சங்ககால மகளிரின் நிலை
- நூ. அமீதாராணி
முன்னுரை:
சமுதாயம் என்பது ஆண், பெண், இருவரின் உயிரோட்டமுள்ள வாழ்வியல் முறையைக் குறிப்பனவாகும். இதுவல்லாமல் உயர்வு, தாழ்வு, பேசிக் கொண்டு செயல்படுவது அல்ல எனலாம். உரிமை என்பது ஒருவர் கொடுப்பதுமன்று, மற்றொருவர் வாங்குவதும் அன்று, அஃது எவரிடத்தும், எவ்விடத்தும் இயல்பாய் அமைந்து கிடப்பது என்கிறார் திரு.வி.க (பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை, ப.33). ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சங்கத்தமிழ்ப் பெண்டிரின் நிலை என்ன என்பது பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சங்கச் சமூகம்:
சங்க காலப்பாடல்களில், அகப்பாடல்கள் தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகின்றன. பெண்ணின் வாழ்க்கை களவுக்காதலில் இற்செறிப்பில் தொடங்கி, கற்புக் காதலில் கணவனுக்குக் கட்டுப்பட்ட மனைவியாகப் பரிமளித்து போரிலே கணவன் மாண்டால், கைம்பெண்ணாக மாறும் ஓர் அவநிலைக்குத் தள்ளப்பட்டு, பிறகு அவள் உடன்கட்டை ஏறித் தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்வது வரை போராட்டமாகவே வாழ்கிறாள் என்பதைக் சங்கச் சமூகம் சித்தரிக்கிறது.
இற்செறிப்பு:
தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையைப் பற்றி, தாய் கேள்விப்படும் போது மகளை வீட்டிலே அடைத்து வைத்து துன்பப்படுத்துவது இற்செறிப்பாகும் இதனை
''தனித்துஓர் தேர்வந்து பெயர்ந்தது என்ப,
அதற்கொண்டு ஒரும் அலைக்கும் அன்னை பிறகும்
பின்னுவிடு கதுப்பின் மின்இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே
அலையாத் தாயரொரு நற்பா லோரே'' (குறுந். 246:3-8)
என வரும் பாடல் விளக்குகிறது. ஏதாவது தேர் வந்து பெயர்ந்தது என்று தெரிந்தாலே தாய் சந்தேகப்பட்டு என்னைத் துன்புறுத்துகிறாள். அதனால், என்னை விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தலைவி கூறுவதாக இப்பாடல். மற்றவர்கள் தன் பெண்ணைத் தவறாகப் பேசி விடக்கூடாது, அதனால் அவள் வாழ்க்கை நிலைகுலைத்துவிடும் என்று எண்ணும் ஒரு தாயின் இக்கட்டான நிலையை இதன் மூலம் அறியலாம். இவள் எண்ணுகிற எண்ணத்தின் மூலம், சங்கச் சமூகத்தின் கொடுமையான கட்டுப்பாடுகள் நன்கு விளங்குகின்றன.
