கூக்குரல்

- தமிழில் - கே.வி. ஷைலஜா
நான் குத்புதின் அன்சாரி, வயது 29. தையல்காரன். அம்மா, மனைவி, மூன்று வயதுள்ள மகள் என சுருங்கியிருக்கும் என் குடும்பம் அகமதாபாத் பாபு நகர் காலனியில் வாழ்கிறது. உங்களுக்கு என்னைத் தெரியும். நான் காற்றின் தொடக்க காலமான ஜனவரியில் பாபு நகரில் மிகவும் உயரமான கட்டடத்தின் மேலே ஏறி பட்டம் விட்டவன்.
கடையை மூடிவிட்டு இரவில் வீட்டுக்குப் போகும்போது காசிருந்தால் என் மகளுக்கு மிகவும் பிடித்தமான பாஸிலாலின் பட்டர் ஸ்காச் ஐஸ்கிரீம் வாங்குவேன். சில நேரங்களில் அமைதியாய் இருக்க வேண்டும் என்று தோன்றினால் எல்லீஸ் பாலத்தின் மேலே ஏறிநின்று நீருடனோ அல்லது நீரற்று வெறுமையோடோ இருக்கிற சபர்மதி ஆற்றைப் பார்த்துக்கொண்டிருப்பேன். நான் பார்க்கப் பார்க்க வளர்ந்த பாபுநகரின் சில பெண் பிள்ளைகள் தங்களின் திருமணத் துணி தைக்க வரும்போது, அதன் தொடர்ச்சியாக மனதில் எழும் இன்ப அலைகளை, நான் ரிலீப் ரோட்டில் பரப்பியிருக்கும் கடைகளிலிருந்து சிவப்பு கண்ணாடி வளையல்கள் வாங்கி, எங்களின் ஒரே அறையைக் கொண்ட வீட்டில் மிகவும் ரகசியம் காக்கும் கொசு வலைக்குள் என் மனைவியின் கைகளில் அணிவித்துப் பார்ப்பேன்.
மாதத் தவணையில் 14 இன்ச் டி.வி. வாங்கிய போது நான் ஏலக்காய் டீ போடுவதையும் கற்றுக்கொண்டேன். க்யோம்கி, சால்பி, கட்பஹீ“தி போன்ற சீரியல்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அம்மாவும், மனைவியும் நான் தயாரித்த டீயை நன்றி கூட சொல்லாமல் வாங்கிக் குடித்தது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. என் அம்மாவுக்கு சினிமா பார்ப்பதைவிட அதிகமான பிரியம் வெளியே சென்று தின்பண்டங்கள் வாங்கித் தின்பதில்தான் இருந்தது. வழியோரக் கடைகளில் கபாபும், கறி குருமாவும், வறுத்த கறியும், சங்கல்ப் ரெஸ்டாரண்டில் கொண்டு வந்து வைக்கும் ஃபேமிலி ரோஸ்டைப் பார்த்து என் மகள் கைகொட்டிச் சிரித்து உண்பதும், கோபி டைனிங் ஹாலில் தயிர் சேர்த்துச் செய்த தின்பண்டமும், கத்தரிக்காய், வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்த உந்தியாவுமாக சுத்த வைஷ்ணவ குஜராத்தி பட்சணமும் அம்மாவை சந்தோஷப்படுத்தும். மாதத்தில் ஒரு முறையாவது இந்த சந்தோஷத்தை அம்மாவுக்குக் கொடுக்க சீரியல்கள் இல்லாத மாலைகளில் ஆட்டோ வைத்துக்கொண்டு போவோம்.
ஆனால் நான் குத்புதின் அன்சாரி. வருங்காலத்தின் ஒரு ஞாபக சின்னமானேன். டில்லிக்கு இந்தியா கேட் போல. ஜெய்ப்பூருக்கு ஹவா மஹால் போல. கல்கத்தாவின் ஹெளரா பிரிட்ஜ் போல. பம்பாய்க்கு கேட் வே ஆப் இந்தியா போல. அகமதாபாத்திற்கு ஒரு சின்னமில்லாமல் இருந்தது. காந்தியின் சபர்மதி ஆஸ்ரமம் அகமதாபாத்தின் சின்னமாகாமல் போனதற்கு, அது அவ்வளவு எடுப்பாக இல்லாமல் போனதே காரணம். சின்னம் பிரதானமானது. சின்னமில்லாத நகரங்களுக்கு முகமில்லை.
