அரும்பு

- மேலாண்மை பொன்னுச்சாமி
சாரல் காற்று குளிர்ச்சியை வாரியிறைத்தது. கூதலடிக்கிறது. அப்படியே மூடிக்கொண்டு முடங்கிக் கொள்ள ஆசைப்படுகிற குழந்தை மனசு. ''நிமாண்ட் நாழியிலே ரெடியாகு.'' சாட்டைக் குச்சியாக மனசுக்குள் குத்துகிற ஏஜெண்டின் குரல்.
உறக்கத்திற்கு ஏங்கித் தவித்த மனசை, அம்மாவின் இருமல் சத்தம் திசை திருப்பி வழி நடத்தியது. அடுப்புச் சாம்பலில் பல்லைத் தேய்த்தாள். கஞ்சியைக் குடித்தாள். தலையில் எண்ணெய் வைத்து, பின்னிக் கொண்டாள். கணக்குச் சிட்டையையும், சில்லறை டப்பாவையும் எடுத்துக்கொண்டாள். சோறுவைத்த தூக்குச் சட்டியை நீட்டினாள் வேலாயி.
பாவம். அம்மா! நோய் அவளைத் துளைத்துத் துவட்டியெடுத்து விட்டது. தசையையெல்லாம் கரைத்துக்குடித்துவிட்டு, எலும்பும் தோலுமாக்கி விட்டது. நிற்கக்கூடத் தெம்பில்லாமல் இடது கையால் சுவரைப்பிடித்துக் கொள்கிறாள்.
''நேத்து எம்புட்டுக் கட்டை அடுக்கினே, செல்லம்?''
''இருவத்தி ஒண்ணுமா''
''இன்னிக்கு சனிக்கிழமை. நாளை லீவ். திங்கட்கிழமை என்ன செய்யப்போறே?''
அடிபட்டவளாய்த் திகைத்து நிமிர்ந்தாள், செல்லி. சட்டென்று வாடிக்கறுக்கிற பிஞ்சு முகம். சிறு கண்களில் கலக்கம். இமைகளில் ஈர மினுமினுப்பு. எதுவும் சொல்லத் திசையற்றுப் போய், மௌனத்தில் உறைந்தாள்.
வேலாயியின்குலை பதறியது. பெற்ற மனது பதைத்தது. மகளின் தலையை அன்புடன் தடவினாள். அவள் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர்.
''ஏஜெண்டுத் தம்பி கண்டிசனா சொல்லிருச்சே'' மனசைப் பிசைகிற வேதனையோடும் புலம்பினாள் வேலாயி. தாயைப் பார்த்து மனம் கலங்கி, பீதியுடன் நிற்கிற எட்டுவயதுச் சிறுமி செல்லி.
''செடிக்குச் செடியா உக்காந்து பறக்கிற தட்டானைப்போல... தெருவிலே ஓடி விளையாட வேண்டிய சின்ன அரும்பு. விடியுறதுக்கு முந்திப்போய், பாடுபட்டு, பொழுதடைஞ்சு இருட்டுனப் பிறகு வீடு வந்து சேருகிற கொடுமை!''
மனக்குமுறல் தாளாமல், மார்பில் மடேரென்று அடித்துக் கொண்டாள் வேலாயி. ''அடப் பாதரவே, கூத்துவன் என்னை ஒடிச்சுப்போட்டுட்டு, இப்படிக் கூத்துப்பார்க்கானே! கண்ணு முழியாத இந்தக் குஞ்சு ஒழைச்சுக்காலம் ஓட வேண்டியதாயிடுச்சே. அந்த ''ஒழக்கரிசிச் சீவன்'' இருந்திருந்தா. நமக்கு இந்தக் கதி வந்திருக்குமா?
வேட்டு வெடித்த கிணற்றுப்பாறையில், நசுக்குண்டு இறந்து போன புருசனை நினைத்தாள். அந்த இழப்பின் கனபரிமாணம் நொந்துபோன இந்த நேரத்தில் முழுசாகத் தாக்கியது. விசும்பினாள்.
அழுது கதறுகிற அம்மாவைப் பார்க்கச் செல்லியின் மனம் சகிக்கவில்லை. முட்டுகிற விம்மலை அடக்கிக் கொண்டாள்.
''நேரமாச்சும்மா... நா போகட்டா?''
