பாரசீக படையெடுப்புகள்
பாரசீக படையெடுப்புகள்
சைரஸ் (கி.மு. 558 - கி.மு. 530)
அக்கமேனியப் பேரரசின் மிகச்சிறந்த வெற்றியாளராகத் திகழ்ந்தவர் மகா சைரஸ். இந்தியாவிற்கு எதிராக படையெடுத்த முதல் படையெடுப்பாளர் இவரேயாகும். இந்தியாவுக்குள் நுழைந்து காந்தாரப் பகுதியை கைப்பற்றினார். சிந்து நதிக்கு மேற்கிலிருந்த இந்தியப் பழங்குடிகள் அனைத்தும் அவரிடம் சரணடைந்தன. கப்பம் கட்டவும் ஒப்புக்கொண்டன. அவரது மகன் காம்பிசிசுக்கு இந்தியாவின்மீது கவனம் செலுத்த நேரமில்லை.
முதலாம் டேரியஸ் (கி.மு. 522 - கி.மு. 486)
சைரஸின் பேரனான முதலாம் டேரியஸ் கி.மு. 518ல் சிந்து வெளியைக் கைப்பற்றினார். பஞ்சாப், சிந்து இரண்டும் இவரால் இணைத்துக் கொள்ளப்பட்டன. இப்பகுதி பேரரசின் இருபதாவது சாட்ரபி (மாகாணம்)யாக திகழ்ந்தது. அக்கமேனியப் பேரரசின் மக்கள்தொகை மிகுந்த செழிப்புமிக்க மாகாணமாக அது திகழ்ந்தது. சிந்து நதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக ஸ்கைலாஸ் தலைமையில் கப்பற்படையை டேரியஸ் அனுப்பிவைத்தார்.
செர்க்ஸஸ் (கி.மு. 465 - கி.மு. 456)
தனது வலிமையைப் பெருக்கிக் கொள்ள இந்திய மாகாணத்தை செர்க்ஸஸ் பயன்படுத்திக் கொண்டார். தனது எதிரிகளுடன் போரிடுவதற்காக, இந்திய காலாட்படை, குதிரைப்படை ஆகியவற்றை கிரேக்கத்துக்கு அனுப்பி வைத்தார். ஆனால், செர்க்ஸஸ் கிரேக்கத்தில் தோல்வியைத் தழுவியதால் இந்தியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. இத்தோல்விக்குப் பிறகு அக்கமேனியர்கள் இந்தியாமீது ஆக்ரமிப்பு கொள்கையைப் பின்பற்ற முடியவில்லை. இருப்பினும், இந்திய மாகாணம் அவர்கள் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்து வந்தது. கி.மு. 330ல் அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிடுவதற்காக மூன்றாம் டேரியஸ் இந்திய வீரர்களை பயன்படுத்திக் கொண்டார். இந்தியாமீது அலெக்சாண்டர் படையெடுத்தபோது பாரசீகர்களின் கட்டுப்பாடுகள் தளர்ந்து விட்டிருந்தன என்றே கூறவேண்டும்.
பாரசீகப் படையெடுப்பின் விளைவுகள்
இந்தோ - ஈரானிய வர்த்தகம் வளர்வதற்கு பாரசீகப் படையெடுப்புகள் ஊக்கமளித்தன. மேலும், அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு இது கட்டியம் கூறியது. வடமேற்கு இந்தியாவில் ஈரானிய எழுத்து வடிவமான கரோஷ்தி வரிவடிவம் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அசோகரது கல்வெட்டுகள் சிலவற்றில் இந்த வரி வடிவம் காணப்படுகிறது. மௌரியர் கால கலையிலும் பாரசீகக் கலையின் தாக்கத்தைக் காணமுடிகிறது. குறிப்பாக அசோகரது ஒற்றை கல்தூண்களும் சிற்பங்களும் இதற்கு சான்றாகும். அசோகரது கல்வெட்டு ஆணைகள் ஈரானிய செல்வாக்கினால் விளைந்தவை எனலாம். இந்தோ-மாசிடோனியத் தொடர்புகள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட இந்தோ-ஈரானியத் தொடர்பின் தாக்கம் பெரிதும் பயனளிப்பதாக அமைந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாரசீக படையெடுப்புகள் , இந்திய, வரலாறு, படையெடுப்புகள், பாரசீக, சிந்து, டேரியஸ், ஈரானிய, அசோகரது, இந்தோ, செர்க்ஸஸ், பேரரசின், இந்தியாமீது, போரிடுவதற்காக, பாரசீகப், சைரஸ், கைப்பற்றினார், கொண்டார், பயன்படுத்திக், இந்தியா, முதலாம், மாகாணம், திகழ்ந்தது, தனது, அக்கமேனியப், இந்தியப்