என் கனவுக்கென்ன பதில்?

- தாமரை
''எத்தனை நேரம் இப்படியே காத்துகிட்டிருக்கிறது? இங்கே உட்கார்ந்திருக்கிற நேரம் பீச்சுக்குப் போயிருந்தேன்னா இத்தனை நேரம் பத்து கோட்டை கட்டியிருப்பேன். ரெண்டு மட்டும் அகழி வச்சது. ஸ்பெஷல். பாவம் இராஜராஜனும் தான் எத்தனை பேரை சமாளிப்பான்! பெரிய ராஜாதான், இருந்தாலும் எந்தப் புத்துல எந்தப் பாம்புன்னு தெரியாதில்லே...?'' - பெரியவரை மேலே பேச விடாமல் அவரது மகன் போலிருந்தவர் அதட்னார் - ''ஷ்... பேசக் கூடாதுன்னு போர்டு போட்டிருக்கில்லை? பேசாம இருங்க.''
கோயமுத்தூர்ல ஏது பீச்? மணிவாசகத்திற்குக் கவலையாய் இருந்தது. இங்கே வருகிறவர்கள் எல்லாம் இந்த டைப்தானா? ஐயோ நானுமா? இரண்டடி நகர்ந்து உட்கார்ந்தான்.
''போய் விடலாமா? எனக்கென்ன வியாதி? ஒன்றுமில்லை, ஏதோ குழப்பமான கனவுகள்...''
குழப்பமான கனவுகளா? ச்சேச்சே... நல்ல தெளிவான கனவுகள்தான் வருகின்றன. அதனால் தூக்கம் போகிறது. அவ்வளவுதானே? சமாளித்துவிடலாம். இதற்காக யாராவது டாக்டரிடம் வருவார்களோ?
பெரியவர் இப்போது மணிவாசகத்தை நெருங்கி அமர்ந்தார். ''ஏன் சொல்றேன்னா, பெரிய ராஜா பாருங்கோ. தனித்தனியா தப்பிக்க நேரம் இருக்காது. அதனாலதான் அரண்மனையிலிருந்து நேரா ஊருக்கு வெளியே ஒரு ரகசியப் பாதை, சுரங்கம்...''
மணிவாசகம் முடிவு செய்தான், ''டக்''கென்று எழுந்தான். ''போய்விடலாம்.''
''நம்பர்12. யார் சார் நீங்களா? இப்படி வாங்க.''
வேறு வழியில்லாமல் மணிவாசகம் உள்ளே நுழைய வேண்டியதாயிற்று. அறையின் ஒரு கோடியில் விஸ்தாரமான மேஜைக்கு பின்னால் டாக்டர் ஜெயகிருஷ்ணன். தங்க ஃபிரேம் கண்ணாடி, உருளைக் கிழங்கு மாதிரி உடம்பு, பாறை மாதிரி சலனமில்லாத கண்கள்.
''உட்காருங்க. உங்க பேர்?''
''மணிவாசகம்.''
ஏற்கெனவே மணிவாசகம் பூர்த்தி செய்து கொடுத்திருந்த விவரத்தாளை ஒரு நோட்டம் விட்டார். வயசு - 24, அப்பா - இல்லை, அம்மா, ஒரு அக்கா, ஒரு தம்பி. உத்தியோகம் - சேல்ஸ்மேன், திருமணநிலை - இன்னும் இல்லை, முகவரி - 32, ராதாகிருஷ்ணா சாலை, கோவை-18, பிரச்சினை - கனவுகள்.
''சொல்லுங்க, என்ன கனவு வருது உங்களுக்கு?'' தயங்கினான். ''வந்து...இதை எப்படி சொல்றதுன்னே தெரியலை. வெளியே சொன்னால் சிரிப்பாங்க. அதான்.''
''பரவாயில்லை, எதுவா இருந்தாலும் சொல்லுங்க. டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. அதுவும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே ஒளிவுமறைவே கூடாது. என்ன, லேடீஸ் அதிகம் வராங்களா கனவில்?''
''ஐயோ, அப்படியெல்லாம் இல்லை. லேடீஸ் ரொம்பக் குறைவு. ஆண்கள்தான் அதிகமா வராங்க.''
''ஆண்கள்னா யாரு? உங்க கூடப் பிறந்தவங்க, இல்லை நண்பர்கள்... இப்படி?''
''இல்லையில்லை. நான் நேர்ல சந்திச்ச யாருமே வரதில்லை.''
டாக்டர் கொஞ்சம் யோசித்தார். ''வேற யார்தான் வராங்க? யாரோ உங்களுக்கு அறிமுகமில்லாத, முகம் தெரியாதவங்களா?
''இல்லை டாக்டர். வர்றவங்களை எனக்குத் தெரியும். அவங்களுக்குத்தான் என்னைத் தெரியாது.''
''எப்படிச் சொல்றீங்க?''
''வர்றவங்க எல்லாம் ரொம்பப் பெரிய ஆளுங்க. ஜார்ஜ்புஷ், பில் கிளின்டன், ஜான் மேஜர், சதாம் உசேன் இப்படி...''
டாக்டரின் உதட்டோரமாக மெல்லிய, மிக மெல்லிய சிரிப்பு புறப்பட்டு மறைந்தது.
''சரி, இவங்க கனவில வந்து என்ன சொல்றாங்க?''
''காப்பாத்து, காப்பாத்துன்னு கத்தறாங்க''
''எதுக்கு''
''பில் கிளின்டன், புஷ்ஷெல்லாம் சதாம் உசேன் கிட்டே மாட்டிக்கிறாங்க. ஈராக்கிலே ஒரு டஞ்ஜன் ஜெயில் ரூம்ல சதாம் உசேன் அவங்களைக் கொடுமைப்படுத்தப் போறார். அப்ப இவங்க கத்தறாங்க. உடனே நான் ஜன்னல் பக்கமிருந்தோ. கூரையைப் பிளந்து கிட்டோ உள்ளே குதிச்சு, சதாமோட சண்டை போட்டு, கட்டிப் போட்டுட்டு, இவங்களைக் காப்பாத்தி, காடு மலை எல்லாம் தாண்டி ஜீப்ல பிரயாணம் பண்ணி பத்திரமா அமெரிக்கா கொண்டு போய் சேர்க்கிறேன்.''
டாக்டர் இப்போது சிரிப்பை அடக்க முயற்சிக்கவில்லை. சிரித்தார். ''எப்பவுமே இதே கனவுதானா?''
''கிட்டத்தட்ட, மாட்டிக்கிறவங்க எல்லாம் பெரிய பெரிய பொலிடிகல் தலைவர்கள். கொடுமைப்படுத்தறவங்க எல்லாம் சர்வாதிகாரிகள், தீவிரவாதிகள், இப்படி. ஆனா எப்பவும் நான்தான் காப்பாத்துவேன். ஹெலிகாப்டர் கூட ஓட்டியிருக்கேன்.''
