பல்சுவைக் கதைகள் - தோப்புக்கரணம்

"நான் பாஸ் பண்ண.. நீதான் உதவி செய்யணும்..." என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான் பாபு.
சாமி சிலை முன்னால் 108 தோப்புக்கரணம் போட்டான். கோவில் பிரகாரத்தில் மூன்று முறை சுற்றி வந்தான்.
பாபு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். இப்படி பரிட்சை ஏதாவது வந்தால் அன்றைக்கு கண்டிப்பாய் கோவிலில் 108 தோப்புக் கரணம் போடுவான்.
அன்று தான் முதல் பரிட்சை. ஆசிரியர் கேள்வித்தாளை கொடுத்தார்.
பாபு சாமியை வேண்டியபடி கேள்வித்தாளை பிரித்தான். ஆச்சரியமாக இருந்தது. ஒன்றிரண்டு கேள்விகளைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.
"நான் உனக்கு என்ன குறை வைத்தேன்.. ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய்?.." என்று மனசுக்குள்ளாக சாமியைக் கேட்டான்.
இரண்டாவது பரிட்சைக்குப் போனான். இரண்டாவது முதல் பரிட்சையை விட மோசமாக இருந்தது. அவனுக்கு மனது சரியில்லை. மீண்டும் கோவிலுக்குப் போய் சாமியிடம் வேண்டிக் கொண்டான்.
"உன்னை நம்பியவர்களை கைவிட மாட்டாய். என்று சொல்லுகிறார்களே.. என்னையும் கைவிட்டுவிடாதே.." என்று வேண்டியபடி பரிட்சை அத்தனையும் எழுதி முடித்தான்.
எந்தப் பரிட்சையும் அவனுக்குத் திருப்தியாக அமையவில்லை. ஆனால் எப்படியும் கடவுள் கைவிடமாட்டார் என்று மட்டும் பாபு நம்பிக்கையாய் இருந்தான்.
அன்று தான் பரிட்சை முடிவு தெரியும் நாள். நேராக பள்ளிக்கூடத்திற்கு ஓடினான்.
அங்கு பரிட்சையில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ஒட்டியிருந்தது. அதில் இவன் பெயர் இல்லை. இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேராக கோவிலுக்கு ஓடி வந்தான்.
"அந்தி சந்தி எந்த நேரத்திலும் உன்னையே நினைத்திருக்கும் ... எனக்கு நீ செய்யும் உதவி இதுதானா?" என்று கேட்டான் சாமியிடம்
சாமி எப்போதும் போல சிலையாக நின்றிருந்தது. பாபு அழுது புலம்பினான்.
அன்று இரவு வெகுநேரம் கழித்துத்தான் தூங்கினான் பாபு.
"உன்னுடைய சந்நதியில் எத்தனை தோப்புக்கரணம் போட்டிருப்பேன். என்னை கைவிட்டுவிட்டாயே..." என்று தூக்கத்தில் அவன் உதடுகள் முணுமுணுத்தன.
அடுத்த வினாடி வானம் இடிந்து விழுவது போன்ற ஒரு சத்தம். பாபு கண்விழித்துப் பார்த்தான். என்ன ஆச்சரியம்?
கோவிலில் அவன் கும்பிட்ட அதே சாமி. உயிரோடு சிரித்தபடி நின்று கொண்டிருந்தது.
"நான் பரிட்சையில் தோல்வியடைந்து அழுது கொண்டிருக்கிறேன்... உனக்கு சிரிப்பாய் இருக்கிறதா?.." என்று அழுதபடி கேட்டான் பாபு. கடவுள் அவன் அருகில் வந்து அவன் கண்களைத் துடைத்துவிட்டார்.
"நீ என்னை நம்பியதை விட உன்னை நம்பியிருந்தால், நீ பரிட்சையில் ஜெயித்திருப்பாய்" என்றார் கடவுள்.
"சாமி, என்ன சொல்கிறாய்..."
"ஆமாம் பாபு. என்னைச் சுற்றி வந்த நேரத்தில் நீ எனக்கு தோப்புக்கரணம் போட்ட நேரத்தில் முறையாகப் படித்திருந்தால் நீ வெற்றி பெற்றிருப்பாய்"
பாபு மௌனமாக இருந்தான்.
"கடமையைச் செய்பவன்... கடவுளைக் கும்பிட வேண்டிய அவசியம் இல்லை பாபு" என்றார் கடவுள்.
பாபு ஆச்சரியமாகக் கடவுளைப் பார்த்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தோப்புக்கரணம் - பல்சுவைக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - ", பாபு, பரிட்சை, கடவுள், சாமி, அவன், என்ன, பரிட்சையில், கேட்டான், அன்று, நான், தோப்புக்கரணம், என்னை