முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » ஆய்வுச் சிந்தனைகள் » அப்துல்ரகுமானின் 'பித்தனில்' முரண் உத்தி
அப்துல்ரகுமானின் 'பித்தனில்' முரண் உத்தி
- இரா. விஜயராணி
அப்துல்ரகுமான் 9.11.1937இல் பிறந்தார். வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் 30 ஆண்டுக்காலம் பேராசிரியராகப் பணியாற்றினார். இவரின் தாய் மொழி உருது என்றாலும் தமிழில் இவர் ஆற்றியுள்ள சாதனைகள் அளப்பரியது. உருதுக்கவிஞர் ''இக்பாலின்'' கவிதைகளை உருதுவிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். உலகளாவிய அளவில் கவிஞர்களையும், அவர்தம் படைப்புகளையும் ஜூனியர்விகடன் இதழில் 100 வாரங்கள் கட்டுரை எழுதினார். தமிழில் ஹைகூ வடிவிலும், மீமெய்மைஇயல் கவிதைக் கோட்பாட்டிலும் (பால்வீதி) கவிதைகளை புனைந்துள்ளார். கஸல் வடிவ கண்ணிகளைப்பற்றி (சுரபி பாரசீக, உருதுமொழிகளில் புகழ்பெற்ற வடிவம்) 62 வாரங்கள் தொடர்கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்.
நேயர் விருப்பம், பால்வீதி, ஆலாபனை, பித்தன், விதைபோல் விழுந்தவன், முத்தமிழின் முகவரி, சொந்தச் சிறைகள், மரணம் முற்றுப்புள்ளி அல்ல, இன்றிரவு பகலில், உன் கண்களால் தூங்கிக் கொள்கிறேன், சுட்டுவிரல் போன்ற கவிதை நூல்கள் மட்டுமன்றி பல கட்டுரை, உரைநடை, திறனாய்வு நூல்கள் எழுதியுள்ளார்.
முரண் நயம் :
கவிஞர்களின் நுட்பமான படைப்பாற்றலுக்குப் பல வகை உத்திகள் வலிமை சேர்க்கின்றன. அத்தகைய உத்திகளில் ஒன்று முரண்நயம், தொல்காப்பியர் செய்யுளியலில் தொடை வகைகள் பற்றிக் கூறுமிடத்து, ''மொழியினும், பொருளினும் முரணுதல் முரணே'' இதனைச் சற்று விரித்து அப்துல் ரகுமானின் ''பித்தன்'' கவிதைத் தொகுப்பில் பொருத்திப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபாடான சொற்கள் அல்லது கருத்துக்கள் ஒரே தொடரில் அல்லது ஒரே வரியில் அல்லது ஒரு கவிதையில் இடம்பெறும்போது முரண் உண்டாகிறது. நிறங்கள், உணர்ச்சிகள் போன்ற பண்புகளில் மாறுபாட்டாலும் முரண் விளைகின்றது. பித்தன் கவிதைத் தொகுப்பில் காணப்படும் முரண்களைப் பின்வருமாறு வகைமைப்படுத்தலாம்.
(1) சொல் முரண் (2) பொருள் முரண் (3) நிகழ்ச்சி முரண் (4) உணர்ச்சி முரண் (5) தத்துவ முரண் (6) உவமை முரண் (7) நோக்கு முரண் (8) உரையாடல் முரண் (9) தலைப்பு முரண்
1. சொல் முரண்: முரண்பாடான சொற்கின் இணையடுக்கைச் சொல் முரண் என்பர்.
வினாவின் வெயிலுக்கு
உங்கள் விடைகள்
வெறும் குடைகளே என்பதை
அறிவீர்களா? (ப.28)
வினா-விடை, வெயில்-குடை என்ற சொற்கள் முரண்பாடாக அமைந்துள்ளன. வினாவை வெளிலுக்கும், விடையைக் குடைக்கும் முரணாக அமைத்துக் கூறியுள்ளார்.
வினாக்களுக்கு
மரணம் உண்டு
விடைகளுக்கு இல்லை.
வினா-விடை, உண்டு இல்லை என்ற சொற்கள் முரண்பாடாக அமைந்துள்ளன.
2. பொருள் முரண்: கவிதையில் சொல்லளவில் மட்டுமல்லாது கருத்தளவில் மாறுபட்டிருப்பது பொருள்முரண் எனப்படும்.