''எப்பவாவது மிலிட்டரியில் இருந்திருக்கீங்களா?''
''இல்லை, சேரணும்னு ஆசைப்பட்டது கூடக் கிடையாது.''
''லேடீஸ் வரதில்லையா கனவில? வெறும் ஆண்கள்தானா?''
''அநேகமா ஆண்கள்தான். ஒரு தரம் மார்கரெட் தாட்சரை டெரரிஸ்ட் கும்பல் கடத்திகிட்டுப் போய் தரையில கண்ணாடி சில்லெல்லாம் போட்டு ஆடச் சொல்றாங்க. அந்த சமயம் நான் ''ஸ்டாப்இட்'' னு கத்திக்கிட்டே, ஷாண்டலியர் கம்பியிலே தொங்கிகிட்டே அவங்களை எடுத்துட்டு அந்தப் பக்க ஜன்னல் வழியா வெளியே போய்த் தப்பிச்சேன்.''
''மணிவாசகம், சின்ன வயசில வீரதீர செயல்கள்ல ஈடுபட்டிருந்தீங்களா?''
''எதுவும் கிடையாது டாக்டர். கணக்கு வாத்தியார் நாற்காலியில முள் வைச்சிட்டு ஆர்.கே.மணின்றவன் என்னை மாட்டிவிட்டுட்டான். நிஜத்தை சொல்ல பயந்துகிட்டு, நான்தான் அவர்கிட்ட அடி வாங்கினேன்.''
''எத்தனை நாளா இப்படி இருக்கு?''
''இரண்டு வருஷமா. முதல் வருஷம் அதிகமா இல்லை, இந்த வருஷந்தான் ரொம்ப. தூக்கம் போற அளவுக்கு, அநேகமா தினம் இதே மாதிரி கனவு. அன்னிதேதிக்கு யார் பிரபலமாயிருக்காங்களோ அவங்க. ராஜீவ் காந்தியைக்கூட குண்டு வெடிப்பில இருந்து காப்பாத்தி பூ மாதிரி தூக்கிக்கிட்டுப் போய் கெஸ்ட் ஹவுஸ்ல வைச்சேன். ரொம்பப் பாராட்டி, டெல்லியில வைச்சு விருது, பணமெல்லாம் கொடுத்தாங்க.''
''தூக்கத்திலதான் இந்த மாதிரி கனவெல்லாம் வருதா?''
''இல்லை டாக்டர். பிரச்சினை அதான், கொஞ்ச நாளாவே தூக்கமா, விழிப்பான்னே தெரியாம இந்தக் கனவுகள் வந்துகிட்டிருக்கு. அன்னிக்கு ஆபீஸ்ல கிளையண்ட்டோட ரெண்டு கைகளையும் இறுகப் பிடிச்சிட்டு விடமாட்டேன்னு சொல்லிட்டேன். என்கிட்ட இருந்து தப்பிச்சிடுவியான்னு சிரிச்சு வேற தொலைச்சிருக்கேன். மணிக்கட்டெல்லாம் சிவந்து போச்சு. அன்னிக்குப் போன மனுஷன்தான். தபால்லயே ஆர்டர் எல்லாம் கேன்சல் பண்ணிட்டு இந்தப் பக்கமாவே வர்றதில்லை.''
''ம்...அப்படியா?'' டாக்டர் யோசித்தார். ''சின்ன வயசில உங்க அப்பா ரொம்பக் கொடுமைப்படுத்துவாரோ? குடிச்சிட்டு வந்து அடிச்சு?''
''சேச்சே. ரொம்ப தங்கமான மனுஷர் டாக்டர். அவருக்கிருந்த நல்ல பேர்னாலதான் எனக்கு இந்த வேலையே கிடைச்சிது.''
அதன் பிறகு டாக்டர் ஏதேதோ சோதனைகள் செய்தார். கைகளை அந்தரத்தில் நீட்டச் சொன்னார். விரித்து மடக்கச் செய்தார். ரப்பர் சுத்தியலால் முட்டி முட்டியாகத் தட்டிப் பார்த்தார். கண்களை ஆராய்ந்தார். முதுகில் படம் வரைந்தார். கடைசியாக சில மாத்திரை, மருந்துகளை எழுதி சாப்பிடச் சொன்னார். ஒரு வாரம் கழித்து மறுபடி வரவேண்டும். ஃபீஸ் நூறு ரூபாய்.
''அடப்பாவி'' என்றது மனசு.
கதவைத் திறந்து வெளியே வந்ததும் பெரியவரை உள்ளே அழைத்தார்கள். உள்ளே போகுமுன் இவன் பக்கமாகக் குனிந்து, ''நாளைக்கு ராத்திரி பீச்சுப் பக்கமா வந்திடுங்க. சுரங்க வழியா கூட்டிட்டுப் போறேன். தீவட்டியெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. குதிரைகூட தயாரா இருக்கும்'' என்றார்.
மணிவாசகத்துக்கு நெஞ்சுக்குள் படபடவென்று வந்தது. ''போச்சு...நானும் இந்த நட்டு கழண்ட கேஸ்ல ஒண்ணாயிட்டேன். கடவுளே, என்னைக் காப்பாத்...சட்! என்னை விட்டுறு.''
ரூமுக்கு வந்து சேர்ந்த போது கிட்டுவும் வில்லாவும் இருந்தார்கள். ''என்னடா ஆச்சு? டாக்டர் என்ன சொன்னார்? உன்னைக் காப்பாத்தறேன்னாரா?'' ''ப்ச்... என்னடா மாத்தி சொல்றே? காப்பாத்தறது மணிக்கு வேண்டிவிட்ட தொழில். அதை அவன்தான் செய்வான் இல்லைம்மா?''
''டேய், நேரங்காலம் தெரியாம விளையாடாதீங்கடா. அவனவன் நொந்து போய் வந்திருக்கான். சுத்தியை வைச்சு முட்டியில ரெண்டு தட்டு தட்டிட்டு நூறு ரூபா வாங்கிட்டாண்டா... வயித்தெரிச்சலா இருக்கு'' - மணிவாசகம் ஆயாசமாய்ச் சொன்னான்.
''முதல்லயே என்கிட்ட வந்திருந்தியானால், அம்பது ரூபாய்க்கு நாலு தட்டு தட்டியிருப்பேனே.''
''போங்கடா டேய்... தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும்.'' மணிவாசகம் அலுத்துக் கொண்டான். ''என்ன ஆனாலும் சரி, இன்றைக்கு கனவை வர விடப் போவதில்லை.''
கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி, ''சரி போகுது விடு. சாப்பிடப் போலாமா, இல்லை சுந்தரத்துக்கு வெயிட் பண்ணலாமா?'' என்றான்.
