முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » ஆய்வுச் சிந்தனைகள் » வழிபாட்டுச் சடங்கில் வேட்டை நிகழ்ச்சி
வழிபாட்டுச் சடங்கில் வேட்டை நிகழ்ச்சி

- மு. கலியாணிக்குமார்
வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழக்கத்தினை மனிதன் பலநூறாயிரம் ஆண்டிற்கு முன்பே மேற்கொண்டான். ஏறத்தாழ நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேட்டையாடி வந்த மனிதன் வேட்டை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மற்ற இனக்குழுவுடன் சேர்ந்து ஒரு கூட்டமாக வாழத்தொடங்கிய மக்கள் காட்டு விலங்குகளில் சிலவற்றைப் பிடித்து பழக்கிவளர்க்கத் தொடங்கினார்கள்.
ஆதிகாலத்து மனிதன் இதைத்தான் உண்ணுவது என்று கட்டுப்பாடு வைத்துக்கொள்ளவில்லை. கால ஓட்டத்தில் மனிதன் கல்லிலிருந்தும் மரத்திலிருந்தும் வேட்டைக் கருவிகள் செய்யக் கற்றுக்கொண்டான். அவற்றைக் கொண்டு நீரில் வாழும் உயிரினங்களையும், நிலத்தில் வாழும் உயிரினங்களையும் வேட்டையாடவும், வேட்டையாடிய விலங்குகளை பச்சையாகவே உண்டான். நாளடைவில் நெருப்பை உண்டாக்கும் வழியை அறிந்ததும் விலங்குகளின் இறைச்சியை நெருப்பில் இட்டு வாட்டி உண்ணக்கற்றும்கொண்டான்.
மனிதன் வேட்டையாடுவதில் கைதேர்ந்தவன் என்பது உண்மை. தனது எல்லைகளையும் தனது இனத்தவர்களையும் பாதுகாக்கக் கடுமையாக சண்டைபோடக்கூடியவன் என்பதும் உண்மை. வேட்டையாடி உணவை சேகரிப்பதே அவனது வாழ்க்கை என்பதே அக்கருத்து. மாமிசம் உணவுப்பொருட்களில் ஒன்றாக இருந்திருக்கவேண்டும்.
உணவு சேகரித்து வாழ்ந்த சமூகத்தை மொத்தமாக விவரிப்பது இன்றியாமையாததாகும். உணவைச் சேகரித்து வாழும் ஆரம்பநிலை சமூகத்திலிருந்தவர்களின் எண்ணிக்கை மிக குறுகிய வரம்புக்குட்பட்டது பற்றாக்குறை சேகரிப்பிதற்கு உணவில்லாமல் போகுமே என்ற அச்சம் ஆகியவற்றைப் பொறுத்து இடத்திற்கு இடம் காலத்திற்கு காலம் இனக்குழுச் சமூகத்தின் தன்மை மாறி வந்தன. உணவு சேகரித்தவர்கள் வெகுகாலத்திற்குப் பிறகே உணவை பாதுகாக்கும் நிலைக்கு வந்தனர்.
பூர்வக்குடிக் கூட்டங்களின் உணவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது சமூகத்தில் ஒரு கடமையாயிற்று. உணவு சேகரிக்கும் மக்கள் கூட்டு வேட்டைக்கு முன்பும் பின்பும் தொடர்ச்சியாகப் பல சடங்குகளும் பழக்கங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
நவீன மனிதப் பண்பாடுகளின் இச்சடங்குகளில் சிலர் வேடர்கள் போல வேடம் அணிந்து அபிநயம் செய்வார்கள். இச்சடங்கைக்காட்டுவதோடு நில்லாமல் விவசாய வேலைகளுக்கு ஒத்திசையாகவும் வேட்டை போலவும் நடனச் சடங்கை நிகழ்த்தினர்.
ஒரு குலத்தைப் போலவே ஒவ்வொரு கூட்டத்திலிருக்கும் பொதுவான வழிபாட்டு மரபுகளும் மொழியிலும் இருந்தன. ஒரு சிறிய குலம் வளர்ந்து இத்தகைய இனக்குழு அமைப்பு ஏற்பட்டபோது மற்றவர்களும் இதைப்பின்பற்றினார்கள். அத்தகைய அறிகுறியைப் பெரும்பாலான மனித சமூகங்களில் இன்று காணமுடிகிறது.
