முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » ஆய்வுச் சிந்தனைகள் » பஞ்சாயத்து அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும்
பஞ்சாயத்து அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும்

- ச. செயராணி
முன்னுரை
மனிதன் வேட்டையாடிய நிலையினை விடுத்துக் குழுக்களாகச் சேர்ந்து வாழத் தொடங்கும்போது அவர்களிடையே சிக்கல்கள் ஏற்பட்டன. குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்ப்பதற்குத் தனியாக ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தனர். தங்களுடைய சிக்கல்களை அந்தத் தலைவன் வழியாகத் தீர்த்துக் கொண்டனர். கிராமங்களை நிருவகிப்பதற்கு மக்கள் தாங்களாகவே ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டனர். தொடக்கக் காலத்தில் அமைந்திருந்த நீதி அமைப்பு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்ச்சியடைந்துள்ளது. பிற்காலத்தில் இந்த நீதி அமைப்பு கிராமப் பஞ்சாயத்து என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இத்தகைய பஞ்சாயத்து அமைப்பின் தோற்றம் வளர்ச்சி பற்றிய செய்திகளை அறிந்து எடுத்துக்காட்டி ஆராய்ந்து புலப்படுத்துவது இவ்வியலின் நோக்கமாகும்.
பஞ்சாயத்து - சொல் விளக்கம்
''பஞ்சம்'' என்ற சொல்லுக்கு ''ஐவர்'' என்றும் ''ஆயம்'' என்ற சொல்லுக்கு ''கூட்டம்'' என்றும் கழகத்தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. இந்த இரண்டு சொற்களும் இணைந்து (பஞ்சம்+ஆயம்) ''பஞ்யசாயம்'' என்ற சொல் உருவானது. பஞ்சயத்து என்ற சொல்லுக்கு ''village jury'' என்ற தமிழ் ஆங்கில அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ''an assembly of five or more persons'' என்றும் விளக்கம் தருகிறது. இதனை ''ஐவர் கூடிய நியாய சபை'' எனவும் கழகத்தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. இலக்கியங்களிலும் இச்சொல்பற்றிப் பல பெயாகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில்.
''ஐம்பெரும்குழுவும் எண்பே ராயமும்
அரச குமரரும் பரதகுமரரும்''
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பஞ்சாயத்து என்ற சொல் நாட்டு வழக்கிலும் இலக்கியங்களிலும் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளது என்பது புலனகிறது. தற்காலத்தில் ''பஞ்சாயத்து'' என்ற சொல் ''ஐவர் குழு'' எனப் பொருள் பெறுகிறது. இந்த ஐவர் குழு மக்களுக்கு நிறைவளிக்கும் வகையில் நியாயமான தீர்ப்பினை வழங்கி வந்தது. ஐவர் குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி அமர்ந்து பேசிநியாயம் வழங்குவபர்கள் பஞ்சாயத்து என்பதற்கு ''நியாயசபை'' என்ற பெயரும் உண்டு. இது ஐந்து பேர் கூடி.
விவாதிக்கக்டிய சபையாகும். ஒரே சாதியைக் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்ப்பதற்குச் சாதிப் பஞ்சாயத்து என்ற அமைப்பை வைத்துள்ளனர். ஊருக்குப் பொதுவான அமைப்பாக ''சாவடிக் கோர்ட்'' என்ற அமைப்பு விளங்குகிறது. மேலும் பஞ்சாயத்து என்ற சொல் வழக்கு விவகாரம் என்ற பொருளிலும் பயன்படுத்தப்டுகிறது. ''கூட்டம்'' ''ஊர்க்கூட்டம்'' ''சங்கம்'' போன்ற சொற்களாலும் இது அழைக்கப்படுகிறது.