''சுந்தரமும் வந்துரட்டுமே, அப்புறமா போகலாம்'' என்ற வில்லா, அடுத்த நாள் உடுத்திக் கொள்ள வேண்டிய உடையை இஸ்திரி செய்ய ஆரம்பித்தான்.
இரண்டு நிமிடத்தில் சுந்தரம் உள்ளே நுழைந்தான், ''ஐயோ, அம்மா'' என்று முனகிக் கொண்டே.
''என்னடா ஆச்சு?''
''போடா. இதெற்கெல்லாம் ஒரு ஊரு...பழம் வாங்கலாம்னு போனேன். முதல்ல நல்ல பழமா காட்டிட்டு கட்டறப்ப மோசமானதைப் போட்டுட்டான். அதுக்கு சண்டை. ஒரு லோக்கல் ரவுடி வேற உள்ளே பூந்துட்டான். அப்பா, கை வலிக்குதே'' என்றவன் திரும்பி, ''டேய் மணி, உன் பேரைச் சொல்லித்தாண்டா கத்தினேன். கனவிலேயே மக்களைக் காப்பாத்தி கிட்டிருந்தால் எப்படி? எங்க இருந்தாவது என் முன்னால குதிச்சு ஒரு கை குடுப்பேன்னு நினைச்சேன். இப்படி ட்ரம்ஸ் வாங்க விட்டுட்டியே! நீயும் உன் கனவும் நாசமாப் போக...''என்றவாறே பொத்தென்று படுக்கையில் விழுந்தான்.
கிட்டுவும் வில்லாவும் அவன் காயங்களை ஆராய்ந்து சிகிச்சை செய்து கொண்டே, மறுபடியும் மணிவாசகத்தை வார ஆரம்பித்தார்கள்.
''என்ன மனுஷன்டா நீ? ரூம் மேட் லோக்கல் ரவுடிகிட்ட அடிவாங்கிட்டு வந்து அனத்தறான். அவனை என்னண்ணு கேட்காதே. பாக்தாத்துக்குப் போயிடு சதாம் உசேனை ரூட் போட.''
''போதாக் குறைக்கு ஒயிட் ஹவுஸ்ல கூப்பிட்டு இவனுக்கு பார்ட்டி வேற. டயானா கூட இருந்தாங்க போலிருக்கே.''
மணிவாசகம் வேகமாக எழுந்தான். ''என்ன ஜென்மங்களோ? நானே குழம்பிப் போய்க் கிடக்கிறேன். இவங்க எண்ணை ஊற்றி எரிச்சிகிட்டிருக்காங்க. எதை மறந்தால் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்னு நினைக்கிறேனோ அதையே ஞாபகப்படுத்திகிட்டு இருக்காங்க, ராஸ்கல்ஸ்.''
''டேய் டேய், இருடா. போகாதே. எல்லாருமே போய் சாப்பிட்டுட்டு வந்திடலாம்,'' கிட்டு கூவ, அதற்குள் சுந்தரம், ''மணி உனக்கு லெட்டர் வந்திருக்கு. நான்தான் வாங்கி வைச்சேன். இந்தா'' என்று பான்ட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தான். கடிதம் அம்மாவிடமிருந்து. தம்பிக்கு பள்ளி அட்மிஷன் அனுமதி கிடைத்து விட்டது. எட்டாம் தேதி வரச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குள் ஒரு முறை மணிவாசகம் ஊருக்கு வந்தால் வீட்டைக் காலி செய்து சாமான்களை எடுத்துவர வசதியாக இருக்கும்.
திடீர் என்று சந்தோஷமாக இருந்தது. இனிமேல் இந்த மேன்ஷனில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். மூன்று வருஷமாக ஹோட்டலில் சாப்பிட்டு, நாக்கும் வயிறும் செத்து விட்டது. இனி அம்மா கையால் சுவையான சாப்பாடு, நல்ல தூக்கம்!
தூக்கம் என்றதும் மறுபடி நினைவுக்கு வந்தது. இடம் மாறி சொந்த வீட்டில் தூங்கினால் ஒரு வேளை இந்த கனவுகள் நின்று போகலாம்.
அன்று இரவுகூட தூக்கம் மற்ற நாட்களை விட நன்றாகவே இருந்தது. இரவு ஒரு மணி வரை. அப்புறம் வந்த கனவு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. எப்போதோ ஃபிடல் கேஸ்ட்ரோவிடமிருந்து ஜார்ஜ் புஷ்ஷைக் காப்பாற்றியதற்கு இப்போது பாராட்டு விழா நடந்தது. உலகமெங்கும் மணிவாசகத்தின் தெளிவான பேட்டி டி.வி.யில் ஒளிபரப்பானது. புஷ் ''உனக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்கிறார். சாகிற வரைக்கும் சாப்பாட்டு வசதியும் அம்மாவுக்கு மாடு வாங்க பாங்க் லோனும் கேட்கிறான். ''அதுக் கென்ன இப்பவே'' என்று உடனே ஏற்பாடு செய்கிறார்.
இரண்டு கைகளிலும் இரண்டு பசுக்களைப் பிடித்துக் கொண்டு. வீட்டுக் கதவைத் தட்ட, அம்மா கதவைத் திறந்து, ''என்னடாது?'' என்கிறாள். ஒரு பசு மிரண்டு போய் கட்டை உதறிக்கொண்டு, உள்ளே ஓட, சட்...! விழிப்பு வந்தது.
தண்ணீர் குடித்து விட்டுப் படுத்த பின்பும் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். இடையில் எதற்கோ கண்விழித்த வில்லா இவன் புரள்வதைப் பார்த்து விட்டு துணிக் கொடியிலிருந்து ஒரு ஹேங்கரைக் கழற்றி இவனிடம் கொடுத்து, ''எதுக்கும் இதை வைச்சுக்கோ. வெறும் கையில் ரிஸ்க் எடுக்காதே'' என்று சொல்லிவிட்டு, ''க்ளுக்கும்'' என்று ஒரு மாதிரி சிரித்து விட்டுப் போனான்.
காலையில் அலுவலகம் கிளம்புமுன் மறுபடி அம்மாவின் கடிதத்தைப் படித்தான். மாலை அக்காவைப் பார்த்து விஷயத்தைச் சொல்ல வேண்டும். அம்மா வருமுன், கொஞ்ச நாளாய் புறநகர்ப் பகுதியில் பூட்டிக் கிடக்கிற சொந்த வீட்டைச் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இப்போது இன்னொரு யோசனை தோன்றியது. பழையபடி அதை வாடகைக்கே விட்டுவிட்டு, நகருக்குள்ளேயே வேறு வீடு வாடகைக்கு பார்த்துக் கொண்டால், தம்பிக்கும் பள்ளிக்குப் போகவர வசதி, தான் அலுவலக வேலையாய் சுற்றிவிட்டு தாமதமாக வந்தாலும் கவலையில்லை. அம்மாவும் வீட்டில் தனியாக இருக்க பயப்பட வேண்டியதில்லை.