பொய்க்குத்தான்
ஆடை தேவை
மெய்குத் தேவையில்லை (ப.14)
பொய்-மெய் என்ற சொற்கள் முரணாக அமைந்துள்ளன. மெய் என்ற சொல் இருவேறு பொருளில் இங்கு இடம் பெற்றுள்ளன. மெய்-உண்மை, உடல், பொய்க்குத்தான் ஆடை அவசியம் தேவை மெய்க்குத் தேவையில்லை என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.
உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன (ப.10)
''உண்டால்''
''இல்லை'' உண்டாகிறது (ப.10/11)
உண்டும் இல்லையும் அர்த்தம் இழந்தன என்று கூறிய ஆசிரியர் உண்டால் இல்லை உண்டாகிறது என்று இரு வேறான கருத்து முரண் தோன்றுமாறு அமைந்துள்ளார்.
3. நிகழ்ச்சி முரண்: கவிதையில் இருவேறு கூறான நிகழ்ச்சிகள் நேர்வதைச் சித்திரிங்குங்கால் நிகழ்ச்சி முரண் தோன்றுகிறது, முன்னுக்குப்பின் மாறுபட்ட செயல்கள் நிகழ்ச்சி முரணாக அமைகின்றன.
நினைவூட்ட அல்ல உங்களுக்கு
மறதியைத் தரவே
வந்திருக்கிறேன் (ப.22)
ஜனனத்தில் / ஒரு கதவு திறக்கிறது
மரணத்தில் / ஒரு கதவு திறக்கிறது
இரண்டிலும் / நாம்
பிரவேசிக்கிறோமா? வெளியேறுகிறோமா? (ப.60)
முந்தைய கவிதையில் நினைவூட்ட அல்ல நினைவில் இருப்பதை மறக்கச் செய்யவே பித்தன் வருவதாகக் கூறப்பெற்றுள்ளது. நினைவு மறதி என்ற இருவேறுபட்ட நிகழ்ச்சிகள் பற்றிக் குறிப்பிடப்பெற்றுள்ளன. இரண்டாவதில் குழந்தை பிறந்த நிகழ்ச்சியும் மனிதன் மரிக்கும் நிகழ்ச்சியான மரணமும் கூறி பிறப்பிலும், இறப்பிலும் நான் பிரவேசிக்கிறோமா, வெளியேறுகிறோமா என்பது குறித்த சிந்தனை பதிவுசெய்யப் பெற்றுள்ளது.
4. உணர்ச்சி முரண்: நிகழ்ச்சிகளைப் போலவே உணர்ச்சிகளிலும் முரண் தென்படுவதைக் காணலாம்.
பசி உங்கள் / காதை / அடைக்கிறது என்று
நீங்கள் சொல்லுகிறீர்கள்
நானோ / பசிதான் உங்கள்
காதுகளைத் திறக்கிறது என்கிறேன் (ப.69)
5. தத்துவ முரண்: வாழ்க்கையின் எதார்த்த நிகழ்வுகளைக் கொண்டு அமைகின்ற தத்துவங்களை முரணாக அமைத்துள்ளார்.
தொட்டிலிலிருந்து புறப்படுகிறவன்
பாடையை அடைகிறான் (ப.46)
பிறப்பு என்ற ஒன்று இருக்குமானால், இறப்பும் அதன் கூடவே பிறக்கிறது என்று ஆசிரியர் கூறியுள்ளார். மனிதனின் வாழ்க்கைப் பயணம் தொட்டிலில் தொடங்கிப் பாடையில் நிறைவு பெறுகின்ற செய்தியை வாழ்க்கையின் எதார்த்த நிகழ்வினை இவ்வரிகள் படம்பிடித்துக் காட்டியுள்ளன.
6. உவமை முரண்: கவிதைக்கு அழகுசேர்ப்பது உவமையாகும். பயில்வோரின் உள்ளங்களை எளிதில் கொள்ளை கொண்ட இரசிக்கத்தூண்டுவது உவமையேயாகும். உவமை கவிதைக்கு அழகுதருவது மட்டுமின்றித் தெளிவும், ஆழமும், உருவும், செறிவும் தருகிறது. இத்தகைய உவமையை முரணாகவும் காட்டியுள்ளார்.