மன்றம்
சங்க இலக்கியங்களில் ''மன்றம்'' என்பது மக்கள் கூடுகின்ற இடம்என்று குறிப்பிடப்படுகிறது. மன்றம் என்பது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த மன்றம் என்ற அமைப்பு தான் இன்றைய பஞ்சாயத்து அமைப்பின் தோற்றத்திற்கு அடிப்படையாகும். மன்றம் ஊர் நடுவிலுள்ள மரத்தடியில் கூடியது. இந்த மரத்தடி இடம் ஊர்மக்கள் அனைவரும் கூடுவதற்கு ஏற்ப ஊர் நடுவில் அமைத்திருக்கும் இந்த இடத்தில் சிக்கல்கள் எழும்போது கிராமமக்கள் ஒன்று கூடுவர். மன்றம் என்பது இனக்குழுச் சமூகத்தில் பண்பாட்டுக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மரத்தடியில் அனைவரும் கூடுவது கூட்டு வாழ்க்கையினைப் பிரதிபலிக்கின்றது. ஊர்க்கூட்டம் வேப்பமரத்தின் அடியில் தான் பெரும்பாலும் நடைபெறும். வேம்பு குளிர்ச்சி தரக்கூடியது. எனவே உடல்நலம்,மனநலம் கருதி மன்றங்கள் வேப்பமரத்தடியில் செயல்பட்டிருக்கின்றன என உணரலாம்.
''மன்ற வேம்பி னொண் குலைய மலைந்து
''மன்ற வேம்பி னொண் பூவுரைப்ப
''மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர்''
என்னும் புறநானூற்றுப் பாடலடிகளின் வழியாக வேம்பு ஊர்மக்கள் கூடுதற்கமைந்த மன்றமாக அமைந்திருந்தமையைத் தெரிய முடிகிறது. கிராமங்களில் இன்று பஞ்சாயத்து நடைபெறும் இடம் ''சங்கம்'' ''சாவடி'' எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் அரசர்கள் மக்களிடம் உள்ள குறைகளைத் தீர்க்க நான்கு சுவர்களுக்கிடையே அமைந்த அரண்மனையைத் தான் பயன்படுத்தினர். அரசர்கள் இந்த இடத்தில் அமர்ந்து நாட்டுமக்களிடம் நீதியைக் கூடி அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மனிதனும் அரசனிடம் கொண்டு வந்த வழக்குகளைத் தீர்த்த இடம் வளர்ச்சியடைந்த நிலையில் ''அவை'' என்று அழைக்கப்பட்டது.
தொடக்க நிலை
பஞ்சாயத்துக்களின் தோற்றம் பற்றி ஆராயுமுன் சிற்றூர்களின் தோற்றத்தைப் பற்றி அறிவது இன்றியமையாததாகும். சிற்றூர்கள் தோன்றிய பின்னரே பஞ்சாயத்துத் தோன்றியது. மனிதன் அனைத்தையும் கணிக்கப் கூடியவன் ''பிரபஞ்சம் முழுவதிலும்'' மனிதன் முதன்மையாக விளங்குகிறான். மனிதர்களின் செயல்களில் கடவுளின் பங்கு எதுவும் இல்லை என்ப தை நம்மால் உணரமுடிகிறது. தொடக்ககாலச் சமுதாயம் ஏற்றத்தாழ்வுகளின்றி ஒரே தன்மையுடன் இருந்தது. மனித சமுதாயத்தில் குடும்பச் சிக்கல்களைத் தீர்க்கும் முறை ஒழுக்கமுறை, மொழி போன்ற சில கூறுகள் தொடக்கப் காலத்திலேயே தோன்றிவிட்டன. மனிதன் பழங்காலத்தில் நாடோடியாகக் காடுகளில் வேட்டையாடியும் இயற்கையாகக் கிடைக்கும் காய் கனிகளை உண்டும் வாழ்ந்திருக்கிறான். பின்பு இம்மனிதன் நீர்நிலைகளை கொண்ட செழிப்பான இடங்களாகப் பார்த்து ஓரிடத்தில் தங்கி வாழாத் தொடங்கினான் இத்தகைய மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். இவர்களின் வாழ்க்கையை ''இனக்குழு வாழ்க்கை'' என்று வரலாற்று ஆந்திரயெவ் குறிப்பிட்டிருக்கிறார். வேட்டை சமுகத்தில் குகைகளில் மனிதன் இனக்குழு வாழ்க்கையில் வீடு கட்டிக்கொண்டு வாழத் தொடங்கினான். இவ்வாறு ஓர் இடத்தில் நிலையாக வாழ்ந்த இனக்குழுவே பின்பு சிற்றூராகப் பரிணாம வளர்ச்சி பெற்றது. மனிதன் கூடி வாழத் தொடங்கிய போது தேவைகள் அதிகமாயின. எல்லோராலும் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்து கொள்ள இயலவில்லை. எனவே மனிதனுடைய தேவைகளை நிறைவு செய்துகொள்ளும் பொருட்டு உறவுகள் ஏற்பட்டன. உறவின் அடிப்படையில் குடும்ப வாழ்க்கை ஏற்பட்டன.
குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி உறவுநிலை இருந்தது. குடும்பத்தின் தலைவன் கணவனே. குடும்ப நிர்வகத்தைக் கணவனே ஏற்று நடத்தி வந்தான். மனிதன் கூடி வாழத் தொடங்கிய போத சிக்கல்கள் ஏற்பட்டன. இச்சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள அனைத்துக் குடும்பத்திலும் உள்ள தலைவர்கள் ஒன்று கூடித் தங்களுக்குள் ஒருவனை வீரத்தின் அடிப்படையில் தேர்வு செய்திருக்கின்றனர். அவனே அக்குழுவிற்குத் தலைவனாக இருந்திருக்கிறான். அத்தலைவன் தன்குழுவிலுள்ள குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களையும் குழுவிற்குள் உள்ள ஒட்டு மொத்தச்சிக்கல்களையும் மக்களுடன் கூடிப் பேசித் தீர்த்து வைத்தான். மனிதனுடைய இந்த நிலையே பஞ்சாயத்தின் தோற்றத்திற்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. பஞ்சாயத்து அமைப்பு முறையானது கிராமம் என்ற அமைப்புத் தோன்றி மனிதன் கூடிவாழத் தொடங்கிய போது தோன்றியிருக்கலாம் என்றும், அது அம்மக்களிடையே ஏற்படும் சிறு சிறு சிக்கல்களையும் மையமாகக் கொண்டு தோன்றியது என்றும் அறியமுடிகிறது. இவ்வமைப்பு முறையானது சிற்றூர்களிடையே தோன்றி விளங்குவதால் இது கிராமப் பஞ்சாயத்து எனவும் அழைக்கப்படுகிறது. இனக்குழுத் தலைவன் சிக்கல்கள் ஏற்படும்பொழுது மட்டுமே அவற்றைத் தீர்த்து வைக்கிறான். பிறசூழல்களில் அவனும் குழு மக்களைப் போலச் சாதாரண வாழ்க்கை நிலையிலேயே வாழ்ந்திருக்கிறான். இந்த மக்களிடம் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்கும் முறைகள் பல நிலைகளில் மாற்றம் பெற்று தற்போதுள்ள பஞ்சாயத்து என்ற நிலைக்குக் காரணமாக இருந்திருக்கின்றது என்பதை அறியமுடிகின்றது.