மாலை அலுவலக வேலை முடிந்து நேராக அக்கா வீட்டிற்குப் போனான். வீட்டுக்கு முன்புறமாகவே குழந்தைக்கு வேடிக்கை காட்டிக்கொண்டே அக்கா சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள்.
''மணியா? வா, வா, நீ மட்டும் இன்னிக்கு வரலைன்னா நாளைக்கு ஃபோன் பண்ணலாம்னு இருந்தேன்.''
''என்னக்கா, என்ன விசேஷம்?''
''இவருக்கு வீடு அலாட் ஆகியிருக்கு. எங்க தெரியுமா? நம்ப வீடு இருக்கிற ஏரியாவிலயே! நம்ப வீட்டு ரோட்டைத் தாண்டி, மெயின் ரோட்டுக்கு வந்தால் தண்ணி தொட்டி இருக்கில்லை? அதுக்கு எதிர்த்தாப்பில. ''சி'' பிளாக். நாங்க எல்லாம் போய் பார்த்திட்டு வந்திட்டோம். நாளைக்குப் பால் காய்ச்சப் போறோம். நீயும் வந்திடு'' என்றாள் முகமெல்லாம் சிரிப்பாக.
''ஹப்பா, என்ன கேயின்சிடன்ஸ்! அம்மா லெட்டர் போட்டிருக்காங்க. ஸ்ரீகாந்துக்கு சதாசிவம் மெமோரியல் ஸ்கூல்ல அட்மிஷன் ஒகே ஆயிட்டது. ஊருக்கு நான் ஒரு நடை போயிட்டு வந்தால், சாமானெல்லாம் காலி பண்ணி எடுத்திட்டு வந்திடலாம். இப்பத்தான் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். ஆமா, உன் மாமியார் எங்கே?''
இந்தக் கடைசி வாக்கியத்தை ஏறத்தாழ கிசுகிசுப்பாகக் கேட்டான். அக்கா அதைவிட கிசுகிசுப்பாக, கிட்டத்தட்ட கண் ஜாடையிலேயே ''உள்ளாற இருக்கு'' என்றாள். ''உள்ளா இக்கு'' என்றது குழந்தையும் மழலையில். ''உன் மாமியார் வெளியில் வர்றதுக்குள்ளே நான் சொல்ல வந்ததை சொல்லிட்டுப் போயிடறேன். இன்னிக்குக் காலையிலதான் தோணிச்சு எதுக்கு ஊரைவிட்டு அவ்வளவு வெளியே தள்ளி குடியிருந்துகிட்டு? பழையபடி நம்ம சொந்த வீட்டை நல்ல டெனன்டா பார்த்து வாடகைக்கு விட்டுட்டு நாங்க டவுனுக்குள்ளேயே வேற வீடு பார்த்து இருந்துக்கறோமே, என்ன சொல்றே? எனக்கும் வசதி, ஸ்ரீகாந்துக்கும் ஸ்கூல் போகவர பிரச்சனையில்லை, அம்மாவும் அங்க இங்க போயிட்டுவர சௌகர்யமா இருக்கும்.''
மணிவாசகம் பேசி முடிக்க விடவில்லை கவிதா. ''ஐயோ என்னடா நீ? இப்பதான் சந்தோஷப்பட்டு முடிச்சேன். அதுக்குள்ளே சாக அடிக்கறயே! இப்பதான் எங்களுக்கும் வீடு அங்கயே கிடைச்சிருச்சே! இத்தனை வருஷம் கழிச்சு உள்ளூர்லயே மறுபடியும் எல்லாரும் பக்கம் பக்கமா இருக்கப் போறோம். இந்தக் கிழத்துகிட்ட மாட்டிகிட்டு நான் படற அவஸ்தைக்கு அம்மா பக்கத்திலேயே இருந்தால்தான் எனக்கு ஆறுதலா இருக்கும்.''
படபடக்க அக்காவை ஏறிட்டுப் பார்த்தான் மணிவாசகம். அவள் சொல்வதும் சரிதான். இந்த மாமியார்க் கிழவியிடம் மாட்டிக் கொண்டு அவள் படுகின்ற துன்பத்துக்கு இது கொஞ்சம் மாறுதலாக இருக்கும். சரி, கனவுப் பிரச்சினையை இவளிடம் சொல்லலாமா என்று நினைத்தவன் உடனே மாற்றிக் கொண்டான்.
ஒன்று கேலி செய்து சிரிப்பாள் அல்லது தம்பிக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டதோ என்று கவலைப்பட ஆரம்பிப்பாள். ஏற்கெனவே அவள் கொஞ்சம் பயந்த சுபாவம். திருமணத்துக்கு முன் பாஸ்போர்ட் விவகாரமாக வீட்டிற்கு சம்பிரதாய முறையில் விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியிடம் எப்படி உளறிக் கொட்டினாள்!
''என்னடா நீயா சிரிச்சுக்கறே?'' என்றாள் கூர்மையாக.
''ஒண்ணுமில்லை. நீ அந்த போலீஸ் ஆபீசர்கிட்ட எப்படி உளறினேன்னு திடீர்னு ஞாபகம் வந்தது.'' அவளும் சிரித்தாள். ''அதெல்லாம் அப்ப.''
''சரி, உன் இஷ்டப்படியே நம்ப வீட்டுக்கே வந்திடறோம், உங்க ஃபிளாட்டில பால் காய்ச்சற ஃபார்மாலிட்டிக்கெல்லாம் நான் வர வேண்டியதில்லை இல்லை? மறுபடி அம்மா இங்க வந்தப்புறம் வர்றேன், என்ன?'' என்று கிளம்பினான்.
''மாமா டாடா'' என்றது குழந்தை.
''ஏண்டி கவிதா, சாயங்கால நேரத்தில குழந்தையை வாசல்ல வைச்சுக்கிட்டுப் பராக்குப் பார்க்காதேன்னு சொன்னா உனக்குப் புரியாதே! போற வர தடியனெல்லாம் கண்ணுப் போடணும்'' என்றபடியே உள்ளிருந்து வந்த மாமியர் அப்போதுதான் மணியைப் பார்ப்பதைப் போலப் பார்த்தாள்.
''அடடே நீயா? எங்கே வந்தே? கொஞ்ச நாளா ஆளையே காணோம்? அக்காக்காரி சொல்லி விட்டாளாக்கும்?'' என்று வாயை ஒரு விதமாகக் கோணிக் கொண்டே பேசினாள்.
மணிக்கு கவிதா மாமியாரைக் கண்டாலே பிடிக்காது. மேடு விழந்த நெற்றியும், கண்களில் சதா ஒரு வில்லத்தனமும், கோணிக் கொண்டு பேசுவதும்...
