வ.வே.சு. ஐயரின் சிறுகதை இலக்கியப்பணி
-வெ. திலகம்
தமிழில் சிறுகதையின் தந்தை யார்? என்பதைப் பற்றிய ஒரு விவாதம் நடந்தால் வ.வே.சு.ஐயர் என்று எளிதில் கூறிவிடலாம். சிறுகதைப்படைப்புகளில் வ.வே.சு.ஐயர் பெற்றிருந்த ஆற்றலைக் காணுமிடத்தில், தமிழ் இலக்கியத்தின் கதை வடிவத்தைக் காட்டவே சிறுகதை எழுதலானார். எனவே இவரைத் தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்றும், முதல்வர் என்றும் சிறுகதை இலக்கணத்தின் வழிகாட்டி என்றும் இலக்கியச் சமூகம் ஒரு முகமாகக் கருதக் காரணமாக இருக்கின்றன.
சிறுகதை எழுந்த சூழல்:
புதுச்சேரியில் அவர் அமைத்த ''கம்ப நிலையம்'' என்ற பதிப்பகத்தின் மூலம் 1917-ஆம் ஆண்டு ''மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்'' என்ற தலைப்பில் ஐந்து கதைகள் மாத்திரம் அடங்கிய ஒரு தொகுப்பை வெளியிட்டார். வ.வே.சு.ஐயர் தமக்கு முந்திய மாதவய்யா போலவோ, பாரதி போலவோ அதிகமான கதைகளை எழுதவில்லை. பாலபாரதி பத்திரிகையில் அவர் எழுதிய ராஜகோபாலன் கடிதங்கள் என்பவற்றிலும் ''அபூர்வமான பல கதைகள் உண்டு'' என்று புதுமைப்பித்தன் கருத்து கருதத்தக்கது. சிறுகதைகள் பல எழுத வேண்டும் என்ற ஒரு திட்டம் வகுத்து வைத்திருந்தார் என்பது அவர் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்து தெரிய வருகிறது. ''தூமாஸ் பிரெஞ்சு சரித்திரம் அனைத்தையுமே கற்பனைக் கதைகளாகச் சரிபண்ணி ஒவ்வொரு பிரெஞ்சுக்காரனையும் தன் தேச சரித்திரத்தில் கற்றவனாயும் உற்சாகியாயும் ஆக்கிவிட்டதைப் போல தமிழ்நாட்டுச் சரித்திரமனைத்தையும் கற்பனைக் கதைகளாகச் செய்ய வேண்டுமென்றிருக்கிறேன். பாரியும் நன்னனும், கபிலரும் நக்கீரரும், கரிகாலனும் செங்குட்டுவனும், ராஜராஜனும், ராஜேந்திரனும், விஜயபாலனும் சுந்தரமூர்த்தி நாயனார் முதலிய சைவ நாயன்மார்களும், குலசேகரன், ராமானுஜன், தேசிகர் முதலிய வைஷ்ணவ ஆசார்ய மகான்களும் நமது கதைத்தொடரில் நாயகர்களாக விளங்கி, காமபீர்யம் முதலிய பௌருஷமான இரகங்களுக்கு நிலையமாக நின்றால், அடுத்த தலைமுறை முதல் தமிழ் இலக்கியத்தையும் தமிழ்ச் சரித்திரத்தையும் யார் அவமதிப்பார்? அது சாத்தியமானால், இப்பேர்ப்பட்ட வீர தீரர் பிறந்து வளர்ந்து இறந்த நாட்டில் நாம் பிறக்கச் செய்த புண்ணியமே புண்ணியமென்றும் நாம் அவர்களுக்கேற்ற சந்ததியாகக் கடவோம் என்றும் எண்ணங்கள் தமிழருள் தோன்றி மற்ற மாகாணங்களில் பிறந்து கொண்டிருக்கும் தீரயுகம் இங்கும் பிறக்க வழிகாட்டியாக நாம் அமைந்துவிடுவோம். இந்த நோக்கத்துடனேயே ''மங்கையர்க்கரசியின் காதல்'' முதலிய கதைகளை வெளிப்படுத்தியதோடு, லைலாமஜ்னு, அனார்க்கலி முதலிய கதைகளும் கைப்பழக்கத்துக்காக எழுதி வருகிறேன். நாளாவட்டத்தில் பெரிய சரித்திரத்தை எழுதும் நிலைமைக்கு வரும் என்று நினைத்தே சிறுகதைகளை எழுதி வருகிறேன், எனச் சிறுகதை எழுந்த சூழலை விவரித்துக் கூறியிருக்கிறார்.
