இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
நவீன இந்திய வரலாற்றில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இராஜராம் மோகன் ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர் போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலில் மக்களிடையே சமூக பண்பாட்டு விழிப்புணர்வு தோன்றியது. மேற்கத்திய தாராளச் சிந்தனைகள் பரவியதும், சீர்திருத்த இயக்கங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தன. இந்திய மக்களின் சமூக சமய வாழ்க்கையில் இந்த இயக்கங்கள் குறிப்பிடத் தக்க மாறுதல்களை தோற்றுவித்தன.
இராஜராம் மோகன் ராய் |
1772ல் வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் பிறந்த அவர் ஆற்றல்மிகு சுயசிந்தனையும் பகுத்தறியும் திறனும் மிக்கவராக விளங்கினார். விவிலியத்தையும், இந்து மற்றும் முஸ்லிம் சமய நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலம், சமஸ்கிருதம், பாரசீகம், அராபிக், பிரஞ்சு, லத்தீன், கிரேக்கம், ஹூப்ரு உள்ளிட்ட பல மொழிகளிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார்.
1815ல் ஆத்மிய சபையை அவர் நிறுவினார். பின்னர் 1828ல் இந்த சபையே பிரம்ம சமாஜமாக வளர்ச்சி பெற்றது. இந்த அமைப்பின்மூலம் 'கடவுள் ஒருவரே' என்று ராம் மோகன் ராய் பிரச்சாரம் செய்தார். உபநிடதங்கள், விவிலியம், குர்ஆன் போன்ற சமய நூல்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து பல்வேறு சமயத்தினரிடம் ஒற்றுமையேற்படுத்த அவர் முயற்சித்தார். ஆத்மிய சபையின் பணியை மகரிஷி திபேந்திரநாத் தாகூர் மேற்கொண்டார். (ரவிந்திரநாத் தாகூரின் தந்தை). இவர்தான் பிரம்ம சமாஜம் என்று இச்சபைக்கு பெயர்மாற்றம் செய்தார், இந்தியாவின் தலைசிறந்த சமூக அமைப்பாக பிரம்ம சமாஜத்தை உருவாக்கினார்.
1829ல் வில்லியம் பெண்டிங் பிரபு சதி முறையை ஒழிக்க முன்வந்தபோது, ராஜா ராம் மோகன் ராய் அவருக்கு உறுதுணையாக நின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். குழந்தை திருமணத்தையும், பெண் சிசுக்கொலையும் அவர் கடுமையாக எதிர்த்தார். விதவைகள் மறுமணம், பெண் கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை போன்றவற்றை அவர் ஆதரித்தார். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சாதிமுறை பெரும் தடைக்கல்லாக இருப்பதை அவர் உணர்ந்தார், மனித குலத்தின் சமத்துவத்தில் அவர் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். பிராமண புரோகிதர்களின் ஆதிக்கத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை. கலப்பு திருமணத்தையும் அவர் ஆதரித்தார். தாமே ஒரு முஸ்லீம் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டார். 1817ல், சமயப்பரப்பாளரான டேவிட் ஹேர் என்பருடன் இணைந்து கல்கத்தாவில் இந்துக் கல்லூரியை (இதுவே தற்போதைய கல்கத்தா மாநிலக் கல்லூரி) நிறுவினார். பெண்களுக்கான பள்ளிகளையும் அவர் நிறுவினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் , அவர், இந்திய, சமூக, இயக்கங்கள், வரலாறு, சீர்திருத்த, ராய், மோகன், இந்தியாவின், பிரம்ம, இராஜராம், நிறுவினார், திருமணத்தையும், பெண், பெண்களுக்கான, ஆதரித்தார், அவருக்கு, சுவாமி, இந்தியா, ஆத்மிய, ராம், செய்தார்