''போறீயா? போய்ட்டு வா. கண்ணு, யார் கூடயும் சண்டை கிண்டை போடாம, கருத்தா வேலையைப் பாரம்மா. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டீயா?''
தலையசைத்து விட்டு வாசல்படியைத் தாண்டிய செல்லியை இருட்டு அப்பிக் கொண்டது. நாய் குரைக்குமோ'' பயத்தில் திகைத்துப் போய்த் தேங்கி நின்றாள். நல்லவேளை மேலத்தெரு முத்துலட்சுமி வந்துவிட்டாள்.
''வர்ரீயா?''
துணை கிடைத்துவிட்டது.
''திங்கட்கிழமைக்கு ஒண்ணும் பதில் சொல்லாமப்போகுது. புள்ளை, என்ன செய்யப் போறாளோ...''அம்மாவின் புலம்பல் சத்தம், காலை நேர அமைதியில் துல்லியமாகத் துரத்துகிறது.
தெருவில் ஒரு சுடு குஞ்சுகூட விழித்திருக்கவில்லை. நாய்கள் கூட கூதலடிக்காத இடம் பார்த்துப் போய் முடங்கிக் கொண்டன. அத்துவானக் காட்டில், ஒத்தையில் நடப்பது போலிருந்தது. செல்லிக்கு.
கீழடி வானம் முகம் சிவக்க தொடங்கியது. விடிவெள்ளியைச் சாரல் மேகம் ஒளித்துக் கொண்டது.
கிராமத்தையே கதிகலங்கடிக்கிற மாதிரி.. விடாத ஓங்காரமாய் ஹாரன் சத்தம். பஸ் வந்தவிட்டது. செல்லி நடையை எட்டிப் போட்டாள். முத்துலெட்சுமி நடைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சிறுமி குட்டோட்டமாய் ஓடினாள்.
ஏற்கெனவே வந்திருந்த பிள்ளைகள் பஸ்ஸ•க்குள் ஏறிப்படுத்திருந்தன.
ஓட்டமும் நடையுமாக ஓடி வருகிற இவர்களைப் பார்த்து கண்டக்டர் கோபமாய் அதட்டினார்.
''என்ன, தேரு மாதிரி ஆடியசைஞ்சி வாரீக? விருட்டுன்னு வாங்க. இன்னும் ஏழு ஊர்கள்ளே புள்ளைகளை ஏத்திக்கிட்டு, ஆறு மணிக்குத் தீப்பெட்டியாபீஸ் போய்ச்சேர்ந்தாகணும்.''
அந்த அதட்டல் உரட்டலெல்லாம் செல்லி மாதிரியான சிறுமிகளிடம்தான். தாவணி போட்ட முற்றிய சிறுமிகளிடம் பூப்பெய்திய இளம் பெண்களிடம் தொனியே மாறிவிடும். அவர்களிடம் பேசும்போது, எத்தனை நெளிவு, என்னமாயச் சிரிப்பு... எவ்வளவு குழைவு!
அதைப்பார்த்தாலே.... செல்லிக்குப் பற்றிக்கொண்டு வரும். கண்டக்டர் கழுத்துக்கு மேல் ஓநாய் மூஞ்சி இருப்பதுபோல் மனசுக்குள் பயமாகவும், வெறுப்பாகவும் இருக்கும். காறித்துப்பணும்போல மனசில் தோன்றும்.
தீப்பெட்டி யாபீஸக்குள் போய்விட்டால் இது போல நிறைய ஓநாள் மூஞ்சிகள்... எச்சில் வடிகிற நாக்குகளோடு ஓநாய்கள்.
செல்லி பஸ்ஸ•க்குள் ஏறி உட்கார்ந்தாள். தாராளமாய் இடம் கிடந்தது. அடுத்த ஊரிலேயே சீட்டுகளெல்லாம் நிரம்பிவிடும். அப்புறம் உள்ள ஊர்களில் ஏறுகிற பிள்ளைகளெல்லாம் ஓவர்லோடுதான்!
மாதாங் கோவில்பட்டியைத் தாண்டுகிற போது, பஸ்ஸ•க்குள் மூச்சுப்போக இடமிருக்காது, புளிச்சிப்பமாகப் பிள்ளைகள் திணிக்கப்பட்டு, கிட்டிக்கப்பட்டு, வியர்த்து, கசங்கி, திணறி... சில சமயங்களில் ஒன்றிரண்டு பிள்ளைகள் மயக்கமே போட்டுத் துவண்டுவிடும்.
