முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » ஆய்வுச் சிந்தனைகள் » ஈழத்துத் தமிழ் சிறுகதைகளும் விடுதலைப் போராட்டமும்
ஈழத்துத் தமிழ் சிறுகதைகளும் விடுதலைப் போராட்டமும்
- மா. கருணாகரன்
ஈழத்துத்தமிழ்ச் சிறுகதைகளில் ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை மையமாகக்கொண்ட சிறுகதைகள் ஒரு சிலவே எண்பதுகளுக்கு முன்பு வெளிவந்தன. அவையும் தமிழின உணர்வைத் தூண்டும் விதத்தில் அமையாது மனிதநேய உணர்வைத் தூண்டும் நிலையிலேயே எழுதப்பட்டன. அதாவது தேசிய ரீதியிலான சமுதாய அரசியல் இயக்கத்தின் (பிரிவினையற்ற இலங்கை) வெளிப்பாடாகவே இக்கதைகள் இருந்தன. சிங்கள பெரும்பான்மை இன அரசின் இராணுவ நடவடிக்கையானது ஈழத் தமிழர்களை ஆயுதமேந்திப் போராட வேண்டிய குழலுக்குத் தள்ளப்பட்டதன் விளைவாக எண்பதுகளுக்குப் பின் வெளிவந்த சிறுகதைகள் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளன. இது ஈழத்தமிழ்ச் சிறுகதைகளில் உருவான புதிய போக்கு என்பதாகும்.
ஈழத்தமிழ் விடுதலைப் போராட்டத்தைக் குறிக்கும் சிறுகதைகள் சிறுகதைத் தொகுதியாகவும், சிற்றிதழ்களின் மூலமாகவும் இரு விதத்தில் வெளிவந்தன. சிறுகதைத் தொகுதிகள் மூலம் ஈழத்தமிழின விடுதலைப் போராட்டம் பற்றி படைக்கப்பட்டதைவிட சிற்றிதழ்களிலே அதிக அளவில் சிறுகதைகள் வெளிவந்தன. அதிலும் புலம்பெயர்ந்த தமிழர்களால் வெளிநாடுகளில் தங்களது அடையாளத்தை நிலை நிறுத்துவதற்காக நடத்தப்பெற்ற சிற்றிதழ்களில் இனவிடுதலைப் போராட்டத்தினைக் கருவாகக் கொண்ட கதைகள் அதிகமாக வெளிவந்தன. சிறுகதைத் தொகுதிகளாக வெளியானவற்றில் சில தொகுதிகளே இனவிடுதலைப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் தந்துள்ளன. ஈழத்தமிழின விடுதலைப் போராட்டம் காரணமாக ஈழத்தில் முன்னர் மக்கள் இறுக்கமாகக் கடைப்பிடித்து வந்த கட்டுப்பாடுகளும் நெறிகளும் தளர்ந்து தமக்குள் பேதமற்ற நிலையில் நிச்சயமற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். சிங்கள இராணுவ விமானத்தின் குண்டுவீச்சுக்கு இலக்காகும் ஊர்களில் வாழும் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறும் தங்களைக் காத்துக் கொள்ளுவதற்காகப் பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஒளியும் வாழ்க்கையே தினமும் நடைமுறையானது. பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வீடுகளை விமானக் குண்டு வீச்சின் காரணமாக இழந்த மக்களின் கண்ணீர், வேதனை விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த வீட்டினை விட்டுப் போக முடியாமலும் உயிரைக் காப்பாற்ற வேண்டியும் அவர்கள் படுகின்ற துயரங்கள், மன உளைச்சல்கள் சிறுகதைகளில் நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் யாராது ஒருவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டோ, விடுதலை இயக்கத்தில் சேர்ந்தோ, அல்லது இராணுவத்தினரால் கொல்லப்பட்ட சம்பவங்களே தினசரி வாழ்க்கையாகிவிட்ட சூழலில் தினசரி கொலைகள் ஈழத்தமிழ் மக்கள் வாழ்க்கையில் தவிர்க்க வியலாத அம்சமாகி விட்டதால் அவர்களது மனதும் அத்தகைய வாழ்விற்கு ஏற்றபடி மாறிவிட்டதாகவும் படைப்பாளர்கள் சிறுகதைகளில் வெளிப்படுத்தினர்.
