முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » எருதும் சிங்கமும் - 2
பஞ்ச தந்திரக் கதைகள் - எருதும் சிங்கமும் - 2
‘அரசே வெறும் ஒலியைக் கேட்டுப் பயப்படுவது சரியன்று. முன் ஒரு நரி இது போலத்தான், பெரும் சத்தத்தைக் கேட்டுப் பயந்தது. கடைசியில் பார்த்தால் அது வெறும் தோல் முரசாக இருக்கக் கண்டது. நீங்கள் பயப்பட வேண்டாம். நான் போய் இந்த முழக்கத்தின் காரணத்தை அறிந்து வருகிறேன்? என்று சொல்லி நரி புறப்பட்டது.
காட்டுக்குள்ளே தேடிக் கொண்டு சென்ற நரி, சிறிது தூரத்தில் அந்தக் காளை மாட்டைக் கண்டது. அதனுடன் பேசி அதன் நட்பைப் பெற்றது. சிங்கத்திடம் திரும்பி வந்து, அரசே, அது நம்மைப் போல் ஒரு மிருகம் தான். ஆனால் முரட்டு மிருகம், இருந்தாலும் அது தங்களுடன் நட்புக் கொள்ளவே விரும்புகிறது என்று கூறியது.
அப்படியானால், அதை இங்கே அழைத்து வா’ என்று சிங்கம் கூறியது.
நரி அவ்வாறே எருதை அழைத்து வந்து சிங்கத்திடம் விட்டது. எருதும் சிங்கமும் அன்று முதல் உயிர் நண்பர்களாய் வாழத் தொடங்கின. சிங்கம் அந்த எருதையே தன் அமைச்சனாக்கிக் கொண்டது. இவ்வாறு பல நாட்கள் கழிந்தன.
ஒரு நாள் காட்டு மிருகங்களும் அமைச்சர்களாகிய நரிகளும் ஒன்று கூடி, ‘அரசனுக்கோ நம்மிடம் அன்பில்லை. இரையே நமக்குச் சரியாகக் கிடைக்கவில்லை. இனி நாம் என்ன செய்வது?’’ என்று ஆலோசித்துக் கொண்டிருந்தன. அப்போது முதல் நரி இரண்டாவது நரியைப் பார்த்து, யானை தன் மத்தகத்தைக் கொத்துவதற்குத் தானே பாகனி டம் அங்குசத்தை எடுத்துக் கொடுத்ததுபோல், இந்த மாட்டையும் சிங்கத்தையும் நட்புக் கூட்டி வைத்து நமக்கு நாமே கேடு செய்து கொண்டோம். தங்களால் தாங்களே கெட்ட மூன்று பேருடைய கதைபோல் இருக்கிறது நமது கதையும் என்று வருத்தத்துடன் கூறியது.
இப்போது நாம் என்ன செய்வது?’ என்று இரண்டாவது நரி கேட்டது.
‘கவலைப்படாதே, சூழ்ச்சியாக அவ்விருவருடைய நட்பையும் குலைத்து விடுவோம். பிறகு நாம் இந்தக் காட்டையே நம் கைவசப்படுத்திக் கொள்ளலாம் என்று உறுதியுடன் பேசியது முதல் நரி. மேலும் அது தொடர்ந்து, ‘எப்படியோ கைவிட்டுப் போனதை மீண்டும் கைகூடச் செய்வதும், இடையூறுகள் வராமல், தடுத்துக் கொள்வதும், முயற்சியினால் அருமையான செல்வத்தைத் தேடி அடைவதும், எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்து செய்வதும் ஆகிய காரியங்களில் வல்லவன் தான் சரியான அமைச்சன்’ என்றது.
‘இவ்வளவு நெருங்கிய நட்பாய் இருக்கும் சிங்கத்தையும், எருதையும் நம்மால் பிரிக்க முடியுமா? இது ஆகிற காரியமா?’ என்று கேட்டது இரண்டாவது நரி.
‘பூ! சூழ்ச்சியால் ஆகாத காரியம் எதுவும் இல்லை. காகம் கரும்பாம்பைக் கொன்றதும், முயல் ஒரு சிங்கத்தைக் கொன்றதும், நண்டொன்று கொக்கைக் கொன்றதும் எல்லாம் சூழ்ச்சியால்தான்’ என்று கூறியது முதல் நரி.
‘உண்மைதான். சூழ்ச்சியால் இவர்கள் நட்பைப் பிரிக்க முடியுமே யல்லாமல் வேறு வழியில்லை. நீ அதற்கானதைச் செய் என்றது இரண்டாவது நரி,
சிங்கம் தனியாக இருக்கும் வேளை பார்த்து, ‘அரசே, தங்களுக்கு ஒரு தீமை ஏற்பட இருப்பதை அறிந்து தான் எச்சரிக்கவே வந்தேன்’ என்று புதிர் போட்டது போல் கூறியது.