மந்தையாடுகளைப் பற்றிக்கொண்டு வருவதைப் போல... குழந்தைகளை நகர்த்திக்கொண்டு பஸ்ஸ•க்குள் அடைத்தார். ஏஜெண்ட் தலைகளை எண்ணிப் பார்த்தார்.
''ஒண்ணு குறையுமே, யாரு?''
''ஆவுடைச்சி''
''அவதான் சடங்காகிட்டாளே, இன்னும் பானைஞ்சு நாளுக்கு வரமாட்டாளே....'' சொல்லிவிட்டுக் கண்டக்டர் அசிங்கமாகக் குறுநகை செய்தான்.
''ஆமா.... நாந்தான் அயந்துட்டேன், அப்பச் சரி.. வண்டி போகலாம், ரைட் ''ஏஜெண்ட் இறங்கிக்கொண்டார்.
டிரைவர், சாமி படங்களை - ஸ்டிரிங்கை - எல்லாம் கும்பிட்டு விட்டு ஸ்டார்ட் பண்ணினார். கிடங்கும் மேடுமான சாலையில் இடமும் வலமுமாய்ப் பஸ் ஆடியசைந்து குலுங்கும்போதெல்லாம்... சிறுபிள்ளைகள் குதூகலமாகச் சிரித்தனர். கை தட்டினர். ''ஹோ.....ஹோ'' வென்ற மழலைக் கூச்சல்கள்.
எரிச்சலில் நெருப்பாகச் சீறினார், டிரைவர்.
''ஏங் குட்டிப் பிசாசுகளா! என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு? வாயைப் பொத்திக்கிட்டுச் சும்மா கிடங்க''
சட்டென்று பஸ்ஸ•க்குள் ஏறிக்கொண்ட மௌனத்தின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல்... டிரைவர் கண்டக்டருடன் பேச்சுக்கொடுத்தார்.
ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த செல்லி, வெளியே இருட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை ''திங்கட்கிழமை'' மிரட்டிக் கொண்டிருந்தது. விலகிச் செல்லப் பாதையில்லை. வழிமறித்துக் கொண்டு நிற்கிறது. மென்னியைப் பற்றிக்கொண்டு இறுக்குகிறது.
முந்தா நாள். ராத்திரி எட்டுமணி. இலேசாகச் சாரல் தூறியது பஸ்ஸிலிருந்து இறங்கிய செல்லி, ஓட்டமும் நடையுமாய் ஓடி வீட்டுக்குள் வந்து விழுந்தாள். பேயின் இறுகலான பிடியிலிருந்து விடுபட்டுத்தாயின் மடியில் வந்து விழுந்த ஆறுதல், மனசுக்குள் சுகமான ஆசுவாசம்.
என்னமோ விசாரித்த அம்மாவுக்குக் கூடப் பதில் சொல்லாமல் மூலையில் சரிந்து உட்கார்ந்துகொண்டு விரலைச் சூப்பினாள். அதட்ட ஆளில்லாத இடம். ''நாய்களா, குச்சியடுக்காம என்ன செய்றீக? என்று கடித்துக்குதறுகிற நாய்கள் இல்லை. வீடு, தாய் மடி போன்ற வீடு. சுதந்திரமாகச் சுகமாக விரலைச் சூப்பினாள்.
அம்மாவைத் தேடிக்கொண்டு ஏஜென்ட் வந்தார்.
''யக்கா....''
''என்னய்யா. தம்பி'' தள்ளாடித் தவித்து எழுந்தாள். அம்மா.
''செல்லி ஏதாச்சும் சொன்னாளா?''
''இல்லியே... என்னமும் நடந்துபோச்சா?'' பதறிப்பதைக்கிற அம்மா ஆறுதல்படுத்துகிற ஏஜெண்ட், விரலைச் சூப்புகிற இன்பமயக்கத்தோடு பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தாள் செல்லி மனசுக்குள் பூரான் ஊர்கிற மாதிரி.... மெல்லிய திகில்.
