கனிமொழியின் கருவறை வாசனை
- டாக்டர் எஸ். ஸ்ரீகுமார்
கவிஞர் கனிமொழி ஒரு பெண்ணியச் சிந்தனாவாதி என்பற்கு அத்தாட்சிப் பத்திரமாக விளங்குவது அவரது ''கருவறை வாசனை'' எனும் கவிதைத்தொகுப்பு. இரண்டாந்தர வர்க்கமாக்கப்பட்டு, காலங்காலமாய் கரை ஒதுக்கப்பட்ட பிணங்களாகிப் பெண் இருப்பது நிஜமே. இந்த நிஜங்களின் நிழல்கள் தன் நெஞ்சில் ஆழமாக வேரூன்றியதன் விளைவுதான் கவிஞர் கனிமொழி சுவாசித்த ''கருவறை வாசனை''. சமுதாயத்தின் சிந்தனைகள் மட்டுமே பெண்ணின் சிந்தனைகளாக வேண்டும் என்ற ஆணித்தரமான கருத்துக்களை ''அத்தனையும் அடுத்தவர்க்காகச் செய்த நான், தனக்கென்று ஒருமுறை வரும் என்ற எதிர்பார்ப்போடு இருப்பதாகச்'' சொல்வதும்,
எனக்கென்று கண்களோ
செவிகளோ கால்களோ
இல்லை
அவ்வப்போது நீ இரவலாய்த்
தருவதைத் தவிர (ப. 15)
என்ற வரிகள் உள்ள வெதும்பலின் அங்கலாய்ப்பாகத் தெரிகின்றன.
இந்தியாவில் மட்டும் நிமிடத்திற்கு 6 கற்பழிப்புகள் நிகழ்வதாகக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. மேனாடுகளில் வெளிப்படையாக, மிகச் சாதாரணமாக நிகழ்வுறும் இந்நிகழ்ச்சிகள், இந்தியக் கலாச்சாரம் என்ற பாரம்பரிய பெருமைக்குள்ளான கற்புநெறி கோட்பாடுகள் சூறையாடப்படுவதை வேதனையோடு, ''பெண்ணுக்கு நடக்கும் அக்னிப் பிரவேசம் சத்தியத்தை நிரூபிப்பதற்கல்ல, ஆண்கள் தொட்ட கறைகளைக் கழுவுவதற்காகவே'' என்பதனை வெளிப்படுத்தும் முறை சிந்திக்கத் தூண்டுகிறது. உலகப் படைப்பின் காலந்தொட்டு இன்றுவரை பெண் மீது பழிபோட்டே பழக்கப்பட்டுவிட்டனர். கிறித்தவத்தில் விலக்கப்பட்ட கனியை உண்ண வைத்ததும் பெண்தான். எனவே பாவத்தின் தொடக்கமே பெண்ணிடமிருந்துதான் தோன்றியதாய் ஒரு கருத்துருவாக்கம். இதனில் வெம்பிய கவிஞர்,
''முதல் காமம் தணித்துச்
சொன்னான்'' கடவுளின்
முதல் பாவம் - பெண்''
என்ற உறுத்தலோடு சொல்லிவிட்டு, இச்சொல் அன்றோடு போய்விடவில்லை இன்றும் தொடர்கிறது என்பதனை ''என்மீதும் வடுக்களாயின'' என்று கூறிவைக்கின்றார்.
பெண் என்றுமே போகப் பொருளாய், போருக்கான பணயப் பொருளாய் நினைக்கப்பட்டவள். வளர்ந்து முதிர்ந்த பின்னரும்கூட விரல் பற்றி நடக்கும் குழந்தைகளைப் போல மதிப்பிற்கான காரணம் கவிஞருக்கும் தெரியவில்லை. கோயில்களில் பெண்ணை விக்கிரகங்களாக்கி, உயிரற்ற ஜடப்பொருளாய் கணித்ததன் காரணமும் விளங்காததை ''நம்பிக்கை பிரதி''களில் கவிஞர் கேட்டு நிற்பது, பெண்ணின் நிதர்சன வாழ்வின் நேர்காணலாகிறது. மேலும் பெண்ணைத் தெய்வங்களாகச் சித்தரிப்பதும், அர்த்தநாரீஸ்வரனின் அழகிய பாதியாய் சொல்லி வைப்பதும் பெண்ணுக்குப் பெருமை சேர்க்கச் செய்தவை அல்ல. பேசாமடந்தைகளாக்கி இரண்டாந்தர நிலைக்குத் தள்ளப்படுதற்கே என்பதனைக் கவிஞர் மின நளினமாகவே சொல்லிச் செல்கிறார்.
