முப்போகம்

- சிவகுமார் முத்தய்யா
பெரியவனே... ஆங்காரமாய் கத்தினாள் கிளியம்மா. ஒன் காதுல என்ன இடியா வுழுந்துட்டு. இப்படி கருங்கல்லாட்டம் உட்கார்ந்து கெடக்கே தெரு மதகிலிருந்து எழுந்தான்.
அவள் குரல் வந்த திசையைப் பார்த்தான்... அம்மா கிளியம்மா வந்து கொண்டிருந்தாள்... புடவை சுருட்டி இடுப்பில் கொசுவமாக சொருகியிருந்தாள். கோபம் எழுந்தது.
வேகமாய் நடந்து வந்தவள் இவனை வெறித்துப் பார்த்தாள். இவன் முகம் கோபத்தில் இருப்பதை பார்த்தும் அவளுக்கும் கோபமாகியது. நல்லது சொன்னாலும் கெட்டது சொன்னாலும் ஒனக்குப் புரியமாட்டங்குது, கல்யாணம் காட்சின்னு பண்ணி எப்படி குடும்பம் நடத்தப் போறேன்னு தெரியல போ... அந்த தாழைக்குடி செல்லியம்மன்தான் ஒன்னக் காப்பாத்தனும்
இவளுக்கு மேலும் கோபம் அதிகமாகியது.
சின்னவன் வயல் பக்கம் போய் மாட்டுக்கு புல் அறுத்துக் கொண்டு வந்திருந்தான்.
படிச்சிட்டா போதுமா? எல்லாமும் தான் கத்துக்கனும் ராசா? வயலப் போயிப் பாரு தண்ணியில்லாம? எல்லாம் கருக்கிட்டு இருக்கு சற்று அழுத்தமாகவே இதைச் சொன்னாள்... குரல் கம்மியிருந்தது. அந்தி குறைந்து கொண்டிருந்தது.
உங்கப்பனைப் பாரு ஒண்டியா கெடந்து தடுமாறுராரு... ஊருல்ல.. இரத்தத்தை மாத்தி தண்ணிய பாய்ச்சுறாங்க. நீங்க கொஞ்சம் அவருக்கு ஒத்தாசையா இருக்கலாம்முல்ல சமீப காலமாக அவள் பேச்சு இவனுக்கு கோபத்தைத் தவிர வேறெதுவும் தருவதில்லை. கொஞ்ச நாளாவே அவள் பேச்சு முற்றிலுமாக பிடிப்பதில்லை... அம்மாவை... சின்னவன் சத்தமிட்டு அழைத்தான்.
இவன் வயல் பக்கம் வேகமாக நடக்கத் தொடங்கினான். பயிரை காப்பாற்ற ஆற்றிலிருந்த இஞ்சின் வைத்து குழாய் போட்டு தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆற்று மடுவில் தேங்கி கிடக்கும் நீரை இப்படித்தான் கொண்டு வர முடியும். அதிகம் நிலம் உள்ளவர்கள் மட்டுமே இஞ்சின் வைத்திருக்க முடிந்தது. சிறு விவசாயிகள் இத்தனை காலமும் மழையையும், ஆற்று நீரையும் நம்பிதான் சாகுபடி செய்தார்கள். ஆனால் இன்று பருவம் தவறிவிட்டது. மழை காலங்களில், பெய்ய வேண்டிய மழை எங்கே போனது. மனிதர்கள் மழையை விரட்டினார்கள். இந்த பிரதேசம் எங்கும் காடுகள் இருந்தன. அவற்றையெல்லாம் இரண்டு பெரும் புயல்கள் அழித்தன... என்றால் மனிதர்கள் அவர்கள் பங்குக்கு வெட்டினார்கள். பெரும் மரங்களை வீழ்த்தினார்கள். அப்பா பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு மழை கால இரவில் இனிமே மழை தண்ணியெல்லாம் சரிபட்டு வராது என்றது இதை தானோ...?