''இல்லேம்மா, தம்பிக்கு இங்கேயே ஸ்கூல்ல சீட் கிடைச்சிடுச்சு. அம்மாவும் இங்கேயே வரப் போறாங்க. அதைச் சொல்லிட்டுப் போகலாம்னு தான் வந்தேன்'' என்றான் ஜாக்கிரதையாக.
மாமியார் அருகில் இருந்தால் வாயே திறக்க மாட்டாள் கவிதா. ''எதுக்கு வம்பு?'' என்பாள்.
''இங்கேயே வர்றாங்களாக்கும்! பொண்ணையும் பேரனையும் வருஷம் ஆறு பண்டிகைக்கும் சீராட்டலாம் பாரு. வரட்டும், நல்லா வரட்டும்.''
''அப்ப, நான் கிளம்பட்டுமா அம்மா? அக்கா, வர்றேன். அத்தான் வந்தால் சொல்லிடு. டேய் குட்டி, டாடா'' என்றபடியே வண்டியைக் கிளப்பி திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டான்.
அன்றிரவு மாத்திரையைப் போட்டுக் கொண்டதில் தூக்கம் அரை மணியில் கண்களைத் தள்ளியது. சுந்தரமும் கிட்டுவும் எதிரே இருந்தவர்கள்...ஃபிரேமுக்குள் வந்து வந்து போனார்கள்.
''என்னடா இப்படி தூங்கி விழுகிறான்? டாக்டர் மருந்து நல்லாதான் வேலை செய்யுது போலிருக்கு'' என்ற குரல்கள் காதில் விழுவது போலிருந்த கட்டத்தில் அப்படியே கட்டிலில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தான்.
வில்லியம்ஸ் தான் முந்தைய தினம் இரவு அவனுக்கு ''ஆயுத சப்ளை'' செய்த காரியத்தைச் சொல்லிச் சிரித்தான்.
''பெரிய ஹீரோ ஆகணும்னு மனசுக்குள் நினைப்பு. முடியலை. அதான் கனவில் பார்த்து திருப்திப் பட்டுக்கறான்.''
விடிகாலையில் மீண்டும் கனவு வந்தது. இந்த முறை கோர்ப்பசேவ் எங்கேயோ அடைந்து கிடக்கிறார். அவர் எதிரே காவலுக்கு ஒரு ரோபோ-கத்தியில்லை, ரத்தமில்லை. மணிவாசகம் குழாய் பிடித்து ஏறி, உள்ளே இறங்கி, ரோபோவின் கண்களில் இருந்து வரும் கதிர்களைத் தடை செய்து, ''கோர்பி நான் வந்துட்டேன், இனி கவலையில்லை'' என்ற வசனத்துடன் கையைப் பற்றி ரஷ்யாவுக்கே அழைத்துச் செல்கிறான்.
கனவு கலைந்ததா, முடிந்ததா, விழிப்பு வந்ததா என்று சொல்ல முடியாத அளவுக்கு சாப்பிட்ட மாத்திரையின் வீரியம் இருந்தது.
இதைத் திரும்ப நினைவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டே, அலுவலகத்தில் விற்பனை விவரங்களை டைரியில் எழுதிக் கொண்டிருந்தான். தூங்குகிறானா, விழிப்புதானா என்று தெரியாமல், திடீரென்று ''கோர்பி மறுபடி பதவிக்கு வா. நான் இருக்கிறேன்'' என்றான் ஆங்கிலத்தில். மிக அகஸ்மத்தாக எதிரே இருந்தவர் கோபிநாத். கிளையண்ட். ''சார்'' என்று வார்த்தைக்கு நூறு வார் போடுகிறவன் திடீரென்று பேர் சொல்லிப் பேசுகிறானே என்று குழம்பினார்.
''என்ன மணி, என்ன சொன்னீங்க இப்ப?''
மணிவாசகம் சுயநினைவுக்கு வந்து சுமாராக சமாளித்தான்.
''ஐயையோ தப்பா எடுத்துக்காதீங்க சார். கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து என் ஃபேமிலி இங்கே வர்றாங்க. அதையே நினைச்சுக்கிட்டிருந்தேன். திடீர்னு உளறிட்டேன்.''
இருந்தாலும் கோபிநாத் போகும் போது இரண்டு மூன்று முறை திரும்பித் திரும்பி பார்த்து விட்டுத்தான் போனார்.
விஷயம் விபரீதமாகப் போய்க்கொண்டிருக்கிறது. உடனே டாக்டரைப் பார்த்து தீவிர சிகிச்சைக்கு கேட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த முறை ஜெயகிருஷ்ணனின் வரவேற்பறையில் பீச்சில் கோட்டை கட்டுகிற கிழவரைக் காணோம். ஒரு பதினாறு வயதுப் பெண், ''என் இரட்டை சடை நல்லா இருக்கில்லை? என்னைக் கல்யாணம் செய்துக்கறியா?'' என்றது.
ஜெயகிருஷ்ணன் அதே பாறைப் பார்வை பார்த்துக்கொண்டு, மணிவாசகத்தின் தாளை ஃபைலில் தேடி, ''உங்களை அடுத்த வாரம்தானே வரச் சொல்லியிருந்தேன்'' என்றார் கொஞ்சம் கடுமையாக.
''விழிச்சிகிட்டு இருக்கறப்பவே ஏதாவது உளறிடறேன் டாக்டர். அதான் வந்தேன்.''
''அதான் ஏற்கெனவே சொல்லிட்டீங்களே! டாக்டர் கிட்டேன்னு வந்திட்டால் அவர் சொல்றபடி செய்யனும். அப்பதான் பலன் இருக்கும்! மருந்தெல்லாம் சரியா சாப்பிட்டுட்டு அடுத்த வாரம் வாங்க.''
நல்ல வேளை, இதற்கு ஃபீஸ் எதுவும் வாங்கவில்லை. வெளியே வந்தவனை ஒரு பெண் குரல் அழைத்தது. வலது புறம் சின்ன டேபிள், நோட்டுப் புத்தகங்கள், தொலைபேசி சகிதம் அமர்ந்திருந்த பருமனான பெண்மணி, கொண்டை போட்டுக் கொண்டு, கண்ணாடி வழியாகப் பார்த்து, ''ஐம்பது ரூபாய்'' என்றாள். பணம் பெற்றுக் கொண்டு, உங்களுக்கு அடுத்த வெள்ளிக்கிழமை நேரம் ஒதுக்கியிருக்கிறது'' என்றாள்.
ச்சே! கனவுகள் கூட இவ்வளவு காஸ்ட்லியா? சுதந்திர இந்தியாவில் ஒரு இளைஞன் கனவுகூடக் காணக்கூடாதா?
