ஜென் கதைகள் - இறைவனின் இருப்பிடம்

ஒரு குருடனும், அவனது நண்பனும் பாலைவனத்தில் வழியே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் வேறு வேறு வழிகளில் பயணத்தை ஆரம்பித்தவர்கள். இடைவழியிலே சந்தித்துக் கொண்டவர்கள். அதன்பிறகு இணைந்து பயணம் செய்கின்றனர். பாலைவனத்தில் இரவில் வீசும் குளிர்காற்று உடலை நடுங்கவைக்கும். பகலெல்லாம் வெயில் கொளுத்தும்.
ஒருநாள் இரவு கடும் குளிர் அவர்களை வாட்டி எடுத்தது. பொழுது விடிந்ததும் குருடன் அவசரமாக எழுந்தான். தட்டுத் தடுமாறியபடி தன் கம்பை தேடினான். அவனது கைக்கு கம்பு கிடைக்கவில்லை. அங்கே பாம்பு ஒன்று குளிரினால் கட்டை போல் விறைத்துக் கொண்டு கிடந்தது. அதனை கம்பென்று நினைத்துப் பற்றிக் கொண்டான்.
ஆகா என்னுடைய பழைய தடிக்குப் பதிலாக மழமழப்பான அருமையான புதிய தடி கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தவன் நண்பனை எழுந்திருக்கச் சொல்லி குரல் கொடுத்தான். எழுந்து பார்த்த நண்பன் திடுக்கிட்டான். முட்டாள் என்ன காரியம் செய்திருக்கிறாய்? நீ பாம்பை பிடித்திருக்கிறாய். அது உன் உயிரை பறித்துவிடும். எனவே அதை உடனே கீழே வீசி விடு என்று கத்தினான்.
அதற்கு பதிலளித்த கண் தெரியாதவன், நண்பனே என் மீதுள்ள பொறாமையினால் நீ என்னிடமுள்ள அழகிய தடியை பாம்பு என்று கூறுகிறாய். நான் எறிந்தால் அதை நீ எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறாயா என்று கேட்டான்.உடனே நண்பன் அவனை திட்டினான்.முட்டாளே உனக்குப் பித்து பிடித்துவிட்டதா? அது பாம்புதான் தாமதிக்காமல் அதை எறிந்து விடு என்று மீண்டும் கத்தினான்.
அதற்கு சிரித்த குருடன், என்னை ஏமாற்ற முடியாது. என்னுடைய அதிர்ஸ்டத்தினால் கிடைத்த தடியை நீ என்னிடமிருந்து அபகரிக்கத் திட்டமிடுகிறாய். எனவே பொறாமைக்காரனான உன்னுடன் இனி வரமாட்டேன் என்று கூறிவிட்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்தான்.
சூரியன் உதிக்க ஆரம்பித்த உடன் உஷ்ணத்தினால் பாம்பின் விறைப்புத்தன்மை நீங்கியது. சவம்போல கிடந்த பாம்பு உணர்வு பெற்று பட்டென்று குருடனை கொத்தியது.
நம்மில் பலரும் இப்படித்தான் அறியாமை என்ற குருட்டுத்தனம் நம்மிடம் நிறைய உண்டு. பலவித மாயைகளை வழவழப்பான அழகிய தடி என்று நினைத்து பற்றுகிறோம். வேண்டாம் அது விஷமுள்ளது என்று எச்சரிக்கின்றனர் ஞானிகள். அதை ஏற்க மறுத்து பிடிவாதமாக நடக்கிறோம். நாம் எவற்றை வழித்துணை என்று பற்றுகிறோமோ அவையே நம் அழிவுக்கும் காரணமாகி விடுகின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இறைவனின் இருப்பிடம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - பாம்பு