பஞ்ச தந்திரக் கதைகள் - எருதும் சிங்கமும்
தென்னாட்டில் மகிழாருப்பியம் என்று ஓர் ஊர் இருந்தது. அங்கு வர்த்தமானன் என்ற பெயருடைய ஒரு வணிகன் இருந்தான். அவன் வெளிநாடுகளில் வாணிகம் செய்ய விரும்பி, தன்னிடம் இருந்த சரக்கு களைக் கட்டை வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப் பட்டான். ஒரு காட்டு வழியாகப் போகும் போது வண்டி மாடுகளில் ஒன்று காலிடறி விழுந்து விட்டது. அந்த மாட்டின் கால் பிசகி அது நொண்டியாகி விட்டது.
இதைக் கண்ட வணிகன், அந்த மாட்டை அவிழ்த்து விட்டுத் தன் சரக்குகளை ஆட்களின் தலையில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். அந்த மாட்டைப் பார்த்துக் கொள்வதற்காக ஓர் ஆளை வைத்து விட்டுப் போனான்.
‘சாகிற மாட்டுக்குக் காவலென்ன காவல்!” என்று அந்த ஆளும் புறப்பட்டுப் போய்விட்டான்.
ஆனால், அந்த மாடு சாகவில்லை. நொண்டிக் காலோடு மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந்து சென்று காட்டில் நன்றாக மேய்ந்தது. தீனி ஏற ஏற அது கொழுத்து வளர்ந்தது. ஊட்டத்தினால் அதன் கால் ஊனமும் சரியாகி விட்டது. பிறகு அது அந்தக் காடு முழுவதும் விருப்பம்போல் சுற்றித் திரிந்து, நன்றாக மேய்ந்து பெரிய எருதாகி விட்டது.
அந்தக் காட்டை ஒரு சிங்கம் ஆண்டு வந்தது. அந்தச் சிங்கம் தண்ணிர் குடிப்பதற்காக ஒரு நாள் யமுனை யாற்றுக்குச் சென்றது. அப்போது அந்தப் பக்கத்தில் திரிந்து கொண்டிருந்த எருது முழக்கம் செய்தது. கடல் முழக்கம் போல் அந்த முழக்கம் பெரிதாக இருந்தது. சிங்கம் அதற்கு முன் அத்தகைய பேரொலியைக் கேட்டதில்லை யாகையால், நடுங்கிப் போய்விட்டது. இதேது புதிதாக இருக்கிறதே!’ என்று பயந்து அது தண்ணிர் குடிக்கவும் மறந்து நின்று விட்டது.
சிறிது தூரத்தில் இரண்டு நரிகள் நின்று கொண்டிருந்தன. சிங்கத்தின் அமைச்சன் பிள்ளைகளாகிய அவை இதைப் பார்த்து விட்டன. அவற்றில் ஒரு நரி, மற்றொன்றைப் பார்த்து, “நம் அரசன் ஏன் நடுங்கி நின்று விட்டான்?’ என்று கேட்டது.
‘அதைப் பற்றி நமக்கென்ன கவலை? அதைத் தெரிந்துகொள்வதால் நமக்கென்ன இரை கிடைக்கப் போகிறதா, அல்லது பெருமை கிடைக்கப்போகிறதா. தனக்குத் தொடர்பில்லாத ஒரு காரியத்தில் தலையிடுகிறவன் ஆப்புப் பிடுங்கிய குரங்கு போல் அவதிப் பட வேண்டியது தான்’ என்றது இன்னொரு நரி.
“ அப்படியல்ல. என்ன இருந்தாலும் சிங்கம் நம் அரசன். அரசர்களுக்குப் பணி செய்வது பெருமையானது. அதனால் பெரியோர்களுடைய நட்பு உண்டாகும்; பல உதவிகளும் கிடைக்கும். நாய்கள், ஈரம் சிறிதும் இல்லாத எலும்பையும், பல்லசையும் வரை விடாமல் கெளவிக்கடித்துத் தின்னும். ஆனால் மிகுந்த பசியோடிருக்கும் சிங்கமோ மதயானையை அடித்துக் கொன்று தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுமேயல்லாமல், சிறிய உயிர்களைக் கொல்லாது. நாய், ஈனத் தனமாகத் தன் வயிற்றை ஒடுக்கி வாலைக் குழைத் துக் குழைத்து முகத்தைப் பார்த்துக் கெஞ்சி எச்சிலை வாங்கியுண்ணும். ஆனால் யானையோ, எவ்வளவு பசியிருந்தாலும், சிறிதும் கெஞ்சாது. தன் பாகன் வலியக் கொண்டு வந்து ஊட்ட ஊட்ட உணவை யுண்ணும். இப்படிப்பட்ட பெருமை யுடையவர்களோடு சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை’ என்றது முதல் நரி,
சிங்கத்திற்கு நாம் அமைச்சர்கள் அல்லவே, இதைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?’ என்று மறுத்தது இரண்டாவது நரி.
‘எந்த ஒரு காரியத்தையும் தந்திரமாகச் செய்தால் உயர்வை யடையலாம். யோசனையில்லா விட்டால் சிறுமைதான் உண்டாகும். நல்ல செயல்களைச் செய்து நன்மையடைவது அரியதுதான். தீய செயல்களைச் செய்து கேடடைவது எளிது.