சித்தி சையத்தின் மசூதியில் கல்லில் செதுக்கி வைத்த மரத் துண்டுகளுடன் கலந்து கிடக்கும் மர உருவம் ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் நினைவாகிப் போனது. குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாமல், அடையாளம் காண முடியாமல் போன நாட்களில் தான் நான் அதைச் செய்தேன்.
2002ம் வருடம் எப்போது இல்லாத காற்றையும் சேர்த்துதான் தொடங்கியது. வடக்கு கிழக்காக அடித்த காற்று என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தூங்கு மூஞ்சி மரத்தை அதிகமாக சப்தமிட வைத்த போது இந்த வருடம் பட்டம் விட மிகவும் தோதாக இருக்கும் என நான் நினைத்தேன்.
நான் பாய்சந்தைப் பார்க்கப் போனேன். பள்ளியில் என்னுடன் ஒன்றாய்ப் படித்தவனும், ரெயில்வேயில் வேலை செய்பவனுமாகிய பாய்சந்த்தான் எங்களுடைய ஏரியாவில் மிகவும் உயரமாகப் பட்டம் விடும் ஆள். நான் பாயிடம் ''இம்முறை தைமாத சங்கராந்தியில் உன்னைத் தோற்கடிப்பேன்'' என சொல்லியிருந்தேன். அவன் என் முதுகில் தட்டியபடி சொன்ன ''சரி செய்'' என்ற வார்த்தைகள் என்னைக் குளுமையாக்கவேயில்லை.
அன்றே நான் அயூப் பதங்க வாலாவின் கடைக்குப் போய் பிரம்பில் ஒட்ட வைத்துச் செய்த மூன்று பட்டங்களும் நூலும் வாங்கினேன். அதற்குப் பிறகுதான் அம்மாவின் வேலை தொடங்கியது.
பழைய பாட்டில்கள் விற்கும் கடையிலிருந்து பாட்டில்கள் வாங்கி அம்மாவிடம் உடைத்துக் கொடுத்தேன். நான் தைத்துக் கொடுத்த கனமான கை உறைகளைப் போட்டுக் கொண்ட, அம்மா கண்ணாடிச் சில்லுகளை வெற்றிலை இடிக்கும் சின்ன உரலில் போட்டுத் தூளாக்கினாள். அரைத்த கண்ணாடித் தூளைப் பசையுடன் கலந்து பட்டத்தின் நூலில் தடவிக் காய வைத்தேன்.
தைமாத சங்கராந்தி தினத்தன்று வானத்தில் இடமே இல்லாமல் போனது. பல வண்ணத்தில் பறந்த பட்டங்களின் கூட்டத்தால் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரன கபூத் பாஜ் அசன் ஷேக்கின் வீட்டுப் புறாக்கள் அன்று கூட்டிலேயே முடங்கிக் கிடந்தன.
என்னை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பிக்கும் இளம் பச்சை நிற கண்களைக் கொண்ட வானத்தின் மேலே வாயு மண்டலத்தில் சுழலும் காற்றின் ஆதியைத் தேடிக் கொண்டிருந்தேன். சட்டென ஆகாயத்தில் நான் பார்த்த ஒரு பருந்து கறுப்புப் பொட்டு பட்டக் கயிற்றை ஒரு முறை உலுக்கிவிட்டது. என் பட்டம் பருந்தைத் தாங்கி நிற்கும் வாயுவின் சுழலுக்குள் நகர்ந்தது. பிறகு அது தானாகவே உயரே போகத் தொடங்கியது. மனசு நிராதரவாய் போக ஆரம்பித்தது. உயரத்தின் நடுக்கம் என்னைப் பாதிக்க ஆரம்பித்தபோது நான் நூலைத் தளர்த்திப் பட்டத்தை லேசாக்கினேன். அன்றைக்கு எங்கள் ஏரியாவில் மிக அதிக உயரம் பட்டம் விட்டவன் நானாகத்தான் இருந்தேன்.
நான் பட்டத்தைக் கீழே இறங்கினேன். இனி தான் சண்டையே தொடங்கும். முதலில் நான் கிழித்து எறிந்தது பாய்சந்தின் பட்டத்தைத்தான். கண்ணாடிப் பசை பூசிய என் பட்டக் கயிற்றில் வெயில் பட்டபோது வாளின் அலகுபோல ஜொலித்தது. நான் மைதானத்தில் ஓடிக்கொண்டே போய் பல பட்டங்களின் கயிற்றையும் அறுந்தெறிந்தேன். அப்போதுதான் பிந்தியா என் சட்டையைப் பின்னால் பிடித்து இழுத்தபடி சொன்னாள்.
