திருவிழாக்களும் சமூக நடைமுறைகளும்
- ஆ. முத்துலட்சுமி
முன்னுரை:
தனிப்பட்டவர்களின் மகிழ்ச்சி குடும்பத்தின் களிப்பு சமுதாயத்தின் குதுகலம் ஆகியவை திருவிழாக்களின் குறிக்கோள்கள் என்பது பொதுவான கருத்தாகும். திருவிழாக்கள் கோவில்களை மையமாகக் கொண்டு நடைபெற்றாலும் கூடிவாழும் சமூக மக்களாலேயே கொண்டாடப்படுகின்றன என்பது வெளிப்படை. மக்களால் மக்களுக்காக கொண்டாடப்படுகின்ற திருவிழாக்கள் சமுதாய ஒருமைப்பாட்டிற்கும் சமூக நடைமுறைகளுக்கும் அடித்தளமாக அமைகின்றன, தமிழகம், கோவில்கள் மலிந்த பகுதி என்பதால் சமயச்சார்பற்ற நிலையை வலியுறுத்தும் கோவில் கோபுரம் தமிழகத்தின் இலட்சினையாக வைக்கப்பட்டுள்ளது. கோவில் கோபுரத்தை இலட்சினையாகக் கொண்டுள்ளமையால் பண்டைத் தமிழர்களின் பண்பாடு உணர்த்தப்படுவதோடு திருவிழாக்களின் பல்வேறு கூறுகளும் தமிழ் பண்பாட்டை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படுகின்றன.
தமிழ் மண்ணில் நடைபெறும் திருவிழாக்களாக புரவியெடுப்பு, மாரியம்மன் திருவிழா, காளியம்மன் திருவிழா போன்ற கோயில் திருவிழாக்கள் சாமி கும்பிடு என்னும் பெயரில் தமிழகக்கிராமங்கள் தோறும் நடைபெறுகின்றன. இத்திருவிழாக்களில் அம்மனின் அருள் வெளிப்படுவதுடன் பொழுது போக்கு அம்சங்களாகக் கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ராஜா ராணியாட்டம், குறவன் குறத்தியாட்டம், நாடகம், கூத்து ஆகியவை குறிப்பிட்டக்கலைஞர்களால் நிகழ்த்தப்படுகின்றன. இத்திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் அனைத்துக் கலைக்கூறுகளும் தமிழ் பண்பாட்டைப் பின்னணியாக கொண்டவையாகும்.
திருவிழாக்களும் நோக்கங்களும்: மனிதனுடைய செயல்கள் ஒவ்வொன்றும் முக்கியமான வாழ்வியல் காரணங்களையும் இதனை ஒட்டிய வாழ்வியல் குறிக்கோள்களையும் உள்ளடக்கியது எனக் கொள்ளலாம், இவ்வகையில் திருவிழாக்கள் உழைக்கும் மக்களின் வாழ்வியல் துன்பத்தைப் போக்கி இன்பத்தையும் மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் ஊட்டும் வகையில் அமைகின்றன. திருக்குறள் சிறப்பு என்றும் பொருநராற்றுப்படை சாறு என்றும் மக்கள் கொண்டாடும் திருவிழாக்களைக் குறிக்கின்றன. மக்கள் தம்மை வாழ வைக்கும் தெய்வங்களுக்குச் சிறப்புச் செய்ய வேண்டும் எனக்கருதியும் வாழ்நாள் முழுவதும் தட்டுப்பாடின்றி உணவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தாம் வழிபடும் தெய்வங்களுக்கு விழா எடுக்கின்றனர். இதை
''பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்திட
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென''
என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. ஊரில் பசி மற்றும் பிணி பகை மற்றும் தீனம் ஆகியன நீங்கி நாட்டு மக்கள் வளமுடனும் இன்பமுடனும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. திருவிழாக்கள் பெரும்பாலும் மக்களின் பொருளாதார நிலைகளை மையமாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றன. திருவிழாக்காலங்களில் பல ஊர்களிலிருந்து மக்கள் ஒன்று கூடுவதால் மக்களிடையே ஒற்றுமையும் உறவும் திண்மை பெறுகின்றன. ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளும் சாதிப்பாகுபாடும் முதன்மை பெறுவதில்லை. ஊர்மக்கள் ஒன்றுகூடி ஊர்நன்மைக்காகத் தெய்வங்களுக்கு விழா எடுத்து வழிபடுவது மக்களின் மனங்களில் இயல்பாக அமைகின்றன. இவ்விழாக்களினால் மக்களிடையே நல்லுறவும் விருந்தோம்பல் பண்பும் தெய்வம் பரவலும் முதன்மை பெறுகின்றன. இவற்றோடு கலைகளில் கலை ஆர்வமும் வியாபார நோக்கும் மறைபொருளாகக் காணப்படுகின்றன.