அப்படியென்ன தீமையது?’ என்று சிங்கம் கேட்டது.
‘அரசே, இதைப்பற்றி முன்னாலேயே சொல்லியிருப்பேன். ஆனால், உங்கள் மனத்தில் உள்ள விருப்பத்தின் காரணமாக நான் சொல்லக் கூடிய உண்மையைப் பொய்யாக எண்ணி விடுவீர்களோ என்று பயப்பட்டேன். அந்தப் பயத்தினால் தான் இதுவரை எதுவும் சொல்லவில்லை என்று நல்லவன் போலப் பேசத் தொடங்கிய நரி மேலும் தொடர்ந்து கூறியது. ஆனால், என் மனம் கேட்க வில்லை. நீங்கள் என்ன நினைத்தாலும், எவ்வளவு கோபம் கொண்டாலும், எவ்வாறு தண்டித்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்குத் தீங்கு வராமல் காப்பாற்ற வேண்டிய வழிகளைச் செய்ய வேண்டியது என் கடமை என்று தோன்றியது. தங்களுக்கு நேரான புத்தி சொல்லி, செய்யவேண்டிய தைச் செய்யும்படி செய்து விட்டால்தான், பகைவர்கள் ஒழிவார்கள் என்று உறுதி கொண்டேன். நல்ல ஆலோசனைகள் சொல்லி அரசனுடைய மயக்கத்தை அகற்றுவதும், தகுந்த சூழ்ச்சிகளைச் செய்து பகைவர்களை அழிப்பதும், முன்னோர்கள் இயற்றி வைத்த ஆட்சி நூல் முறை தப்பாமல் அரசாளச் செய்வதும் அமைச்சர்களின் கடமையல்லவா? அதனால் தான் நான் இனி மேலும் சும்மாயிருக்கக் கூடாதென்று துணிந்து வந்தேன். அரசே, தாங்கள் பழைய சேனை அமைச்சரை விலக்கிவிட்டு, இந்தக் கொம்பு மாட்டை அந்தப் பதவியில் வைத்துக் கொண்டீர்கள். தாங்களோ அதனிடம் நட்புக்கொண்டு, அன்பினால், அதை உயர்ந்த இடத்தில் வைத்தீர்கள். ஆனால் அந்தப் பொல்லாத மாடோ, தானே இந்தக் காட்டை அரசாள வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கு எப்போது வேளை வரும் என்று காத்திருக்கிறது!’
இதைக் கேட்டதும் சிங்கத்திற்குச் சிரிப்பாக வந்தது. சே! என்ன வார்த்தை சொன்னாய்? அந்த எருது என்னிடம் வந்து சேர்ந்த போது என்னிடம் என்றும் நட்பாக இருப்பதாக ஆணையிட்டுக் கூறியதே தன் வாக்குறுதியை மீறி அது என் அரசைத் தரன் ஆள நினைக்குமா? ஒருகாலும் அப்படியிருக் காது’ என்று மறுத்துக் கூறியது.
‘அரசே, எதையும் நான் நன்றாக விசாரியாமல் சொல்லவே மாட்டேன். தன் பலத்திற்கு உங்கள் பலம் ஈடாகாதென்று என் எதிரிலேயே தங்களை இகழ்ந்து பேசியது அந்த மாடு. இன்னும் அது எவ்வளவு கொழுப்பாய்ப் பேசியது தெரியுமா? இதற்கு மேலும் தாங்கள் என்னை நம்பவில்லை என்றால், நான் என்ன சொல்ல இருக்கிறது?’ என்று நரி சலித்துக் கொண்டது.
‘அரசரை இகழுகின்ற ஓர் அமைச்சனையும், பிற அமைச்சர்கள் பலரும் வருந்தும்படி செய்கின்ற அரசனையும் திருமகள் விலகிச் செல்வாள். ஆட்சியும் அவர்கள் கையை விட்டுப் போய்விடும், நல்ல குலத்தில் பிறந்தவர்களாகவும், அறிவிற் சிறந்தவர் களாகவும் உள்ளவர்களை விலக்கிவிட்டு ஒரே ஒருவனை மட்டும், தலைமை அமைச்சனாக வைத்த வுடன் அவனுக்கு ஆணவம் உண்டாகி, அவன் அரசையே கைப்பற்றிக் கொள்ள எண்ணமிடுகிறான். கடைசியில் அவன் தன் அரசனையே கொல்லவும் நினைப்பான். தம்மைப் பெருமைப்படுத்திப் போற்று கின்றவர்களுக்கு கைமாறு செய்யாமல், மூடர்களுக்கு உபகாரம் செய்ய முந்திக்கொண்டு செல்பவர்கள் தமக்குத்தாமே கெடுதல் செய்து கொள்பவர்கள் ஆவார்கள். நஞ்சு கலந்த சோற்றையும், அசைந்து ஆடுகின்ற பல்லையும், வஞ்சகர்களின் நட்பையும், தன்னை மிஞ்சி நடக்கின்ற அமைச்சர்களையும்,
உடனுக்குடன் அகற்றி விட வேண்டும். இல்லா விட்டால், அதனால் பெருந்துன்பம் உண்டாகும்’
என்று பலவாறாக நரி எடுத்துக் கூறியது.