அப்பா தெருமுனையில் இருக்கும் மதகில் அடிக்கடி உட்கார்ந்து வானத்தை பார்ப்பது ... சுருட்டு புகைக்குள் ஒளிந்து போவது... துளிர்விடும் மூங்கில் குருத்தை பார்த்துக் கொண்டிருப்பது... மாட்டின் கழுத்தை வருடி கொடுப்பது... எல்லாம் எதற்காக? என்று நினைத்துக் கொண்டான். சூரியனை பார்த்தாள் வட்டமாய் சுருங்கிக் கொண்டிருந்தது... வரப்பில் நடக்கையில் பொறுக்குகள் குத்தின... நடக்கையில் ஏற்பட்ட அந்த துள்ளல் எதனால்? சூரிய காட்சி ஏற்படுத்திய ஆனந்தமா? இல்லை எதிரே புல் அறுத்துக் கொண்டு வரும் அமுதா ஏற்படுத்திய கிளுகிளுப்பா...?
அமுதா இவனோடு ஐந்தாம் வகுப்பு வரை படித்தாள். இவனுக்கு அடிக்கடி வீட்டுப் பாடம் எழுதிக் கொடுப்பாள். நன்றாக படிப்பாள். அவளை படிக்க வைத்து இருந்தால் இவள் வாழ்க்கை மாறியிருக்கக் கூடும். இவள் அப்பா வேளாங்கன்னிக்கு போனவர் திரும்பி வரவில்லை. தொலைந்து போயிருக்க வேண்டும் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். குடும்ப வறுமையை போக்க... அம்மாவோடு வயல் வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. இன்னும் இல்வாழ்க்கை குறித்து சிந்தித்து இருக்கவில்லை போலும். இவள் வயசுக்கு இளைய பெண்கள் எல்லாம் திருமணம் முடித்துப் போய் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவள் மட்டும் தன் குடும்பத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டிருக்கிறாள்.
இவனோடு கொஞ்சம் கனிவாக பேசுவாள் மற்ற ஆம்பளைகளோடு அவள் பேசியதை இவன் பார்த்தது இல்லை. இவனோடு சிநேகம் கொள்வதில் அவளுக்கும் விருப்பம் தான் என்பதை பல தருணங்களில் உணர்த்தி இருக்கிறாள்.
பெரிய புல் கட்டினை மிக அசாத்தியமாக தூக்கிக் கொண்டு வந்தாள். எப்பொழுதும் பெயர் சொல்லி அழைக்கக் கூடியவள் இன்று ... ந்தே... என்றாள்.
இவனுக்கு சிரிப்பு வந்தது அடக்கமுடியாத சிரிப்பு... ஹ’... ஹ’.... ஹ’...
பல்லு மட்டும்தான் இளிக்க காத்தருக்கே
வேற என்னச் செய்ய சொல்றே அமுதா...
ம் என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள்.
நிறைய பேச ஆசைதான். போய்க் கொண்டிருக்கிறாளே என்ன செய்ய...? கொஞ்ச நேரம்... நடக்கும் பொழுது அவள் பின்னழகு அசைவதை ரசித்தான்.
சூரியன் மேலும் சுருங்கி சிறுவட்டமாய்... ஒளிர்ந்து கொண்டிருந்தது இன்னும் சில நிமிடங்களில் மறைந்து விடலாம். கடந்து சென்ற பின்பு அவள் குறித்தான சிலிர்ப்புக்களை மீண்டும் எழுப்பிக் கொள்ள முடியவில்லை என்ற பிறகு வயல்வெளி மிகுந்த வெக்கையை எழுப்பியது.
இந்த கார்த்திகை மாதத்தை கால் கோடை என்பார்கள். அது எல்லாம் பொய் ஆகி முழு கோடை காலமாய ஆகிவிட்டிருக்கிறது.. பெய்ய வேண்டிய மழை யெல்லாம் எங்கே போயிற்று...? ஒரு மாபெரும் தோட்டம் தொடங்கப்பட்டு விட்டது... நட்ட பயிர் வளராமல்... இட்ட விதை முளைக்காமல்... வயல்வெளி பச்சை நிறத்தை இழந்து... மனிதர்கள் மகசூலை இழந்து... எவ்வளவு காலம் வாழ்வது? மனம் இறுக்கம் அடைந்து வரப்பில் உட்கார்ந்தான். மனம் எழுந்து பின்னோக்கி ஓடியது.
