தமிழரின் மறைந்த இசைக்கருவி
- ஆர். பிருந்தாவதி
இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே, யாழின் தோற்றம், வடிவம் - வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலியவற்றை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
யாழின் தோற்றம்:
வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில்தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.
வடிவம் வகை:
யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை. பெரும்பாணாற்றுப்படை (3-16 அடிகள்) ''பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி, வளைசோர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்'' என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.
யாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. கல்லாடர் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) தமது நூலில் நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் (தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத்தான் குளம் அ.இராகவன் தமது ''இசையும் யாழும்'' என்னும் நூலின் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.
யாழின் பரிணாமம்:
வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே ''பாணர்'' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.
தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு..... என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லையென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.
யாழ் மறைந்ததற்கான சமூக பின்புலம்:
யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது. அந்நூல்கள், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்தள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை ''ஏழிசை யாழ், வீனை முரலக்கண்டேன்'' ''பண்ணோடி யா‘ வீணை பயின்றாய் போற்றி'' என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் ''வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி)'' என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது. மேலும், ''வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் (730 அடி)'' என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் காந்தர்வ தத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.
எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது. ஆரியர்கள் தங்களுக்கான மொழியை, நூல்களை, தெய்வங்களை, பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட்டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம், ஒரு காலகட்டத்தில் ஆரியர்களின் கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே. தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர்.
வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர். ஆரியர்களின் ஆதிக்கமும் விணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன. இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று.
நன்றி: கட்டுரை மாலை
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழரின் மறைந்த இசைக்கருவி, யாழ், யாழின், வீணை, நரம்புகள், யாழினை, யாழும், வில்யாழ், குறித்துள்ளார், உரியதாக, ஆரியர்களின், கொண்டனர், இசைக், கருவியாக, சங்க, வடிவம், ஒன்று, பரிணாமம், குறிஞ்சி, என்றாலும், கருவி, அறிய, Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்