விடுதலைக்குப்பின் இந்தியா
1947ல் இந்தியா விடுதலையடைந்தபோது மக்கள் வறுமையில் உழன்றனர். வேலையில்லா திண்டாட்டமும் எழுத்தறிவின்மையும் எங்கும் காணப்பட்டது. வேளாண் உற்பத்தியில் தேக்கம் நிலவியது. தொழில் முன்னேற்றம் மெதுவாகவே இருந்தது. அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லை. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல தேசிய அளவில் பெரும் முயற்சி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நவ இந்தியாவின் சிற்பியான ஜவஹர்லால் நேரு, சோவியத் நாட்டின் திட்டமிட்ட பொருளாதாரத்தின் சாதனைகளைக் கண்டு வியந்தார். அதேசமயம் ஜனநாயக மரபுகள் போற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்ந்திருந்தார். சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் இணைத்து அவர் வகுத்த கொள்கை 'ஐனநாயக சமத்துவம்' என்றே அழைக்கப்பட்டது. விரைவான தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு அவர் திட்டமிடுதலை ஊக்குவித்தார். கனரகத் தொழில்களை வளர்ப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்களை அவர் நிறுவினார். கலப்புப் பொருளாதாரமே வளர்ச்சிக்கு அடிப்படை என்று அவர் நம்பினார். சுயேச்சையான தற்சார்பு பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்குவதே அவரது அடிப்படை நோக்கமாகும். 1950 மார்ச் 15 ஆம் நாள் தேசிய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. பிரதமர் நேருவே அதன் தலைவராக பொறுப்பேற்றார்.
திட்டக்குழுவின் முக்கிய நோக்கங்கள்
1. தேசிய மற்றும் தனிநபர் வருமானத்தை பெருக்குவது
2. முழுவேலைவாய்ப்பை உருவாக்குவது
3. வருமானம் மற்றும் செல்வ வளத்தில் காணப்படும் சமத்துவமின்மையை குறைத்தல்.
4. சமத்துவம் மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்குவது.
முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் (1951 - 56) ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த அகதிகள் மறுவாழ்வு போன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தியது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில்தான் (1956 - 61) பொருளாதார மேதை பி.சி.மகாலா நோபிஸ் முக்கிய பங்காற்றினார். நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்கு இத்திட்டம் முன்னுரிமை அளித்தது. விரைவான தொழில் மயமாக்கம், குறிப்பாக கனரகத் தொழில்களை வளர்ப்பது மூன்றாம் திட்டக்காலத்திலும் (1961 - 66) தொடர்ந்தது. இக்காலத்தில் இரும்பு, எஃகு, ரசாயான உரம், கரைக இயந்திரங்கள் உற்பத்தி போன்றவற்றுக்கான தொழிற்சாலைகள் நாட்டின் பல பகுதிகளில் நிறுவப்பட்டன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுதலைக்குப்பின் இந்தியா , இந்தியா, வரலாறு, அவர், இந்திய, விடுதலைக்குப்பின், வளர்ச்சிக்கு, அடிப்படை, தேசிய, தொழில், பொருளாதார, தொழில்களை, ஐந்தாண்டுத், முக்கிய, கனரகத், உருவாக்குவது, விரைவான, வேளாண், நாட்டின், சமத்துவம், இந்தியாவின்