''யக்கா இப்போ... குளோரைடு கிடைக்க மாட்டேங்குது. ஏகத் தட்டுப்பாடு. நிறையத் தீப்பெட்டியாபீஸ்க மூடிக்கிடக்கு. ஒண்ணு ரெண்டு ஆபீஸ்கள்லேதான் வேலை நடக்குது. வேலைக்கு வர்ற புள்ளைகளைக் குறைக்கச் சொல்லி எங்க மொதலாளி நச்சரிக்காரு.
வேலாயி திகிலோடு பார்த்தாள். இருமல் வரப்போவதை உணர்கிற போது மனசில் ஏற்படுமே. அதே படபடப்பும் பீதியும்!
''ஆனா.... நம்ம கிராமங்கள்லே மழை தண்ணியில்லே, வறட்சி, வெள்ளாமை வெளைச்சல் இல்லை, கூலிச் சனங்களுக்குக் காட்டுவேலை ஒண்ணுகூடக் கிடைக்கல்லே. ஆபிஸ் வேலைக்கு நாவாரேன். நீ வாரேன்னு இவுக அலைமோதுறாக.''
''நிலைமை அப்படித்தானே இருக்கு தம்பி''
''இதுலே இன்னொரு சிக்கல், ''சின்னப்புள்ளைகளை வைச்சு'' வேலை வாங்ககூடாதுன்னு ஏதோ சட்டம் இருக்காம். அப்பப்ப அதிகாரிமார்க் வந்து, புள்ளைக வேலை செய்றதைப் பாத்துட்டு, ஆயிரக்கணக்குலே அவராதம் போட்டுடுறாங்க.
''அடக் கொடுமையே! பெத்தவுகளைக் காப்பாத்தாத சட்டம், புளளைக மேலே இரக்கப்பட்டு, திங்குற சோத்துலே மண்ணைப் போடுதாக்கும்? புள்ளைகளைக் கொடுமைப்படுத்த பெத்த தாய்க்கு ஆசையாகவா இருக்கும்? வவுத்துக் கொடுமை... வறுமைப் பொழைப்பு.. வேற புகல் இல்லியே!இதையும் மறிக்கிறாகளாக்கும். பாவிப் பயக?''
ஆமாக்கா. மொதலாளி கண்டிசனாச் சொல்லிட்டாரு இந்த வாரத்தோடி. நம்ம செல்லி மாதிரியான சின்னப் புள்ளைகளையெல்லாம் நிறுத்தியாகணுமாம்.''
எதிர்பார்த்த இடி வேலாயிக்குள் இறங்கியே விட்டது. உள் மனசின் ஆழம்வரை பரவிப் பாய்கிற நடுக்கம். வயிற்றுக்குள் தீக்கோலைச் சொருகுவது போலிருந்தது.
மாடு வைத்து விவசாயம் பார்த்த புருஷன். மாட்டுக்கும் மேலாக ராவும் பகலுமாக உழைத்த புருஷன், எத்தனை விளைய வைத்தாலும், வருஷா வருஷம் மிஞ்சி நின்ற கடன்.
நிலத்தை விற்றுவிட்டுக் கூலி வேலைக்குப் போன புருஷன் கிணறு வெட்டிக் கொண்டிருந்தபோது வேட்டியில், கருங்கல்லை ரத்தமாக்கிவிட்டுப் போய்ச் சேர்ந்த புருஷன்.
நாதியற்றுப்போன குடும்பம். ஓடிவந்து பற்றிக்கொண்ட நோய், உடம்பை ஒடித்துக் கட்டிலில் துடிக்கப்போட்டுவிட்ட நோய்.
செல்லியும் வேலை பார்க்கப்போக முடியாமல் போனால் வீட்டில் எப்படி அடுப்பு புகையும்?
நெஞ்சை முட்டிப் பிளக்கிற சோகம். தாட்சண்யம் பாராமல் சப்பென்று அறைகிற அவலம். கண்ணுக்குள் குத்தலெடுக்க, மாலை மாலையாகக் கண்ணீர், உதடுகள் நடுங்கித் துடித்தன.
''தம்பி வாரத்துக்குத் தொண்ணூறு ரூவா இந்தப் புள்ளை கொண்டுவருது. இதுலேதா ரெண்டு ஜீவனோட ஜீவனம் நடக்குது. இதுக்கு ஒரு மாத்து யோசனை இல்லியா... ய்யா?
''இருக்கு... ஆனா, நீங்க செய்யணுமே?''