மக்களின் சிக்கல்களில் மன்றங்களின் பங்கு
சிற்றுர் மக்களுக்கிடையே ஏற்படும் சிக்கல்களை ஊர்ப்பெரியவர்கள் நியாயம் கூறும்போதுதான் மன்றம் செயல்பாடுடையதாகமாறுகின்றது. மன்றத்தில் வழக்குகளை விசாரிக்கும்போது யாரும் அதிகாரம் செலுத்த முடியாது. மன்றம் என்ற அமைப்பு அதிகாரம் இல்லாத அமைப்பாக இருந்து செயல்படுவதை இன்றும் கிராமங்களில் காணமுடிகிறது. கிராமத்திலுள்ள முதியோர்கள் தான் சிக்கல்களைத் தீர்த்து வைக்கின்றனர். இவர்களுக்குத் தேர்தல் வைப்பது இல்லை. வயதிலும் அறிவிலும் முதியோர்கள் இருப்பவர் தாமாகவே தலைவராக முன்னின்று வழக்குகளைத் தீர விசாரித்து ஊர்ப்பொதுக் காரியங்களிலும் ஈடுபட்டனர் உழவர்கள் வயலில் கதிரை. அறுத்துக் களத்திலிட்டுத் தூய்மைசெய்யும்போது பலத்த காற்று வீசிப் பதர்கள் பறந்தன. இந்தப்பதர்கள் பக்கத்தில் உள்ள பரதவரின் உப்பளங்களுக்குச் சென்று உப்பில் கலந்தன. இதனால் உழவர்களுக்கும் பரதவர்களுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
ஒருவருக்கொருவர் சேற்றை அள்ளி இறைத்துக்கொண்டு சண்டை போட்டதால் முதியோர்கள் சண்டையை விலக்கினர். பரதவர்களின் உழைப்பிற்குப் பதிலாக உப்பை அசுத்தப்படுத்தியதை ஈடுகட்டுவதற்காக நன்றாகக் காய்ச்சி இறக்கிய தேறலைப் பரதவர்க்குக் கொடுக்கச் செய்தனர். முதியோர்கள் குற்றங்களை நன்கு விசாரித்து ''நடுவு நிலை பிறழாது'' குற்றங்களுக்கு ஏற்ப மன்றங்களில் தண்டனை வழங்கியிருக்கிறார்கள்.
மன்றங்களின் சிதைவு
''மன்றத்துள்ள மழியவூக்குநர் மிடறபுத்
துள்ளுநர் பனிக்கும் பாழாயினவே
நின் படைஞர் சேர்ந்த மன்றல் கழுதை யோகி''
என்ற பாடலடிகள் வழியாகப் படைவீரர் ஊரிலுள்ள மன்றங்களுக்குச் சென்று தங்கி தம்மை எதிர்த்த பகைவரை வென்ற அம்மன்றங்களையும் கழுதை ஏர் பூட்டிப் பாழ் செய்திருக்கிறார்கள் என உணர முடிகிறது. மக்களின் மதிப்புக் குறியீடாக மன்றம் விளங்கியது. பகைமன்னனின் முதல்தாக்குதலுக்குப் போர்க்காலங்களில் மன்றம் இலக்காக விளங்கியது தெரிய வருகிறது. ஊர் மன்றங்கள் பகைவர் படையால் அழிந்துபோன நிலையை இதன்வழி அறியமுடிகிறது.
இலக்கியங்களில் காணப்படும் பஞ்சாயத்து
ஓரு நாட்டின் நாகரிகச் சிறப்பையும் வாழ்க்கைப் பண்பாட்டினையும் அறிந்து கொள்ளுதற்குத் தலை சிறந்த கருவிகளாய்த் திகழ்வன. அந்த நாட்டில் நின்ற நிலவுகின்ற சீரிய இலக்கியங்களே. இத்தகைய சிறப்புவாய்ந்த இலக்கியங்களில் மன்றம், பொதியில், அம்பலம், அவையம், வேதிகை அவை, ஊராண்மை மன்றில் என்று பல பெயர்களில் பஞ்சாயத்து குறிப்பிடப்பட்டுள்ளது. கிராம செயல்பாடுகளை நிருவகித்தல் என்னும் நிலையில் மேற்கண்ட சொற்கள் குறித்தலைக் காண்கிறோம். இவற்றில் மன்றம், பொதியில் அம்பலம் என்பவை ஒரு பொருள் பலசொல் ஆகும் குறுத்தொகை, புறநானூறு இவற்றில் அவையம், மன்றம் பொதியில் போன்ற சொற்கள் வழுங்கப்படுவதைக் காணலாம்.
குறுந்தொகை
குறை நேர்ந்தவர்கள் யாவரும் நீதிமன்றத்தை அணுகினர் காதலர்கள். தங்கள் காதலிகளைத் திருமணம் புரிந்துகெள்ள நீதிமன்றத்தை நாடினர். நாடியவர்களை விசாரணை செய்தது. மன்றமே அவர்களுடைய காதலை நிறைவேற்றியுள்ளது என்பதைக் குறுந்தொகையில் கோழிக் கொற்றனார் பின்வருமாறு கூறுகிறார்.
