு துண்டாக்கி கொடுத்தனுப்பலாம். கிண்டர்கார்டன் பள்ளி மதியமே முடிந்துவிடுவதால், மதியம் குழந்தை வீட்டுக்கு வந்தபிறகு வழக்கம் போல சாப்பாட்டைக் கொடுக்கலாம். ஸ்நாக்ஸாக பிஸ்கட்டை கொடுப்பதாக இருந்தால் புரோட்டீன் அதிகமாக உள்ள பிஸ்கட்டை மட்டுமே கொடுக்க வேண்டும்.
மூன்று வயது ஆரம்பித்தவுடன் குழந்தைகளுக்கு இரவு உணவை அதிகபட்சமாக எட்டரை மணிக்குள் கொடுத்து விடுவது நல்லது. அப்போது தான் குழந்தை சீக்கிரமாகவே தூங்கி, மறுநாள் காலை சீக்கிரமாக எழுந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும்.
நான்கு வயதில்:
நான்கு வயது ஆரம்பித்த குழந்தைகளுக்கு மிக்ஸ்டு ரைஸ் கொடுக்கலாம். நிறைய காய்கறிகளோடு கொஞ்சம் புளிசாதம், கொஞ்சம் தயிர் சாதம் என்று கலவையாகக் கொடுக்கலாம் குழந்தைகள் ரசித்து சாப்பிடுவார்கள்.
அதிகம் எண்ணெய் சேர்த்து உணவை குழந்தைகளுக்குக் கொடுக்காமல் இருப்பது நல்லது. காரணம், நகரத்துக் குழந்தைகளின் இப்போதைய பெரிய பிரச்னையே ஓவர்வெயிட் என்று சொல்லப்படுகிற கூடுதல் எடை பிரச்னைதான்.
குழந்தைகளுக்கு எளிதில் சமைத்துக் கொடுக்க முடிகிறது என்பதற்காக நூடுல்ஸை அடிக்கடி செய்து கொடுக்கும் தாய்மார்கள் நகர்ப்புறங்களில் அதிகமாக இருக்கிறார்கள். இது தேவையில்லாத பழக்கம். நூடுல்ஸ் எளிதில் ஜீரணமாகும் என்றாலும், அதில் சத்து ஒன்றும் இல்லை. நூடுல்ஸ்ஸ•க்குப் பதிலாக நம்மூரில் கிடைக்கும் சேமியாவைக் கிண்டி, காய்கறிகளைப் போட்டு கொடுத்தால் செலவு மிச்சம்.
ஐந்து வயது முதல்:
குழந்தைகளுக்கு காய்கறி மிகமிக அவசியம். கேரட், முள்ளங்கி, பீன்ஸ், பீட் ரூட், முருங்கை, பட்டாணி என்று ஏதாவது ஒன்றிரண்டு காய்கறிகளைத் தினமும் சாப்பிட வேண்டும். பயறு வகைகள், குழந்தைகளுக்கு புரோட்டீனை அள்ளித் தரும் அற்புதமான உணவுகள். அவற்றையும் தினமும் கொடுக்க வேண்டும்.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ரசித்து சாப்பிடுகிற மாதிரி, எலும்புக்கு பலம் சேர்க்கிற மாதிரி, எளிதில் ஜீரணமாகிற எந்த உணவை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எந்த வயதில் எந்த உணவு?, கொடுக்கலாம், குழந்தைகளுக்கு, குழந்தை, வயது, இரண்டு, சாப்பிட, வேண்டும், குழந்தைக்கு, நல்லது, எளிதில், இரவு, ஏதாவது, வயதில், மீண்டும், அதிகமாக, உணவுகள், எட்டு, கொடுக்க, மதியம், காய்கறி, செய்து, மூன்று, உணவை, மாதிரி, முட்டையை, டிபன், ஆரம்பிக்கும், எண்ணெய், நன்கு, தான், உள்ள, போதும், என்னென்ன, இருக்கும், உணவு, ஐந்து, நான்கு, குழந்தைகள், அதிகம், கொஞ்சம், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி