குப்த பேரரசு
குப்தப் பேரரசின் வலிமையும் புகழும் இரண்டாம் சந்திரகுப்த விக்ரமாதித்தன் ஆட்சிக் காலத்தில்தான் அவற்றின் உச்சிக்கே சென்றன. அக்காலத்திய பொதுவான பண்பாட்டு வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. காளிதாசர் போன்ற சிறந்த இலக்கிய படைப்பாளர்களை அவர் ஆதரித்தார். கலைத்துறை நடவடிக்கைகளையும் அவர் ஊக்குவித்தார். அக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சி காரணமாகத்தான் குப்தர் காலம் பொற்காலம் என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. குப்தர்கால பண்பாட்டு வளர்ச்சி பற்றி பின்வரும் பகுதிகளில் காணலாம்.
இரண்டாம் சந்திரகுப்தரின் பின்தோன்றல்கள்
இரண்டாம் சந்திரகுப்தருக்குப்பின் அவரது புதல்வர் குமார குப்தர் ஆட்சிக்கு வந்தார். அமைதியும் செழிப்பும் அவர் காலத்தில் நிலவியது. அவர் ஏராளமான நாணயங்களை வெளியிட்டார். அவரது கல்வெட்டுக்களை குப்தப் பேரரசு முழுவதும் காணலாம். அவர் குதிரை வேள்வியும் மேற்கொண்டார். பிற்காலத்தில் உலகப்புகழ் பெறவிருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியது அவரது மகத்தான செயலாகும். அவரது ஆட்சிக்கால இறுதியில் வலிமையும் செல்வமும் மிகுந்த புஷ்யமித்திரர்கள் என்று அழைக்கப்பட்ட பழங்குடியினரால் குப்தப்படை முறியடிக்கப்பட்டது. மத்திய ஆசியாவிலிருந்து புறப்பட்ட ஹூணர்கள் இந்துகுஷ் மலையைக் கடந்து இந்தியாமீது தாக்குதல் தொடுக்கவும் முயற்சித்தனர்.
ஆனால், அடுத்த ஆட்சிக்கு வந்த ஸ்கந்த குப்தர்தான் உண்மையில் ஹூணர்களை எதிர்கொண்டவர். ஹூணர்களை முறியடித்து பேரரசை காப்பாற்றியதும் அவரே. இந்த போரினால் குப்தப் பேரரசின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. ஸ்கந்த குப்தரின் மறைவுக்குப் பின்னர் புருகுப்தர், புத்தகுப்தர், பாலாதித்யர் போன்ற அவரது வழித் தோன்றல்களினால் குப்தப் பேரரசை ஹூணர்களின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இறுதியில், ஹூணர்களின் படையெடுப்புகளின் விளைவாக குப்தப் பேரரசு மறைந்தது. பின்னர் மாளவத்தின் யசோதர்மன் எழுச்சி பெற்றான்.
குப்தர் ஆட்சிமுறை
பரம பட்டாரகா, மகாராஜாதி ராஜா, பரமேஸ்வரா, சாம்ராட், சக்ரவர்த்தி போன்ற விருதுப் பெயர்களை குப்தப் பேரரசர்கள் சூட்டிக் கொண்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. முதலமைச்சர், சேனாதிபதி, பிற அதிகாரிகள் உள்ளிட்ட அமைச்சரவை அரசனுக்கு ஆட்சித் துறையில் ஆலோசனைகளை வழங்கியது. குப்தர்கால கல்வெட்டுகள் சண்டிவிக்ரகன் என்ற உயர் அதிகாரி பற்றிக் குறிப்பிடுகிறது. அயலுறவுத் துறை அதிகாரியாக அவர் இருந்திருக்கக்கூடும். குமாரமத்யர்கள், அயுக்தர்கள் போன்ற அதிகாரவர்க்கம் மூலமாக அரசர் மாகாண ஆட்சித் துறையோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். குப்தப் பேரரசின் மாகாணங்கள் 'புக்திகள்' எனப்பட்டன. மாகாண ஆளுநர்கள் உபரிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் இளவரசர்களாகவே இருந்தனர். புக்திகள் ஒவ்வொன்றும் விஷயங்கள் என்றழைக்கப்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சிப் பொறுப்பு விஷயபதி என்ற அதிகாரியிடமிருந்தது. நகர நிர்வாகத்தை நகர சிரேஷ்டிகள் கவனித்து வந்தனர். மாவட்டத்திலிருந்த கிராமங்களின் நிர்வாகம் கிராமிகர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குப்த பேரரசு , குப்தப், அவர், அவரது, வரலாறு, பேரரசு, இந்திய, இரண்டாம், குப்தர், குப்த, பேரரசின், பண்பாட்டு, பேரரசை, பின்னர், ஹூணர்களின், மாகாண, புக்திகள், ஹூணர்களை, ஆட்சித், வளர்ச்சி, வலிமையும், இந்தியா, குப்தர்கால, காணலாம், இறுதியில், ஆட்சிக்கு, ஸ்கந்த