முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 3. கழுமரமேறிய நாவிதன்
பஞ்ச தந்திரக் கதைகள் - 3. கழுமரமேறிய நாவிதன்
ஒரு நகரத்தில் ஒரு வணிகன் இருந்தான். அவன் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள். அந்தப் பிள்ளை பிறந்த நேரம் சரியில்லை என்றும், அவன் தாய் தந்தையர் விரைவில் இறந்து விடுவார்கள் என்றும், அவன் முதலில் ஏழையாக இருப்பான்; பின்னால் பெரும் பணக்காரன் ஆவான் என்றும் சோதிடர்கள் சொன்னார்கள். இதைக் கேட்ட வணிகன் அந்தப் பிள்ளையின் மேல் வெறுப் படைந்து அதை வெளியில் தூக்கி எறிந்து விட்டான். பிள்ளையை இழந்த சோகத்தில் அவன் மனைவி மூர்ச்சையாகி இறந்து போனாள். அருமை மனைவி இறந்த பிறகு இனி நமக்கு என்ன வாழ்வு இருக்கிறது என்று வருந்தி வணிகன் தற்கொலை செய்து கொண்டான்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட அரசன் அவர் கள் சொத்துக்குரியவர்கள் யாரும் இல்லாததால் அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு விட்டான். வணிகன் பிள்ளையைக் குப்பையில் எறிவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒரு வேலைக்காரி. எல்லாம் முடிந்த பிறகு குப்பை மேட்டில் போய்ப் பார்த்தாள். சாக வேண்டிய காலம் வராததால் அது அப்பொழுதும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அதன்பால் இரக்கப்பட்டு அவள் தன் வீட்டுக்குத் தூக்கிச் சென்றாள். தான் வேலை பார்த்துச் சேர்த்த கூலியில் ஒரு பகுதியைக் கொடுத்து ஒருத்தியைப் பால் கொடுக்க ஏற்பாடு செய்தாள். வேலைக்காரியின் வீட்டில் அந்த வணிகர் வீட்டுப் பிள்ளை வறுமையோடு வளர்ந்து வந்தான். வறுமையின் கொடுமை தாங்காமல் அவன் பல முறை வருந்தினான். அவனுக்குப் பதினாறு வயதான பின் ஒரு நாள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கனவில் ஒரு சித்தர் தோன்றினார். அவர், தம்பி இனிமேல் நீ வருந்த வேண்டாம். காலையில் விடியுமுன் எழுந்திரு. பிறகு வீட்டையெல்லாம் சுத்தம் செய். மொட்டை அடித்துக் கொண்டு நன்றாகக் குளித்துத் தூய ஆடை அணிந்து உடலெல்லாம் திரு நீறு பூசிக் கொள். கையில் ஒரு தடியை எடுத்து வைத்துக் கொண்டு வீட்டு முற்றத்தில் தனியாகக் காத்திரு. பதினைந்து நர்ழிகை வரை நீ அங்கே காத்திருக்க வேண்டும். மதிய வேளைக்குச் சரியாக மூன்று பேர் பிச்சைக்கு வருவார்கள். சிறிதும் பதறாமல் எழுந்து கைத் தடியினால் மூளை கலங்கும்படி மூவரையும் அடிக்க வேண்டும். உடனே அவர்கள் மூன்று நிதிகளாக மாறுவார்கள். நீ நெஞ்சில் நினைத்த தெல்லாம் தருவார்கள்’ என்று சொன்னார்.
வணிகர் மகன் கண் விழித்துப் பார்த்தான். சித்தரைக் காணவில்லை. விடியுமுன் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து தலையை மொட்டை யடித்துக் கொண்டு, குளித்து திருநீறுபூசி முற்றம் வந்து தடியுடன் காத்துக் கொண்டிருந்தான். மதிய வேளையில் மூன்று சித்தர்கள் பிச்சைப் பாத்திரத் தோடு வந்தார்கள். குப்பென்று பாய்ந்து தடியினால் ஓங்கி அடித்தான். உடனே அவர்கள் மூன்று பொற்சிலைகளாக மாறி விட்டார்கள். அவர்களை வீட்டில் வைத்துப் பூசை செய்து வேண்டிய செல்வங்களைப் பெற்றான். .
அவனுக்குத் தலை மழித்து விட்ட நாவிதன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். உடனே தானும் மொட்டை அடிததுக் கொண்டு தன் வீட்டு வாசலில் காத்திருந்தான். அங்கு யாரோ மூவர் பிச்சைக்கு வந்தார்கள். அவர்களை நாவிதன் தடியால் அடித்தான். வலி தாங்காமல் அவர்கள் மூவரும் உயிரை விட்டுப் பிணமானார்கள். அரச காவலர்கள் வந்து நாவிதனைப் பிடித்துக் கொண்டு போய்க் கொலைக் குற்றத்திற்காகக் கழுவேற்றி விட்டார்கள். ஆகவே எதையும் தீர விசாரியாமல் செய்யக் கூடாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
3. கழுமரமேறிய நாவிதன் - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - கொண்டு, அவன், மூன்று, வணிகன், உடனே, மொட்டை, பிறகு, மனைவி, பிள்ளை, என்றும், செய்து