அந்தப் பெண்மனி ஜெயகிருஷ்ணனின் மனைவியாம். ஃபீஸ் வாங்குவதுதான் அவளது முழுநேரத் தொழிலாம். என்றைக்காவது அவள் இல்லையென்றால் டாக்டர் பெற்றுக் கொள்வாராம். சந்தானகிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்ட போது சொன்னான், அந்தக் கிழவனிடம் மட்டும் போகாதே. அவன் ஒரு க்வேக்! இன்னொரு விஷயம் தெரியுமா? இவரிடம் முதலில் நுழைகிறவர்கள் உன்னை மாதிரி சாதாரண புகாரோடுதான் போகிறார்கள். திரும்பும்போது அந்தக் கோட்டை கட்டுகிற கிழவன் மாதிரி ஆகிவிடுவார்கள், ஜாக்கிரதை! அவன் நோயாளிகளை உருவாக்குகிறான்!
விஷயம் தெரிந்து, மணிவாசகத்திற்கு விதவிதமான ஆலோசனைகள் இலவசமாகக் கிடைத்தன.
''தூங்கறதாலேதானே கனவு வருது. தூங்கவே தூங்காதே. தூங்கற மாதிரி நடி. அப்ப கனவு வராது. அப்படி அசதியில் உன்னையும் மீறி தூங்கிட்டாலும் கனவு வராது. ஏன்னா, நீ தூங்கறதுதான் உனக்கே தெரியாதே ஹ’ஹ்ஹ’...''
''உனக்கு எப்படி உலகத்தில் நடக்கிற நிகழ்ச்சிகள் எல்லாம் தெரியுது? பேப்பர் படிக்கிறதால்தான். பேப்பரை நிறுத்திடு, டி.வி. பார்க்காதே.''
எப்படி முடியும்? பார்க்கிற உத்தியோகம் சேல்ஸ்மேன் உத்தியோகமாயிற்றே! பேப்பர் படிக்காமல் முடியுமா? பேசுவதுதான் முழுநேரத் தொழிலாக இருக்கிறது. எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை ரசனைகள்! அவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டாமா?
சைக்கியாட்ரிஸ்டுகள் நான்கைந்து பேரைப் போய்ப் பார்த்தான். எல்லோரும் கேள்வி கேட்டுக் கேட்டுக் மாய்ந்தார்கள், எண்பது சதவீத கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்தன. மீதி இருபது சதவீத கேள்விகள் அந்த சைக்கியாட்ரிஸ்டின் பாபுலாரிட்டி, வாங்குகிற கட்டணம், ரசனை இவற்றைப் பொறுத்து மாறுபட்டது.
(''என் கனவுகளும் உன் கேள்விகளும்'' என்ற தலைப்பில் இவை ஒரு தொகுப்பாக வெளிவர இருக்கின்றன. வெளியிடுபவன் அன்பரசு. மணிவாசகத்தின் அச்சக நண்பன்.)
தவறாமல் எல்லோரும் ரப்பர் சுத்தியால் மணிவாசகத்தை முட்டிக்கு முட்டி தட்டினார்கள். ரொம்பப் பொறுக்க முடியாமல் கடைசியாகப் பார்த்த டாக்டரிடம் இருந்து அந்தச் சுத்தியலைத்தள்ளிக் கொண்டு வந்து, வடகோவையில் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் மேம்பாலத்திற்கு ''அர்ப்பணம்'' என்று கூறி எறிந்து விட்டு வந்தான்.
''சைக்கியாலஜிஸ்ட்''டைத்தான் பார்க்கணும் இதுக்கு. ''சைக்கியாட்ரிஸ்ட்'' இல்லை. இரண்டுத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு.
அவர்கள் மட்டும் என்ன? கேள்வியாகக் கேட்டுத்தான் சாக அடித்தார்கள். தவறாமல் ஒரு ''சிட்டிங்''கிற்கு இத்தனை என்று கட்டணம் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் கனவுகள் என்னவோ கனஜோராக வந்து போய்க் கொண்டிருந்தன.
எல்லா மருத்துவர்களும் ஏதோ ஒரு வகையில் ''செடேடிவ்'' கொடுத்து தூங்க வைக்கத்தான் பார்த்தார்கள். கேட்ட கேள்விகளிலிருந்து, உருப்படியாக என்ன கண்டுபிடித்தார்கள், தெரியவில்லை.
சொந்த வீட்டுத் தூக்கமும், வீட்டுச் சாப்பாடும் கூட பெரிய மாற்றத்தைத் தந்ததாகச் சொல்ல முடியவில்லை. அம்மாவின் கல்யாணத் தொணதொணப்பு வேறு.
ஒரு கட்டத்தில் ''போங்கடா சைத்தான்களா'' என்று எல்லா மருத்துவத்தையும் உதறி விட்டான்.
கிராஸ்கட் ரோட் ஏழாம் நம்பர் எக்ஸ்டென்ஷனில் ''கனவுகளுக்குப் பலன்'' போர்டுக்குள் இருந்த ஜாக்கி ஜம்புலிங்கம் ''ஹோமம் ஒண்ணு பணணிடுங்க. பரிகாரம்தானே'' என்றார்.
''எங்கேயாவது தர்ம அடி வாங்கினேயானால் சட்டுன்னு தெளிஞ்சிடுவே'' என்றார் இன்ஸ்பெக்டர் மாமா.
''கனவு கண்டு கிட்டிருக்கறப்ப ''சப்பு''ன்னு ஒரு அறை, கன்னத்தைப் பார்த்து விட்டால் அதோட லாஸ்ட். கனவே வராது. இதுதான் சரியான பரிகாரம்டா'' என்றான் சந்தான கிருஷ்ணன்.
கடைசி முயற்சியாக ஒன்றைத் தீர்மானித்து வைத்திருந்தான் மணிவாசகம். ரயில் கிளம்பக் காத்திருந்தான். நீலகிரி எக்ஸ்பிரஸ் இருபது நிமிட தாமதம். இந்த நேரத்தில இப்படியொரு அலுவலக ரீதியான சென்னைப் பிரயாணம் வாய்த்தது நல்லதுதான். அலுவலக வேலையை நாளை மாலைக்குள் முடித்துவிட்டு, ஹ’ப்னாடிஸ்ட் பீட்டர் பெர்னாண்டசிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். இப்போதைக்கு அவர் ஒருவர்தான் ஒரே நம்பிக்கை. அவர் எப்படியும் கண்டுபிடித்துவிடுவார். மனசுக்குள் ஊடுருவி நோயாளிகளையே காரணத்தைச் சொல்ல வைத்து விடுவாரே!
தூரத்தில் தனபால் ஓடிவருவது தெரிந்தது. வழியனுப்பவா? இருக்காதே! பழக்கமில்லையே!
''மணி சார், நல்ல வேளை ரயில் கிளம்பிடுமோன்னு ஓடி ஓடி வந்தேன். மானேஜர்தான் அனுப்பினார். ஹெட் ஆபீசிலிருந்து தந்தி வந்ததாம். நீங்க மெட்ராஸ் போக வேண்டியதில்லை; கேன்சல்'' - மூச்சு வாங்க, அட்டெண்டர் ஜன்னல் வழியாகப் பேசினான்.