சமுதாய வீதியில் பெண்ணின் பிறப்பு முதல் இறப்பு வரையில் உள்ள பாதுகாவலர்களைப் பட்டியலிடும்போது,
''சட்டாம்பிள்ளையாய்
அம்மா
சிறைக்காவலராய்
அப்பா
அறிவுச் சலவைக்குப்
படிப்பு
கைகொட்டிச் சிரித்து அடக்கி வைக்கச்
சுற்றம்
சிலுவையின் ஆணி தகர்த்து இறங்கிவந்தால்
கையில் தாலிக் கயிற்றோடு
கணவன்''
என்று கூறியதோடு நிற்காமல் இனியும் இப்படியொரு பெண்பிறப்பா என்ற மனக்குமுறலில்,
''உன் கருவறைக்குள் மற்றுமொரு
அடிமை''
என முடித்திருப்பது வெறுமையான பெண் இனத்திற்குப் பெண்ணே முற்றுப்புள்ளி வைக்க நினைத்ததா? அல்லது மாற்றத்தை நாடியதா?
நமது மனப்போக்கு, கண்ணோட்டம் அனைத்துமே நமக்காக நாம் கொள்ளும் எண்ணங்களைத் தவிர்த்து, பிறருக்காகத் தன்னை உருப்படுத்தும் போக்கிற்கே முக்கியத்துவம் தருகிறது. சமுதாய அளவுகோலே மற்றவர் நம்மைப் பற்றிக் கொள்ளும் மதிப்பீட்டில் மட்டுமே அமைகிறது என்ற கருத்துக்கோர்வை சிறப்பு. ''கற்பிற்கழகு சொற்றிறம்பாமை'' எனச் சொல்லிச் சொல்லி மூளைச் சலவை செய்வதைப் பொறுத்துக் கொள்ள இயலாத கவிஞரின் இதயம், ''அவள் உழைத்த காசில் குடித்துவரும் கணவனின் அணைப்பைப் பொறுத்துக் கொள்ளுதற்கான காரணம் பத்தினி வரிசையில் தான் இடம் பெறுதற்குத்தான்'' எனச் சுட்டுமிடத்துக்குப் பல பாராட்டுக்கள் கூறலாம். ஏனெனில் கற்புநெறி கோட்பாட்டிற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு அதன் மூலகாரணமே முக்கியமாகிறது.
பழைய வீட்டை பூச்சுப்பூசிப் பார்த்த போதும் அதன் மூல நிலையே வெளியில் தெரிவதாகக் கூறுமிடத்து, ஏதேதோ ஒட்டிக் கொண்டிருக்கும் சொந்த முகத்தைப் பற்றிக் கூறுமிடத்தும், எப்போது மகாத்மா என ஆலோசனைதனை அலசிப்பார்க்குமிடத்தும் கவிஞர் சமுதாய நடப்பினை யதார்த்தத்தோடு வருணிக்கும் இடத்தில் சிகரத்தின் உச்சியில் நிற்கிறார். அதேவேளை இளவயதில் சீராட்டிய வீட்டில் அம்மாவின் பழைய சேலையைப் போல மெத்தென்று மனதைத் தழுவுவதாகக் கூறுவதை வாசிக்கும் வாசகர்கள் அனைவரையும் தலையசைக்க வைத்துவிட்டார்.
