முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » ஆய்வுச் சிந்தனைகள் » கலைச் சொல்லாக்கம் : சாமுவேல் ஃபிஷ்கிறின்
கலைச் சொல்லாக்கம் : சாமுவேல் ஃபிஷ்கிறின்
- இரா. பாவேந்தன் முன்னுரை
ஐரோப்பிய அறிவியலை தமிழில் தரும் முயற்சிகளின் விளைவாகதமிழில் அறிவியல் எழுதுமுறையும்(Science Writing) கலைச்சொல்லாக்கவியல் துறையும் தோற்றம் கண்டன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த கலைச் சொல்லாக்க முயற்சிகளை விவரிக்கிறது கட்டுரை.
தமிழில் ஐரோப்பிய அறிவியல்
ஐரோப்பிய அறிவியலை தமிழில் தரும் முயற்சிகள் முதன்முதலில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது. இலங்கைக்குச் சமயப்பணிசெய்யவந்து, தன் பெயரை '' பெரிய சஞ்சீவநாதசுவாமிகள்'' என மாற்றம் செய்து கொண்ட கிருத்துவச் சமயத்துறவி ஒருவர் பதினேழாம் நூற்றாண்டில் கிரிஸ் நாட்டில் வழக்கில் இருந்த அறிவியல் உண்மைகளை தொகுத்து ஓலைச்சுவடிகளில் எழுதினார். அவர் காலத்தில் அச்சுமுறைகள் வழக்கில் இல்லாததால் அவருடைய முயற்சிகள் அச்சேறவில்லை. (அச்சுவடி ''அண்டபின்ட வியாக்கியானம்'' என்று தலைப்பில் 1874 ஆம் ஆண்டு அச்சேறியது).
1818 இல் சென்னையில் கிருத்துவ சமயத் துண்டறிக்கைச் சங்கத்தை தொடங்கிய இரேனியுசு பாதிரியார் பொதுமக்களுக்காக காலரா தொடர்பான துண்டறிக்கையை வெளியிட்டார். (ஹென்ரிமோரிஸ்: 1906) இதனையடுத்து இரேனியுசு 1832 இல் ''பூமி சாஸ்திரம்'' என்ற அறிவியல் நூலை வெயியிட்டார் தமிழின் முதல் அறிவியல் நூலான பூமி சாஸ்திரத்தின் முன்னுறையில் இரேனியுசு இம்முயற்சியைப் பற்றி பின்வரமாறு கூறுகிறார்.
நீங்கள் குடியிருக்கிற தேசத்தின் வயனங்களையும் இந்தத் தேசமே
அடங்கிய பூமியின் வயனங்களையும் அறியாமல் இந்தக் தேசமே
பூலோகமென்று அநேகர் நினைக்கிறபடியினாலே, நான் அந்த
வயனங்களை உங்களுக்கு அறிவிக்க விரும்பி, ஐரோப்பா
கண்டத்திலுள்ள கல்விமான்கள் பூமியைக் குறித்து செய்தபுத்தகங்களை
பார்த்து பூமி சாஸ்திரமெனப்பட்ட இந்தப் புத்தகத்தைச் செய்தேன் (இரேனுசு 1832:3)
இரோனியுகம் கலைச்சொற்களும்
பூமி சாஸ்திரத்தில் பயன்படுத்தப்பட்ட கலைச்கொற்களை இரேனியுசு ''நாமங்கள்'' என்றே அழைக்கிறார். இந்நூலில் ''பூமி சாஸ்திரத்திலே குறிக்கப்பட்டிருக்கிற நாமங்களின் அட்டவணை'' என்ற பெயரில் 51 கலைச் சொற்களடங்கியப் பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர் கலைச் சொல்லாக்கத்துக்கு எந்தவித கோட்பாடுகளைக் கடைப்பிடித்தார் என்பதை அறிதற்கில்லை. இரேனியு கலைச்சொல் பட்டியலே தமிழில் முதல் கலைச் சொல் பட்டியலாகும் இரேனியுசே தமிழின் முதல் கலைச் சொல்லாக்குனரும் (Science Terminologist) ஆவார்.