ஏரியின் நீரைக் கரைபோட்டுக் கட்டுவது அரிது. அதை உடைத்துக் கெடுப்பது எளிது. ஒரு கல்லை மலையில் ஏற்றுவது அரிது. அதைக் கீழே உருட்டி விடுவது எளிது. அரியனவா யிருந்தாலும் பெரிய செயல்களையே செய்து பெருமையடைய வேண்டும். அறிவுடைய பெரியோர்கள் வாழ்வது ஒரு கணம் போல் இருந்தாலும் பெருமையோடும் புகழோடும் வாழ்வார்கள். கருமை நிறமுள்ள காக்கையோ, எச்சிலைத் தின்று கொண்டு பல நாள் உலகில் வாழ்ந்திருக்கும். பெருமையும் சிறுமையும் அவரவர் செயலால் ஏற்படுவதே! இவற்றில் அருமையான செயல்களைச் செய்கின்றவர்களுக்கே பெருமை யுண்டாகும்’ என்று கூறியது முதல்நரி.
‘நல்லது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டது இரண்டாவது நரி.
“நம் மன்னனாகிய சிங்கம் வருத்தப்பட்ட காரணத்தை அறிந்து, அதன் மனத் துயரத்தை நீக்குவேன். அவனுடைய அமைச்சனாக இருந்து நம் நரிக்குலத்துக்கு இன்ப வாழ்வு ஏற்படச் செய்வேன்’ என்றது முதல் நரி,
“மோந்து பார்ப்பவர்கள் போல் வந்து, கடித்து விடக் கூடிய தன்மை யுடையவர்கள் அரசர்கள். அரசர்களும், தீயும், பாம்பும் ஒரே மாதிரி தான்? என்று இரண்டாவது நரி கூறியது.
‘நெருங்கி வளர்ந்திருக்கும் கொடி, பக்கத்தில் இருக்கும் மரத்தின் மேலேதான் படரும். அதுபோல, பெண்களும், மன்னர்களும் அருகில் இருந்து இனிமையாகப் பேசுபவர்களிடமே அன்பு கொள்ளுவார்கள். நானும் என் திறமையால் சிங்கத்தின் நட்பைப் பெறுவேன்’ என்று உறுதியாகக் கூறியது முதல் நரி.
‘நன்று, நீ வெற்றியடைக!’ என்று இரண்டாவது நரியும் மனந்துணிந்து வாழ்த்துக் கூறியது.
முதல் நரி விடை பெற்றுக் கொண்டு சிங்கத்தின் முன்னே சென்று கை கூப்பி நின்றது.
இந்த நாள் வரை உன்னைக் காணோமே, எங்கு போயிருந்தாய்?” என்று கேட்டது சிங்கம்.
‘அரசே, ஒன்றுமில்லாமல் வந்து என்ன பயன்? இப்போது தங்களிடம் வரவேண்டியகாரியம் ஏற்பட்டதால் வந்தேன். என்னைச் சிறியவன் என்று எண்ணி ஒதுக்கிவிடாதீர்கள். உங்களுக்கு வெற்றியும் பெருமையும் உண்டாகும்படி செய்வேன். நல்ல அறிஞர்களின் துணை கொண்டே அரசர்கள் நீதிகளை இயற்றுவார்கள். அவர்களுடைய அரசும் பெருமையுடன் விளங்கும். ஒளி பொருந்திய வாளும், இனிமையான இசையும் இன்பந்தரும் யாழும், பரந்த உலகமும், அழகிய பெண்களும், அறிவு நிறைந்த பெரி யோரும், பயன் மிக்க நூல்களும் ஆகிய இவையெல்லாம், வைத்துக் காப்பாற்றுகின்றவர்களின் தன்மை யாலேதான் சிறப்படையும். அதுபோல் அரசு சிறக்க அறிஞர் துணை தேவை’ என்றது நரி.
‘நரியே, நீ அமைச்சருடைய மகன் அல்லவா? அதனால்தான் உயர்ந்த ஆலோசனைகளைக் கூறுகின்றாய். நீ என்னிடமே இருந்து, உண்மையாக வேலை செய்து வா!’ என்று சிங்கம் கூறியது.
உடனே நரி துணிச்சலுடன் அரசே, தங்கள் மனத்தில் ஏதோ பயம் ஏற்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறதே! என்று கேட்டது.
“ஆம், இதுவரை இந்தக் காட்டில் நான் கேட்டறியாத ஒரு பெரு முழக்கத்தைக் கேட்டேன். அதனால் என் மனம் கலங்கியிருக்கின்றது. முழக்கம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாய் அந்த முழக்கம் செய்த மிருகமும் இருக்க வேண்டும் அல்லவா? அந்த மிருகம் என்னைக் காட்டிலும் பெரியதாய் இருக்குமோ என்று அஞ்சுகிறேன். வழுக்கி விழ இருந்தவனுக்கு ஊன்றுகோல் கிடைத்தது போல் சரியான சமயத்தில் நீ வந்தாய் என் கவலை நீங்க ஒரு வழி கூறு’ என்று மனம் விட்டுப் பேசியது சிங்கம்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எருதும் சிங்கமும் - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - சிங்கம், அந்த, போல், கொண்டு, விட்டது, கூறியது, முழக்கம், என்றது, செய்து, கேட்டது, இரண்டாவது, செயல்களைச், எளிது, இருந்து, பெருமை, நின்று, நாள், சிங்கத்தின், என்ன, வந்து, வேண்டும்