இரவில் தெரு பெரிசுகளும், அப்பாவும் கதை கதையாக சொல்வார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு ஊரில் எப்படியெல்லாம் மழை பெய்தது. பத்து வயது சிறுவனாக இருந்தபொழுது இடைவிடாத மழை... ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வயல்களில் இருந்த பயிர்கள் வெள்ளத்தில் வயற்காடு முழுமையும் நீர்பரப்பு சூழ்ந்து கிடக்கிறது. தெருவில் வெள்ளம்... சாலையில் வெள்ளம்... மழை வலுக்கத் தொடங்கினால் மனிதர்கள் எல்லாருக்கும் நடுக்கம் எடுக்கத் தொடங்கி விடும். ஆற்றில் கூடி கரைகளை பலப்படுத்திக் கொண்டு தடுப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். வெள்ளம் குறைய பறையடிப்பார்கள். காவல் தெய்வம் ஈட்டி மாணிக்கத்துக்கு முக்கால பூசையும், சிறப்பு பூசையும் செய்வார்கள். வெள்ளம் குறைய பறையடிப்பது என்பது இங்குள்ள தொன்மையான மரபு. நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளம் எடுக்கும் காலங்களில் பறையடித்தே... வெள்ளம் குறைத்தோம்" என்பார்கள். ஆடி மாதம் வரை நீர் வற்றாது குளங்களில் ஊரிலிருக்கும் ஐந்து குளங்களும் வற்றாத ஜீவநதியாகவே கருதினார்கள்.
ஆற்றில் படுகையில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டிருப்பார்கள் வெட்ட வெட்ட வந்து கொண்டே இருக்கும். படுகையில் நிறைந்திருக்கும் வண்டலில் அப்படியொரு உரம்... வண்டி வண்டியாக வெட்டுவார்கள். வெளியூர் வியாபாரிகள் வந்து மலிவு விலைக்கு வாங்கிப் போவார்கள். இப்பொழுது ஆற்றுப் படுகையில் காரை செடிகளும் கருவையும் வளர்ந்து கிடக்கிறது. மக்கள் அதை கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள்.
குறுவைக்கான வேலைகள் வைகாசியிலேயே தொடங்கினால்... ஆடியில் விதையிடல் புரட்டாசியில் அறுவடை... பிறகு சம்பா வேலைத் தொடங்கும்... தையில் அறுவடை தாளடிப் போட்டால் பங்குனியில் அறுவடை... 'தாளடி' போட விரும்பாதவர்கள் உளுந்து பயிறு விதைப்பார்கள். இப்படியான தொடர் உழைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் சித்திரையில் தான் ஊர் கோவில் திருவிழா இந்த ஒரு மாதம் மட்டும் தான்... கூத்து கும்மாளம்... ஓய்வு என்றும் கழியும்... மற்ற நாட்கள் இடைவிடாத உழைப்பு....
சூரியன் மறைந்து விட்டிருந்தது. மெல்லிய வெளிச்சம் நிரம்பியது. பூச்சிகள் ஓசை காற்றில் கலந்தது. வானத்தைப் பார்த்தான் நிலவு கிழக்கே தெரிந்தது. பௌர்ணமி வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. இன்று நிச்சயம் முழு நிலவு வரும்.
பனைமரங்கள் பெரிய வாய்க்கால் கரையில் வரிசையாய் ஒழுங்கு குறையாமல் நிற்பது இவனுக்கு பிடிக்கும். காற்றில் லேசாக தலையை ஆட்டின. வயல்வெளிகளை பார்த்தான்... பச்சை நிறம் மங்கிய நிறத்தில் பழுப்பு நிறம்... படர்ந்து கொண்டிருந்தது. பயிர்கள் மிகுந்த துயரத்தோடு கதறிக் கொண்டிருப்பது போல தோன்றியது. மனசு வலிக்கத் தொடங்கியது. வரப்பிலிருந்து வயலில் இறங்கினான். பாளம் பாளமாய் வெடித்து பொறுக்குகள்.. உடைந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டே நாள் இது நீடிக்குமானால் சாம்பல் தான் மிஞ்சும் தங்களுடைய ஆறு 'மா'வும்... கருகிவிடதான் காத்திருக்கிறதா? இது நாள்வரை வசதியானவர்கள் ஆற்றிலிருந்து நீர்க் கொண்டு வருகிறார்கள். நம்ம கதி?
