ஓஷோ சொன்ன கதைகள் - குரு செய்யும் வேலை
கர்ண பரம்பரை கதை ஒன்று உண்டு. ஒருமுறை ஒரு நிறை கர்ப்பிணியான பெண் சிங்கம் ஒரு மலை உச்சியிலிருந்து மற்றொரு மலை உச்சிக்கு தாவும்போது அதன் வயிற்றிலிருந்த குட்டி கீழே விழுந்து விட்டது. அந்த குட்டி அந்த சமயத்தில் அந்த இடத்தில் போய்கொண்டிருந்த ஆட்டு மந்தைக்குள் போய் விழுந்துவிட்டது. அதனால் அது ஆடுகளுடன் கலந்து, ஆடுகளுடன் வாழ்ந்து, ஆடுகளைப் போலவே இருந்து கொண்டிருந்தது.
தான் ஒரு சிங்கமாக இருக்கக் கூடும் என்ற ஒரு நினைப்பு அதன் கனவில் கூட இல்லை. எப்படி இருக்க முடியும்? அதைச் சுற்றி இருந்த அனைத்தும் ஆடுகளே. அது ஒரு சிங்கம் போல ஒருபோதும் கர்ஜித்ததே இல்லை. ஒரு ஆடு கர்ஜிப்பது இல்லை. அது ஒரு சிங்கம் போல தனித்து இருந்ததே இல்லை. ஒரு ஆடு ஒருபோதும் தனித்து இருக்காது. அது எப்போதும் கூட்டத்தில்தான் இருக்கும். – கூட்டம் கதகதப்பானது, உத்தரவாதமானது, பாதுகாப்பானது. ஆடுகள் நடப்பதை நீ கவனித்து பார்த்தால் அவை ஒன்றையொன்று உரசிக்கொண்டு நெருக்கமாகத்தான் நடக்கும். அவை தனித்திருக்க மிகவும் பயப்படும்.
இந்த சிங்கம் வளர்ந்தது. இது மிகவும் மாறுபட்ட ஒரு நிகழ்வு. அது மனதளவில் தன்னை ஒரு சிங்கமாக நினைக்கவில்லை என்றாலும் கூட உடலியல் அதனுடன் ஒத்துப் போகவில்லை. இயற்கை உன்னை பொருட்படுத்துவது இல்லை.
அது மிகவும் அழகான இளைய சிங்கமாக உருவெடுத்தது. ஆனால் வளர்ச்சி மிகவும் மெதுவானதாக இருந்ததால் சிங்கம் ஆடுகளுடன் ஒத்து போனதைப் போலவே ஆடுகளும் இந்த சிங்கத்தை ஏற்றுக் கொண்டு விட்டன. ஆடுகள் இது ஒரு சிறிதளவு வளர்ச்சியில் வேறு பட்டது என நினைத்தன. அது வேறுபட்டு நடந்து கொள்ளவில்லையே – ஒரு சிறு உடலியல் மாறுதல் தானே – சிங்கம் வளர்ந்து கொண்டே வந்தது.
அப்படி வளரக் கூடாது. சிங்கத்தைப் போல தோற்றமளிக்கக் கூடாது…….. ஆனால் இது சிங்கமல்ல. இது பிறந்ததிலிருந்தே அவை பார்த்துக் கொண்டிருக்கின்றன, அவை தான் இதை வளர்த்தன, அவைதான் இதற்கு பால் கொடுத்தன. இந்த சூழ்நிலையில் வளர்ந்த இது சைவமாகதான் இருந்தது. எந்த சிங்கமும் சைவமல்ல. ஆனால் இந்த சிங்கம் சைவமாக இருந்தது, ஏனெனில் ஆடுகள் சைவமே. இது புல்லை மிகவும் மகிழ்ச்சியோடு சாப்பிட்டது.
ஆடுகள் இது மிகவும் பெரிதாகவும் சிங்கத்தை போல இருப்பதையும் ஏற்றுக் கொண்டன. ஒரு அனுபவசாலியான ஆடு, இது இயற்கையின் தவறு. எப்போதாவது ஒருமுறை இப்படி நடப்பது இயல்புதான். என்றது. அதுவே அதுதான் உண்மை என நினைத்துக் கொண்டது. சிங்கத்தின் நிறம், உடல் எல்லாமே வேறுபட்டுள்ளது – சாதாரணமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக – ஆனால் இது ஒரு சிங்கமாக இருக்கக் கூடும் என்ற நினைப்பே சாத்தியமில்லை. அது எப்போதும் ஆடுகளால் சூழப் பட்டிருந்தது. அவை இதனிடம், கவலைப்படாதே, நீ ஒரு சிறிதளவு வித்தியாசமானவனாக இருக்கிறாய் அவ்வளவே. நாங்கள் உன்னை பார்த்துக் கொள்கிறோம். என்றன.