''சொல்லுய்யா....''
''நம்ம செல்லி சின்னப் புள்ளைதா, இருந்தாலும் சும்மாவாச்சும் தாவணியைச் சுத்தி அனுப்புங்க. மத்ததை நா பாத்துக்கிடுதேன்யக்கா. மனசிலே ஞாபகம் வச்சுக்கங்க. தாவணி போட்டா, திங்கட்கிழமை வரலாம் இல்லேன்ன.... நின்னுக்கிட வேண்டியதுதான்.''
ஏஜெண்ட் போய்விட்டார். வேலாயி வேரறுந்தவளாக அப்படியே சுவரில் சாய்ந்தாள். குத்துக்கால் வைத்துச் சரிந்து உட்கார்ந்துவிட்டால், குமுறிக்குமுறிச் சத்தமில்லாமல் அழுதாள் உடம்பெல்லாம் நடுங்கிக் குலுங்குகிற கோரம்.
''இப்படியும் ஒரு வங்கொடுமையா? அததுக்குரிய வயசு வராமெ. விரைச் சூப்புற புள்ளைக்கு எப்படித் தாவணி போடுறது? ஊரையழைச்சு, உறவைக் கூப்பிட்டு, விருந்து வைச்சு, தாய்மாமன் சீர் வரிசையோட கூடுன கூட்டத்துலே போட வேண்டிய தாவணியை சட்டத்தை ஏமாத்துறதுக்காக எப்படிப்போட? ஐயோ... எம்புள்ளைக்குமா. இந்தக் கதி? அடக்கடவுளே, எளியவங்க பொழைப்பை எதுக்கு விதி, இப்படி பிய்ச்சுப் பிடுங்கிப் போடணும்.
உள் மனசைச் சுட்டுப்பொசுக்கிற அக்கினிக் கொழுந்துகளாக நினைவுகள், நினைக்க நினைக்க உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்குகிறது... கோவென்று வெடித்து அழத் துவங்கியபோது, இருமலும் ஆரம்பித்துவிட்டது. வாடிப்போன மரத்தை ஆட்டிப்பிடுங்குகிற புயலாக, இருமல். இருமல்...இருமல்கள்....
அம்மாவின் அழுகையையும் இருமலையும் பார்க்கப் பார்க்கச் செல்லிக்குள் அழுகை, விம்மிக்கொண்டு பீறிடுகிறது. நாசி நுனி துடிக்கிறது. காந்தலெடுக்கிறது. கண்களில் ததும்பி திரைபோடுகிற கண்ணீர்....
அந்தப் பிஞ்சை, தாவணி அச்சுறுத்தியது. உள் மனசின் மெல்லிய ஜவ்வுகளைப் பற்றி இழுத்தது. நினைத்தாலே திகிலில் மனசு துடிக்கிறது.
பூப்பெய்தாத பெண்ணைக் கல்யாணத்திற்கும் உடலுறவுக்கும் நிர்ப்பந்தப்படுத்துகிறபோது ஏற்படுவதைப் போல வினோதமான அவமான உணர்ச்சி, செல்லியைக் கசக்கியது.
இயல்பாக நிகழ வேண்டிய மலர்ச்சியை. ஊர் வேஷத்திற்காகக் கசக்கிப்பிழிந்து மலர வைக்கிற வேதனை. தாயிடம் கூடச் சொல்லியழ முடியாத ரகசிய உணர்ச்சி யவஸ்தை. அவளைத் திக்குமுக்காட வைக்கிற கொடிய அவஸ்தை.
ஊஹூம்...ம் செத்தாலும் சரி... இப்ப நா தாவணி போடவே மாட்டேன். சம்மதிக்கவே மாட்டேன். என்னாலே முடியாது... முடியவே முடியாது... அதைவிட உசுரை வுட்டுருவேன்.
ஞாயிற்றுக் கிழமை கனமாய் நகர்கிறது. அந்த இரண்டு ஜீவன்களையும் மௌனச் சோகத்தில் அரைத்துக்கொண்டு நத்தையாக ஊர்கிறது.
திகிலும் பீதியுமாய்... வேதனையும் விசும்பலுமாய் வீடு. மூன்றாவது ஆளாய் வந்து உட்கார்ந்துகொண்டு போயாட்டம் போடுகிறது அவலம்.