பயிர்கள் மிகுந்த கவலையோடு வானத்தைப் பார்த்து நீயாவது கருணை செய் வேண்டுவது என்பது போல... தோன்றியது.... கொஞ்சம் தண்ணீர் விட்டால் போதும் உள்ளேயிருந்து கதிர் வந்துவிடும். கதிர் விடும் பக்குவத்தோடு நிற்கிறது.
நடக்கத் தொடங்கினான் வயலுக்கு வரும் கண்ணியின் கரையில் நடந்தான். அது பெரிய வாக்காலில் கலந்தது. அதிலிருந்து பிரிந்து தான்... வயலுக்கு பாய்ச்சல். இதுதான் இந்த பக்கத்துல வயல்களுக்கு பாசன கண்ணி. பெரிய வாய்க்கால் வற்றி ஈரம் உலர்ந்து விட்டது... தலைக்கு மேலேயிருந்து ஏதோ ஒலி கேட்டதும் வானத்தைப் பார்த்தான். மடையான்மகள் அணிவகுத்து பறந்தன. பெரிய வாக்காலிலிருந்து பிரியும் இன்னொரு கண்ணி' பெரிய குளத்துக்கு நீர் விடவும். அதில் வழியில் இருக்கும் வயல்களின் பாசனத்துக்கும் பயன்பட்டது. இப்போது அவன் பெரிய குளத்துக்கு போகும் கன்னிக்கரையில் நடந்தான். குளத்தை மூன்று பக்கமும் சுற்றி நீண்ட திடல்... அதை சூழ்ந்துள்ள மரங்கள்.... மரத்தில் இரவை கழிக்க கொக்குகளும், மடையான்களும் உட்கார்ந்திருந்தன. ஒரு கொன்னை மரத்தில் கொக்குகள் அடர்த்தியாய் உட்கார்ந்து இருப்பது ஒரு விதமான லகிரியை ஏற்படுத்துகிறது. குளத்தினை பார்த்தான். சலனம் அடையாள நீர்பரப்பு. அல்லி செடிகள் படர்ந்து கிடக்கின்றன. அல்லி பூக்கள் இரவில்தான் பூக்கும் என்பார்கள். விண்மீன் ஒளியில் தாளைகள் மலரும் என்றும் சொல்வார்கள். வெய்யிலில் உலர்ந்திருந்த பூக்கள்... லேசாக இதழ் விரிக்கத் தொடங்கியிருந்து, கண்ணி குளத்தோடு நிறையும் இடத்தில் ஒதியன் மரம் நின்றது. இலைகள் உதிர்ந்து வெறும் உடம்பாய் காட்சியளித்தது.
மரத்தை பார்த்த அடுத்த கணமே சட்டென்று அவனுக்குள் வெளிச்ச புள்ளிகள் மின்னின. மீண்டும் ஒரு தடவை பார்த்தான். வேகமாக நடக்கத் தொடங்கினான். இருட்டு பூசினாற் போலிருந்தது. நிலவு கிழக்கில் லேசான வெளிச்சத்தோடு வந்து கொண்டிருந்தது. பூசினாற் போலிருந்த இருட்டில் வெளிச்சம் குறைவான நிலவின் ஒளி இணையும் போது ஒரு விதமான மங்கிய ஒளியும் அல்லாத இருட்டும் அல்லாத ஒரு விதமான வெளிச்சம் நிரம்பியது.
ஊரில் கால்நடைகளுக்கு கோமாரி வந்து விட்டது. ஏழெட்டு மாடுகள் பலியாகிவிட்டது. இருக்கின்ற மாட்டை காப்பாற்ற வேண்டும். மாடுகளை சிவன்கோவில் குளத்தில் வண்டல் கும்பியல் நிறுத்தியிருக்கிறார்கள். கால்களில் புண்களாகி அதிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. ஆடுகள் இந்த நோய் கண்ட அடுத்த மணி நேரத்துக்குள்ளே உயிரோடு கறிகடைக்காரனிடம் வந்து விட வேண்டும். இது போன்ற மாதத்தில் நோய் வருவது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தடுப்பு மருந்துகள் போட்டிருந்தால் தடுத்து இருக்கலாம்.