''பர்ஜி சாச்சா என் பட்டத்தை அறுக்க வேணாம்.''
பிந்தியா பிறந்தபோது அவளுக்குப் பெரிய பின் போட்டுக் குத்தப்பட்ட நாப்கினைத் தைத்து கொடுத்தது நான்தான். பிறகு சின்ன கவுன்கள். ஃப்ராக்குகள். இப்போது பாவாடை சட்டையும் கூட என் அளவுகள் குறிக்கும் புத்தகங்களினூடாக அவள் வளர்ந்து வளர்ந்து இதோ பன்னிரெண்டு வயதில் நிற்கிறாள்.
''நான் அறுப்பேன். போட்டிக்கு வரலேன்னா நீ ஏன் மைதானத்துக்கு பட்டத்தை எடுத்திட்டு வாறே.''
நான் கேட்டபோது பிந்தியா எனக்குப் பட்டத்தின் கதையைச் சொன்னாள். பட்டமென்றால் பெண் குழந்தைகளுக்குக் காதலன். ஆண் குழந்தைகளுக்குக் காதலி. கயிறுதான் அவர்களின் காதல். அது அறுத்தெறியப்படும்போது காதல் உடைபடுகிறது. கயிறு அறுந்த பட்டத்தை மீண்டும் மீட்டு எடுக்கும்போது அது புனர்ஜென்மம். அதனால் பிந்தியா என்னிடம் சொன்னாள்.
''பாஜி சாச்சா ஒரு போதும் என்னுடைய கயிற்றை அறுத்தெறிய வேண்டாம்.''
நான் சிரித்தேன். அவள் திரும்பவும் சிரித்தபோது உதட்டுக்குப் பக்கத்தில் விழுந்த குழிகள் பொய்யாய் கவலைப்பட்டதையும் பார்த்தேன்.
வீட்டுக்குத் திரும்பி வரும்போது என்னைச் சுற்றியும் மகர ராசியில் காதலும் காமமும், மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் சந்திப்புகளுமாய் தொடர்ந்த வண்ணம் இருந்தது.
என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனான அசன் ஷேக் மொட்டை மாடியிலிருக்கும் தனி அறையில் புறாக்களுக்கிடையில் தங்கியிருந்தான் கீழ்போர்ஷனில் வாடகைக்கிருப்பவர்கள் தரும் பணத்தை வைத்துக் கொண்டு ஷேக் புறாக்களுக்கு தீனி வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தான். நடுவில் ஆக்ராவிலோ, டெல்லியிலோ போய் ''சிக்கந்தரி,'' ''காபூளி'' போடற உயர் ஜாதிப் புறாக்களை வாங்குவார்.
அசன் கை தட்டினால் புறாக்கள் மாடியின் பல பாகங்களுக்கும் பறந்து, வானத்தில் போய் ஒன்றாய் குழுமி, தூரமாய் பறந்து, விமானம் திரும்புவதுபோல சாய்ந்து சாய்ந்து திரும்பி, மீண்டும் வளைந்து மாடிக்கு வந்து சேரும். லாவகமாகச் சுழன்று ஆடும். நர்த்தகியின் உடை வட்டமிடுவது போல அப்புறாக்கள் ஒரு முறை சுழன்று தான் மாடியில் இறங்கும். புறாக்களின் சிறகசைப்பும், உடல் குலுக்கமும், பொட்டுப் பொட்டாய் கண் சிமிட்டி வீட்டிற்குத் திரும்பி வருவதின் சந்தோஷமும் பார்த்து என் மகள் எப்போதும் கைதட்டிச் சிரிப்பாள். அவள் கைகளில் அமர்ந்து மட்டுமே தீனியைக் கொத்தும் அனுமதியைப் புறாக்களுக்கு அசன் ஷேக் கொடுத்திருந்தார்.
பிப்ரவரியிலேயே அடைகாத்து உட்கார்ந்த புறாக்கள் ஏதோ நடக்கப் போவதை முன் கூட்டியே தெரிவித்ததாய் அசன் ஷேக் சொன்னார். புறாக்கள் எத்தனை முறை கை தட்டினாலும் வெளியே பறந்துபோக மறுக்கின்றன. ஏதோ நடக்கப் போகிறது.
