புத்த சமயம் (Buddhism)
புத்தர் மறைந்தவுடனேயே, மகாகசபர் தலைமையில் ராஐகிருஹத்தில் முதல் புத்த சமய மாநாடு கூட்டப்பட்டது. புத்தரது போதனைகளின் தூய்மையை பாதுகாப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். சுமார் கி.மு. 383 ஆம் ஆண்டு இரண்டாவது புத்தசமய மாநாடு வைசாலியில் நடைபெற்றது, அசோகரது ஆதரவில் பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்தசமய மாநாடு கூடியது. மொக்காலிபுத்ததிஸ்ஸா இதற்கு தலைமை வகித்தார். இம்மாநாட்டில் திரிபீடகங்கள் இறுதிவடிவம் பெற்றது. வசுமித்திரர் தலைமையில் காஷ்மீரில் நான்காவது புத்தசமய மாநாட்டை கனிஷ்கர் கூட்டினார். அசுவகோஷர் இம்மாநாட்டில் பங்கேற்றார். இம்மாநாட்டில்தான் மகாயான புத்த சமயம் என்ற புதிய சமயப் பிரிவு உருவாயிற்று. புத்தரால் போதிக்கப்பட்டதும் அசோகரால் பரப்பப்பட்டதுமான புத்த சமயம் ஹூனயானம் என்று அழைக்கப்பட்டது. புத்தர் மறைந்து ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் புத்தசமய நூல்கள் திரட்டப்பட்டு தொகுக்கப்பட்டன. அவை திரிபீடகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன சுத்தபீடகம், வினயபீடகம், அபிதம்மபீடகம். அவை பாலி மொழியில் எழுதப்பட்டன.
இந்தியாவில் புத்தசமயம் மறைய காரணங்கள்
பிராமண சமயம் புத்துயிர் பெற்றதாலும் பாகவத சமயத்தின் எழுச்சியாலும் புத்தசமயத்தின் புகழ் மங்கத் தொடங்கியது. மக்களின் மொழியான பாலிமொழி புத்தசமயத்தின் மொழியாக இருந்த நிலை கி.பி. முதலாம் நூற்றாண்டுக்குப் பிறகு மாறியது. கற்றோர் மொழியான வடமொழியை புத்தசமயம் பின்பற்றத் தொடங்கியது. மகாயான புத்தசமயம் தோன்றிய பிறகு, சிலை வழிபாடும் பூசைகளும் மலிந்தன. இதனால் ஒழுக்கநெறிகள் குறையத் தொடங்கின. மேலும், கி.பி. 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற ஹூணர்களின் படையெடுப்பாலும் 12 ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட துருக்கிய படையெடுப்புகளின் போதும் புத்தசமய மடாலயங்கள் அழிக்கப்பட்டன. இத்தகைய காரணங்களால் இந்தியாவில் புத்தசமயம் மறைந்தது.
இந்தியப் பண்பாட்டிற்கு புத்த சமயத்தின் பங்களிப்பு
இந்திய பண்பாட்டு வளர்ச்சிக்கு புத்தசமயம் அரும் பணியாற்றியுள்ளது.
அகிம்சை கோட்பாடு அதன் முக்கிய பங்களிப்பாகும். பிற்காலத்தில் நமது நாட்டின் முக்கிய விழுமியமாக அஹிம்சைக் கொள்கை விளங்கியது.
இந்தியக் கலை, கட்டிடக் கலைக்கு புத்த சமயத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. சாஞ்சி, பார்ஹ¨த், கயா ஆகிய இடங்களிலுள்ள ஸ்தூபிகள் இந்தியக் கட்டிடக் கலையின் சிறப்புக்கு சான்றுகளாகும். இந்தியாவின் பல பகுதிகளில் சைத்தியங்களும் புத்த விஹாரங்களும் அமைக்கப்பட்டன.
தட்சசீலம், நாளந்தா,விக்ரமசீலா ஆகிய இடங்களிலிருந்த புத்தசமய பல்கலைக் கழகங்களும், பிற கல்வி நிறுவனங்களும் சிறந்த கல்வித் தொண்டாற்றியுள்ளன.
- பாலி மொழி மற்றும் பிற உள்நாட்டு மொழிகள் வளர்வதற்கு புத்தசமய பிரச்சாரம் காரணமாயிற்று.
-ஆசியாவின் பிற பகுதிகளுக்கு இந்தியப்பண்பாட்டை புத்தசமயம் எடுத்துச் சென்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புத்த சமயம் (Buddhism), புத்த, புத்தசமய, புத்தசமயம், சமயம், வரலாறு, இந்திய, மாநாடு, சமயத்தின், புத்தசமயத்தின், மொழியான, தொடங்கியது, முக்கிய, கட்டிடக், இந்தியக், ஆகிய, பிறகு, திரிபீடகங்கள், இந்தியா, இந்தியாவின், buddhism, புத்தர், தலைமையில், பாலி, மகாயான, இம்மாநாட்டில், இந்தியாவில்