ஒரு குல உறுப்பினர் குலச்சின்ன உணவை உட்கொள்வதற்கும் அக்குலம் பெண்களுடன் கலவியில் ஈடுபடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டது போலவே பல குலங்கள் கொண்ட ஒரு பழங்குடிக்கூட்டத்திற்கு வெளியேயும் அவர்கள் மணஉறவு கொள்வதற்கும் அனுமதிக்கப்படாத நிலையிலிருந்ததும் குறிப்பிட்ட குலச் சின்னத்திற்குரிய உணவைச் சேகரிப்பதில் காட்டும் தனி ஆர்வம் சில சிறப்புச் சடங்குகளாக வளர்ந்தன. ஏதோ ஒரு வகையான பாலியல் மற்ற சடங்குகளும் எவ்வளவு கண்மூடித்தனமானவையாக இருந்தபோதிலும் அவை (குறிப்பிட்ட) உணவு அதிகமாகக் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டன. எனவே அவை அவ் உணவை உட்கொண்டவர்களுடையது. வளமை பெருக்கச் சடங்குகள் (Fertilityrites) என்று குறிப்பிடப்படுவது ஒரு பகுதியே கலையாகப் பார்ப்பதாகும்.
நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டில் நடைபெறும் சடங்கியல் நிகழ்த்துகளில் வேட்டைக்குச் செல்லுதல் என்ற சடங்கியல் நிகழ்த்து தன்மைகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள கிராமங்களிலிருக்கும் ஆண் பெண் தெய்வ கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சியை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.
வேட்டைச் சடங்கு நடைபெறும் இடம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாய தொழிலுடன் தொடர்புடைய மக்கள் மத்தியில் அவர்கள் வழிபடும் ஆண் தெய்வமான கடலைமாடன். கருப்பசாமி, முனியன், மாடசாமி, போன்ற தெய்வ வழிபாட்டிலும் பெண் தெய்வமான மாரியம்மன், காளியம்மன், முத்தாரம்மன் போன்ற பெண் தெய்வ கோயில்களிலும் வேட்டைச் சடங்கு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. கோயிலில் சாமி அருள் ஆடும் சாமியாடிகளே இந்த வேட்டைச் சடங்குகளை நிகழ்த்துவார்கள். இப்பகுதி எல்லா கோயில்களிலும் இரவு 12 மணிக்கு வேட்டைச் சடங்கு நிகழ்ச்சி நடைபெறும். வேட்டைக்குச் செல்லும் நபர் வேட்டைக்குத் தேவையான ஆயூதங்களான வல்லயம், வீச்சு அரிவாள், இடுப்பில்கத்தி வைத்துக்கொண்டும், காலில் வேட்டைச் செருப்பு அணிந்துகொண்டும், இடுப்பில் உணவு பாத்திரத்தைக் கட்டிக் கொண்டும், கையில் பெரிய தீப்பந்தம் ஏந்திப் பிடித்துக்கொண்டும் ஊரின் சுடுகாட்டுப் பகுதிவரைசென்று திரும்பி வருவதை வேட்டைக்குச் செல்லுதல் என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
வேட்டைச் சடங்கின் ஒப்பனைகள்
வேட்டைக்குச் செல்லும் நபர் அதற்கான ஆடையான அரைக்கால் சட்டையும் தலையில் மூன்று அல்லது இரண்டு கொம்புகள் உடையகுல்லாவும் இடுப்பில் சலங்கையும் கட்டிக் கொள்வர். அவர்கள் முகத்தில் சந்தனம், குங்குமத்தை பூசிக்கொள்வர். ஒவ்வொருநபர்களும் தனித்தனியாக அடையாளம் காண ஆடை அணிந்து கொள்வர்.
வேட்டை நிகழ்ச்சியில் இசைக்கருவியான பெரிய சத்தம் தரக்கூடிய இசைக்கருவிகளைக் கொண்டு இசைக்கப்பட்ட பின்பு வேட்டைக்குச் செல்வார்கள்.
வேட்டைக்கு அனுப்பும்முறை
வேட்டைக்குச் செல்லும் முன் கோயிலிருந்தும் தெய்வங்களுக்கு முன்பு இசையுடன் கூடிய ஆட்டம் ஆடுவார்கள். தாய்த்தெய்வவேடம் அணிந்து ஆடும் நபர் வேட்டைக்குச் செல்லும் நபரின் நெற்றியில் விபூதி பூசிய பின்பே வேட்டைக்குச் செல்வர். இத்தகைய நிகழ்த்துதல் தாய், மகன், உறவினர் என்ற முறையில் வழி அனுப்பிவைக்கும் முறையை இங்கு நிகழ்த்தப்படுகிறது. வேட்டைக்கு இரண்டு அல்லது மூன்று நபர்கள் சேர்ந்துகொள்வார்கள்.
பலி செய்யும் முறைகள்
வேட்டைக்கு வழி அனுப்பி வைத்தபின்பு கோயில் தெய்வங்களுக்கு வேட்டையாடிய விலங்குகளின் அடையாளமாக ஆடுகள், சேவல், பன்றி போன்ற மிருகங்களையும் பலி செய்வார்கள். பலி செய்யப்படும் விலங்குகள் நெஞ்சுபிளக்கப்படும். தலையை வெட்டி வயிற்றுப்பகுதியை குத்தி பலியிடுவதைப் பார்க்கும்பொழுது வேட்டையாடிய விலங்குகளின் அடையாளம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. வேட்டைக்குச் சென்று திரும்பியவர்களும் அந்த பலி செய்த விலங்குகளின் மீது படுத்து அதன் இரத்தத்தைக்குடிப்பது போன்று பாவணை செய்வார்கள். இந்த நிகழ்த்து தலை மனிதனின் பழமை வடிவத்தை வெளிபடுத்துவை பார்க்க முடியாது.