திருவிழாக்கள் மூலம் சமுதாய விழிப்புணர்வும் குடும்ப நலன்களும் பெருகுகின்றன. குடும்பப்பகைகள் மறைகின்றன அண்ணன் தம்பி உறவுகள் வலுப்பெறுகின்றன. குடும்பப் பெண்களின் பக்தி உணர்வு திண்மை பெறுகின்றன. கணவன் மனைவியரின் குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை நிலவுகின்றன. பிரிவுகள் உடைக்கப்பட்டு புதிய உறவுகள் உருவாக்கப்படுகின்றன. திருவிழாக்கள் மக்களை ஒன்றுபடுத்துகின்றன. புதுத்திருமண உறவுகள் மலர்கின்றன.
திருவிழாவும் தனி மனிதனும்: தனிமனிதன் என்பவன் சமுதாயத்தின் அங்கம். பல தனிமனிதர்களின் சங்கமம். கூட்டம் அல்லது சமூகம் எனப்படுகிறது. சமூகத்தில் உள்ள தனிமனிதர்கள் திருவிழாவில் முக்கியஸ்தர்கள் ஆவர். தாங்களும் தங்களைச் சேர்ந்தவர்களும் நலம் பெறுவதற்கும் தாங்கள் செய்கின்ற தொழில் பெருகுவதற்கும் நினைக்கின்ற காரியங்கள் நன்கு நடைபெறுவதற்கும் தெய்வங்களைத் தனியாகவும் சமூகத்துடன் சேர்த்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும் தனியாகவும் சமூகத்துடன் சேர்த்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும் விழாக்கள் எடுத்தும் தெய்வங்களை வழிபடுகின்ற மரபு தனி மனிதர்களின் செயலாக்கங்களாகும். தனிமனிதர்களின் வேண்டுதல்களும் நேர்த்திக்கடன்களும் விழாக்காலங்களில் நிறைவேற்றப்படுகின்றன. இவர்களின் பக்தி மேம்பாடுகளும் பின்பற்றப்படும் இறைவழிபாட்டு நடவடிக்கைகளும் தனி மனித வழிபாட்டில் அடங்குவனவாகும். விளக்கிடுதல், அர்ச்சனை செய்தல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், தண்ணீர் பந்தல் வைத்தல், புண்ணியங்கள் செய்தல், அன்னமிடல் போன்றவை தனிமனித வழிபாடுகளுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன.
திருவிழாக்காலங்களில் மக்கள்: திருவிழாக்காலங்களில் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் உறவினர்களுடனும் ஒன்று கூடி மனம் திறந்து பேசி மகிழ்கின்றனர், ஒருவரை ஒருவர் அணுகுவதும் அவாவுவதும் கூடிக்களிப்பதும் இவ்விழாக்காலங்களிலாகும். உணவு வகைகளை மாற்றிக் கொள்வதும் பண்டமாற்றுச் செய்வதும் புதிய வகையான புழங்கு பெருட்களை வாங்குவதும் கொடுப்பதும் விழாக்காலங்களில் குறிப்பாக நடைபெறும் முக்கிய செயல்களாகும். கோயில் பூசாரியை மதிப்புடன் நடத்துவதும் இவ்விழாக் காலங்களில் தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மக்கள் தமக்காகவும் தம் குடும்பத்திற்காகவும் உற்றார் உறவினர்களுக்காகவும் மட்டுமின்றி ஊர்மக்களுக்காகவும் தெய்வங்களை வழிபடுவதுண்டு. மக்கள் வழிபாட்டில் மழை வேண்டுவதும் கால்நடைகள் பெருக வேண்டுவதும் மக்களின் எண்ணங்கள் ஆகும். பண்டைத் தமிழகத்தில்
''மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்''
எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே என நிலங்களுக்கேற்ப தெய்வங்கள் இருப்பது போல நாட்டுப்புறத் தெய்வங்களும் பல பிரிவுகளை கொண்டிருக்கின்றன. தெய்வங்கள் பலவாக இருப்பினும் இத்தெய்வங்களுக்கு எடுக்கப்படுகின்ற விழாக்கள் ஒன்றே ஆகும். ஆனால் மண்ணை மையமாகக் கொண்டு தெய்வங்களின் பிரிவுகள் அமைவதில்லை மக்களின் மனங்களை மையமாகக் கொண்டு தெய்வப்பிரிவுகள் உள்ளன எனலாம்.