சாமுவேல் ஃபிஷ்கிரினும் அறிவியல் நூல்களும்
பூமி சாஸ்திரத்துக்கு அடுத்து ஒரு சில அறிவியல் நூல்கள் வெளிவந்து இருந்தாலும் நமக்கு பார்வைக்கு கிடைப்பவை சாமுவேல் ஃபிஷ்’கிறினின் அறிவியல் நூல்கள் மட்டுமே. மருத்துவப்பணிகள் செய்ய 1847ஆம் ஆண்டு அமெரிக்க மிஷன் சார்பாக இலங்கைக்கு வந்த சாமுவேல் ஃபிஷ்கிறின் சுதேசிகளில் மருத்துவர்களை உருவாக்க விரும்பினார். சதேசிகளுக்கு முதலில் ஆங்கில வழி மருத்துவக் கல்வியை கற்பித்து தோல்வியடைந்தார். எனவே சுதேசிகளின் தாய்மொழியாக தமிழில் மருத்துவக் கல்வியைவழங்கத் திட்டமிட்டு தமிழ் மொழியைக் கற்றார்.
அவர் தமிழ்க் கற்றுக்கொண்ட முறை பற்றி அம்பிகைப்பாகன் பின்வருமாறு கூறுகிறார்.
''தமிழ் காற்றுப்பாண்டியத்தியம் பெறும் நோக்கத்தைக் கைவிடவில்லை, அதற்கும் இரு வழிகளைக் கையாண்டார். தம்மிடம் வந்தநோயாளிகளுடன் தமிழில் பேசியதன் மூலம் வழக்குச் சொற்களையும் தமிழ் உச்சரிப்பையும் பயின்றார்.
ஆசிரியர் ஒருவரிடமும் முறைப்படி சிரமமாகத் தமிழ்கற்றுத் தேர்ச்சிப்பெற்றார். (அம்பி.1995:35)
தமிழை முறையாகக் கற்றுக்கொண்ட கிறின் ஐரோப்பாவில் அன்றைய நாட்களில் புகழ்பெற்றிருந்த மருத்துவ நூல்களில் பதிப்பாளர்களின் அமைதியுடன் தமிழில் மருத்துவ அறிவியல் கலைச் சொல்லகராதிகளையும் தயாரித்தார்.
அவருடைய நூல்கள் வருமாறு: அங்காதிபாதம் சுரேணவாதம் உற்பாலனம் (1852,1857) பிரசவ வைத்தியம் (1857) இரண வைத்தியம்(1867) அங்காதிபாதம்(1872) வைத்தியாகரம் (1872) கெமிஸ்தம்(1875) மனுவிசுகரணம்(1883) மனுஷசுகரண கலைச்சொற்கள்(1872) அருஞ்சொல்லகராதி(1875)
கலைச் சொல்லாக்கம்
தமிழின் முதல் கலைச்சொல்லாக்குனரான இரேனியுசு கோட்பாடுகளையும் எதுவும் பயன்படுத்தவில்லை. ஆனால் கிறீன் கலைச் சொல்லாக்கத்துக்கு விதிகளை வகுத்துக் கொண்டதுமட்டுமல்லாது அவய்யை தம் நூலின் இறுதியில் வெளியிட்டுள்ளார். எனவே கிறீன் தமிழின் முதல் அறிவியல் கலைச்சொல் கோட்பாட்டாளர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
கிறீனின் கலைச்சொல்லாக்க கோட்பாடு வருமாறு:
1. சொல் இணைக்கமும் சுருக்கமும் ஓசையுமாயிருக்கவும்
2. அச்சொல் தமிழில் உண்டோவென்று பின் சொல்லப்படும் எட்டு விதங்களுள் ஓர் விதப்படி முதலில் தேடிப்பார்க்கவும்.
1. ஒரு மொழியாவது தொடர் மொழியாவது வழங்கிவரும் சொல்லை நல்லதென்றெடுக்கவும்.
2. வழக்கமான உரிய சொல்லில்லாதிருந்தால் சற்றே கருகலானாலும் குறிப்பான சொல்லாய் எடுக்கவும்.
3. குறிப்பான தனிமொழி இரண்டாவது பகவாவது சேர்த்து ஓர் சொல்லாக்கவும்.
4. குறிப்பான பகுதியும் விகுதியும் சேர்த்து சொல்லாக்கவும்
5. குறிப்பான ஓர் பகுதியும் ஓசையான யாதேனும் ஓர் ஈற்றசை சேர்த்து வேறுபடுத்தி சொல்லக்கவும்.
6. இங்கிலீஸ் மொழிமூலத்தின் பயனையுள்ள சொல்தெரிந்தெடுக்கவும்.
7. ஒரு பயனுக்கு பல மொழியாவது ஒரு மொழிக்கு பல பயனாவதுஇருந்தால் சொல் தேவைக்கிணங்கிய பொருள்பட அதை வரைவுப்பண்ணிக் கொள்ளவும்.