சிறுகதையில் புதிய சொற்கள்:
கதைகள் கவிதை நிரம்பியவையாய், ரஸபாவோ பேதமாய் இருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம் என்று சொல்லும் போது, சிறுகதை கலை வடிவத்துடன் இருக்க வேண்டும். அது ஒரு தனி ரசனை உணர்ச்சியைத் தரவேண்டும் என்னும் கருத்தை இதில் வலியுறுத்துகிறார். இந்தக் கருத்தில தான், உதாரணத்துக்காக இரண்டு கதைகளைத் தருகிறார். ஒன்று, முதல் கதையான மங்கையர்க்கரசியின் காதல், இரண்டு, காங்கேயன் இந்த இரு கதைகளையும் தாம் எடுத்துக் கொண்ட இலக்கிய வகைக்கு உதாரணமாகப் படைத்துக் காட்டும் போது இவற்றிற்கு ஓர் அறிமுகமாக சூசிகை என்ற ஒரு குறிப்பு எழுதிச் சேர்த்தார். இவைகளின் தலைப்பில் எழுதியிருக்கும் சூசிகைகளைப் படிக்காமல் கதைகளையே துவக்கிப் படித்ததால் சுவை அதிகமாகத் தெரியும். ஆனால் ரீதி புதிதாகையால் சிலருக்கு விளங்காமற் போனாலும் போகலாம் என்று சூசிகையைச் சேர்த்திருக்கிறேன்.
இந்த இரு குறிப்புகளும், கதைகள் கவிதை நிரம்பியவையாய் ரஸபாவோ பேதமாய் இருக்க வேண்டும் என்பதும் ரீதி புதிது என்பது சிறுகதையின் இலக்கியக் கொள்கைக்கு ஐயரின் வழிகாட்டிகளாகும். இவற்றைச்சொல்லிவிட்டு, அதற்கு உதாரண வடிவம் போல இரண்டு கதைகளையும் படைத்திருக்கிறார். ரீதி புதிது என்பதில்தான் எவ்வளவோ தகவல் அடங்கியிருக்கிறது. இது பழைய சம்பிரதாய நீதிக் கதையல்ல, புதிய மரபில் கதையம்சம், வடிவ அமைப்பு, உணர்வு என்ற அம்சங்களைக் காண்பிக்கவே ரீதி புதிதென்றார். ரீதி என்பதைக் காவிய நிர்மாணம் - அமைப்பு என்ற பொருளில் உபயோகித்திருப்பதை அவர் எழுதிய கம்பராமாயண ரசனை என்ற விமர்சனக் கட்டுரையில் காணலாம்.
பாவிக அணி என்று நாம் கூறுவதை மேனாட்டார் ஆர்க்கி தெக்தோனிக்ஸ் என்கிறார்கள். இப்பதத்துக்கு சிரசனை அல்லது காவிய நிர்மாணம் என்று பொருள் கொள்ளலாம். இது மனைச் சிற்ப நூலிலிருந்து எடுத்துக் கொண்ட பெயராகும். ஓர் அரண்மனையையோ கட்டிடத்தையோ கட்டுவதற்கு அனந்தகோடி ரீதிகளுண்டு. ஆனால் சில ரீதிகள்தாம் கட்டிடத்துக்கு அழகு தரும்.
ரீதி புதிதென்பதால் சூசிகை சேர்க்கப்பட்டுள்ளது. சூசிகையைப் படிக்காமல் கதையைத் துவக்கினால் சுவை அதிகமாக உணரப்படும் என்றாலும், கதை புரிதலுக்காக சூசிகை சேர்க்கப்பட்டுள்ளது என்கிறார். இங்கு சுவையைவிட புரிதலுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சுவை குன்றினும் புரிதலே முக்கியம் என்பதே கலைஞரின் கருத்தாகவும் உள்ளது. புதிய இலக்கிய வகையை அறிமுகப்படுத்தும் பொழுது உருவாக்கப்படும் வடிவ சமரச முயற்சியாக சூசிகையுள்ள கதைகள் அனைத்தும் மரபு ரீதியிலான கதைப் பின்னல் கொண்டவை. ஆனால் சூசிகையைப் படிக்காமல் கதையை நேரடியாகப் படித்தால் அதில் அதிக சுவையைப் பெறலாம் என்று இலக்கியச் சுவையின் அர்த்தத்தையும் எடுத்துக் காண்பிக்கிறார் உதாரணமாகக் கதையின் ஆரம்பத்தைப் பார்க்கலாம்.