பரத்தைமை ஒழுக்கம்:
ஆணின் பரத்தைமை ஒழுக்கத்தைச் சங்கச் சமூகம் கட்டிக் காட்டிற்றேயொழிய அதைத் கடிந்து பேசியதாக எவ்விடத்திலும் குறிப்பில்லை. இதை கண்ணம் புலவனார் பாடிய புறப்பாடலில்
''எம்நறந்து உறைவி ஆயின்யாம் நறந்து
நல்கினம் அளித்தல் அறியாது அவட்கவள்
காதலன் என்றுமோ உரைத்திசின் தோழி'' (நற்.1-4)
என்ற வரிகள் உணர்த்துகின்றன. பூப்பு நீராடியதை உணர்த்திக் தலைமகனை அழைத்து வருக என்று தலைமகள், தோழியைப் பரத்தை வீட்டிற்கு அனுப்புகிறாள். பரத்தையிடம் இரந்து கேட்கும் நிலை தோழிக்கு ஏற்படுகிறது. மேலும் தலைவியின் வாழ்க்கை பரத்தை, தலைவனை விடுவிப்பதில் தான் உள்ளது என்ற அவல நிலையைப் படிக்கும்போது, சங்க காலத்திலே ஆண்கள் பெண்களிடத்திலே காட்டிய நிலைத்தன்மை இல்லா உணர்வை உணர முடிகின்றது. பரத்தையிற் பிரிவோன், மனைவி மாதவிடாய் கழிந்தபின் பன்னிரு நாட்கள் அவளைப் பிரிதல் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எஞ்சிய நாட்களிலும், மனைவி கருவுற்ற நாட்களிலும் கணவன் பரத்தையிற் பிரியலாம் என அனுமதி அளிப்பது போல அக்கட்டுப்பாடு பொருள் தருவதாகவே அமைகிறது எனலாம். ஏனென்றால், பரத்தை மகப்பேறு எய்தினாலும் அவள் கற்பு நலஞ் சான்ற மனைவியோடு ஒருங்கு மதிக்கப்படாள் என்பதே இதன் காரணமாகும். பதிவிரதா தர்மம் என்றும், கற்புக் கடம் என்றும் ஒரு பெண்ணை இவ்வுலகம் சிறப்பாகப் பேச வேண்டுமென்றால், அவள் எத்தகைய பரத்தைமை ஒழுக்கக் கணவரையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று விதிக்கப்பட்ட விதியாகவே பெண்ணுக்கு முத்திரை குத்தியிருக்கிறது சங்கச் சமூகம். இதனை,
''தண்ணம் துறைவன் கொடுமை
நம் முன் நாணின் கரப்பாடும்மே'' (குறுந்.9.7-8)
என்ற வரிகள் மூலம் அறியலாம்.
கைம்மை நோன்பு:
கணவனை இழந்த பெண்கள் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் சூழலிலே வாழ்வதைக் கடிந்து அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்தைப் பூதப் பாண்டியன் பெருங்கடுக்கோ பாடிய,
''காழ் பேர் நல்விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கைபிழிபிண்டம்
வெள் எள் சாந்தொரு புளிப் பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சியாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ'' (புறம் 246.5-10)
என்ற படாலின் மூலம் அறியலாம். பெண்கள் கைம்மை நோன்பை நோற்று, தான் வாழும் நாளில் துன்பப்படுவதை விடத் தன்னை மாய்த்துக் கொள்வது எவ்வளவோ தேர்ந்தது என்று எண்ணியிருப்பதை இதன் மூலம் அறியலாம். மேலும் ஒரு பெண்ணின் பயங்கலந்த மனநிலையை,
''பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நாள்இரும் பொய்கையும் தீயும் ஒரற்றே'' (புறம்.246.1214)
என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன. தீயை, மலர்ந்த இதழ்களுடைய குளிர்ச்சி பொருந்திய தாமரையாக நினைத்து உடன்கட்டை ஏறினாள் என்றால், கைம்மை நோன்புக் கொடுமையின் உச்சம் இங்கு மிகைபடச் சுட்டப்படுகிறது எனலாம்.
முடிவுரை:
பெண்ணியச் சிந்தனைக் கண்கொண்டு நோக்கினால், சங்க காலம் ஓர்ஆணாதிக்கச் சமூகமாகவே இருந்திருக்கிறது என்பதை இற்செறித்தல், கைம்மை நோன்பு, பரத்தைமை ஒழுக்கம் இவற்றின் மூலம் அறியலாம். ஒரு தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தினால், பெண் எந்த அளவு பாதிக்கப்படுகிறாள் என்பதை விட, எத்தகைய மனச் சிதைவுக்கு ஆளாகிறாள் என்பதை உணர முடிகின்றது.
நன்றி: கட்டுரை மாலை
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்ககால மகளிரின் நிலை, மூலம், அறியலாம், சங்கச், பரத்தைமை, கைம்மை, அவள், சமூகம், பெண்ணின், வரிகள், எனலாம், என்பதை, பரத்தை, சங்க, கணவன், வாழ்க்கை, என்பது, வேண்டும், இதன், தலைவியின், Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்