முறையுடைய அரசன் செங்கோல் அவையத்து
இயான்றற் கடவின் யாங்கா வதுசொல்
பெரிதும் பேதை; மன்ற
அளிதோ தானேயிவ் அழுங்கல் ஊரே''
இவர் பஞ்சாயத்தை அறங்கூறவையம் என்று கூறியுள்ளார். புறநானூற்றிலும் அறங்கூறும் அவையங்கள் இருந்ததை அறியமுடிகிறது.
நீதிநூல்கள்
சங்க காலததைச் சங்கம் மருவிய காலம் அல்லது நீதிநூல் காலம் என்றனர். காதல், வீரம் கொடை முதலிய உணர்ச்சிகளிலும் இயற்கை இன்பத்திலும் ஈடுபட்டிருந்த புலவர்களின் உள்ளம் அடுத்த சில தலைமுறைகளில் நீதிகளைப் பாடும் நிலைக்கு மாறியது.. சேர, சோழ, பாண்டியரின் அமைதியான ஆட்சியில் களப்பிரர்கள் புகுந்து நாட்டுமக்களின் அமைதியைக் கொடுத்தனர். நாட்டு மக்களின் வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டு விட்டதால் சமுதாயத்தில் எப்படி வாழவேண்டும் என்ன நீதிகளைப் போற்றவேண்டும் என்று கூறுவதற்குப் புலவர்கள் நீதிநூல்களைப் பாடினார்கள். கி.பி.100 முதல் 500 வரையில் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும் இவற்றில் திருக்குறல், நாலடியார் ஆகியநூல்களில் ஊராண்மை வேதிகை போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.
பக்தி இலக்கியம்
சங்க காலத்தையும் நீதிநூல் காலத்தையும் அடுத்து பக்தி இயக்கக் காலம் தோன்றியது. கி.பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் சைவ சமயப் பெரியவர்கள் பாடல்கள் பல இயற்றினர். இக்கால கட்டத்தில் தோன்றிய பெரிய புராணத்தில் வழக்கு நடந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சான்றுகள்
தென்னகத்து அரசியல் உள்நாட்டு நிறுவனங்கள் பெற்றிருந்த இடம் சிறப்புமிக்கதாகும். ஒவ்வொருவரும் தனக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொண்டனர். வெளிநாட்டவரை எதிர்நோக்காது தன்னைத்தானே ஆண்டுகொண்டனர். உரிமை மிகுந்த சிறு குடியரசாக விளங்கிய இம்மன்றங்ளின் சிறப்பினைப்பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐரோப்பிய அறிஞர்கள் கண்டு போற்றி உள்ளனர். கிராம வாழ்க்கையின் ஒற்றுமையும் நீடித்த தன்மையுமே இந்தியா கடந்த காலத்தில் பெற்ற நன்மைகள் அனைத்திற்கும் அடிப்படை ஆகும்.
பரந்துபட்ட நிலப்பரப்பை மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். தம் ஆளுகைக்கும் கீழிருந்த எல்லா இடங்களுக்கும் சென்று நீதி வழங்கமுடியாதால் கிராமங்களில் ஊர்ச்சபைகள் ஏற்படுத்தப்பட்டன. ஊர்ச்சபைகளில் கிராமமக்களே தங்கள் தலைவர்களைத் தேத்தெடுத்துக் கொண்டனர். நீதி நிர்வாகங்களைக் கவனித்து வரும் மக்கள் குழுவினைக் கொண்ட அந்தக் கிராமச் சங்கங்கள் ஊர்ச்சபைகள் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. ஊ‘ச்சபையில் அரசனின் தலையீடு இருப்பதில்லை. தமிழகத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த ஊர்ச்சபை பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய பல்லவர் சோழர், பாண்டியர், கல்வெட்டுக்கள் தொன்னாட்டின் கிராம சபைகளைப் பற்றிக் கூறுகின்றன. ஊர்ச்சபைகள், பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் ஆட்சிக்காலத்தில் சிறப்பாகச் செயல் பட்டிருக்கினறன என்பதை வரலாற்றுச் சான்றுகள் வழி அறியமுடிகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் நீதி நிர்வாக முறை
18ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் கர்நாடகத்து அரசிலில் பெற்ற வெற்றிகளால் நிர்வாகத்தில் புகுத்தனர். நீதி நிர்வாகப் பணிகள் இயல்பாகவே செயல்பட்டுக்கொண்டிருந்தது. நீதி நிர்வாக பணிகள் இயல்பாகவே நடைபெற்றன. நீதி நிர்வாகத்தை விரிவுபடுத்தி இந்நாட்டவர்களுக்கும் நீதி வழங்கத்த தொடங்கினர். ஆங்கிலேயர்கள் பிரிட்டனின் பேரரசில் நீதி வழங்கினர். பிரிட்டனின் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பழைய நீதி மன்றத்துக்குப் பதிலாக பேரரசின் பொறுப்பிலான நீதிமன்றத்தை உருவாக்கினர். தலைமைக்கு ஒரு நடுவரையும் துணைத்தலைமைக்கு இரண்டு நடுவர்களையும் இந்த நீதிமன்றத்துக்கு தேர்ந்தெடுத்துக்கொண்டனர். இந்த மன்றம் அதிகாரத்தைப் பெற்ற அனைத்து மக்களுக்கு நீதி வழங்கியுள்ளது. ஐரோப்பியர்களுக்கு ஐரோப்பிய சட்ட விதிகளையும் இந்துக்களுக்கு இந்து சட்டவிதிகளையும் முஸ்ஸிம்களுக்கு முஸ்ஸிம் சட்ட விதிகளையும் பின்பற்றினர். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்குகளுக்கு இம்மன்றம் நீதி வழங்கியது. எளிய மக்கள் அதிகச் செலவு இல்லாமல் நீதி பெற்றனர். ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப் பெற்ற பாதுகாப்பாளர் நீதிமன்றம்(Court of Wards) இளையோர் மகளிர்(Minor) மற்றும் சிலரின் உரிமைகளையும் பொருளையும் பாதுகாத்தது. நீதி நிர்வாகம் ஒழுங்கான அமைப்புடனும் அமைதியுடனும் செயல்பட்டு அனைவருக்கும் சிறந்த முறையில் நீதி வழங்கியது.
இருபதாம் நூற்றாண்டில் நீதி நிர்வாகம்
சட்டத்தின் முன் சமம் என்ற கொள்கைக்குச் சட்ட மரபுகள் இடம் தரவில்லை. பழமையான சட்ட விதிகள் பொதுமக்களுக்கு நியாயமான நீதியைக்கொடுக்கவில்லை. சமூக ஏற்றத் தாழ்வைக் காட்டி வழக்குகளை விசாரித்து தண்டனைகளில் வேற்றுமை காட்டினர் மராட்டியர் காலத்துத் தஞ்சையில் நீதி நிர்வாகத்தில் அநீதி தாண்டவமாடியதை கண்ணுற்ற சுவார்ட்ஸ் பாதிரியார் புதுமுறை நீதிமன்றம் ஏற்படச் செய்தார். கர்நாடக நவாபுகளின் ஆட்சிபிலும் ''காசி'' இசுலாமியர்களுக்கு மட்டும் நீதி வழங்கினார்.
உரோமானியர் மரபைப் பின்பற்றி பொதுச் சட்ட மன்றங்கள் (common law courts) மூலம் சிவில் சட்டங்கள் குற்றவியல் சட்டங்கள் நடைமுறைச் சட்டங்கள் என வரன்முறை செய்து வகைப்படுத்திய சட்டங்களை நீதிமன்றங்கள் வழிச் செயல்படுத்தினர். அதற்கு டி.பி. மெக்காலே எடுத்த பங்கு பாராட்டுதலுக்குரியதாகும். கீழ்மட்டத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்கள் ஊராண்மை வழக்கு மன்றங்கள் முதல் மேல்மட்டத்தில் உள்ள உச்ச உயர் நீதிமன்றத்திலும் அதற்கு மேல் அரசப் பேரவையிலும் (privy Council) பேரரசிடம் முறையிட்டு நீதி கிடைக்கச்செய்தனர். இவற்றுக்கு மேலாகச் சட்டத்தின் முன் எந்தவிதப் பாகுபாடிமின்றி அனைவரும் சமமாக நடத்தப்பட்டு அவர்கள் நிதி வழங்கிய முறை பாராட்டுதற்குரியதாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்தியர்கள் அறியாத இம்முறையை ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகளால் ஏற்பட்டது.