திருவிழாக்களும் பண்பாட்டுக் கூறுகளும்: திருவிழாக்கள் என்பது பண்பாட்டு கூறுகளில் ஒன்று. இத்திருவிழாக்கள் கிராம மக்களிடையே ஒரு உறவுப்பாலமாக அமைந்து கிராமிய பண்பாட்டை வளர்க்கின்ற கலைக் கருவியாக விளங்குகிறது. பெரும்பாலும் சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற திருவிழாக்கள் மக்களின் மறுபக்கத்தை காட்டுகின்ற மனம் நிறைந்த வெளிக்காடாக தோன்றுகிறது. பண்பாடு என்பது மனித சமுதாயத்தில் ஒரு உறுப்பினன் என்ற நிலையில் அறிவு, அறவாழ்க்கை. சட்டம், வழக்கங்கள் பற்றிப் பெற்ற ஒருவித வாழ்க்கை முறையாகும் என்று கலைக் களஞ்சியம் குறிப்பிடுகிறது. திருவிழாக்காலங்களில் குடும்பத்தார் குடும்பம் சார்ந்த உறவினர்களையும் மையமாகக் கொண்டு உணவுவகைகள் தயாரிக்கப்படுகின்றன. உடைகள் வாங்குதல், இல்லம் சுத்தம் செய்தல், மாக்கோலம் இடல், விரதம் மேற்கொள்ளல், விருந்தோம்பல் போன்ற செயல்கள் திருவிழாக்காலங்களில் மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில் தமிழர் தம் பண்பாட்டுக் கூறுகளுள் விருந்தினரைப் பேணுதல் என்பது மிகச் சிறந்த போற்றுதற்குரிய பண்பாகும். இவ்விருந்தின் மூலம் உறவினர்களோடு மனம் விட்டுப் பேசுகின்ற வாய்ப்பும் விருந்தோம்பல் பண்பும் வளர்கின்றது. சாதாரண நாட்களைவிட விழாநாட்களில் விருந்தினரைப் பேணுதல் அதிகமாகக் காணப்படுகின்றது. விருந்தினர்களை விரும்பி அழைப்பதும் விழாக் காலங்களில் மட்டும் தான் என்பது குறிப்பிடதக்கதாகும்.
திருவிழாக்களும் கலைக்கூறுகளும்: திருவிழாக் காலங்களில் மக்களை மகிழ்விப்பதற்கென்று கலை நிகழ்ச்சிகள் பல நடைபெறுகின்றன. தமிழகத்தில் விழாக்களும் பண்டிகைகளும் கலை வளர்க்கும் பண்ணைகள் என்றும் குறிப்பிடுவர். மக்களுடைய சமுதாய வாழ்க்கையோடு பண்டிகைகளை இணைத்து நிகழ்த்தப்படுகின்றன. சிற்பகலையிலும் ஓவியக்கலையிலும் இசை மற்றும் நாடகக்கலையிலும் பண்டைத் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு கோவில்களும் அதை ஒட்டி நிகழ்த்தப்படுகின்ற திருவிழாக்களும் சான்றுகளாக அமைகின்றன.