ஏமாற்றமாக இருந்தது மணிக்கு. இனி எப்போது சென்னைப் பிரயாணம் வாய்க்குமோ?
''போச்சா? கொஞ்சம் முன்னாடி தெரிஞ்சிருந்தால் கிளம்பியிருக்கவே வேண்டாம். சரி, போகலாம் வா'' - மணிவாசகம் சூட்கேசைத் தூக்கிக் கொண்டு இறங்கி. கவுன்டருக்குப் போய் டிக்கெட்டை கேன்சல் செய்து. தனபாலுடைய மொபெட்டிலேயே ஏறிக் கொண்டான்.
மெயின் ரோட்டிலேயே இறங்கி நடந்தவன் அக்கா வீட்டிற்குள் நுழைந்தான். கவிதா தூங்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தவள் ஆச்சரியப்பட்டாள். கேலி செய்தாள். ''என்ன மணி, சூட்கேசோட இந்த நேரத்தில? அம்மாகிட்ட கோவிச்சுகிட்டு இங்க வந்திட்டாயாக்கும்?''
சிரித்தான். ''இரயில்வே ஸ்டேஷனிலிருந்து வர்றேன். ஆபீஸ் விஷயமா போக வேண்டியிருந்தது. கடைசி நிமிஷத்தில் கேன்சல் ஆயிட்டுது. ஆமா எங்கே அத்தான், உன் மாமியார் எல்லாம்? சத்தத்தையே காணோம்?''
''மாமியாருக்கு கண் ஆபரேஷன். அத்தான் மதுரைக்குக் கூட்டிகிட்டுப் போயிருக்கார். என் நாத்தனார் வீட்டில் வைச்சுப் பார்க்கப் போறாங்க. ரொம்ப நல்லதுன்னு அனுப்பி வைச்சிட்டேன். வீட்டில் பிக்கல் பிடுங்கல் இல்லாம நல்லாயிருக்கு. இன்னும் இரண்டு நாளைக்கு நிம்மதிதான். காலையில கூட வீட்டுக்கு வந்திருந்தேன். நீதான் இல்லை.''
''ஆமாக்கா, இப்ப என்ன தனியாவா இருக்கப்போறே? நான் வேணா வந்து படுத்துக்கட்டுமா? இல்லைன்னா, நீதான் குழந்தையைத் தூக்கிட்டு அங்க வந்திடேன்.''
''என்ன பயம்? வேலைக்காரம்மா நைட்டு படுத்துக்க வர்றேன்னுச்சு. காணோம். அதனாலென்ன? குழந்தை வேற நல்லா தூங்கறான். நான் நாளைக்குக் காலையில அங்கே வர்றேன். ரெண்டு நாள் அங்கதான்.''
ஆனால் மணி கவலைப்பட்டான். ''என்னக்கா ஊரை விட்டு வெளியில கட்டி வைச்சிருக்கோம் வீட்டை. சரி நான் ஒண்ணு செய்யறேன். வீட்டுக்குப் போய் சாப்பிட்டுட்டு, அம்மாகிட்ட சொல்லிட்டு இங்க வந்திடறேன் தூங்கறதுக்கு. இல்லேன்னா ஸ்ரீகாந்தை அனுப்பறேன்.''
ஆனால் வீட்டுக்கு வந்ததும் அம்மா கேட்ட கேள்விகளிலும், ''நேயர் விருப்பத்தி''லும் கவிதா வீட்டுக்குப் போக வேண்டியிருப்பதையே மறந்து, சாப்பிட்டுவிட்டு, ''பிள்ளையாரப்பா, என்னை இந்தக் கனவுத் தொல்லையிலிருந்து காப்பாற்றினால், உனக்கு 1008 தேங்காய் உடைக்கிறேன். உனக்கே தெரியும் தேங்காய் என்ன விலைன்னு'' என்றபடியே தூங்கிவிட்டான்.
அவன் விழித்த போது வீட்டிலிருந்த நிலை விசித்திரமாக இருந்தது. கனவா, விழிப்பா என்று புரியவில்லை. என்ன நிகழ்கிறது என்று உணரும் முன்பே அவன் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டன. ஸ்ரீகாந்தும் அம்மாவும் கத்தி முனையில் நிறுத்தப்பட்டனர்.
கண்களை மட்டும் விட்டுவிட்டு முகத்தைக் கறுப்புத் துணியினால் கட்டியிருந்த திருடர்கள் இரண்டு பேர் வீட்டிலுள்ள பணம் நகைகளை ஒப்படைத்து விடும்படி மிரட்டினார்கள். அதில் ஒருவன், ''இவன் ஊருக்குப் போயிட்டான்னு சொன்னியே, இங்கே முழுசா நிற்கிறானே?'' என்றான் இன்னொருவன், ''ஆமாண்ணே, இவன் பெட்டியைத் தூக்கிட்டுப் போறதை நானே என் கண்ணால பார்த்தேன். இப்ப எப்படி திரும்பி வந்தான்னு தெரியலையே'' என்றான்.
மணிவாசகத்திற்குக் கைகால்கள் அவன் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் இஷ்டத்திற்கு நடுங்கின. வாய்விட்டுக் கத்தக்கூட திராணியில்லை.
அடுத்த பத்து நிமிடங்களில் வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, மூவரையும் கட்டி, வாயில் துணியை அடைத்து விட்டு வெளியேறினார்கள் அந்த இரண்டு முகமூடித் திருடர்களும்.
யார் தங்களைக் கவனிக்கப் போகிறார்கள், எப்போது கட்டவிழ்க்கப்பட்டு காப்பாற்றப்படப்போகிறோம் என்றெல்லாம் குழம்பி, டென்ஷனின் உச்சக்கட்டத்திலிருந்த மணிவாசகத்துக்கு, ''ஐயோ கவிதா தனியாக இருக்கிறாளே'' என்று திடுமென நினைவு வந்தது. நினைவு வந்தது தப்பாகப் போயிற்று. ஓவர் டென்ஷனாகி சுயநினைவு இழந்தான்.
''அண்ணா, அண்ணா எழுந்திரு'' என்று உலுக்கினது ஸ்ரீகாந்த். அவன் முகமெல்லாம் சிரிப்பு. அம்மாவிற்கும் ஆனந்தம் முகத்தில் கூத்தாடிக் கொண்டிருந்தது. ''என் கண்ணே, என் தங்கமே'' என்று கொண்டாடிக் கொண்டிருந்தாள். கூடவே கவிதா, அக்கம் பக்கத்து வீட்டினர், காலனிக்காரர்கள். இரண்டு போலீஸ்காரர்கள். சிறிது நேரத்திற்கு ஒன்றுமே புரியவில்லை மணிவாசகத்திற்கு.
