முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 7. கொக்கைக் கொன்ற நண்டு
பஞ்ச தந்திரக் கதைகள் - 7. கொக்கைக் கொன்ற நண்டு
நாள் தோறும் மீன்களைக் கொத்தித்தின்று உடல் வளர்த்து வந்த ஒரு கொக்கு இருந்தது. அது வழக்கம் போல ஒரு குளத்திற்கு மீன் கொத்தித் தின்னச் சென்றது. அப்போது குளத்தின் கரையில் ஒரு பால்நண்டு மிகக் கவலையோடு நின்று கொண் டிருந்தது.
அந்த நண்டைப் பார்த்து, நீ ஏன் கவலையோடிருக்கிறாய்?” என்று கொக்குக் கேட்டது.
என்ன சொல்வேன்! கொலைகாரர்களாகிய வலைகாரர்கள் இந்தப் பக்கத்திலுள்ள ஏரி, குளம் எல்லாம் வலை வீசி ஒரு சின்னஞ்சிறு பொடி மீன் கூட விடாமல் பிடித்துக் கொண்டு போய் விட்டார் கள். நாளைக்கு இந்தக் குளத்திற்கு வரவேண்டும் என்று பேசிக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைக்கு வந்து பிடித்துக் கொண்டு போய் சந்தைக் கடைகளிலே வைத்து விற்று விடுவார்கள். இவர்கள் கைக்குத் தப்புவது எப்படி என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பால்நண்டு பதில் கூறியது.
நண்டே, நண்டே, பால் நண்டே! அந்தப் பழிகார வலைகாரர்கள் வருமுன்னே தப்புவிக்க நான் ஒரு வழி சிந்தித்திருக்கிறேன். அந்தப்படி செய்தால் எல்லா மீன்களுமே உயிர் தப்பலாம் என்று கொக்கு கூறியது.
எப்படி?’ என்று நண்டு ஆவலோடு கேட்டது.
‘எப்படியாவது, அந்த மீன்களையெல்லாம் இங்கே கூட்டிக் கொண்டு வா. நான் ஒவ்வொரு மீனாகத் தூக்கிக் கொண்டு போய் இன்னொரு குளத்தில் விட்டுவிடுகிறேன்’ என்றது கொக்கு.
கொக்கு சொன்னதை நம்பிய அந்த நண்டு, மீன்களிடம் போய் இந்த யோசனையைக் கூறியது. எப்படியும் வலைகாரர்களிடமிருந்து தப்பினால் போதும் என்றிருந்த மீன்கள் இந்தக் கருத்தை உடனே ஒப்புக் கொண்டன.
மீன்கள் எல்லாம் கரையோரத்திற்கு வந்தன. கொக்கு ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வொரு மீனாகக் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சிறிது துரம் சென்றதும் அந்த மீன்களைக் கொத்தித் தின்றது. வயிறு நிரம்பிய பிறகு, கொண்டு போன மீன்களை ஒரு பாறையில் காயப் போட்டு வைத்தது.
மீன்கள் எல்லாவற்றையும் கொத்திக் கொண்டு சென்ற பின் நண்டுதான் மிஞ்சியது. நண்டின் தசையையும் தின்னலாம் என்ற ஆசையோடு, அதையும் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. பறந்து செல்லும் வழியில் நண்டு கீழே பார்த்தது. எங்கு பார்த்தாலும் மீன் எலும்புகள் தரையில் கிடப்பதைக் கண்டதும், அது கொக்கு செய்த செயல் என்னவென்று புரிந்து கொண்டது. மீன்களையெல்லாம் தின்றது போதாமல் நம்மையும் இந்தக் கொக்கு கொல்லத் துணிந்து விட்டது. சூழ்ச்சியை, சூழ்ச்சி யால் தான் வெல்ல வேண்டும். நம்மை இது கொல்லு முன் இதை நாம்; கொன்றுவிட வேண்டும்’ என்று எண்ணிய நண்டு, மெல்லத் தன் முன்னங் கால்கள் இரண்டையும் நீட்டி, கொக்கின் கழுத்தை வளைத்துப் பிடித்து நெருக்கியது. கழுத்து நசுங்கியதும், கொக்குக் கீழே விழுந்து இறந்தது. நண்டு வேறொரு குளத்திற்குப் போய்த் தன் இனத்தோடு சேர்ந்து கொண்டது.
பெரும் பகையையும் சூழ்ச்சியால் வெல்லலாம் என்பது இக்கதையிலிருந்து விளங்குகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
7. கொக்கைக் கொன்ற நண்டு - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - கொண்டு, கொக்கு, நண்டு, அந்த, போய், ஒவ்வொரு, மீன்கள், கொத்திக், பறந்து, இந்தக், மீன், சென்றது, கூறியது, நண்டே