அன்றே கோதுமை மாவும், கடலை மாவும், பருப்பும், உருளைக்கிழங்கும் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன். கேஸ் சிலிண்டர்கள் மட்டும் கிடைக்கவில்லை. என்னுடைய பதட்டத்தைப் பார்த்து அம்மாகூட திட்டினாள்.
''நீ என்ன பைத்தியக்காரத்தனமாக என்னென்னவோ செய்யறே. இது விலை அதிகமாயிருக்கும் காலம். இப்போ போய் எல்லாத்தையும் வாங்கி வைக்கிறயே. அகமதாபாதிகளும் குஜராத்திகளும் கருணை உள்ளவர்கள். சைவர்கள் பாபுஜியின் ஆட்கள், ஒரு எறும்பைக் கூட நோகடிக்காமல், ஜீவராசிகள் ஏதாவது இருக்குமா என்று தரையையே பார்த்து நடக்கும் ஜைனர்கள். அவங்க கடவுள் யாரு? பகவான் ரஞ்ஜோத் யுத்தத்தில் பங்கு கொள்ள மறுத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அந்த பைத்தியக்காரன் பொண்டாட்டி புள்ள இல்லாத புறா வளக்கிறவன் ஏதோ சொன்னான்னு ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கற.''
அம்மா சொன்னது சரிதானென்று எனக்குத் தோன்றிய ஒரு நாள் இரவுதான் பாய்சந்த் என் வீட்டுக் கதவைத் தட்டினான்.
''குத்புதீன்..... '' பாய்சந்தால் மூச்சு விட முடியவில்லை.
''நான் வேலையை முடிச்சிட்டு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேரா இங்கு வரேன். பரோடாவுக்குப் பக்கத்தில் கோத்ரா ஸ்டேஷனில் வெளியில் ஒரு போகி கொளுத்தறாங்க. குத்புதின், நம் கிளாசில படிச்சாளே சாந்திபென் எப்பவும் கணக்கில் ஃபஸ்டா வருவாளேடா. அவளும், அவ புருஷன் கொழந்தை எல்லாம் செத்திட்டாங்க. டவுன்ல மைக் வைச்சிட்டாங்க. அயோத்தியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த சாந்தி பெண்னைப் போன்ற ராமபக்தர்களைக் கொன்று கோத்ரா அவுட்டரில் குடியிருக்கும் உன் மதத்துக்காரர்களுக்கு எதிராக .... எனக்கு பயமாக இருக்கிறது....''
அசன் ஷேக்கின் புறாக்கள் சொன்னது சரி.
''நான் வரும் வழியிலேயே விரேன் ஷாவின் டாடா சுமோவை புக் பண்ணிட்டேன். நானும் ஆஷாவும் குழந்தைகளும் உதய்ப்பூரில் இருக்கும் அண்ணன் வீட்டுக்குப் போகப்போறோம். குத்புதீன் நீ என்ன செய்யப்போற? இங்கேயிருந்து கிளம்பிடு. இதைச் சொல்லத்தான் நான் இப்ப ஓடிவந்தேன். வரேன் பார்க்கலாம்.''
நான் ரொம்ப நாட்களுக்குப் பிறகு அம்மாவின் முகத்தில் பயம் படருவதை உணர்ந்தேன். இன்றைய இரவு என் மகளைத் தவிர யாரும் தூங்கவில்லை. மறுநாள் காலையிலும் நான் வாசல் கதவோ ஜன்னலோ திறக்கவில்லை. அவசரப்பட்ட மகளுக்காக நான் பின் கதவைத் திறந்து கொடுத்தேன். அவள் மண்ணை வாரி விளையாடத் தொங்கினாள். சிறிது நேரத்தில் ஏதோ சப்தம் கேட்பதை உணர்ந்தவுடனேயே நான் காதைக் கூர்மையாக்கினேன். என் மகள் ஒரு புறாவைப் பிடித்தபடி உள்ளே வந்தாள்.
''அழகாயிருக்கு இல்ல புறா''
அவள் என் கையில் கொடுத்த புறா கழுத்து முறிந்து இறந்து கிடந்தது. நான் வெளியே எறிந்தபடி பார்த்தபோது அசன் ஷேக்கின் உரத்த சப்தம் கேட்டது.
