1347ஆம் ஆண்டு பாமினி அரசை நிறுவியவர் அலாவுதீன் பாமன்ஷா அவர் ஹசன் கங்கு என்றும் அழைக்கப்பட்டார். அதன் தலைநகரம் குல்பர்கா. பாமினி அரசை மொத்தம் பதினான்கு சுல்தான்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களில் அலாவுதீன் பாமன்ஷா, முதலாம் முகமது ஷா, பிரோஸ் ஷா ஆகியோர் சிறப்பு வாய்ந்தவர்கள். பின்னர் அகமது வாலிஷா என்பவர் தலை நகரை குல்பர்காவிளிருந்து பீடாருக்கு மாற்றினார். மூன்றாம் முகம்மதுஷாவின் ஆட்சிக்காலத்தில் பாமினி அரசின் புகழ் அதன் உச்சிக்கு சென்றது. அராபியக்கடல் தொடங்கி வங்காள விரிகுடா வரை பாமினி அரசு விரிவடைந்தது. மேற்கில் கோவா முதல் பம்பாய் வரை நீண்டிருந்தது. கிழக்கில் காக்கிநாடா முதல் கிருஷ்ணா நதியின் முகத்துவாரம் வரை பரவியிருந்தது. முகமது ஷாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது அமைச்சராக விளங்கிய முகமது காவன் என்பவரின் ஆலோசனைகளும் சேவைகளுமேயாகும்.
முகமது காவன்
|
பாமினி அரசு கட்டிடம் |
முகமது காவனின் வழிகாட்டுதலால் பாமினி அரசு அதன் புகழின் உச்சியை எட்டியது. அவர் ஒரு பாரசீக வணிகர். தனது நாற்பத்தியிரண்டாவது வயதில் இந்தியாவுக்கு வந்த அவர் பாமினி அரசின் சேவையில் சேர்ந்தார். தனது தனிப்பட்ட ஆளுமையினால் அவர் பாமினி சுல்தானியத்தின் முதலமைச்சரானார். பாமினி அரசுக்கு விசுவாசமாக அவர் இருந்தார். எளிய வாழ்க்கையை நடத்திவந்த அவர் பெருந்தன்மை கொண்டவராகவும் திகழ்ந்தார். கல்வியறிவுமிக்கவராக இருந்த அவர் கணிதத்தில் மேதைமையுடன் விளங்கினார். பீடாரில் ஒரு கல்லூரியை கட்டுவதற்காக அவர் கொடைகளை வழங்கினார். பாரசீகக் கட்டிடக் கலைப்பாணியில் அந்த கல்லூரி கட்டப்பட்டது.
போர்த்துறையிலும் அவர் வல்லவராக விளங்கினார். விஜய நகரம், ஒரிசா மற்றும் அராபிக்கடலின் கடற்கொள்ளையர்களுக்கு எதிராக அவர் போர்கள் தொடுத்து வெற்றி பெற்றார். கொங்கணம், கோலா, கிருஷ்ணா, கோதாவரி பள்ளத்தாக்கு போன்ற அவரது வெற்றிகளினால் பாமினி அரசு விரிவடைந்தது.