“அப்படி அந்த எருது எனக்கு என்ன தீமை
செய்து விட்டது, சொல்!” என்று சிங்கம் கேட்டது.
‘அரசே, அது தங்களை இகழ்ந்து பேசுகிறதே அது ஒன்றே போதாதா?’ என்று நரி கேட்டது.
இருக்காது. நாமே அதன் நட்பை விரும்பி ஏற்றுக் கொண்டோம். அப்படியிருக்க அது நமக்குத் தீமை செய்ய நினைக்கக் காரணமே யில்லை. அப்படியே அது தீமைசெய்ய முற்பட்டாலும், அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல் நாம் அதற்குத் தீமை செய்யக் கூடாது’ என்று சிங்கம் பெருந்தன்மையுடன் கூறியது.
அப்போது அந்த நரி இடை மறித்து, ‘அரசே, அரச பதவியிலும் செல்வத்திலும் ஆசையில்லாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அந்தக் காளை மாடு பொல்லாதது. அதை நீங்கள் நம்பிக் கொண் டிருப்பதே சரி இல்லை. எப்போது, எந்த வகையால் உங்களைக் கொல்லலாம் என்று அது சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நல்ல அறிவுடைய அமைச்சர்கள் சொல்லும் புத்திமதி முதலில் நஞ்சைப் போல் தோன்றினாலும் பின்னால், அளவில்லாத செல்வத்தையும், வாழ்க்கையையும், இன்பத்தையும் உண்டாக்கும். தீயவர்களின் ஆலோசனை முதலில் அமுதம் போலத் தோன்றுமேனும், விரைவில் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும். தனக்கு வேண்டியவர்களை விட்டுவிட்டு வேண்டாதவர்களின் உதவியை நாடுகின்ற ஒருவன், துன்பம் என்கிற முதலையின் வாயில் அகப்பட்டு, துணை செய்வார் யாருமின்றி உயிரை இழக்க நேரிடும். அமுதூற்றி வளர்த்தாலும் எட்டி மரத்தின் நச்சுக் குணம் மாறாது. பாலுற்றி வளர்த்தாலும் பாம்பு நஞ்சைத்தான் கக்கும். தேனை ஊற்றி ஊற்றி வளர்த்தாலும் வேப்பமரத்தின் கசப்பு மாறாது. அதுபோல, தீயவர்களுக்கு எத்தனை நன்மை செய்தாலும் அவர்களுடைய கெட்ட எண்ணம் மாறாது. தீயவர்களை அடியோடு அழித்துவிட வேண்டும். அப்போதுதான் தீமை அழியும். இத்த னையும் ஏன் சொல்லுகிறேன் என்றால், அரசனுக்கு ஒர் அபாயம் வந்தால் அதை முன் கூட்டியே அறிவிப்பது அமைச்சன் கடமையாகும். தன் அறிவினாலே அந்த அபாயம் வராமல் தடுப்பதும் அரசனுக்கு மன உறுதி உண்டாக்குதலும் அந்த அமைச்சனுக்குரிய கடமைகளாகும். நான் இவ்வளவு எடுத்துச் சொல்லி யும் தாங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மதம் பிடித்த யானையைப் போல் மனம்போன வழியில் செல்வதும், பெருங்கேடு ஏற்பட்ட காலத்தில், அமைச்சர்களை வெறுத்துப் பேசுவதும் மன்னர்களின் இயல்பாகப் போய்விட்டது’ என்றது நரி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எருதும் சிங்கமும் - 2 - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - கூறியது, அந்த, என்ன, ‘அரசே, நான், சிங்கம், தீமை, செய்து, கேட்டது, தான், சொல்லி, மேலும், போல், நாம், இரண்டாவது, செய்ய, தாங்கள், நல்ல, வளர்த்தாலும், மாறாது, அந்தப், வேண்டும், வராமல், இந்தக், வந்து, பேசியது, செய்வதும், கொன்றதும், என்றது, நீங்கள்