1989 முதல் 1990 ஆம் ஆண்டுவரை வி.பி.சிங் பிரதமராக இருந்தார். ஜனதா தளம் என்ற காங்கிரஸ் எதிர்ப்பு கூட்டணி அரசுக்கு அவர் தலைமை வகித்தார். அவர் தனது ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார்.
|
வி.பி.சிங் |
அவரது அரசில் கூட்டணிக் குழப்பங்கள் ஏற்பட்டதால் 1990ல் அவர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. அடுத்து பிரதமராக பதவியேற்ற சந்திரசேகர் 1990 நவம்பர் முதல் 1991 மார்ச் வரை அப்பதவியில் நீடித்தார்.
1991 ஜூன் மாதத்தில் பி.வி. நரசிம்மராவ் பிரதமராக பதவியேற்றார். புதிய பொருளாதாரக் கொள்கைகளை அவர் தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்தார். அரசாங்கத்தின் தலையீட்டை குறைப்பது, சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுவது, அந்நிய முதலிட்டை ஊக்குவிப்பது போன்றவை நடைமுறைப் படுத்தப்பட்டன.
|
நரசிம்மராவ் |
இதில் அன்றைய நிதியமைச்சரான டாக்டர் மன்மோகன் சிங்கின் பங்கு முக்கியமானதாகும். இதன் விளைவாக, இந்தியா தாராளமயம், தனியார் மயம், உலக மயம் ஆகிய பாதைகளில் நடைபோடத் துவங்கியது.
|
வாஜ்பாய் |
1996 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவரால் நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் பதவி துறக்க வேண்டியதாயிற்று. தேவ கவுடாவின் தலைமையில் கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்தது. கர்னாடக மாநிலத்தைச் சேர்ந்த அவர் நாட்டின் 11வது பிரதமராவார் (1996 - 97). பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றியினால் கவுடா அரசும் கவிழ்ந்தது. அவரைத் தொடர்ந்து 197ல் சிறிது காலம் ஐ.கே. குஜ்ரால் பிரதமராக பதவி வகித்தார். 1998ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரானார். 1999 தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அடல் பிஹாரி வாஜ்பாய் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவரது ஆட்சியின்போது இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாகிஸ்தானுடன் கார்கில் போர் நடைபெற்றது மற்றொன்று பொக்ரானில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தப்பட்டது.