தெருவில் சிந்திக்கிடக்கும் இரத்தம், வெடித்த ஷெல்லின் (குண்டு) துண்டுகள், அரைகுறையாக எரிக்கப்பட்ட பிணங்கள், சிங்கள இராணுவத்தின் வான்வெளித் தாக்குதல் முதலியன நடைமுறை வாழ்க்கையாகிப் போன ஈழத்தமிழின விடுதலைப் போராட்டத்தின் சூழலைப் படைப்பாளர்கள் படைத்துள்ளன மக்களுக்கும் படைப்பிற்குமிடையிலான உறவைப் புலப்படுத்துவதாக உள்ளது.
சிங்கள இராணுவ விமானக்குண்டு வீச்சினால் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளின் அவல நிலையைப் பல படைப்பாளர்கள் தம் கதைகளில் காட்டியுள்ளனர். பல பரம்பரைகளை உருவாக்கிய தமிழரின் வீடுகள் அழிக்கப்படுவது ஈழத் தமிழர்களை உளவியல் அடிப்படையில் மிகப் பாதிப்புக்குள்ளாக்கும் நிகழ்ச்சியாக அமைகிறது. கதைகளில் காட்டப்படும் மாந்தர்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேற மனமின்றி, குண்டு வீச்சின் போது அருகிலுள்ள பதுங்குகுழி (பங்கர்) களையே நாடுகிறார்கள். இன்னும் சிலர் இறந்தாலும் அவர்கள் வாழ்ந்த வீட்டிற்குள்ளேயே இறப்போம் என்ற உறுதியுடன் வீட்டைவிட்டு வெளியேற மனமின்றி இருக்கின்றனர். இராணுவ விமானத்தின் சப்தம் கேட்டவுடனும், ஷெல் குண்டு வீச்சின் சப்தத்தைக் கேட்டவுடனும் பதுங்கு குழிகளுக்குள் சென்று அந்த சப்தம் தங்கள் இருப்பிடத்தை நோக்கி வருகிறதா அல்லது எங்கு செல்கிறது என்ற கவனத்துடனும் கவலையுடனும் அவர்கள் நடத்துகின்ற நிலையற்ற வாழ்க்கையைப் படைப்பாளர்கள் அற்புதமாகப் படைத்துள்ளனர். அந்த கொடூரமான வாழ்வை தணிகாசலத்தின் சிறுகதை வரிகள் மூலம் அறியலாம்.
"சிவஞானம்... பொம்மர் வருகுது போல கிடக்குது... கெதியா பங்கருக்கு வாங்கோ"....
பங்கருக்குள் எரியும் மெழுகுவர்த்தியின் ஒளியிலும் அவர்களது முகங்களிலும் பயத்தின் ரேகைகள் படர்வது தெரிந்தது.
'சிவஞானம் நாங்கள் இப்படி பயந்து பயந்து சாகிறதில்லையடா இதை அநியாயம் எண்டு சொல்ல ஒருத்தரும் இல்லாதது தான்ரா ஆகப் பெரிய அநியாயம்'
இவ்வாறு மரணத்தை நிமிடந்தோறும் எதிர்பார்த்து கிடந்து வாழும் வாழ்க்கை ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை துன்பமானதாக உணர்த்தியது. மேலும் உடல்நலமில்லாமல் படுத்தபடுக்கையில் கிடக்கும் வயதானவர்களின் நிலை மிகவும் துன்பம் தரக்கூடியதாகவும் அவர்களால் குண்டு வீச்சிலிருந்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள முடியாத நிலையையும், அவர்களைத் தனியே விட்டு விட்டுச் செல்லமுடியாத உறவினர்களின் உறுத்தல் மனநிலையையும் தணிகாசலத்தின் சிறுகதையில் மையக் கருத்தாக வெளிப்பட்டுள்ளது. "மூடிய பதுங்கு குழிக்குள் தனது மூட்டு நோயின் காரணமாக செல்ல மறுக்கும் சிவஞானத்தின் வயதான மாமியார் கொட்டிலுக்கருகே அவளுக்கென வெட்டப்பட்ட திறந்த பதுங்கு குழிக்குள்" என்று விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தங்களது வீடுகளின் மீது விமானங்கள் குண்டுவீசி சிதைத்த நிலையைக் கூறுவது மிகுந்த அவலத்தை ஏற்படுத்தவதாக உள்ளது.