முகம் செத்துக்கிடக்கிற மகளைப் பார்த்தாள் வேலாயி. சிறிய கண்களில் பீதி. வெட்டுண்ட பல்லிவாலாகத் துடிக்கிற இமைகள். பார்க்கவே பாவமாக இருந்தது. ''இந்த அரும்பை அடகுவைச்சா... நாம் உசுர்வாழணும்?''
செல்லியும் அம்மாவையே பார்த்தால் அம்மா, தாவ போடச் சொல்லி வற்புறுத்தினால்.. மறுத்துவிடத் தயாராக இருந்தாள். பணிந்துவிடக்கூடாது என்ற வீறாப்பு மனசுக்குள் ஒரு விறைப்பு.
''செல்லி...''
''என்னம்மா?''
''நாளை நீ வேலைக்கு போகவேண்டாம்மா...''
''...?''
''ஒன்னைக் கேவலப்படுத்தி அடகுவைக்க. மூளியலங்காரம் பண்ணி... நா கஞ்சி குடிக்க வேண்டாம். நாம உசுரு வைச்சு இருக்கவும் வேண்டாம்மா...''
''ஏம்மா?''
''பூக்க வேண்டிய அரும்பைப் புடிச்சு நசுக்கி மோந்து பாக்குற பாவத்தைச் செய்றதுக்கு, இந்தத்தாய் மனசுலே தைரியமில்லேம்மா.''
''.....''
''விதி நம்மளை எப்படி விட்டிருக்கோ... அப்படியே நடக்கட்டும். கண்ணு. நீ நாளையிலேருந்து வேலைக்குப் போக வேண்டாம்.''
தாயின் முகம் முன்னைவிடப் பிரகாசிப்பது போலிருந்தது செல்லிக்கு அந்தக் கண்களில் பொங்கித் ததும்பிய பரிவு... வறுமையில் நீர்த்துப்போகாத தன்மானம்... வாழ்க்கைக்குப் பணிந்துபோய்விடாத பாச வைராக்கியம்.....
செல்லி துவண்டு விட்டாள். மனசுக்குள்ளிருந்த விடைப்பு விறைப்பு, விறாப்பு எல்லாம் தாயின் பாசக்கண்ணீரில் நனைந்து... மனசே தளர்ந்துபோய்....
அடிபட்டவளைப் போல கோவென்று அழுதாள். புறக்கையால் கண்ணைக் கசக்கிக் கொண்டு விம்மி விம்மியழுத அந்தக் கண்ணு முழியாத பச்சை மண்ணை. மடியில் இழுத்துப்போட்டுக்கொண்டு கதறியழுதான் வேலாயி.
முத்துலட்சும் இருட்டில் வந்து கொண்டிருந்தாள். வாசலில் திகைத்துப்போய் செல்லி.
''என்ன செல்லி, வேலைக்கு வரலியா?''
''வாரேன்'' உயிரில்லாமல் முனங்கினாள்.
''தாவணி?''
''மடிச்சு கையிலே வைச்சிருக்கேன். பஸ்கிட்டே போய் போட்டுக்கணும் ''சத்தமில்லாத தெருவில், சத்தமில்லாமல் நடந்தனர்.
இழவு வீட்டுச் சங்காக அலறுகிறது தீப்பெட்டியாபீஸ் பஸ்சின்ஹாரன்.
ஒரு பிரேதத்தைப் போல... அடங்கிப் போன சலனங்களுடன் நடந்தது அந்த அரும்பு.
நன்றி : மானாவாரிப்பூ
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரும்பு, செல்லி, வேலாயி, தாவணி, வந்து, என்ன, அந்த, கண்களில், மனசுக்குள், பஸ்ஸ•க்குள், வேண்டிய, வேலைக்கு, புருஷன், வேலை, கண்ணு, ஏஜெண்ட், தம்பி, வீடு, அம்மா, முகம், இருமல், சத்தம், பற்றிக்கொண்டு, கொண்டாள், அப்படியே, டிரைவர், விரலைச், நம்ம, அம்மாவின், கண்டக்டர், வைச்சு, பிள்ளைகள், விட்டது, திங்கட்கிழமை, சாரல், போய், இந்தக், நோய், மாதிரி, போலிருந்தது, இடம், கண்ணீர், Short Stories - சிறுகதைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்