8. இங்கிலிஷ் தொடர் மொழியின் உறுப்புக்களை தனித்தனியேமொழி பெயர்த்து அம்மொழிக்கு சரியான சொல் பிறக்க இவைகளை புணர்க்கவும்
III பூரணமான சொல் தமிழிலே பெற வழுவும்போது பின்காட்டப்படும் பத்து விதிகளுள் ஓர் விதப்படி சமஸ்கிருதத்தில் தேடவும்.
1. இங்கிலிஷ் சமஸ்கிருத அகராத ஒன்றில் பார்த்து அதிலே தெரிந்து கொள்ளவும்.
2. சமஸ்கிருத இங்கிலிஷ் அகராதி ஒன்றிலே தெரிந்தெடுக்கவும்.
3. இவ்விரு அகராதிகளம் சரியொத்து காட்டும் சொல்சிறந்ததென்றெடுக்கவும்.
4. பெயரிடப்பட வேண்டிய பொருளுக்கு உரிய சொல்காணாதிருந்தால் அப்பொருளின் குறிப்புக்களில் ஒன்றையாவது பலவையாவது வாடிக்கைப்படாத ஓர் சொல்லை அதற்குரியதாக்கவும்.
5. குறிப்பான தனிமொழி இரண்டாவது பலவாவது சேர்த்து ஓர் சொல்லாக்கம்.
6. காரியத்திற்கு அதிக இணக்கமானால் ஏற்றபகுதி விகுதிசேர்த்து ஓர் சொல் ஏற்படுத்தவும்.
7. இங்கிலிஷ் மொழிமூலத்தின் பயனையுள்ள ஓர் சொல்லாகவும்.
8. ஒரு பயனுக்கு பலமொழியாவது மொழிக்கு பல பயனாவதுஇருந்தால் சொல் தேவைக்கிணங்கிய பொருள்பட அதை வரைவுபண்ணிக் கொள்ளவும்.
9. தொடர்மொழிகள் யாதொன்றின் உறுப்பிக்கிணக்கமான தமிழ்மொழி உண்டானால் அதை ஆரிய மொழியுடன் சேர்த்து சில இடங்களில் வழங்கலாம்.
10. இங்கிலிஷ் தொடர்மொழியின் உறுப்புக்களை வெவ்வேறாய் மொழி பெயர்த்து அதற்கு சாயான தொடர்மொழியாய் இதன்வழி இவைகளை புணர்த்தவும்.
IV. தமிழாவது சமஸ்கிருதத்திலாவது சொல்காணாதபோது பின் சொல்லப்டும் மூன்று விதங்களில் ஓர் விதப்படி இங்கிலிஷ் சொல்லைச் சேர்க்கவும்.
1. சொல்லை அதன் ஒலிப்படி தமிழ் எழுத்தால் எழுதிக்கொள்ளவும்.
2. தேவையான இடங்க்ளில் இணக்கமான விகுதிகூட்டி அதை வேறுபடுத்திக் கொள்ளவும்.
3. தொடாமொழி யாதொன்றின் உறுப்புக்கு வாடிக்கைப்பட்ட தமிழ்மொழி உண்டானால் அதை இங்கிலிஷ் மொழியொடு சேர்த்து சொல்லாக்கவும் ( கிறின் 1857:205)
கிறீனின் இக்கோட்பாடு சொற்களை முதலில் தமிழிலும், பின் சமஸ்கிருதத்திலும் பின் ஆங்கிலத்தில் கலைச் சொற்களை ஆக்கிக்கொள்ள வழிகாட்டுகிறது.
பதிவமைப்பு
கிறீனின் இக்கோட்பாட்டின்படி தாம் ஆக்கிக்கொண்ட கலைச் சொற்களை தம் நூல்களின் இறுதியில் அருஞ்சொல்லகராதி என்றதலைப்பில் தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் என்ற பதிவமைப்பு முறையில் வெளியிட்டுள்ளால். பெரும்பாலான கலைச்சொற்களின் இறுதியில் தாம் உருவாக்கிய கலைச்சொற்களை அனைவருக்கும் புரியும் வகையில் தமிழில் ஆக்கப்பட்ட சொல்லை (T.1) சமஸ்கிருதத்தில் ஆக்கப்பட்ட சொல்லை (S.2) ஆங்கிலத்தில் ஆக்கப்ட்ட சொல்லை (E.1) எனவும் குறிப்பிட்டுள்ளார்.
T.S.E. இவைகளுக்கு அடுத்தப்படியாக வரும் எண்கள் முறையேதமிழ் சமஸ்கிருத ஆங்கில கலைச் சொல்லாக்க விதிகளை குறிப்பவை.