''எங்கு பார்த்தாலும் இருள், காரிருள், கறுத்த, கனத்த, மேகங்கள் வானத்தில் இடைவிடாது சென்று கொண்டிருக்கின்றன. சந்திரன் சற்று நேரத்துக்குத் தோன்றுகிறான். உடனே முன்னிலும் கனமான மேகங்களுக்கிடையில் மறைந்துவிடுகிறான். காற்று சீறிக் கொண்டிருக்கின்றன. அதோ அந்த ஆலமரத்தின் மீதிருந்து ஒரு கோட்டான் பயங்கரமாகக் கத்துகிறது'' - நாடகச் சுவை ததும்ப ஆரம்பித்த இந்தக் கதையை ஒரேயொரு நிகழ்ச்சியுடன் மூலம் விவரித்துக் கூறியிருப்பது மங்கையர்க்கரசியின் காதல் கதை ஆகும்.
இதே போலவே காங்ககேயன் கதைக்கும் ஐயர் சூசிகை எழுதி ஒரேயொரு சம்பவத்தை மாத்திரம் வைத்து உணர்வொருமை ஏற்படப்படைக்கப்பட்டது என்ற தகுதி, பெற விளக்கம் தந்திருக்கிறார். கங்கபாடி அரசனுக்கெதிராகச் செங்கண்மா தலைநகருடைய அரசன் நன்னன் போர் தொடுத்து, கங்கபாடி மன்னனையும் தோற்கடித்து, கங்க மன்னனின் கடைசி மகன் காங்கேயனைப் பிணைக் கைதியாக வைத்துக்கொள்கிறான். ஐயர் இந்தக் கதையில் மாதவியும் காங்கேயனும் தனித்தனியாக விரகதாபத்தில் புலம்பும் சம்பவத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு சிறுகதை படைத்துள்ளார். இந்தக் கதையிலும் காங்கேயன் விரகதாபத்தில் புலம்பிக் கொண்டிருக்கும் சமயம் மாதவி ஆண் வேடத்தில் வந்து சந்திக்கும் நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டப்படுகிறது. இந்த இரு கதைகளுக்குத்தான் ஐயர் சூசிகை தந்திருப்பதால் இவையிரண்டும் அவரது சிறுகதைக் கொள்கைக்கு உதாரணக் கதைகளாகக் கொள்ளப்பட வேண்டும்.
சிறுகதை உத்தி:
வ.வே.சு.ஐயரின் எட்டுக் கதைகளடங்கிய நூலில் இலக்கிய விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பெற்ற கதை குளத்தங்கரை அரசமரம் என்னும் சிறுகதை ஆகும். இக்கதை இலக்கிய விமர்சகர்களால் வரலாற்று ஆசிரியர்களாலும் சிறுகதையின் சிகரம் எனக் கொண்டாடப்பட்டது. இக்கதையில் கதை வடிவத்திலோ, பாத்திர ஒருமை சம்பவ ஒருமை, கால ஒருமையிலோ உணர்வொருமையிலோ சிறந்து விளங்குகிறதா என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மங்கையர்கரசியின் காதல் ஒரு தனி நிகழ்ச்சி தனி விளைவு கொண்ட நாலரைப் பக்கக்கதை. குளத்தங்கரை அரசமரம் இருபத்தாறு பக்கங்களில் நீண்டு ருக்மணியின் இளமைப்பருவம், அவளுக்குக் கல்யாணமாகி, பின்னர் சாந்திமுகூர்த்தம் நடக்காமல் தடைபட்டு, கணவனுக்கு வேறு கல்யாணம் நிச்சயமாகி அதனால் விபரீத நிலைமை ஏற்பட்டு அவள் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது. தவற்றை உணர்ந்த கணவன் துறவு பூண்டது ஆகிய ஒரு நீண்ட நாவலுக்குரிய பல ஆண்டு நிகழ்ச்சிகள், பல பாத்திரங்கள் சிறுகதையில் குறுக்கிடக்கூடாத துணை விளைவுகள் இப்படிப் பல சேர்ந்திருப்பது கதையின் வடிவத்தையும் பாதிக்கிறது. இந்தவிடத்தில் நவீன சிறுகதையின் வடிவ ஆக்கப் போக்கில் வ.வே.சுவின் பங்கை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. நாடகச் சுவை ததும்ப ஆரம்பித்து நிகழ்ச்சியாகக் காண்பிப்பதுதான் ஐயரின் சிறுகதை உத்தி ஆகும். மங்கையர்கரசியின் காதல் முதலிய கதைத்தொகுதிக் கதைகளில் காட்டியதைவிட ஐயர் தான் எழுதியிருக்கும் முன்னுரையில்தான் தமது இலக்கிய உணர்வையும் சிறுகதை உத்தியையும் புலப்படுத்துகிறார்.
