வாரன் ஹோஸ்டிங்ஸ்
தஸ்தக்குகள் எனப்பட்ட இலவச அனுமதிச் சீட்டுகளை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒழித்தார். உள்நாட்டு வாணிபத்தை முறைப்படுத்தினார். சுங்கவரி நிலையங்களின் எண்ணிக்கையை குறைத்தார். இந்திய மற்றும் அயல்நாட்டு பொருட்கள் அனைத்துக்கும் 2.5 விழுக்காடு என ஓரே சீரான சுங்கவரி வசூலிக்கப்பட்டது. வணிகக் குழு பணியாளர்கள் தொடர்ந்து தனிப்பட்ட வாணிகத்தில் ஈடுபட்டபோதிலும் அவை ஒரு வரம்புக்குட்பட்டே நடைபெற்றன. நெசவாளர்களின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒரே மாதிரியான முன் கட்டண அஞ்சல் முறையை அவர் அறிமுகப்படுத்தினார். கல்கத்தாவில் ஒரு வங்கி தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவின் காவல்துறை மேம்படுத்தப்பட்டு கொள்ளையர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒழுங்குமுறை சட்டம் (1773)
1773ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒழுங்குமுறை சட்டம் வணிகக் குழுவின் அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகும். இதற்கு முன்பு இங்கிலாந்தில் இருந்த இயக்குநர்கள் குழுவும் வணிகர்கள் மன்றமும் வணிகக்குழுவை நிர்வகித்து வந்தன. ஆண்டு தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட இயக்குநர்கள் குழுவே வணிகக் குழுவின் அலுவல்களை நிர்வகித்து வந்தது. இந்தியாவிலிருந்த மூன்று மாகாணங்களும் தனித்தனியாக செயல்பட்டன. அவை ஒவ்வொன்றும் தாய்நாட்டு அரசுக்கே நேரடி பொறுப்பானதாகும். மாகாண அரசின் நிர்வாகம் ஆளுநர் மற்றும் அவரது ஆலோசனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது.
வணிகக் குழுவின் அலுவல்களில் நாடாளுமன்றம் தலையிடுவதற்கான சூழ்நிலைகள் அப்போது உருவாயின. ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு இந்தியாவின் நிலப்பகுதிகளைக் கைப்பற்றியதோடு திவானி உரிமைகளையும் பெற்றதன் மூலம் ஆட்சியதிகாரத்தைப் பெற்றது. அதன் ஆரம்பகால ஆட்சி ஊழல் மலிந்ததாகவும் கொடுமையானதாகவும் இருந்தது. வணிகக்குழு நிதிப்பற்றாக்குறையால் தவித்தபோது அதன் பணியாளர்கள் செல்வத்தில் கொழித்தனர். 1770 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சம் குடியானவர்களை பெரிதும் பாதித்தது. இதனால், வரிவசூல் மந்தமாகிற்று. வணிகக்குழு திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 1773 ஆம் ஆண்டு வணிகக்குழு அவசரக் கடனுதவி கேட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தை நாடியது. இத்தகைய பின்னணியில்தான் வணிகக்குழுவின் அலுவல்களை ஒழுங்குபடுத்துவது என இங்கிலாந்து நாடாளுமன்றம் முடிவு செய்தது. இங்கிலாந்தில் பிரதமராக இருந்த நார்த் பிரபு வணிக்குழுவின் விவகாரங்களை விசாரித்து அறிய ஒரு தேர்வுக்குழுவை நியமித்தார். அக்குழு அளித்த அறிக்கையே ஒழுங்கு முறைச் சட்டம் இயற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாரன் ஹோஸ்டிங்ஸ் , வரலாறு, வணிகக்குழு, இந்திய, வாரன், ஆண்டு, குழுவின், வணிகக், ஹோஸ்டிங்ஸ், சட்டம், இங்கிலாந்தில், இருந்த, நிர்வகித்து, நாடாளுமன்றம், அலுவல்களை, இயக்குநர்கள், இந்தியாவின், சுங்கவரி, ஆங்கிலேய, இந்தியா, பணியாளர்கள், ஒழுங்குமுறை, கிழக்கிந்திய