முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 1. கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்
பஞ்ச தந்திரக் கதைகள் - 1. கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்
இருள் குடிகொண்டது என்று சொல்லும்படி யான ஓர் அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் இருந்த ஓர் ஆலமரத்தில் மேகவண்ணன் என்ற பெயருடைய காகம் ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் உள்ள காகங்களுக்கெல்லாம் அதுதான் அரசனாக விளங்கியது. மேகவண்ணன் தன் அமைச்சர்களோடும், மற்ற காகங்களோடும் அந்த ஆலமரத்தில் நெடுநாள் இருந்து வந்தது.
பக்கத்தில் இருந்த ஒரு குகையில் கோட்டான்களின் கூட்டம் ஒன்று குடிகொண்டிருந்தது. அந்தக் கோட்டான்களின் அரசனும், தன் அமைச்சர்களோடும் கூட்டத்தோடும் அச்சமில்லாமல் வாழ்ந்தது. தடுப்பாரில்லாமல் அந்தக் கோட்டான் அரசன் இரவில் வேட்டையாடிக் களித்திருந்தது.
கோட்டான்களுக்கும் காகங்களுக்கும் அடிக்கடி பகை ஏற்படும். பகற் பொழுது முழுவதும், காகங்கள் கோட்டான்களைப் பதைக்கப் பதைக்க வதைப்பதும், இரவெல்லாம் காகங்களை எழும்பவிடாமல் கோட் டான்கள் அடிப்பதும், இப்படியாக நாளுக்கொரு பகையும் வேளைக்கொரு சண்டையுமாக இருந்து வந்தது.
ஒருநாள் இரவுப்பொழுது வந்ததும் கோட்டான் அரசன் தன் அமைச்சர்களை அழைத்துப் பேசியது.
‘கதிரவன் தோன்றிவிட்டால், நாம் அந்தக் காக்கைகளை ஒன்றும் செய்யமுடியாது. இதுதான் நல்ல சமயம். இப்போதே நம் சேனைகளையெல்லாம் திரட்டிக்கொண்டு வாருங்கள். நம் பகைவர் களாகிய அந்தக் காகங்களை இந்த இருட்டு நேரத்திலேயே வளைத்து அடித்துக் கொன்று குவித்துவிட்டு வருவோம்’ என்றது.
உடனே அமைச்சுக் கோட்டான்கள், இது நமக்கு நல்ல வேளைதான். இப்போதே நாம் சென்று அந்தக் காக்கைகளை வென்று மீள்வோம்’ என்று சொல்லி உடனே விரைவாகப் படை கூட்டித் திரண்டன. எல்லாக் கோட்டான்களும், ஆல மரத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, அங்கு கூடு கட்டி வாழ்ந்த காகங்களை யெல்லாம், கொத்திக் கொன்று விட்டுத் தங்கள் அரசனிடம் திரும்பி வந்தன.
ஆலமரத்தில் இருந்த அந்தக் காகக் கூட்டம் பெரும்பாலும் அழிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஆலமரம் முழுவதும் இரத்தம் வெள்ளம் போல் வழிந்தோடிக் கொண்டிருந்தது. காகங்கள் சின்னாபின்னமாகக் கிடந்தன. சிறகொடிந்த காக்கைகள் ஒருபுறம், காலொடிந்த காக்கைகள் ஒரு புறம், குடல் சரிந்து விழுந்து கிடந்த காக்கைகள் ஒரு புறம், இப்படி அந்த இடம் ஒரே பயங்கரமாகக் காட்சியளித்தது.
அந்தக் காக அரசன் எப்படியோ, கோட்டான்களின் கண்ணுக்குத் தப்பிப் பிழைத்துக் கொண்டது. மறுநாள் பொழுது விடிந்து கதிரவன் தோன்றியவுடன், காக அரசன், ஆலமரத்தின் கீழ் தன் கூட்டம் கொலைபட்டு மலைபோல் கிடப்பதைக் கண்டது. அவற்றின் மத்தியில் தனது பெரிய மந்திரிகளான ஐந்து காகங்களும் மற்ற சில காகங்களும் உயிர் பிழைத்திருப்பதைக் கண்டுகாக அரசன் ஓரளவு மகிழ்ச்சி கொண்டது.
உயிர் பிழைத்த காகங்களையும் தனது மந்திரி களையும் அரச காகம் ஒன்று திரட்டியது. நம் குடியே அழியும்படியாக இப்படி நேர்ந்து விட்டதே!’ என்று வருந்தியது. பிறகு, அவற்றைக் கொண்டு, காயப்பட்டுக் கிடந்த காகங்களுக்கெல்லாம், மருந்து வைத்துக் காயங்களைக் குணப்படுத்தச் செய்தது. இறந்து போன காகங்களுக்கெல்லாம் செய்ய வேண்டிய ஈமக்கடன்களைச் செய்தது. பிறகு, பொய்கையில் சென்று தலை முழுகிவிட்டு வந்தது. அரச காகம் உயிர் பிழைத்த மற்ற காகங்களுடன் வேறொரு மரத்திற்குக் குடிசென்றது. அங்கு சென்ற தும், தன் அமைச்சர்களை நோக்கி ‘இப்பொழுது நாம் என்ன செய்யலாம்? உங்கள் யோசனைகளைச் சொல்லுங்கள்’ என்று கேட்டது.