தலைவன் பொருள் வயிற்பிரிய எண்ணும்போது ஆறாத்துயரில் மாண்டு நிற்பது சங்க காலம். ''அவனின்றி வாழப் பழகி விட்டது வீடு'' என அவனின்றியும் அமைதிப்பட்ட மனதைப் பெண் பெற்றது சமீப காலம். திருமணத்திற்கு முன் கண்ட கனவுகள் பின்னால் கருச்சிதைந்து பேவதும், வாழ்க்கையில் குறிக்கோள்கள் உண்டு அது உயர்ந்தவை என்பதே கேள்விக்குறி என்ற தொனியில் கேட்டு வைத்திருக்கும் கேள்விகள் மிகப் பொருத்தமானதே. கவிஞரை இரசித்துப் பாராட்ட வேண்டிய இடங்கள் பல. அதில் ஒன்று,
''போட்டி என்ற ஒன்று
மட்டும் எனக்கு இன்றும்
புரியாத தமிழ்ச்சொல்''
என்ற பரந்த மனப்பான்மை பாரினர் அனைவருக்கும் வருதல் வேண்டும். கருவறையில் ஆரம்பித்த போட்டி கல்லறை வரை தொடர்வது வேதனைதான். அவ்வேதனைக்கு மருந்தாகிறது கவிஞர் தம் வார்த்தைகள்.
''வேர்கள் உணராத வலிகள்'' எனும் கவிதை கிராமத்தைச் சிரமமில்லாது வடித்துத்தந்த சித்திர வடிப்பு என்றே கூறத் தோன்றுகிறது. இக்கவிதையில் அனைத்துச் சமுதாயச் சீரழிவுகளும் போட்டியிட்டு முன்வரிசையில் வந்துவந்து அமர முனைகின்றன. அடுத்து, ''மாநகரவாசி'' யிலும் வேர்கள் இல்லா மொட்டைக் கொம்புகளாய் பிரக்ஞையற்ற பதிவுகளாய் இருக்கின்ற மாநகர வீதிகளின் வம்சாவழி வெட்ட வெளிச்சமாகிறது.
பழங்கதைகளைத் தற்கால போலி வேஷங்களோடு ஒப்பீடு செய்யும் வேலை அற்புதம். எடுத்துக்காட்டாக,
''தீயிற்கு தீனியாய்
பழையதை கழித்துவிட்டு
புதிய நந்தனாரிடம்
புதிய தட்டில்
இது ஆடுகளின்
புலி வேஷம்''
கவிஞர் பதில்கள் அவரை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தேர்ந்தெடுத்தக் களமாகக் கவிதையைக் கூறுமிடத்தும், ''நான் எழுதுவது எனக்காக'' எனக் கூறுகின்றார். இருப்பினும் அவரின் அந்தரங்க அவலங்களும், ஆசைகளும் சமுதாயத்தை அசைபோட்டு ஆசையோடு வெளிவந்தவையே என்பது அவர் எழுத்துக்களில் சத்தியமாகிறது.
பெண்ணியச் சிந்தனைகளோடு ஆண்களையும் அனுதாப்பபட வைக்கும் இடங்கள் பெருந்தன்மையின்பாற்பட்ட செயல்கள். ''ஆண்வீரம் பொதிந்தவன்... அவன் அழக்கூடாது என்று அவனை மிருகமாக்கிக் கொண்டு இருக்கிறோம்'' போன்ற இடங்களில் எல்லாம் தீவிரப் பெண்ணியவாதிகளையும் சிந்திக்க வைத்த இடங்களாகின்றன.
மாற்றம் என்பது மானுட தத்துவம் என்பதற்கு ஏற்ப கவிஞரின் பதில்கள், ஏதாவது ஒன்றில் மட்டும் தன் முகவரியைப் பதித்துக் கொள்ளாமல், மாறும் உலகின் மகத்துவத்திற்கு ஏற்ப துறைதோறும் துறைதோறும் தன் பார்வை பதியமிடப்பட வேண்டும் என்ற அவரின் சீரிய குறிக்கோளுக்குப் பாராட்டுகள் பல.
நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனிமொழியின் கருவறை வாசனை, கவிஞர், பெண், சமுதாய, மட்டும், பெண்ணின், வேண்டும், Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்