இன்றைய நீதிமன்றங்கள்
அவையில் அரசன் தலைமை வகிப்பது போல நீதிமன்றங்களில் நீதிபதி தலைமை ஏற்றுச் செயல்படுகிறார். நீதிபதியாக இருப்பவருக்குச் சட்டம் கல்வியறிவு மிகவும் அவசியம். நீதிமன்றங்களில் நீதிபதியே மிகுந்த அதிகாரத்தைச் செலுத்தக்கூடியவராக இருந்தாலும் அரசனைப் போலச் செயல்பட முடியாது. இன்றைய நீதிமன்றம் அரசவையின் வளர்ச்சியாக விளங்குகிறது. நீதிமன்றம் பெரிய கட்டடங்களில் தற்போது இயங்கி வருகிறது. நீதிமன்ற அமைப்பில் நீதியினை வழங்குகின்றவர் ஒருவராக உள்ளார். இது அரசவையில் அரசனே வழங்குவதைப் போன்று உள்ளது. மேலும் பண்டைக்காலத்தில் நீதி வழங்குகபவர்களுக்கு என்று தகுதிகள் இருந்தன. அதனைப் போலவே இன்றைய நீதிமன்றத்திலும் நீதியினை வழங்குபவர்களுக்கு தகுதிகள் உள்ளன. அரசவையில் அரசனுக்கு உயர்வான இடத்தில் சிம்மாசனம் அமைந்து இருந்ததைப் போல நீதிமன்றங்களில் நீதிபதி அமர்ந்திருக்கின்ற இடமும் உயர்வானதாக அமைக்கப்பட்டுள்ளன. அரசவையினைப் போன்று தண்டனைகள் முறைகளும் நீதிமன்றத்தில் காணப்படுகிறது. ஆனால் தண்டனைகள் அரசனால் வழங்கப்பட்டதைப்போன்று கடுமையானவையாக இல்லை. நீதிபதி அரசாங்க அதிகாரியாக அரசுக்கு கட்டுப்பட்டுச் செயல்படக் கூடியவராக இருக்கிறார். வழக்குகளை விசாரித்த நடுநிலையுடன் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறார். தன்னுடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடித் தண்டனை வழங்காமல் சட்டத்திலிருக்கும் தண்டனையை வழங்குகின்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பஞ்சாயத்து அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும், நீதி, பஞ்சாயத்து, மன்றம், மனிதன், உள்ள, அமைப்பு, சட்ட, என்றும், சொல், ஐவர், காலத்தில், கூடி, இடம், அனைவரும், சங்க, சிக்கல்களைத், இன்றைய, அறியமுடிகிறது, மன்றங்கள், முதியோர்கள், நீதிமன்றம், மன்ற, பெற்ற, தான், இடத்தில், சிக்கல்கள், வாழத், ஏற்பட்டன, குடும்ப, வாழ்க்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது, மக்கள், என்பது, பொதியில், ஊராண்மை, கிராம, சென்று, நீதிபதி, மக்களின், வழக்குகளை, இவற்றில், விசாரித்து, ஆகும், ஆங்கிலேயர், நீதிமன்றங்கள், சட்டங்கள், ஊர்ச்சபைகள், நீதிமன்றங்களில், நீதிமன்றத்தை, காலம், சிறு, சட்டத்தின், அடிப்படையில், சொல்லுக்கு, இலக்கியங்களில், இத்தகைய, கொண்டு, கொண்டனர், கூட்டம், அழைக்கப்படுகிறது, பெயர்களில், மேலும், வழக்கு, சங்கம், தலைவன், கிராமங்களில், தொடங்கிய, செய்து, குழு, ஏற்படும், வாழ்க்கை, முறை, தோன்றிய, தோன்றியது, பங்கு, இல்லை, தீர்த்து, Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்