சான்றாக,
"ஐயோ பரமானந்தண்ணை உங்கடை வீட்டுக்கே போட்டவங்கள்"
சிவஞானமும் மனைவியும் கத்துகின்றனர்.
பரமானந்தம் அந்த இடத்தில் நின்றே ரோச்லையிற்றை அழுத்துகிறார். வளமையாக முன் வீட்டுச் சுவருடன் நின்றுவிடும் ஒளிப்பொட்டு உடைந்து கிடக்கும் பின்புற மதில்வரை சென்றுபடுகிறது. ஒரு மலை போல உறுதியுடன் நிமிர்ந்து நின்ற அவரது வீடு இருந்த இடம் தெரியாமல் கற்குவியலாகக் காட்சி தருகிறது. பக்கத்து வீடுகளிலும் அழுகையும் ஆரவாரங்களும் கேட்கின்றன. ரோச்லையிற்றை கொட்டில் பக்கம் திருப்புகின்றார். சிவஞானத்தின் ஓலைக்குடிசையயும் பிரிந்து அதன் கீற்றுகள் தெருவில் சரிந்து கிடக்கும் மின் கம்பத்தில் தொங்குகின்றது.
'சிவஞானம், உன்றை கொட்டிலையும் காணேல்லை. உன்னர மாமிக்கு என்ன நடந்ததோ?' சிங்கள இராணுவம் தமிழர்கள் பரம்பரையாக வாழ்ந்த வீடுள்ள விமானக்குண்டு வீச்சினால் சிதைத்து ஈழத்தமிழர்களை வீடற்றவர்களாக நிறுத்தியதுடன் மட்டுமல்லாது அவர்களது உயிரோடும் விளையாடத் தொடங்கின. சிங்கள இராணுவத்தைத் தாக்கிய தமிழ்ப் போராளிகளை நேராக நின்று எதிர்க்க முடியாத சிங்கள இராணுவம் சாதாரண பொதுமக்களை ஈவிரக்கமின்றி சுட்டுத்தள்ளும் நிலையும் சிறுகதைகளில் விவரிக்கப்பட்டுள்ளன 'எரிமலை' இதழில் வந்த சாந்தனின் 'சனம்' என்ற சிறுகதையில் இந்நிலை விவரிக்கப்பட்டுள்ளது.
சான்றாக இவ்வரிகளைக் கூறலாம்.
"நேற்றிரவு தின்னவேலியிலை நடந்ததுக்குப் பழிவாங்கலாம், இது.... காற்றோடு கதைகள்
சந்தடியில் சிறு கும்பல் நின்றது. நின்றவர்கள், காதுகளையும் கால்களையும் தயாராய் வைத்தபடி நின்றார்கள்.
எப்போது எங்கிருந்து வருவான்களென்று தெரியாத பதகளிப்பு பூட்டியிருந்த கடைகளில் வளர்ந்தியிருந்த சடலங்கள்... எல்லாம் இளந்தாரிகள் ... பள்ளிக்குப் போன பொடியன்களும்... கடவுளே!
இடது கன்னமேட்டில் துவாரம் தெளிவாய்த் தெரிய மல்லாந்து கிடந்த முகமொன்று...
சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலால் கொலையுண்டு கிடக்கும் தமிழர்களில் அவல வாழ்க்கையைச் சித்தரிப்பதற்கு சிறுகதை வடிவம் சிறந்த முறையில் பயன்பட்டுள்ளது.
