பொருநைக்கரையின் பழம் பண்பாடு

- டாக்டர். அ. பாஸ்கர பால் பாண்டியன்
முன்னுரை
நதிக்கரைகளே நாகரிகத்தின் தொட்டில்களாக விளங்கின என்பர். பொருநைக் கரையில் திருவைகுண்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆதித்த நல்லூரில் உலோக காலச் சின்னங்கள் பல கிடைத்துள்ளன. இவை அக்காலத்திய மக்களின் வாழ்வியலை உணர்த்தவல்ல சான்றுகளாக அமைந்துள்ளன. ஆதித்த நல்லூரில் கிடைத்துள்ள சின்னங்கள் பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்றும் உலோக காலச் சின்னங்களும் இவை மிகவும் பழமையானவை என்றும் கருதுவர்.
ஆய்வுகள்
கி.பி. 1876இல் முதன்முதலில் ஆதித்தநல்லூரில் அகழாய்வு நடத்தியவர் செர்மன் நாட்டு பெர்லின் நகரைச் சேர்ந்த சாகர் (Jagore) 1903-1904 ஆம் ஆண்டுகளில் பிரான்சு நாட்டுப் பாரிசு நகரைச் சேர்ந்த உலூயிசு இலாப்பிக்யூ (Louis Lapieque) ஆய்வுகளை மேற்கொண்டார். கி.பி. 1899-1905 ஆம் ஆண்டுகளில் அலெக்சாண்டர் ரீ (Alexander Rea) ஆய்வுகளை நடத்தினார்.
பழஞ்சின்னங்கள்
ஆய்வுகளில் மிகுதியான தாழிகள் கிடைத்தன. தாழிகளுக்குள் மனித எலும்புகள், மண்டையோடுகள், மண்பாண்டங்கள், பொற்பட்டங்கள் இரும்புப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், தானியங்களின் சிதறல்கள் ஆகியன கிடைத்தன.
பொற்பட்டங்கள்
பொற்பட்டங்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. தமிழர்கள் முதலில் பயன்படுத்தியது பொன். பொன்னிற்குப் பிறகுதான் வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. எனவே தான் வெள்ளியை வெண்பொன் என்றும் வெங்கலத்தைச் செம்பொன் என்றும் இரும்பைக் கரும்பொன் என்றும் பெயரிட்டு அழைத்தனர். இரும்புக் காலத்திற்கு முன்பே தோன்றிய பொன்னைப் பெரிதும் ஆதித்த நல்லூர் மக்கள் பயன்படுத்தியுள்ளதால் இரும்புக் காலத்திற்கு முன்பே நாகரீகம் பெற்ற மக்கள் இங்கு வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது. பொற்பட்டங்கள் முட்டை வடிவத்தில் புள்ளிகளுடன் கலை நுணுக்கத்துடன் செய்யப்பட்டவை.
வெண்கலப் பொருட்கள்
செம்பு, குவளை, கிண்ணம், சாடி, குடம், சட்டி, கெண்டி போன்ற வெண்கலப் பொருட்கள் கிடைத்துள்ளன. வெண்கல வேல், வெண்கலச் சேவல் ஆகியவையும் கிடைத்த பொருட்களுள் அடங்கும்.
இரும்புப் பொருட்கள்
இரும்புப் பொருட்களுள் குறிப்பிடத்தக்கவை கலப்பைக் கொழு போர்க்கருவிகள் ஆகியவை ஈட்டி, வேல், வாள், குத்துவாள், கோடரி, கத்தி, கேடயம், சூலாயுதம் போன்ற போர்க்கருவிகள் கிடைத்துள்ளமை சிந்தித்ததற்குரியது. அலெக்சாண்டர் ரீ மிகுதியான இரும்புப் பொருட்களை கண்டுபிடித்தார். பல பொருட்களின் பெயர் தெரியவில்லை.
மண்பாண்டங்கள்
கிண்ணம், பானை, சட்டி, கலயம், குதிர், குடம், செம்பு, குவளை, வட்டில், வாணலி, தாழி போன்ற பல மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன, மண்பாண்டங்கள் மிகவும் நேர்த்தியானவை.
மண்டையோடுகள்
ஆதித்த நல்லூர்த் தாழிகட்குள் பல மண்டையோடுகள் கிடைத்தாலும் அவற்றுள் இரண்டு மட்டும் குறிப்பிடத்தக்கவை. ஒன்று மத்திய தரைக்கடல் மக்களைப் போன்றது என்றும், மற்றொன்று ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களைப் போன்றது என்றும் கருதுவர். சிலர் இரண்டுமே ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களைப் போன்றது என்றும் கருதுவர். ஆதித்த நல்லூரில் தோன்றிய மக்கள் ஆஸ்திரேலியா, சுமேரியா, எகிப்து போன்ற நாடுகளில் குடியேறியிருக்கலாம் என்று கருத இடமுண்டு.