தென்னந்தோப்பில் நுழைந்தான். நீர் பற்றாக்குறையால் மரங்கள் காய்ந்து வதங்கியிருக்கிறது. தேங்காய் மகசூல் மொத்தமும் காலி. ஆசையாக அம்மா போட்டிருந்த டிசம்பர் பூக்கள் செடிகள் இனி பூக்காமல் போகலாம். ஏற்றம் இறைக்க தேவையான மிதி மரம், பாலாடை மரம், சால், ஏற்ற மரம் போன்றவை. மூங்கில் கொட்டகையில் இருக்கிறது. அப்பா கொண்டு வந்து இங்க வைத்திருக்கிறார். இவையனைத்தையும் மிக சிரமத்தோடு,
இரண்டு தோளிலும் மிகுந்த நுட்பத்தோடு தூக்கி வைத்துக் கொண்டு வேகமாக நடந்தான்... நிலவு அடர்த்தியான வெளிச்சத்தை பரப்பத் தொடங்கியது. அந்த பெரிய குளத்து ஒதியன் மரத்தில் இவற்றை பொருத்துவதற்கு கயிறு வேண்டும். கைக்கு ஒரு அரிவாள்... மண் எடுத்துப் போட மண்வெட்டி, இதைவிட வயிற்றுக்கு கொஞ்சம் சோறு....? குளத்தில் மரத்துக்கு கீழே போட்டான். நிலவு நிர்மல்யமான முறையில் ஒளிர்ந்தது.
மணி ஒன்பதாகியிருந்தது, கார குழம்பு வைத்திருந்தாள் அம்மா. சாப்பிட பிடிக்கவில்லை. கவனம் முழுவதும் சாப்பாட்டிலிருந்து சிதைந்திருந்தது. சமயலறையில் கிடந்த அரிவாளை எடுத்து கொல்லைப்புறத்தில் போட்டான். ஒரு முடித்துக் கயிறு மாட்டு கொட்டகையில் சொருகியிருந்தது.
அப்பா திண்ணையில் பேசிக் கொண்டிருக்கிறார். முகம் அதிகமான சோர்விலும், கவலையிலும் வாடியிருந்தன. இந்த வருஷம் மட்டுமல்ல, இனி எந்த வருஷமும் சாகுபடியை நம்பி பயனில்லை. அம்மா கதவு ஓரத்தில் எதிர் வார்த்தை செய்கிறாள். வேற என்னதான் செய்யுறது.
வித்துப்புடலாம்...?
ஆமா ரோட்டோரமா இருந்தாலாவது மனை போடுறவங்க யாராவது வாங்கிட்டு பேயிடுவாங்க தண்ணியும் பாயுமா? வெள்ளமும் வழியுமா? இருக்கிற நிலத்தை யாரு வாங்குவா சொல்லு?
அப்பா மேலும் பேச விரும்பாமல் அமைதியானார். வெற்றிலை பொட்டலத்தை அப்பாவிடம் நீட்டினாள்.
இவற்றையெல்லாம் வாசலில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான்... சின்னவன் வாய்விட்டு படித்துக் கொண்டிருந்தான்.
கயிறு, அரிவாள், மண்வெட்டியோடு பெரியகுளம் நோக்கி நடந்தான்.
அப்பாவும் அம்மாவும் மேலும் பேசத் தொடங்கினார்கள். தூக்கம் வரும் வரை பேசிக் கொண்டிருப்பது தவிர வேறு என்னதான் செய்வது.
முப்போகம் வெளைஞ்ச பூமி தரிசா போய்கிட்டு இருக்கிறதை நினைச்சா வயிறு எரியுது.
'என்ன பண்றது'
'யார்கிட்டேயாவது இஞ்சின் கேட்டிருக்கீங்களா'
'ம், கேட்காத ஆளில்லை. நாளைக்கு இன்னிக்கின்னு சொல்வாங்களே தவிர ஒருத்தரும் தரமாட்டேங்கறாங்க.