மொழிபெயர்ப்பா? தழுவலா?:
வழிவழியாகப் பாராட்டப் பெற்று வரும் சிறுகதை குளத்தங்கரை அரசமரம். இக்கதை வெளிவந்த இதழ் விவேக போதினி. இந்த இதழ் மாத இதழாக வெளிவந்தது. குளத்தங்கரை அரசமரம், ஒரு சிறிய கதை என்று தமிழிலும் ''The Peepul tree near Tank [Ashort Story]'' என்று ஆங்கிலத்திலும் தலைப்புகள் இடப்பட்டன. கவிஞர் தாகூரின் காடேர் கதா (படித்துறையின் கதை) என்பது அற்புதமான சிறுகதையாகும். இக்கதையில் உருவம் உள்ளடக்கம் இரண்டும் பெருமளவு செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இச்சிறுகதையை வங்க மொழியில் இருந்து அமரர் த.நா.குமாரசாமி தமிழில் படித்துறையின் கதை என்று மொழிபெயர்த்துள்ளார். வா.வே.சு.ஐயர் இக்கதையில் இருந்து உத்தியை மட்டும் எடுத்துக் கொண்டு குளத்தங்கரை அரசமரம் என்ற பெயரில் வடித்துள்ளார். படித்துறையின் கதையின் குஸ“மா, குளத்தங்கரை அரசமரத்தின் ருக்மணி இருவர் பாத்திரப்படைப்பும் முறையே, படித்துறை அரசமரம் இவற்றின் பாசத்துடன் படைக்கப்பட்டுள்ளனர். குளத்தங்கரை அரசமரத்தில் ஒரு மரம் கதை கூறும் உத்தி எடுத்தாளப்பட்டுள்ளது. மேலும் நிஜாமி என்னும் பாரசீகக் கவிஞர் (1141-1202) எழுதிய பல கவிதைகளில் லைலா மஜ்னும் ஒன்று. இக்கதையைத் தழுவல் சிறுகதையாக எழுதியுள்ளார்.
உலகத்தின் சில கதைகள் நித்திய யௌவனமாயும் சர்வந்தாயாமியாயும் இருந்து கொண்டு கோடானுகோடி மனிதர்களுடைய மனதில் காதல், கோபம், பயம், சோகம் முதலிய பேருணர்ச்சிகளை உண்டாக்கி வருகின்றன. இந்த லைலா மஜ்னுவின் அத்தகைய கதைகளின் ஜாதியைச் சார்ந்தது. வ.வே.சு.ஐயர் பிறநாட்டுக் கதைகளைத் தழுவி எழுதியுள்ளார். அக்கதையின் பெயர்களும் மூலத்தின் பெயர்களைத் தழுவியே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ''Echo'' என்னும் சிறுகதை எதிரொலியாள் என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். இறுதியாக தமிழிலக்கியத்தில் சிறுகதை எழுதுவதில் ஒரு புதிய வேகம் ஏற்பட்டு, இந்த வடிவத்தின் உளவியல் ரீதியான காரணங்களையும், புதிதாகத் தெரிந்து கொண்ட மேனாட்டு தத்துவ நோக்கில் ஆராய முயன்றார்கள். சிறுகதையின் உள்ளடக்கத்தில் புதிய பொருள் தேடினார்கள்.
நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வ.வே.சு. ஐயரின் சிறுகதை இலக்கியப்பணி, சிறுகதை, ஐயர், முதலிய, காதல், கதைகள், குளத்தங்கரை, நாம், ரீதி, சிறுகதையின், அரசமரம், வேண்டும், எடுத்துக், சூசிகை, சுவை, இலக்கிய, என்னும், கொண்ட, இந்தக், மங்கையர்க்கரசியின், என்றும், எழுதிய, என்பது, அவர், கொண்டு, உத்தி, இக்கதையில், இருந்து, படித்துறையின், ஆகும், ஐயரின், மாத்திரம், எழுதி, இரண்டு, படிக்காமல், தலைப்பில், வடிவ, இருக்க, கதையின், Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்