''அய்யோ என் புறாக்கள்''
திடுக்கிட்டுத் திரும்பியபோது கலகக்காரர்கள் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த அசன் ஷேக்கினைத் தான் நான் பார்த்தேன். பிறகு அவர்கள் என் வீட்டிற்கே வந்துவிட்டார்கள். அவர்கள் என் வீட்டைச் சுற்றியும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தார்கள். மூடி பிடுங்கப்பட்ட சிலிண்டர்களைத் தீயில் எறிந்தபோது அதில் என் அம்மாவும் மனைவியும் மகளும் மூலைக்கொருவராய் சிதறிப்போனார்கள். எப்படி என்றே தெரியாமல் பின் வாசல் வழியாக ஓடிப்போனேன். வெளியே வந்தபோது மண்ணெண்ணெய் பாட்டில்களும், பெட்ரோல் கேன்களும், வாட்களும், கோடாலிகளுமாக என்னைச் சுற்றி நின்றவர்கள் நம்மைப் போலவே மனிதர்களாக இருந்தார்கள். அவர்களின் இடுப்பின் பருமன் என்னுடைய அளவுக் குறிப்பேட்டில் பதிவாகியிருந்தது. நான் தைத்துக் கொடுத்த உடைகள் அணிந்த பெண்கள் என்னடைய மனைவியுடன் ''கோன் கியோம் கீ சாஸ்பீ கபி பஹீதி'' என சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத ஆட்கள் வாட்களும் சூலங்களும் போர்டுகளுமாகக் காட்சியளித்தார்கள். அவர்கள் கையிலிருந்த போர்டுகள் சொன்னது.
''முஸ்ஸிம்களின் கடைகளிலிருந்து எதையும் வாங்காதே''
நான் என்னடைய பச்சைக் கண்களுக்கு நடுவில், ப்ரியத்தை இழுத்துப் பூட்டி விட்டு கருங்கல் சீழ்பிடித்து நிற்கும் பிந்தியாவைப் பார்த்தேன். அவளுடைய அம்மாவின் கையில் அரிவாள் இருந்தது. நான் அங்கே குழுமியிருக்கும் ''ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ்''காரர்களிடம் என்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சினேன். அப்போதுதான் ஒரு துப்பாக்கியின் ஸேப்டி காட்ச் மாற்றும் சப்தம் கேட்டது. சட்டென நான் திரும்பிப் பார்த்தபோது ஒரு தங்க முடியுள்ள வெள்ளைக்காரன் கேமராவை கிளிக் செய்வதைக் கவனிக்க முடிந்தது.
ம்... பிறகு நடந்ததை நீங்கள் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். குத்புதின் அன்சாரியையும் குடும்பத்தையும் வெறித் தாக்குதலோடு சுற்றி வளைத்திருந்தார்கள். அந்த ஆள் போலீஸ்காரர்களிடமும் RAF காரர்களிடமும் தன்னுடையதும் தன் குடும்பத்தினுடையதும் உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சினான். மாலை ஆறு மணிவரை நீண்டு கொண்டிருந்த இந்த அக்னிப் பரீட்சை முடிவுக்கு வந்தது. மிலிட்டரி வந்தபோது தான். மிலிட்டரிக்காரர்கள் அவர்களுடைய ட்ரக்கில் என்னை ஏற்றிக் கொண்டு என் வீட்டிற்குப் போனார்கள். இடிபாடுகளுக்கிடையில் என் அம்மாவையும், என் மனைவியையும், மகளையும் கண்டு பிடித்தார்கள், எங்களை ஷா அலம் முகாமில் கொண்டு போய்விட்டார்கள்.
ராய்ட்டரின் புகைப்படக்காரர் எடுத்த என் படம் பத்திரிகையில் வந்தது. பார்வை நிலைக்காமல் அலை பாய்ந்த என் கண்ணில் பச்சை நிறம் இருண்டு போக, நிறைந்த கண்ணீருமாய், ஈரமான பத்திரிகைத் தாளில் உறைந்துபோன என் கூக்குரலும், கைகூப்பியவாறு நான் கேட்கும் மன்னிப்பும் சமீபித்திருக்கும் மரணத்தை உங்களுக்குத் தத்ரூபமாக்கியிருக்கும்.
நான் அகமதாபாத்தின் சின்னமானேன்.
