நான்

- க.ச. மனுவேல்
நான் யார்? இந்தப் பேரண்டத்திற்குள் நான் எங்கோ ஓரிடத்தில், சிறு உயிரியாக, வாழ்ந்து கொண்டிருப்பவனாகத் தெரிகின்ற போதிலும், சில நாட்களாக இப்படி ஒரு எண்ணவோட்டம்: அண்டத்தினுள் நான் இல்லை. வேறெங்கோ இருக்கிறேன். ஒரு சிறு உயிரியாக பேரண்டத்திற்குள் நான் வாழ்வதாக எனக்குத் தோன்றுவதெல்லாம், வேறொன்றுமல்ல, நான் காணும் கனவு. இந்தக் கனவுதான் வாழ்க்கையென்று நம்பிக் கொண்டு இதுநாள் வரை இருந்துவிட்டேன். இந்தக் கனவை உருவாக்கியவை என் ஆறு அறிவுகள். நான் யார் என்பது கனவைத் துறக்கும்போதுதான் தெரியும். கண்களைத் திறக்கும் போதல்ல; ஐம்புலன்களையும் மூடும்போதுதான் அந்தக் கனவு போகும். இது சுலபமில்லை. ஆனாலும்கூட அந்த நிலையை கற்பனை செய்து கொள்வது சுலபம். கற்பனையில் நான் செய்து கொள்ளும் இந்தப் பரிசோதனைகள், நான் எண்ணிக் கொண்டிருக்கும் இந்தக் கருத்துக்கு மேலும் வலுசேர்க்கக்கூடும்..
பரிசோதனை 1:
கண்திறந்து அமர்ந்திருக்கிறேன் நான். என் முன்னால் அண்டத்தின் பல்வேறு உருவங்கள். குழந்தை ஒன்றின் மனோபாவத்துடன் பார்க்கிறேன் அவற்றை. பல்வேறு வடிவங்களில், நிறங்களில், சிறியதாகவும், பெரியதாகவும் உருவங்கள் தெரிகின்றன. நான் நினைக்கும்போது நினைத்தபடி நகரக்கூடிய, எனக்குக் கீழேயுள்ள உருவம் ஒன்றை மட்டும் என்னுடையதென கருதி வருகிறேன். கைகளை தட்டி விளையாடப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு கைத்தட்டலையும் நான்கு விதமாக உணர்கிறேன். கைகள் இணையும் காட்சியாகவும், தட்டிக் கொள்ளும் சப்தமாகவும், கைகள் தொட்டுக் கொள்ளும் உணர்ச்சியாகவும், கைதட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியாகவும் என நான்கு விதமாக. முதல் பரிசோதனையை மேற்கொள்ளப் போகிறேன். என் கண்களை மூடிக் கொள்கிறேன். உருவங்கள் மறைந்துவிட்டன என நான் நினைத்தாலும் இல்லையென்கின்றன விழிதிரவத்திலுள்ள தூசிகள். அங்குமிங்கும் அசைந்தும், பல வண்ணங்களை உமிழ்ந்து கொண்டும் இருக்கின்றன. இதைவிட பெரிய காட்சியாக, அவற்றிற்கு அப்பால் பிரம்மாண்டமான இருட்டொன்று பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறது.
இப்போது, தியானங்கள், தவங்கள் மூலம் ஞானிகள் பெறும் சக்தியை நான் பெற்றுவிட்டதாக வைத்துக்கொள்வோம். அதாவது என் பார்வை என்கிற அறிவை இழந்து விடுகிறேன். இப்போது இருட்டு கூட எனக்குத் தெரிவதில்லை. இருப்பினும் என் மூளையில் கண்கள் மூலம் நான் கண்ட பழைய நினைவுகளின் காட்சிகள் அனைத்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதோ, என் நினைவுகளிலிருந்து காட்சிகளை மட்டும் அழித்துவிடுகிறேன். ஒரு பிறவிக்குருடன் மூலையிலிருப்பது போன்று என் நினைவுகள் இப்போது காட்சிகளற்றுக் கிடக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்பு நான் கைத்தட்டிய நிகழ்ச்சியும் கூட.
பரிசோதனை 2:
பார்வையை இழந்த கையோடு அடுத்த பரிசோதனைக்கு உட்படுகிறேன். என் காதுகளால் இனி எந்த சப்தத்தையும் கேட்கப் போவதும் கிடையாது. கேட்டல் அறிவையும் இழந்து விடுவதாய் என் கற்பனைப் பரிசோதனை நீள்கிறது. இருப்பினும், ஒலியலைகளால் ஆகாத சப்தங்கள் என் மூளையில் ஒலிக்கிறது. நான் கற்ற மொழியால் ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டிருந்தன என் நினைவுகள். என் தாய்மொழி வடிவில்தான் நான் இதுவரை சிந்தித்து வந்திருக்கின்றேன். இப்போது என் நினைவுகளிலிருந்து மொழியை நீக்கிவிடும் அதிசயத்தையும் செய்கிறேன்.
இப்போது பிறந்ததிலிருந்து உள்ள என் நினைவுகள் அனைத்தும், மொழி அறியாத ஆதிவாசி மனிதனின் வார்த்தைகளற்ற மன பதிவுகள் போன்று இருக்கின்றன. நான் கைதட்டியது கூட அவ்வாறே பதிந்திருக்கிறது.