‘அரசே ஒரு பகைவனை அவனைக் காட்டிலும் வல்லவர்களோடு சேர்ந்து வெல்லுதல் வேண்டும். அந்த முறை நடைபெறக் கூடாததாக இருக்குமாயின் அந்தப் பகைவனையே வணங்கி வாழவேண்டும். அல்லது அவன் வாழவிடக் கூடியவனாக இல்லாமல் இருந்தால் நாம் இருக்கும் நாட்டை விட்டு வேறு நாடு போய்விட வேண்டியதுதான். இப்படி மூன்று வழிகள் இருக்கின்றன’ என்று ஓர் அமைச்சுக் காகம் கூறியது.
“தான் இருக்குமிடத்தை விட்டு எக்காரணத்தைக் கொண்டும் வெளியேறக் கூடாது. நாய் கூடத் தான் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் சுகமாக இருக்கும். சிங்கமாக இருந்தாலும் அது தன் இடத்தை விட்டுவிட்டால் யாரும் அதை நினைத்துப் பார்க்கக் கூடமாட்டார்கள். பசுமாடும், இடம் மாறினால் பால் சுரக்காது. ஆகவே, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, பகையை வெற்றி காணும் வழியை நாம் சிந்திக்க வேண்டும்” என்று இரண்டாவது அமைச்சுக் காகம் கூறியது.
எல்லாம் சரிதான். ஆனால், நம்மை வெற்றி கொண்ட பகைவர்கள், நாம் இங்கே இருக்க அனுமதிப்பார்களா? மேலும் மேலும் தீமை செய்து கொண்டேதான் இருப்பார்கள். அந்தத் தீமைக்கு ஆளாகாமல் தப்ப, அவர்களுடன் இனிமேல் சமாதான ஒப்பந்தம் பேசிக்கொண்டு இருப்பதுதான் நல்லது என்று மூன்றாவது அமைச்சுக் காகம் கூறியது.
கோட்டான்களுக்குப் பகலில் கண் தெரியாது. நம் காகங்களுக்கோ இரவில் கண்கள் தெரியாது. இந்த நிலையில் எப்படிச் சமாதானம் பேசிக் கொண்டு இருக்க முடியும்? பேசாமல் இப்பகல் நேரத்திலேயே, இப்போதே போய் அந்தக் கோட் டான்களை வளைத்துக் கொண்டு அடித்துக் கொன்று போட்டுவிட்டு வருவதே நல்லது என்று நான்காவது அமைச்சுக் காகம் கூறியது.
முதல் நான்கு அமைச்சுக் காகங்களும் ஒன்றை யொன்று மறுத்தும், தத்தமக்குத் தெரிந்ததைக் கூறியும் யோசனை சொல்ல, ஐந்தாவது அமைச்சுக் காகம் பேசாமல் இருந்தது.
அந்த ஐந்தாவது அமைச்சுக் காகம் மிக வய தான கிழட்டுக் காகம். அமைச்சுத் தொழிலில் நெடு நாள் அனுபவமும், தந்திரத்தில் பெருந்திறமையும் கொண்டது.
சிரஞ்சீவி என்ற அந்தக் காகத்தை நோக்கி, “ உன் கருத்து என்ன? சொல்’ என்று அரச காகம் கேட்டது.
விதையைச் சும்மா வைத்திருந்தால் பயன் ஒன்றும் இல்லை. அதை ஒரு நிலத்தில் விதைத்தால் தான் அது விளைந்து பயன் கொடுக்கும். அதுபோல, அமைச்சர்களிடம் மந்திராலோசனை செய்வது மட்டும் பயன் படாது. அதை மன்னர்கள் மனத்தில் இருத்திச் செயல்பட முற்பட்டால்தான் சரியான பயன் உண்டாகும்.
பகைவர்களோடு, நட்புக் கொண்டு கூடியிருப் பது ஒரு முறை; கூடியிருந்து அவர்களைக் கெடுப்பது ஒரு முறை: நாட்டை விட்டுப் போவது ஒரு முறை; நாட்டிலேயே தகுந்த கோட்டையில் பாதுகாப்பாக இருப்பது ஒரு முறை; இருக்கும் இடத்தை விட்டுப் போகாமல் இருப்பது ஒரு முறை; நட்புப் பிரித்தல் ஒரு முறை; இப்படியாக ஆறு முறைகள் அரசர்கள் கையாளக் கூடியவைகளாகும்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1. கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம் - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - அந்தக், காகம், அமைச்சுக், முறை, நாம், கொண்டு, இருக்கும், அரசன், அந்த, கூறியது, பயன், உயிர், காகங்களும், இப்படி, காக்கைகள், கொண்டது, காகங்களை, காகங்களுக்கெல்லாம், ஒன்று, ஆலமரத்தில், இருந்த, மற்ற, இருந்து, இப்போதே, கூட்டம், கோட்டான்களின், வந்தது, கொன்று