நான் சின்னமான சாலையின் இருபுறமும் பிணங்கள் கிடந்தன. உயரமான கட்டிடங்கள் எரிவதால் வானத்தில் கரும்புகை படர்ந்திருந்தது. அவற்றின் இடையிலான நான் இதுவரை காணாத பருந்துக் கூட்டங்களைப் பார்த்தேன். வழி நெடுகிலும் பள்ளிக் குழந்தைகளின் பாதி எரிந்த சிவப்பு ரிப்பன்கள் கிடந்தன. பெண்களின் ரத்தம் தோய்ந்த உள்ளாடைகள், கிழித் தெறியப்பட்ட பாடப்புத்தகங்கள். உடைந்த கண்ணாடி வளையல்கள். பாதி எரிந்த குடும்ப ஃபோட்டோ ஆல்பங்கள் சுவர்களில் முஸ்லீம்களின் கடைகளை பகிஷ்கரிக்கச் சொல்லும் விளம்பரங்கள், தலைபோன பொம்மைகள், வின் ஸ்கிரீன் உடைந்து பாதி எரிந்த கார்கள், தீ அணைந்து தீராத சைக்கிள் ரிக்ஷாக்களின் குவியல்கள், திறந்து வயிற்றிலிருந்து உருவின் குடல்போல வெளியே இழுத்தெறியப்பட்ட அனுமல்லிக்கினுடையதும், பங்கஜ் உத்தாஸினுடையதும் ஆடியோ கேஸட்டுகள், அதிகம் அடி வாங்கிக் கொடுத்த மார்க் குறைந்த ரேங்க் கார்டுகள், பட்டங்கள், கிழித்த பட்டங்கள் .... மிதித்து நசுக்கப்பட்ட பட்டங்கள்... கயிறு அறுந்த பட்டங்கள்.
நான் பட்டங்களைப் பார்ப்பதில்லை என்று தீர்மானித்தாலும் அவை எல்லா இடங்களிலும் ப்ரத்யட்ச்மானது. அம்மா அடிக்கடி சொல்வதை யோசித்துப் பார்த்தேன். ''நீ அன்சாரி, மோமின், தையல்காரன், ஒரு போதும் உன் கைகளால் நூல் அறுக்கப்படக்கூடாது.''
ராய்ட்டரின் புகைப்படக்காரல் நூலறுந்த நகரத்தின் பதிவாய் என்னை ஆக்கியிருந்தார். மறுவாழ்வு இல்லத்தின் பெண்கள் பகுதியில் தனியாய் வாழும் என் குடும்பத்தை நான் பார்க்கவில்லை. நான் இரவு பகலாய் நடந்தேன். எதை எதிர்பார்த்தென்று தெரியாமல் நடந்தேன். என் யாத்திரைக் கிடையில் மண்ணில் ஏதோ மின்னுவதை உணர்ந்தேன். அது ஒரு உடைந்த கண்ணாடித் துண்டாக இருந்தது. அதன் மேலே ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருந்தது.
நான் என்னுடைய முகத்தைப் பார்த்து ஐந்தாறு நாட்களாகியிருந்தது. முகத்தில் சின்ன சின்னதாய் ரோமங்கள் படர்ந்திருந்தன. கண்களில் முழுமையாய் பயம் போகவில்லை. நான் மறந்துபோன ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும்போல இருந்தது. ''அது சிரிப்பு'' எத்தனை முறை முயன்றபோதும் முகம் விகாரமான தேயல்லாமல் சிரிக்க முடியவில்லை. பக்கவாதக்காரனை உருவி விடுவதுபோல என் கன்னத்தையும் வாயைச்சுற்றியும் அழுத்திவிட்டேன். அப்போதுகூட என் பிரதிபிம்பம் சிரிக்கவில்லை. என் முகத்தின் ரத்த நாளங்கள் தளர்ந்து கிடந்தன.
நன்றி: உயிர்மை
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூக்குரல், நான், அசன், பிறகு, என்னுடைய, புறாக்கள், போய், வெளியே, அவள், தான், பார்த்தேன், மிகவும், பார்த்து, பட்டம், பட்டத்தை, ஷேக், பட்டங்கள், திரும்பி, பிந்தியா, முறை, கிடந்தன, கொடுத்த, மகள், கொண்டு, அம்மா, மேலே, குத்புதின், மீண்டும், சொன்னாள், வீட்டுக்குப், பின், அன்சாரி, பாதி, எரிந்த, சப்தம், சொன்னது, புறா, வாங்கி, கொண்ட, போட்டுக், சின்ன, வைத்த, அம்மாவின், இருக்கும், தொடங்கியது, வானத்தில், அகமதாபாத்தின், வந்து, என்னை, செய்த, ஷேக்கின், இல்லாத, பக்கத்தில், Short Stories - சிறுகதைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்