உணவுப் பங்கீட்டு முறைகள்
கோயிலில் பலி செய்த விலங்குகளில் ஊரின் பொதுவான பலி செய்யப்பட்ட விலங்கான ஆடு, பன்றியின் இறைச்சியைப் பங்குவைப்பார்கள். இதனைப் பார்க்கும் வகையில் உணவு பங்கீட்டு முறையை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சியாக மனிதனின் மரபுக்கலை புலப்படுகிறது.
முடிவுரை
நாகரீகம் வளர்ந்த காலத்திலும் மக்கள் எங்கும் தனது ஆழ்மனதிலுள்ள பழைய வாழ்க்கை மரபுகளை இன்றைய காலத்திலும் அதன் வடிவங்களை மறக்காமல் பல்வேறு வகையிலும் சடங்கியல் தன்மைகளை வழிபாட்டுடன் ஒருங்கிணைத்து நிகழ்த்தி வருவதைப் பார்க்க முடிகிறது. உலக அளவில் மானிடவியல் ஆய்வாளர்கள் ஆய்வுசெய்த அறிக்கையின்படி இன்றும் வேட்டையாடி தனது பசியைத் தீர்த்துக்கொண்டும் வாழும் ஆதிவாசி பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை இன்று நாகரீகம் அடைந்தும் அந்த வேட்கை நிகழ்ச்சியை நிகழ்த்துவதும் இத்தகைய நிகழ்த்து கலைகள் செழிப்புச் சடங்கை மையமாக வைத்தும் வருடம் ஒருமுறை தனது இனக்குழுவுடன் இந்த சடங்கியலில் நிகழ்த்துதலில் மிருகங்கள் வேடம் அணிந்து பாவணை செய்வதும், தங்களுடைய பழமையை வெளிப்படுத்துகிறது. காலத்தின் மாற்றத்தால் இன்று வேட்டைச் சடங்குகள் மனித ஆவிகளுக்கு சவால் வடிவதையும்ப் போலவும், ஆவிகளுக்கு மிகப்பெரிய சக்தி இருப்பதாகவும் மனித மனம் நினைக்கும்வகையில் இன்றைய வழிபாடுகள் புராணக்கதைகளுடன் புனைந்து வழிபடுவதைப் பார்க்க முடிகிறது. இதைப்போன்று நிகழ்த்துக் கலைகளை ஆய்வு செய்யும் முறையில் பல தகவலை கொண்டுவர இக்கட்டுரை அமைந்துள்ளது.
துணைநூல்கள்
1. டி.டி.கோசாம்பி, ''பண்டைய இந்தியா'', என்.சி.பி.எச். வெளியீடு, 1989, சென்னை.
2 நா.வானமாலை, மக்களும் மரபுகளும், என்.சி.பி.எச்.வெளியீடு 1975, சென்னை.
3. வாழ்வியல் களஞ்சியம், 87.
4. என். ஸ்ரீனிவாசன், மனிதன் வித்தியா பப்ளிகேசன்ஸ், சென்னை.
பின்னிணைப்பு
1. வேட்டைச் சடங்கு நிகழ்த்துகளின் கருத்துப்படம்
1ABC - மக்கள் குடியிருப்புப்பகுதி
2A1,A2 - கோயில் பகுதி
2A12A2 - துணைத் தெய்வங்கள்
3A1A2 - பார்வையாளர்கள்
4 - நிகழ்த்தும் கலைஞர்கள்
41 - இசைக்கருவிகள் நிகழ்த்துத்துறைகள்
5A1A2 - விவசாய நிலப்பகுதிகள்
6A - நீர்வீழ்ச்சிப் பகுதி ( குளம், ஆறு, கிணறு, ஓடை)
7A - சுடுகாடு ( இறந்த உடலைப் புதைக்கும் இடங்கள்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
வழிபாட்டுச் சடங்கில் வேட்டை நிகழ்ச்சி, வேட்டைக்குச், வேட்டைச், உணவு, மக்கள், மனிதன், உணவை, தனது, தெய்வ, செல்லும், வேட்டையாடி, சடங்கு, அணிந்து, வேட்டைக்கு, வாழும், நடைபெறும், விலங்குகளின், பெண், முறையை, சென்னை, பார்க்க, நிகழ்த்து, நபர், இத்தகைய, வாழ்க்கை, வேட்டையாடிய, வேட்டை, செய்வார்கள், விவசாய, இன்று, மனித, சடங்கியல், Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்