மக்கள் வாழ்வியல்
கலப்பைக் கொழுக்கள் கிடைத்திருப்பதாலும், தானியங்களின் சிதறல்கள் கிடைத்திருப்பதாலும், இங்கு வாழ்ந்த மக்கள் வேளாண்மைத் தொழில் செய்துள்ளனர் எனலாம். மண்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், பொன் அணிகள், வெண்கலப் பொருட்கள் ஆகியவற்றைச் செய்யக் கூடிய திறன்படைத்த கைவினைஞர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். போர்க்கருவிகள் பல கிடைத்திருப்பதால் போர்க் கலையில் இம்மக்கள் சிறந்த விளங்கியிருக்க வேண்டும். மாற்றார்களுடன் இம்மக்கள் பல போர்களைச் செய்திருக்க வேண்டும் என்பதும் பெரிய நகரம் ஒன்று அருகில் அமைந்திருக்க வேண்டும் என்பதும் தெரியவருகிறது.
அன்றாடத் தேவைகட்காகப் பயன்படுத்தப் பெற்ற பல்வேறு பொருட்களை ஆராயும் போது உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கவும் சமையல் செய்யவும் கற்றிருந்தனர் இம்மக்கள் என்பது தெரிகிறது.
தாழிகட்குள் இறந்தவர் உடலை வைத்து அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் உடன் வைத்துள்ளனர். இறந்து போனவர்கள் மற்றொரு உலகை அடையும்போது அப்பொருட்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆதித்த நல்லூரும் பிற இடங்களும்
ஆதித்த நல்லூரில் கிடைத்த தாழிகளைப் போன்றே கொற்கை, அகரம், வல்லநாடு, முரப்பநாடு, வசவப்பபுரம், கருங்குளம், விட்டிலாபுரம், கொங்கராயக்குறிச்சி, திருப்புளியங்குடி, புதுக்குடி, திருவைகுண்டம், வெள்ளூர், அப்பன் கோவில், மாறமங்கலம் ஆகிய இடங்களிலும் கிடைத்துள்ளன. டாக்டர் கால்டுவெல் கொற்கையில் மூன்று தாழிகளைக் கண்டுபிடித்தார். தமிழக அரசு தொல்லியல்துறை கி.பி. 1969 இல் கொற்கையில் இரண்டு தாழிகளைக் கண்டுபிடித்தது. ஆனால் இத்தாழிகளில் ஆதித்த நல்லூரில் கிடைத்தது போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
சுமேரியாவிலும், எகிப்திலும், பொற்பட்டங்களும் பொன் அணிகளும் கிடைத்துள்ளன. எகிப்திலும் பொற்பட்டம் கட்டும் வழக்கம் இருந்தது என்பார் கில்பர்ட் சிலேட்டர். சிந்துவெளியிலும் இவ்வழக்கம் இருந்திருக்கிறது. சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் ஒன்றில் பொற்பட்டம் கட்டப்பட்டிருப்பது போன்ற அமைப்பு உள்ளது. பொற்பட்டம் கட்டுவது திராவிடர்க்கே உரிய வழக்கம் என்பார் ஜான் மார்ஷல்
ஆதித்த நல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருட்களும் பாலஸ்தீனம், சிரியா, சைப்ரஸ் போன்ற நாடுகளில் கிடைத்த வெண்கலப் பொருட்களுக்கும் தொடர்பு உண்டு. ஆதித்த நல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருட்களுக்கும் தொடர்பு உண்டு. ஆதித்த நல்லூரில் கிடைத்த வெண்கலவேல், வெண்கலச் சேவல் போன்றவை முருக வழிபாட்டை நினைவுப்படுத்துகின்றன.
ஆதித்த நல்லூரில் மிகுதியான மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. ஆனால் சிந்துவெளியில் குறைவாகவே கிடைத்துள்ளன. ஆதித்த நல்லூர் மற்றும் சிந்துவெளிவரை கிடைத்த பொருட்கள் ஒரு சங்கிலித் தொடர் போன்றவை என்பார் அறிஞர் பானர்ஜி
நிறைவு
ஆதித்த நல்லூர் உலோக கால மக்கள் பண்பாட்டில் சிறந்தவர்களாக விளங்கினர் என்பதும் உலகம் முழுவதும் ஒப்புமை உடைய உலோக காலச் சின்னங்கள் காணப்படுகின்றன என்பதும் தெரிய வருகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருநைக்கரையின் பழம் பண்பாடு, ஆதித்த, நல்லூரில், பொருட்கள், என்றும், கிடைத்துள்ளன, கிடைத்த, வெண்கலப், மண்பாண்டங்கள், மக்கள், வேண்டும், உலோக, இரும்புப், என்பதும், பொற்பட்டங்கள், பொற்பட்டம், என்பார், போர்க்கருவிகள், மக்களைப், இம்மக்கள், போன்றது, நல்லூர், சின்னங்கள், மண்டையோடுகள், மிகுதியான, காலச், பொன், கருதுவர், இரும்புக், இங்கு, Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்