சிங்கள இராணுவத்தால் நடத்தப்படுகின்ற கொடூரமான தாக்குதலால் ஏற்படும் உயிர்ப்பலிகளும் பயங்கரமான சொத்து இழப்புகளும் அன்றாட நிகழ்ச்சிகளாக மக்கள் உணரத் தொடங்கியதையும் இது தவிர்க்க முடியாதது என்ற மனவுறுதியையும் தெரிவிக்கும் வகையில் படைப்புக்கள் வெளிவரத் தொடங்கியது கருத்தியல் ரீதியில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
தெருவோரங்களில் சிந்தப்படும் இரத்தமும், தெருக்களிலும், வீடுகளிலும் கடைகளிலும் விழுகின்ற பிணங்களும் கூட பெரிய அளவில் மக்கள் மனதைப் பாதிக்கவில்லை. இவையெல்லாம் தவிர்க்க முடியாதவையாக வாழ்வோடு இணைந்து விட்டதாகக் கருதி அந்த இரத்தச் சுவடுகளையே மிதித்துக்கொண்டு எந்த உணர்வும் இல்லாமல் தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக ஓடும் மனப்பக்குவம் எல்லோருக்கும் வந்துவிட்டதாக படைப்புக்களில் சுட்டிக் காட்டினார்.
சான்றாக தணிகாசலத்தின் சிறுகதையில் இடம்பெறும் இந்நிகழ்ச்சியைக் கூறலாம்.
"அன்று காலையிலும் குண்டு வீச்சு விமானங்கள் வந்து வட்டமிட்டுக் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றன. பங்கருக்குள் பாதுகாப்புக்காகச் சென்றுவிட்டு வந்த அவர் எங்கே குண்டு வீழ்ந்தது என்பதை விசாரிப்பதற்காக கேற்றடிப்பக்கம் சென்றார். கபிக்களில் வந்த அவரது கவனத்தை ஊதுவத்தியை கட்டாகக் கொழுத்தி கையிற் பிடித்தபடி தெருவால் வந்த ஒருவனின் தோற்றம் திசை திருப்பியது. அவனுக்குப் பின்னால் சயிக்களின் பின்புறத்தில் தோற்றம் திசை திருப்பியது. அவனுக்குப் கட்டியபடி துக்கம் தோய்ந்த முகத்துடன் உருட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.
எதிரே வந்த பேராளிகளின் வாகனம் திடீரென நின்றது.
'என்ன உது'
'பொம்மர் அடிச்சது ... என்றை தம்பிதான்'
சொல்ல முடியாமல் அவனது நாக்குழறுகிறது. கண்களில் நீர் வடிய அழுதபடிக் கூறுகிறான் அவன்.
அப்பொழுது தான் இரத்தம் ஊறிக் கசிந்து கொண்டிருந்த அந்தச் சாக்கு மூட்டையை அவர் உற்றுப் பார்த்தார். ஆறடி நிலத்தில் அடக்கும் என்று நினைத்திருந்த மனித உடல் அரைச் சாக்கினுள் எப்படி அடங்கியது என்று நினைத்த போது அவர் அதிர்ச்சி அடைந்தார். குண்டு வீச்சினால் கொல்லப்பட்ட தனது தம்பியை சாக்கு மூட்டையில் வைத்துக் கட்சிச் சைக்கிளில் வைத்து உருட்டிச் செல்லுமளவு வாழ்க்கைச் சுழலில் ஏற்பட்ட மாற்றம் மிகக் கொடுமையானது. மனித உயிரிழப்பு என்பது அஃறிணைகள் உயிரிழப்பு போல அர்த்தமிழப்பது வாழ்க்கையின் அவலத்தைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. சக மனித இழப்பு குறித்து வருத்தப்படுவதை விட அதை நடைமுறை வாழ்க்கையின் அம்சமாகக் கருதுவது, இராணுவ அடக்குமுறையில் மனித மதிப்பீடு குறித்து மறு ஆய்வு செய்யத் தூண்டுகிறது. இதுவே படைப்பு மூலம் படைப்பாளி சமூகத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் விளைவாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஈழத்துத் தமிழ் சிறுகதைகளும் விடுதலைப் போராட்டமும், சிங்கள, குண்டு, வந்த, இராணுவ, சிறுகதைகளில், மக்கள், விடுதலைப், கிடக்கும், அந்த, படைப்பாளர்கள், மனித, பதுங்கு, சிறுகதைகள், வெளிவந்தன, சிவஞானம், தணிகாசலத்தின், வீச்சினால், சிறுகதையில், ஈழத், அவர், சான்றாக, உள்ளது, சிறுகதைத், ஈழத்தமிழின, விட்டு, வீடுகளை, மூலம், வீச்சின், அவர்களது, தவிர்க்க, விவரிக்கப்பட்டுள்ளது, காரணமாக, Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்