தமிழகம் பண்டைக் காலந்தொட்டு இயல், இசை, நாடகம் என்னும் முத்துறையிலும் சிறந்து விளங்கியது என்பதை தமிழ் இலக்கியங்கள் கோடிட்டு காட்டுகின்றன. கோவில்களில் இசைக் குழுவினர் நாட்டிய மகளிர் போன்றவர்கள் இருந்தனர் என்பதற்கானச் சான்றுகளை கல்வெட்டுகளின் மூலமும் சமூக வரலாற்றின் மூலமும் அறிய முடிகின்றன. இப்போதும் கோவில் உள்ள மூலவருக்கும் பூஜை காலங்களின் போது மங்கலம் இசைப்பதற்கும் வாத்திய குழுவினரும் பாடுவதற்கு ஓதுவாரும் வழிவழியாக இருந்து வருகின்றனர். இந்நிகழ்வுகளை இன்றும் கோயில்களில் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழாக்காலங்களில் கரகம், காவடி, கும்மி, கோலாட்டம் முதலியன பண்டைத் தமிழர் தம் பண்பாட்டை தரணிக்குப் பறை சாற்றும் கிராமியக் கலைகள் எனப் போற்றுவர். மக்கள் இவற்றில் கலந்து கொள்வதன் மூலம் தங்கள் அறியாமையைப் போக்கி புதிய செய்திகளை அறிந்து கொள்ளவும் பொது அறிவினைப் பெற்றுச் சமய நெறியை பின்பற்றவும் இத்திருவிழாக்கள் துணைசெய்கின்றன எனலாம்.
திருவிழாக்களும் நோன்புகளும் : விரதங்களையும் நோன்புகளையும் மேற்கொள்ளும் மக்கள் நோன்பு காலத்தில உடல்தூய்மை மற்றும் உள்ளத்தூய்மை பேணுவதால் நல்ல மனவடக்கத்தையும் உடல்நலத்தையும் பெறுகின்றனர். சமுதாயத்திற்கு செய்கின்ற தொண்டும் சாதி வேறுபாடற்ற சமரசக் கொள்கைகளும் உண்மையைப் பின்பற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகளும் பிறர் நலம் பேணுகின்ற பெருந்தன்மை குணங்களும் அன்பும் அருளும் நிறைந்த பண்பாடும் எல்லோரும் வாழவேண்டும் என்று எண்ணுகின்ற மனப்பாண்மைகளும் திருவிழாக்களில் மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றன. இத்திருவிழாக்காலங்களில் கடைப்பிடிக்கும் நோன்பு மற்றும் விரதங்கள் மழை வேண்டுதல், நோய் அணுகாமை, குழந்தைப் பேறு, நல்ல ஆரோக்கியம், கால்நடை பெருகுதல், நிறைவான வேளாண்மை மற்றும் செல்வவளம் பெருகவேண்டும் என்பதே விழாக்கால நோன்பு மற்றும் விரதங்களின் போக்காகும்.
முடிவுரை: கோவில் விழாக்கள் கிராம மக்கள் அனைவராலும் ஒன்று கூடி நடத்தப்படுகின்றன என்பது கிராமங்களில் அங்கிகெனதாபடி எங்கும் பிரகாசிக்கின்றன. இத்திருவிழாக்களின் மூலம் மக்கள் ஒன்று கூடுவதும் மகிழ்ச்சிக்கு உள்ளாவதும் மனம் திறந்த பேச்சு வார்த்தைகளும் திருவிழாக்களில் முதன்மை பெறுகின்றன. மக்களின் நல்வாழ்வு நோக்கி நடத்தப்படுகின்ற கோவில் திருவிழாக்கள் பிரதானமான நிகழ்த்து நிலைகளாக விளங்குகின்றன.
நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிழாக்களும் சமூக நடைமுறைகளும், திருவிழாக்கள், மக்கள், என்பது, மக்களின், கொண்டு, மையமாகக், ஒன்று, திருவிழாக்காலங்களில், திருவிழாக்களும், கோவில், பண்டைத், அமைகின்றன, உலகமும், மூலம், தமிழ், மனம், பெறுகின்றன, உறவுகள், விழாக்கள், விழாக்காலங்களில், செய்தல், காலங்களில், நோன்பு, வேண்டும், சமுதாய, மக்களால், சமூக, பண்பாட்டை, வாழ்வியல், முதன்மை, மக்களிடையே, என்றும், விருந்தோம்பல், Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்