'ஒரு நாலு மணிநேரம் ஓடுனாப் போதும் கதிர் வந்துடும்.'
'ஆமாண்டி... உயிர் இருந்தா போருமுன்னு நினைக்கிறேன். கதிர்பத்தி பேசுறே... கோபம் வந்தது அப்பாவுக்கு.
அம்மா பெரிய மகனைப் பற்றி குறைச் சொல்லத் தொடங்கினாள். சொல்லி முடித்த பிறகு... ஊர் கதைகள் பேசத் தொடங்கினார்கள். இவர்கள் இடைவிடாது தொடர்ந்து பேசினார்கள். நீண்டு கொண்டே போயிற்று பேச்சு. சின்னவன் புத்தகங்களை எடுத்து வைத்துவிட்டு... படுத்துவிட்டான்.
'நேரமாயிடுச்சு' படுப்போம் என்றார் அப்பா.
'சீக்கிரம் எழுந்திருக்கனும் அம்மா சொல்லியபடி பாயி' - ல் சாய்ந்தாள்.
காலை விடிந்து விட்டிருந்தது. சின்னவன் எழுந்தான். அண்ணனை காணோம். திண்ணைக்கு வந்தான். அப்பாவும் அம்மாவும் தூங்கி கொண்டிருக்கிறார்கள். அம்மா என்று சத்தமிட்டான். அப்பாவும் அம்மாவும் துடித்து பிடித்து எழுந்தார்கள். அப்பா முகத்தை கழுவிக் கொண்டு வயல் பக்கம் நடந்தார்.
அம்மா பெரியவன் எங்கே காணோம் என்று சின்னவனிடம் கேட்டாள் தெரியல என்று கையை விரித்தான்.
அப்பா வரப்பில் நடந்து... தன் வயலின் தலைமேடு பக்கம் வந்தபோது காலை நேரத்து குளிர்ந்த காற்றில் மண் மனம் நாசியை தாக்கியது.
அப்பாவுக்குள் ஏதோ ஒளிர்ந்தது. திடீரென்று மகிழ்ச்சி ஏற்பட்டது. வயல்வெளியில் நிறைந்திருந்த குளிர் தன்மை நீர்வரத்தினை உணர்த்தியது. வயலில் இறங்கி பார்த்தவருக்குள் இன்ப அதிர்ச்சி... கண்ணியில் நீர் ஓடிவரும் சப்தம். காலை நேரத்தில் தவளைகள் சத்தமிட்டன. மகிழ்ச்சி பெருக்கெடுக்க... நீர் கண்ட ஆனந்தம்! கண்ணியை நோட்டமிட்டவர் எதேச்சையாக வடக்கே திரும்பினார். பெரிய குளத்தில் ஏற்றம் இறைத்துக் கொண்டிருப்பது யார்?
நம்ப முடியவில்லை... பெரியவனே தான்... நிலத்தைப் போலவே அப்பாவுக்கும் 'கண்கள் ஈரமாகியது'.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முப்போகம், பெரிய, கொண்டு, அப்பா, அம்மா, வந்து, தான், வெள்ளம், அவள், பார்த்தான், கொண்டிருந்தது, நிலவு, நீர், சின்னவன், நடந்தான், கொண்டிருப்பது, வரும், இன்னும், மனிதர்கள், இவள், வேண்டும், எல்லாம், இவனுக்கு, வயல், மேலும், மிகுந்த, மரம், பக்கம், கொஞ்சம், அப்பாவும், ஆற்றில், விட்டது, மனம், படுகையில், பயிர்கள், கண்ணி, குளத்தில், பூக்கள், கயிறு, அம்மாவும், காலை, விதமான, மரத்தில், காற்றில், வெளிச்சம், வானத்தைப், கதிர், என்பார்கள், அறுவடை, அமுதா, வேகமாக, தவிர, நடக்கத், தொடங்கினான், இஞ்சின், பேச்சு, புல், உட்கார்ந்து, கோபம், இவன், அந்த, கொண்டிருக்கிறார்கள், இன்று, ஊரில், பேசிக், மட்டும், கொண்டே, இவனோடு, என்ன, எங்கே, இரண்டு, இருக்கும், வரப்பில், பிறகு, Short Stories - சிறுகதைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்