ஜென் கதைகள் - சுமையா? சுகமா?

ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி போதித்து வந்தார்.
அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே...
எனவே நிதானமாகவும் அதே சமயம் சீடர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்தார்.
ஆனால் குருவின் இந்த ‘வேகம்' மாணவர்களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு மெதுவாக நாள் கடத்திக் கொண்டே இருக்கிறாரே' என்று குற்றம் சாட்டினான்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட ஞானி அந்த மாணவனை அழைத்தார். பக்கத்திலிருந்த ஒரு பெரிய விறகுக் கட்டைக் காண்பித்து ‘அதைத் தூக்கி வெளியே கொண்டு போய் வை' என்றார்.
விறகுக் கட்டைத் தூக்க முயன்ற மாணவன், அதன் கனம் தாங்காமல் தடுமாறி விழுந்தான். எழுந்து கையைத் தட்டிக் கொண்டு, ‘தூக்க முடியவில்லை குருவே... மிகவும் கனமாக உள்ளது' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.
‘சரி... அந்தக் கட்டைப் பிரித்து விறகுகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டு போய் வை' என்றார் ஞானி.
அட... நான்கைந்து முறை எடுத்து வைத்ததில், விறகுகள் விரைவில் இடம்பெயர்ந்தன!
‘கண்ணா... உனக்குக் கற்பிப்பதும் இப்படித்தான். ஒரேடியாக உன் மூளைக்குள் திணித்தால் நீ திணறி விழுந்துவிடுவாய். கொஞ்சம் கொஞ்சமாக அதே சமயம் முழுமையாகக் கற்றுக் கொண்டாயானால் அது நிரந்தரமாக உன் மனதில் தங்கிவிடும்.. நீ கற்ற கல்வி தரமாகவும் இருக்கும்' என்று விளக்கினார் ஞானி.
மாணவனுக்கு மிக நல்ல பாடமாக அது அமைந்தது!
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுமையா? சுகமா? - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ஞானி, கொண்டு