கஜினி முகமது வெறும் கொள்ளைக்காரனாக இருக்கவில்லை. கிழக்கே பஞ்சாப் முதல் மேற்கே காஸ்பியன் கடல் வரையும், வடக்கே சாமர்கண்ட் முதல் தெற்கே குஜராத் வரையும் பரவியிருந்த ஒரு பெரும் பேரரசை அவர் உருவாக்கியிருந்தார். கஜினிப்பேரரசு, பாரசீகம், டிரான்சாக்சியானா, ஆப்கானிஸ்தான், பஞ்சாப் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. தலைமைப்பண்பையும், ஓய்வில்லாத உழைப்பையும் கொண்டிருந்த காரணத்தால் அவரால் இத்தகைய சாதனைகளை செய்ய முடிந்தது. முகமதுவை இஸ்லாமின் நாயகன் என்று இடைக்கால வரலாற்றாசிரியர்கள் போற்றியுள்ளனர். கலை இலக்கியத்தைபும் அவர் ஆதரித்தார். அவரது அவையை அலங்கரித்த அல்பெருனி புகழ்மிக்க கிதாப்-இ-ஹிந்த் என்ற இந்தியா பற்றிய நூலை எழுதினார். முகமது, முல்தானையும் பஞ்சாபையும் கைப்பற்றியதால் இந்தியாவின் அரசியல் நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டன. துருக்கியர்களும், ஆப்கானியர்களும் இந்தியாமீது தொடர்ந்து படையெடுக்கவும், எந்த நேரத்திலும் கங்கைச் சமவெளிவரை செல்லும் வாய்ப்பையும் முகமதுவின் படையெடுப்புகள் வழிவகுத்தன. மேலும், அவரது தொடர்ந்த படையெடுப்புகளினால் இந்தியாவின் பொருளாதார வலிமையும் மனித வள ஆற்றலும் வற்றிப் போயின. இந்தியாவின் எதிர்கால அரசியலுக்கு இது தீங்காக முடிந்தது. அந்நியப்படையெடுப்பார்களுக்கு எதிராக இந்தியாவின் வாயிலில் அரணாக நின்றது இந்து சாஹி அரசாகும். முகமது அதனை அழித்தார். இந்திய எல்லைப்புறம் பாதுகாப்பற்று விடப்பட்டது. கஜினிப் பேரரசில் பஞ்சாப்பும், ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றிருந்ததால் அடுத்து வந்த முஸ்லிம் படையெடுப்பாளர்களின் பணி எளிதாயிற்று.
கோரி முகமது
|
கோரி முகமது |
கஜினி அரசுக்கு கீழ்ப்படிந்திருந்த கோரிகள், கஜினி முகமதுவின் மறைவுக்குப் பிறகு சுதந்திரமடைந்தனர். கஜினிப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், முகமது கோரி என்று அழைக்கப்பட்ட மொய்சுதீன் முகமது கஜினியை தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார். கஜினியில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்ட முகமது கோரி இந்தியாவின்மீது தனது கவனத்தைச் செலுத்தினார். கஜினி முகமதுவைப்போல் அல்லாமல், கோரி இந்தியாவைக் கைப்பற்றி அங்கு பேரரசை விரிவுபடுத்த விரும்பினார்.
1175 ஆம் ஆண்டு முகமது கோரி முல்தானைக் கைப்பற்றினார். அடுத்த படையெடுப்பின்போது சிந்துப் பகுதி முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். 1186ல் பஞ்சாபைத் தாக்கி குஸ்ருமாலிக் என்பவரிடமிருந்து பஞ்சாபைக் கைப்பற்றினார். பஞ்சாபை அவர் இணைத்துக் கொண்டதால் சட்லஜ் நதி வரையில் அவரது பேரரசு கிழக்கே விரிவடைந்தது. அடுத்து சௌகன்கள் மீது போர் தொடுப்பதற்கு இது வழிவகுத்தது.