பரிசோதனை 3:
என் நுகர்தல், சுவைத்தல் அறிவுகளை அகற்றிவிட்டு, அடுத்த பரிசோதனைக்கு வரும்போது நான் நான்கு அறிவுகளற்று இருக்கிறேன். நான் எங்கோ அமர்ந்திருப்பதாக மட்டும் என்னால் உணரமுடிகிறது. அமர்ந்தபடியே இருக்கிறேனென்பதால் என் முட்டிகள் வலிக்கின்றன. இரத்த ஓட்டம் செல்லாத பாதப் பகுதி சோகை பிடித்து மந்தமாக இருக்கிறது. இதோ இப்போது உடலால் நான் உணரக்கூடிய தொடு உணர்வு, வலி, கூச்சம், சுகம் போன்ற அனைத்தையும் இழக்கிறேன். அதோடு, தொடு உணர்வு, சம்பந்தப்பட்ட என் மூளைப் பதிவுகளையும் கூட. இந்த வினாடி முதல் உடல் என்னுடையதல்லாததாக மாறுகிறது. ஆனாலும் நான் இருக்கிறேன். 'ஏன் கைத்தட்டினேன்' என்பது உள்ளிட்ட பல வருட நினைவுகளோடு மட்டும்.
பரிசோதனை 4:
ஐம்புலன் அற்றவனாக இன்னும் 'நான்' இருக்கிறேன். ஆனால் என் ஐந்து தூரிகைகளால் வரையப்பட்ட பிரபஞ்சம் என்ற ஓவியத்தின் அழகிற்குள் மயங்கிக் கிடக்கும் வேடிக்கை மனிதனாய் அன்று.
இத்தனை பரிசோதனைக்குப் பின்பும், மனநிறைவில்லை. கேள்விகள் நச்சரித்துக் கொண்டிருக்கும் போது எப்படி தூங்கமுடியும். பல கேள்விகள். ஏன் இந்த பேரண்டம் இருந்தது? ஏன் இதை இல்லாமல் செய்ய வேண்டும்? ஏன் நான்? ஏன் பிறப்பு? ஏன் வாழ்க்கை? ஏன் இறப்பு? என்று நீண்டு கொண்டே வந்த பட்டியல் ஒரு கேள்வியோடு முற்றுப் பெற்றது. 'ஏன்' ஏன்?
ஏன் என்று நான் காரணங்களைத் தேடுவது ஏன்? என் ஆறாவது அறிவுதான் அதன் காரணம். இப்போது அதையும் நீக்க நான் முற்படுகிறேன். நீக்கினேன். கடைசிப் பரிசோதனையும் முற்றுப் பெற்றது-
ஆறாவது அறிவை பயன்படுத்திதான் நான் இந்தக் கற்பனைப் பரிசோதனையை மேற்கொள்கிறேன். அதனால்தான், கடைசி நிலையை என்னால் முழுமையாக உணரமுடியவில்லை. ஆனால் இதுதான் அது ... 'புத்தர், மாவீரர், இயேசு, நம் மண்ணில் சித்தர்கள் என அனைவரும் சொன்ன 'அது' இதுதான். இதை நோக்கிதான் மனிதனின் பயணம் தொடங்க வேண்டும். இதுதான்....
யாரோ என் தோளைப் பிடித்து ஆட்டியதால் ஒரு பள்ளத்திற்குள் விழுந்துவிட்ட நினைப்பு. கண்விழித்துப் பார்த்தபோது கட்டிலின் ஓரத்தில் அம்மா அமர்ந்திருக்கிறாள். மல்லாக்கில் படுத்திருந்த என் நெஞ்சில் கவிழ்த்தப்பட்டிருந்த புத்தகத்தைக் கையில் எடுத்த அம்மா முன் பக்கத்தைப் பார்க்கிறாள்.
"ஏண்டா... இதுல இருந்துதான் இன்னக்கி கேள்வி கேக்கப் போறாங்களா... பாடுபட்டு இரத்தஞ் சொட்டிச் சம்பாதிச்சு உன்னப் படிக்க வக்கிறோம்... சும்மால்ல.... நீ... பெயிலாப்போயி... அரியர் வக்கிறப்ப எங்க மனசு எவ்வளவு கஷ்டப்படுது" அம்மாவின் குரல், 'மனவலியை' தழுதழுத்தது வெளிக் காட்டியது. நான் எழுந்து அமர்கிறேன் படுக்கையில்.
"நானும் ரெண்டு நாளாப் பாக்குறேன்... இதே புத்தகத்தத்தான் படிச்சிக்கிட்டிருக்க. இன்னக்கி மதியம் பரிச்சைய வைச்சுக்கிட்டு. இந்தத்தடவயாவது அந்தப் பேப்பர எழுதி முடிப்பேன்னு நெனச்சேன்"
அம்மா அழுதே விட்டாள்.
" அம்மா.... சரி..... படிக்கிறேன்... அழுகாத... ஈஸிதான்... ஏற்கனவே படிச்சுட்டேன்... சரி... இப்ப என்ன... இந்தாப் படிக்க ஆரம்பிச்சுட்டேன்."
எழுந்து செல்கிறேன் என் அலமாரியை நோக்கி. பாடப்புத்தகங்கள், கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த அலமாரியின் நடு அரையில் தியானத்தின் முறைகள் பற்றிய அந்தப் புத்தகத்தை வைக்க மனம் ஒப்பவில்லை. காலியாக இருந்த மேல் அறையில் அதை வைத்து, அழகு பார்த்துவிட்டு, பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்கிறேன். என் அம்மா இன்னும் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், நான், இப்போது, பரிசோதனை, அம்மா, ", மட்டும், இருக்கிறேன், இந்தக், கொள்ளும், நான்கு, இருக்கின்றன, இதுதான், நினைவுகள், உருவங்கள், Short Stories - சிறுகதைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்