ஆனால் ஒருநாள் ஒரு வயதான சிங்கம் ஆட்டுமந்தைகளுக்கிடையில் இந்த இளைய சிங்கம் இருப்பதை பார்த்தது. அதனால் அதன் கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு சிங்கம் ஆட்டுமந்தைகளுக்கிடையில் இருப்பதையோ, அதை பார்த்து எந்த ஆடும் பயப்படாததையோ சரித்திரத்திலேயே கேள்வி பட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. சிங்கம் ஆட்டைபோலவே நடந்தது, புற்களை கொறித்தது.
வயதான சிங்கத்தால் தனது கண்களையே நம்ப முடியவில்லை.
தன்னுடைய காலை உணவாக ஒரு ஆட்டை பிடிக்கவேண்டும் என்பதையே முற்றிலுமாக மறந்து அது அந்த சிங்கத்தை பிடிக்க பாய்ந்தது. ஆனால் இதற்கு வயதாகிவிட்டது. அதற்கோ சிறு வயது. – அதனால் வேகமாக ஓடியது. அது தான் ஒரு ஆடு என நினைத்தாலும் கூட, ஆபத்து வரும்போது மனதின் அடையாளம் மறந்துபோய் விடுகிறது.
அது ஒரு சிங்கம் போல ஓடியது. வயதான சிங்கத்திற்கு அதை பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் இறுதியில் அதை பிடித்தபோது அது அழுதுகொண்டே என்னை மன்னித்து விட்டுவிடு, நான் ஒரு ஆடு என்றது. வயதான சிங்கம், முட்டாளே, அழுவதை நிறுத்து, என்னுடன் குளக்கரைக்கு வா என்றது.
அருகிலேயே ஒரு குளம் ஒன்று இருந்தது. இது அதை அங்கே கூட்டி சென்றது. இளைய சிங்கத்திற்கு போக விருப்பமேயில்லை
விருப்பமேயில்லாமல்தான் சென்றது. நீ ஒரு ஆடாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிங்கத்தை எதிர்த்து என்ன செய்ய முடியும். நீ அதன் பேச்சை கேட்காவிட்டால் அது உன்னை கொன்றுவிடும். அதனால் இது அதனுடன் சென்றது. குளம் மிகவும் சலனமின்றி, அலைகளில்லாமல், ஒரு கண்ணாடி போல இருந்தது.
வயதான சிங்கம் இதனிடம், பார், என் முகத்தை பார், உன் முகத்தையும் பார். என் உடல் பார், உன் உடலையும் பார். தண்ணீரில் பார். என்றது.
ஒரு விநாடியில் அங்கே ஒரு கர்ஜனை எழுந்தது. அது எல்லா மலைகளிலும் எதிரொலித்தது. ஆடு மறைந்து அங்கே சிங்கம் எழுந்தது. அவன் வேறுபட்டவன். அவன் தன்னை அறிந்து கொண்டான். தான் ஒரு ஆடு என்று கொண்ட அடையாளம் உண்மையல்ல, அது ஒரு கருத்து மட்டுமே. அவன் இப்போது உண்மையை கண்டுகொண்டான்.
வயதான சிங்கம், இப்போது நான் எதுவும் கூற வேண்டியதில்லை, நீ புரிந்து கொண்டு விட்டாய். என்றது.
இளைய சிங்கம் இதுவரை அறிந்திராத வேறுபட்ட வலிமையை உணர்ந்தது…… அந்த வலிமை இதுவரை தடைபட்டிருந்தது. அது இப்போது அளவற்ற சக்தியை உணர்ந்தது. அது இதுவரை ஒரு வலிமையற்ற, பணிவான ஆடாக இருந்தது. அந்த பலமற்ற, வலிமையற்ற தன்மை காற்றில் கரைந்துவிட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குரு செய்யும் வேலை - ஓஷோ சொன்ன கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - சிங்கம், மிகவும், பார், வயதான, அந்த, இல்லை, என்றது, சிங்கத்தை, இளைய, ஆடுகள், அதனால், சிங்கமாக, தான், அவன், இதுவரை, இப்போது, உன்னை, ஆடுகளுடன், அங்கே, சென்றது