வரலாற்றில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு மிகச்சிறந்த நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. புத்தர், மகாவீரர், ஹெராக்ளிடஸ், சொராஸ்டர், கன்பூசியஸ் லாசே போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் வாழ்ந்து தங்களது கருத்துக்களை பரப்பியது இந்த நூற்றாண்டில்தான். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் குடியரசு நிறுவனங்கள் வலிமையாகத் திகழ்ந்தன. இதனால் சடங்குகள் ஆதிக்கம் செலுத்திய வைதீக சமயத்திற்கு எதிரான சமயங்கள் எழுச்சிபெற வாய்ப்புக்கள் தோன்றின. அவற்றில் சமணமும், பௌத்தமும் வெற்றி பெற்றதோடு, இந்திய சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களையும் ஏற்படுத்தின.
சமண, புத்த சமயங்கள் எழுச்சிபெறக் காரணங்கள்
|
சமண முத்திரை |
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய சமயம் சார்ந்த அமைதியின்மையே சமண, புத்த சமயங்களின் எழச்சிக்கு முதன்மையான காரணமாகும். பிந்தைய வேத காலத்தில் புகுத்தப்பட்ட சிக்கலான சடங்குமுறைகளும் வேள்விகளும் சாதாரண மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. மேலும், வேள்விக்கான செலவுகளும் ஏராளமாக இருந்தன. மூடநம்பிக்கைகளும், மந்திரங்களும் மக்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கின. வேள்வி முறைகளுக்கு மாற்றாக எழுந்த உபநிடதங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் உயர்ந்த தத்துவங்களை எடுத்துக் கூறின. ஆனால் அவற்றை சாதாரண மக்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு எளிய, புரிந்து கொள்ளக்கூடிய மோட்சத்திற்கான சிறந்த வழி தேவைப்பட்டது. அத்தகைய வழியும் மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய மொழியில் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். இந்த தேவைகளை புத்தர், மகாவீரர் ஆகியோருடைய போதனைகள் நிறைவு செய்வதாக அமைந்தன.
|
புத்த முத்திரை |
மேற்கண்ட சமய காரணங்கள்தவிர, சமூக பொருளாதார சூழ்நிலைகளும் இவ்விரண்டு சமயங்களின் எழுச்சிக்கு வித்திட்டன. இந்தியாவிலிருந்த கடுமையான ஜாதிமுறை சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. கீழ்சாதியினருக்கு மறுக்கப்பட்ட பல சலுகைகளை உயர் சாதியினர் அனுபவித்து வந்தனர். புரோகித வர்க்கத்தின் ஆதிக்கத்தை ஷத்திரியர்கள் வெறுத்தனர். புத்தர், மகாவீரர் இருவருமே ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாணிக வளர்ச்சியின் பயனாக வைசியர்களின் பொருளாதார நிலை உயர்ந்திருந்தது. ஆனால் வர்ணாஸ்ரம முறையின்கீழ் வைசியருக்கு உயரிய இடம் அளிக்கப்படவில்லை. எனவே, அவர்கள் புத்த, சமண சமயங்களை ஆதரிக்கத்தொடங்கினர், வாணிக வகுப்பினரான இவர்கள் இவ்விரண்டு புதிய சமயங்களுக்கும் மகத்தான ஆதரவு அளித்து போற்றினர்.