இரவையும் பகலையும்
காவடி தூக்கிச் செல்லும்
நாளைக் போலவே
நீங்களும்
கண்ணீரையும் புன்னகையையும்
சுமந்து நடக்கிறீர்கள் (ப.94)
இரவு பகல் என்ற முரண்கள் கண்ணீர்-புன்னகை என்ற முரண்களோடு அமைந்துள்ளன. இரவு பகல், கண்ணீர், புன்னகை, நாள்-மனிதன் என்பதில் கடைசிப் பகுதி உவமையாகின்றது.
7. நோக்கு முரண்: மனித வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைச் சாதாரணமாக ஒரு மனிதன் பார்க்கும் பார்வையில் இருந்து முற்றிலும் மாறுபாடான நோக்குடன் பார்ப்பதாக ஆசிரியர் காட்டியுள்ளார்.
''தீக்குச்சி / விளக்கை ஏற்றியது
எல்லோரும் / விளக்கை வணங்கினார்கள்''
பித்தன் / கீழே எறியப்பட்ட
தீக்குச்சியை வணங்கிணன்
ஏன் தீக்குச்சியை / வணங்குகிறாய்?
என்று கேட்டேன் / ஏற்றப்பட்டதை விட
ஏற்றி வைத்தது / உயர்ந்ததல்லவா? என்றான்.
நோக்குநிலை மாறுபட்டதாக, இயல்புக்கு முரண்பட்டதாக அமைந்துள்ளது. மற்றொரு சான்று.
புத்தங்களே! / சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் / கிழித்து விடாதீர்கள் / என்றான் (ப.80)
8. உரையாடல் முரண்: பித்தனிடம் ஆசிரியர் கேள்வி கேட்பதாகவும், பித்தன் அதற்கு பதில் கூறுவதாகவும் உரையாடல் நடையில் முரண்பாடுடைய செய்திகளைக் கூறுவதாய்ச் சில கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
எல்லோரும் / மலையின் மீது
ஏறிக்கொண்டிருக்கும் போது
பித்தன் மட்டும் / கீழே
இறங்கிக் கொண்டிருந்தான்.
நீ ஏன்
இறங்கிக் கொண்டிருக்கிறாய்?
என்று கேட்டேன்
மேலே செல்வதற்கு என்றான் (ப.47)
9. தலைப்பு முரண்: கவிதைகளுக்கு இடப்பட்டுள்ள தலைப்பிற்கும் அதனுள் இடம்பெற்றுள்ள பொருளுக்கும் இடையிலும் கூட முரண் தோன்றும் வகையில் ஒரு கவிதை அமைந்துள்ளது. இணை என்ற தலைப்பில் அமைந்த கவிதையில்
''முன்''னால் / ''பின்'' உண்டாகிறது
மேலால் / ''கீழ்'' உண்டாகிறது
''தொடக்கத்தால் / ''முடிவு'' உண்டாகிறது
''விழிப்பினால்'' / ''உறக்கம்'' உண்டாகிறது
இவ்வரிகள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைப் பெற்றமைந்துள்ளன. ஆனால் கவிதையின் தலைப்போ ''இணை''
நிறைவுறை: அப்துல் ரகுமானின் கவிதைத் தொகுப்புகள் அனைத்துமே கருத்தாழம் மிக்கவை. அதிலும் குறிப்பாக ''பித்தன்'' வாசிப்பாளரைச் சிந்திக்கும் வைக்கும் தன்மை படைத்தது. வாசகனை ஆழ்ந்து படிக்கத் தூண்டுவது. இக்கட்டுரையில் சொல்முரண், பொருள்முரண் நிகழ்ச்சி முரண், உணர்ச்சி முரண், தத்துவமுரண், உவமைமுரண், நோக்குமுரண், உரையாடல்முரண், தலைப்புமுரண் ஆகிய தலைப்புகளின் மூலம் ''பித்தன்'' தொகுப்பு விளக்கப்பெற்றுள்ளது.
நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அப்துல்ரகுமானின் 'பித்தனில்' முரண் உத்தி, முரண், பித்தன், உண்டாகிறது, கவிதையில், நிகழ்ச்சி, சொற்கள், அமைந்துள்ளன, ஆசிரியர், முரணாக, சொல், அல்லது, இல்லை, மெய், என்றான், மனிதன், திறக்கிறது, உணர்ச்சி, அல்ல, கவிதைத், உவமை, உரையாடல், உங்கள், Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்