T.1 அனுமானம் - inference
S.3 அபசஞ்சாரி - Disinfectant
E.1 அல்புமின் - Albumen
சில கலைச்சொற்களுக்கு எந்த விதிகளின்படி ஆக்கப்பட்டனஎன்பதற்கு எந்தவித குறியீடுகளும் இடம் பெறவில்லை. சில கலைச்சொற்களுக்கு சமஸ்கிருத, ஆங்கில சொற்களும் இடம் பெறவில்லை. சில கலைச்சொற்களுக்கு சமஸ்கிருத ஆங்கில சொற்களும் இடம் பெற்றுள்ளது.
எ.கா. chorold - கோறடு (E.1) தாரகம் (S.1) கிறீனின் கலைச்சொற்களில் சமஸ்கிருத சொற்களே அதிகம் காணப்படுகின்றன. கலைச்சொற்களை உருவாக்கும் போது 1832 இல் கல்கத்தா நகரிலிருந்து வெளிவந்த வில்சன் என்பவர் தயாரித்த சமஸ்கிருத ஆங்கில அகராதியையும், வில்லியம்ஸ் என்பவர் 1836ஆம் ஆண்டு இலண்டனில் இருந்து வெளியிட்ட ஆங்கில சமஸ்கிருத அகராதிகளையும் பயன்படுத்தியுள்ளார். பெபரிஷியஷ், ராட்லர் போன்றோர் தயாரித்த தமிழ் அகராதிகள் கிறீனின் காலத்தில் இருந்துள்ளன. இவை அவருக்கு கிடைத்தனவா என்பது அறிதற்கில்லை.
வேதியல் கலைச்சொல்லாக்கம்
மருத்துவக் கலைச்சொற்களை தமிழில் உருவாக்கிய கிறீன்வேதியல் கலைச் சொற்களை உருவாக்குவதற்கு சில சிறப்பு விகுதிகளை பயன்படுத்தியுள்ளார்.
(கிறீன் 1875:455-516)
முடிவுரை
கிறீனின் கலைச்சொற்களில் அதிக அளவில் சமஸ்கிருத சொற்களும், ஆங்கிலச் சொற்களுமே இடம்பெற்றுள்ளன. தமிழ்மொழியில் அறிவியல் பூர்வமான சொல்லாக்கத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய கிறீன் அன்றைய காலகட்டத்தில் சமஸ்கிருத தாக்கத்துக்கு உள்ளாகியதில் வியப்பில்லை. மேலும் அவருடைய காலகட்டத்தில் வெளியான ஆங்கில - தமிழ், தமிழ் - ஆங்கில அகராதிகள் அவருக்கு கிடைத்திருக்குமானால் தமிழ் சொற்களும் அவருடையப் பட்டியலில் இடம் பெற்றிருக்ககூடும். கிறீனின் நூல்களில் இடம் பெற்ற கலைச்சொற்களை முழுமையாகத் தொகுத்து இன்றைய கலைச் சொற்களுடன் ஒப்பிடும் முயற்சிகள் எதிர்காலத்தில் தேவை.
பார்வை நூல்கள்
1.இரேயுசு, பூமி சாஸ்திரம், சென்னப்பட்டினம் சார்ச்மிசியோள் அச்சுக்கூடம், சென்னை, 1832.
2.சமூல் பி.கிறின் இரணவைத்தியம், அமெரிக்க மிஷின் அச்சகம் யாழ்ப்பாணம், 1867.
3.கெமிஸ்தம் நாகர்கோயில் லண்டன்மிஷன் அச்சியந்திரசாலை, நாகர்கோயில் 1875.
4.அம்பிகைபாகன், மருத்துவத் தமிழின் முன்னோடி டாக்டர் கிறின், தென்னிந்திய சைவ சித்தாந்த நுற்பதிப்புக் கழகம் சென்னை 1995.
5.Henry morris, The life john Murdoch Christion literature Society, madras 1906.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலைச் சொல்லாக்கம் : சாமுவேல் ஃபிஷ்கிறின், கலைச், அறிவியல், சமஸ்கிருத, தமிழ், தமிழில், ஆங்கில, கிறீனின், சொல், இங்கிலிஷ், பூமி, சொல்லை, சேர்த்து, குறிப்பான, தமிழின், இடம், இரேனியுசு, சொற்களும், பின், கலைச்சொற்களை, சொற்களை, கொள்ளவும், கிறின், நூல்கள், கிறீன், ஆண்டு, சாமுவேல், அவருடைய, கலைச்சொற்களுக்கு, முயற்சிகள், அவர், முதலில், மொழியாவது, விதப்படி, ஐரோப்பிய, மருத்துவக், சொல்லாக்கவும், இறுதியில், Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்