டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா
இந்தியாவில் தங்களது ஆட்சியை ஒருங்கிணைத்த பிறகு. டெல்லி கல்தான்கள் நில வருவாய் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர். நிலங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டன.
1. இக்தா - அதிகாரிகளுக்கு ஊதியத்திற்குப் பதிலாக அளிக்கப்பட்ட மானியங்கள்.
2. காலிசா - சுல்தானின் நேரடி நிர்வாகத்தில் இருந்த நிலங்கள், அதிலிருந்து பெறப்பட்ட வருவாய் அரசவை செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
3. இனாம் - சமயத் தலைவர்களுக்கும், சமய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட நிலங்கள்.
பொதுவாக விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை குடியானவர்கள் வரியாக செலுத்தினர். சில சமயம் விளைச்சலில் சரிபாதிகூட வசூலிக்கப்பட்டது. வேறு பல வரிகளையும் அவர்கள் கட்ட வேண்டியிருந்ததால் வறுமை நிறைந்த வாழ்க்கையையே அவர்கள் வாழ வேண்டியதாயிற்று. அடிக்கடி தோன்றிய பஞ்சங்களால் அவர்களது நிலைமை மேலும் மோசமடைந்தது. இருப்பினும், முகமது பின் துக்ளக், பிரோஸ் துக்ளக் போன்ற சுல்தான்கள் நீர்ப்பாசன வசதிகளை செய்து கொடுத்தும் தக்காவிக் கடன்களை வழங்கியும் வேளாண் உற்பத்தியைப் பெருக்க முயற்சித்தனர். பார்லிக்குப் பதில் கோதுமை போன்ற உயர்ந்தரக பயிர்களை பயிரிடும்படி அவர்கள் குடியானவர்களை ஊக்குவித்தனர். பிரோஸ் தோட்ட பயிர்களை ஊக்குவித்தார். முகமது பின் துக்ளக், திவானி கோஹி என்று தனியாக ஒரு வேளாண் துறையை ஏற்படுத்தினார்.
சுல்தானியர்கள் காலத்தில் நகர மயமாக்கம் மேலும் சூடுபிடித்தது. ஏராளமான பெருநகரங்களும், நகரங்களும் வளர்ச்சியடைந்தன. லாகூர், முல்தான், புரோச், அன்ஹில்வாரா, லக்னௌதி, தௌலதாபாத், டெல்லி, ஜான்பூர் என்பவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. கீழை உலகில் டெல்லி மிகப்பெரிய நகரமாக விளங்கியது. அக்காலத்திய வாணிக வளர்ச்சி பற்றி சமகால எழுத்தாளர்கள் விவரித்துள்ளனர். பாரசீக வளைகுடாப் பகுதி, மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றுக்கு ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. முல்தானிகள் மற்றும் ஆப்கானிய முஸ்லிம்கள் கடல்கடந்த வாணிகத்தைக் கட்டுப்படுத்தினர். குஜராத் மார்வாரிகளும், முஸ்லிம் போரா வணிகர்களும் உள்நாட்டு வாணிபத்தில் சிறந்து விளங்கினர். சாலைகள் அமைக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டதால் போக்குவரத்து, செய்தித் தொடர்பு எளிமையாக இருந்தன. குறிப்பாக அரசப் பெருவழிகள் நல்ல முறையில் இருந்தன. பெருவழித் தடங்களில் பயணிகள் இளைப்பாறுவதற்காக ஆங்காங்கே தங்கும் விடுதிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா , வரலாறு, டெல்லி, இந்தியா, இந்திய, சுல்தானியத்தின், நிலங்கள், துக்ளக், கீழ், வேளாண், பிரோஸ், இருந்தன, ஏராளமான, பயிர்களை, விளைச்சலில், வருவாய், நிர்வாகத்தில், மேலும், முகமது, பின்