திருடர்கள் இதே போல் இரண்டு வீடுகளில் கொள்ளையடித்து விட்டு, வாய்திறக்க முடியாதபடி கட்டி வைத்துவிட்டு கவிதா வீட்டிற்கும் சென்றிருக்கின்றனர். ஆனால், பின்பக்க ஜன்னல் கதவைத் திறந்து அதன் வாழியாக கம்பை உள்ளே சமையலறை உள்தாளைத் திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சப்தம் கேட்டு கவிதா விழித்திருக்கிறாள். ஒரு நொடியில் ''நன்றாக மாட்டிக் கொண்டிருக்கிறோம்'' என்று உணர்ந்தாலும், பதறாமல், ஹாலில் இருந்த பெரிய மர ரேக்கிற்குப் பின்னால், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையோடு மறைந்து கொண்டிருக்கிறாள். திருடர்கள் உள்ளே நுழைந்து, பெட்ரூமுக்குள் போகும் வரை பொறுமையாகக் காத்திருந்து, உள்ளே சென்றதும், சப்தமின்றி அந்தக் கதவைச் சாத்தி வெளியே தாழிட்டு விட்டிருக்கிறாள். எப்படியும் திருடர்கள் கதவை உடைக்க வேண்டுமென்றாலும் கூட பத்து நிமிஷம் தேவைப்படும். அதற்குள் வெளியே ஓடி, அக்கம் பக்கத்திலிருப்பவர்களை எழுப்பி, ஃபோன் மூலம் போலீசுக்குத் தகவல் போய்... திருடர்கள் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.
அடுத்த ஒரு மாதத்திற்கு செய்தித் தாள்களிலும், வாரப் பத்திரிகைகளிலும் கவிதா பெயர் அல்லோலகல்லோப்பட்டுக் கொண்டிருந்தது. பிடிபட்ட திருடர்கள் மூலம், 20 பேர் அடங்கிய, மதுரையைச் சேர்ந்த பெரும் முகமூடிக் கொள்ளைக் கூட்டமே பிடிபட்டது. ஐ.ஜி. இப்படியொரு வீரப் பெண்மணியைத் தன் சர்வீசிலேயே சந்தித்ததில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஜனாதிபதி விருது கவிதாவுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
கவிதா முகமெல்லாம் சிரிப்பாக, பனாரஸ் பட்டுப் புடவையில், தான் திருடர்களை சிக்க வைத்த சம்பவத்தை அதிகக் கொச்சையில்லாமல் கோவைத் தமிழில் விவரித்தது டி.வி.யில் குளோசப்பில் தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் ஒளிபரப்பானது.
''தைர்யமாக இருந்தேங்க. எப்படியும் இன்னும் ரெண்டு நிமிஷத்தில சமையல் ரூம் கதவைத் திறந்துகிட்டு உள்ளே வந்திடுவாங்கன்னு தெரிஞ்சு போச்சு. தூங்கிகிட்டு இருந்த குழந்தையை அள்ளிக்கிட்டு அப்படியே ஹாலில் மரப் பீரோவுக்குப் பின்னால ஒளிஞ்சுகிட்டேன். அவனுங்க ஸ்டீல் பீரோ இருக்கிற பெட்ரூமுக்குள்ளார போனதும் சப்தமில்லாம நகர்ந்து போய் கதவைப் பூட்டிட்டேங்க. அடுத்த அஞ்சு நிமிஷத்தில காலனிக்காரங்க பூரா கத்தி, கம்போட வந்துட்டாங்க. போலீசுக்கும் தகவல் போன உடனே வந்திட்டாங்க. இதிலே என்ன தமாஷன்னா, பக்கத்தில இருக்கிற எங்க அம்மா வீட்டில போய் அரை மணி நேரத்துக்கு முன்னாலதான், இவனுங்க என் அம்மா, ரெண்டு தம்பிகளைக் கட்டி வைச்சிட்டு வந்திருக்கானுங்க. இத்தனைக்கும் என் பெரிய தம்பி மணிவாசகம் நல்ல வாட்டசாட்டமா, சினிமாவில வர்ற ஹீரோ மாதிரி இருப்பான். மயக்கமே போட்டுட்டான்.''
அந்த தினத்திலிருந்து மணிவாசகத்திற்குக் கனவுகள் வருவது அடியோடு நின்று போனது.
நன்றி: சந்திரக்கற்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
என் கனவுக்கென்ன பதில்?, என்ன, மணிவாசகம், டாக்டர், நான், போய், வந்து, கவிதா, அம்மா, இல்லை, உள்ளே, இரண்டு, மாதிரி, பார்த்து, கனவு, எல்லாம், பெரிய, கொண்டு, வெளியே, கொஞ்சம், நல்ல, இப்படி, அடுத்த, தூக்கம், எப்படி, வந்தது, செய்து, கனவுகள், அவன், சொல்ல, டேய், இருக்கும், என்னடா, அக்கா, என்றான், திருடர்கள், ரெண்டு, வாங்க, மட்டும், தான், எத்தனை, மறுபடி, அதான், என்றாள், கதவைத், அந்த, வீடு, உடனே, விட்டு, வேண்டும், நேரம், இருந்து, வீட்டில், சொந்த, இந்தக், கேன்சல், மாமியார், வந்தால், உனக்கு, அலுவலக, கொண்டே, அம்மாவும், போது, முறை, என்றது, இவன், ரொம்ப, என்றார், வந்தேன், அப்ப, சார், சதாம், காணோம், இங்க, அவர், பேர், உங்க, ஜன்னல், இப்போது, வர்றேன், கட்டி, இங்கே, அவள், இருக்கு, வேண்டியதில்லை, விஷயம், கேட்டுக், மணிவாசகத்தின், பெற்றுக், எப்படியும், வராது, இப்ப, அந்தக், கேட்ட, இருந்த, இருக்கிற, வந்த, என்றபடியே, சொல்லிட்டுப், நேரத்தில, மாட்டிக், கடைசி, எங்கே, இங்கேயே, முகமெல்லாம், நம்ப, இறங்கி, தூங்க, எதிரே, நல்லா, அத்தான், வீட்டுக்கு, ஃபீஸ், லேடீஸ், உங்களுக்கு, இன்னும், அப்பா, தெரியும், ரொம்பப், காப்பாத்தி, எதுக்கு, இவங்க, உசேன், ஏற்கெனவே, கண்ணாடி, இருந்தாலும், கோட்டை, பத்து, இத்தனை, மணிவாசகத்திற்குக், மணிவாசகத்தை, வேறு, யார், ஊருக்கு, பிரயாணம், நான்தான், செய்ய, போகலாம், கொண்டான், மணிக்கு, திரும்பி, எங்க, தம்பிக்கு, அதற்குள், சாப்பிட்டுட்டு, கிட்டுவும், ஏற்பாடு, கொஞ்ச, வருஷம், என்னை, சின்ன, போச்சு, சொன்னார், நாளைக்கு, திறந்து, நூறு, வேளை, Short Stories - சிறுகதைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்